தொடர்கள்
கதை
சுட்ட  கதை... - பெ. அய்யாசாமி

20200617193122956.jpg

பள்ளி பேட்டை, காவல்நிலையம்....

“ஐயா, விசாரனைக்காக எனச் சொல்லி அழைத்து வந்து நீங்க அவனை தப்பா எதுவும் பண்ணிடாதிங்க” என முகத்தில் பயம் காட்டினார் பள்ளிபேட்டை காவல்நிலைய சிறப்பு எஸ்ஜ சிங்காரம்.

“எஸ்பிதான் சொன்னாரு என நம்ம டிஎஸ்பியே இன்ஸ்ட்ரெக்சன் கொடுத்து இருக்கார், அப்புறம் என்ன கவலை?”


“இருந்தாலும் ஒரு உயிரை அனாவசியமாக கொல்வது தப்பு தானே? வழக்கு, விசாரனை என வந்தால் நாமதான் அலையனும்... அவங்க பெரிய அதிகாரிங்க, ஒதுங்கிடுவாங்க” என வழக்கமாக நடப்பதை சொன்னார் சிங்காரம்.

“தப்புதான். ஆனால், இதை அவங்களே செய்யச் சொல்றாங்க நமக்கென்ன? நீங்க என்கூட மட்டும் வாங்க. நான் பார்த்துக்கிறேன். அப்துல் என்னா அவ்வளவு பெரிய ஆளா? பட்டப் பகலிலே பஸ் ஸ்டான்டிலே கண்டிப்பாக நாடமாடுவான். இன்று மாலை என் கண்ணிலே மட்டும் படட்டும். அவனைத் தூக்கி வந்து இன்னிக்கே அய்யா சொன்ன மாதிரியே சோலியை முடித்து அனுப்பிட வேண்டியதுதான். நீங்க ஜீப்பை ரெடி பண்ணுங்க. அந்த லோக்கல் ஐட்டத்தை எடுத்து லோடு பண்ணிவையுங்கள்” என ஆய்வாளரும் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான அலெக்ஸ் உத்தரவிட்டவர் தான் சொன்னபடியே அப்துலை அன்று முழுவதும் தேடி, நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு தூக்கி வந்து இரவு முழுவதும் வைத்திருந்தார்.


அதிகாலை 4.30 மணி..

.

“வா... வா அப்துல். ஏறு வண்டியிலே. அவ்வளவு அதுப்பா உனக்கு? கைப் பக்குவமாமில்ல உனக்கு? கைப் பக்குவம். அதையும் இன்றைக்கு பார்த்திடலாம். ஸ்கெட்சு போட்டா அப்படியே ரசிச்சு செய்வீங்களாமே? அப்போ நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? இன்னைக்கு இருக்கு உனக்கு” என்றார்.

“ஐயா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. இப்போதெல்லாம் நான் அதை செய்யறதில்லைங்க. யாரோ உங்களுக்கு தவறான தகவல் சொல்லி இருக்காங்க, என்னைய விட்டுடுங்க” என கெஞ்சினான் அப்துல்.

“இன்னிக்குத் தெரியும். உன் வேலையால என்ன பாதிப்பு வரப் போகுதுன்னு பாரு! உன் வீட்டிலே சொல்லிட்டு வந்திட்டே இல்லே?” என கேட்டது அதிகார வர்க்கம். முரட்டு காவல்துறை அதிகாரிகள் தன் தினவை குறைக்க, அப்பாவி அப்துல்லாவிடம் காட்டத் துணிந்து ஆளில்லா காட்டுப்புதர் பக்கம் அழைத்துச் சென்றனர்.

“ஐயா, இந்தப் பக்கம் ஜனங்க வருவாங்க அதிகாலை நேரம். நடைபயிற்சி செய்வாங்க. குண்டுச் சத்தம் கேட்டு பயந்து விடப்போறாங்க. கொஞ்சம் தூரமாக போனால் ஆள் நடமாட்டம் இருக்காது அங்கே போயிடலாம்” என்றார் சிங்காரம்.

“விடியறதுக்குள்ளே முடிச்சிடனும். நேராக போங்க. இன்னும் அரை கிலோமீட்டர் தூரம், இந்த லெப்ட் எடுங்க.... அங்க புதர் மண்டியிருக்கு பாருங்க அங்கே வண்டியை மறைத்து நிப்பாட்டிடுங்க” என்றார்.

‘நாம நடந்து போவோம்’ எனக் கூறி, அப்துலை அழைத்துக் கொண்டு புற்கள் அடர்ந்து காடு போல் வளர்ந்த நிலத்தினூடே அழைத்துச் சென்றனர் அலெக்ஸ் மற்றும் எஸ்ஐ சிங்காரம்.

அப்துல் உடல் மெத்தமும் வியர்த்து இருந்தான். இனி அவர்களிடம் என்ன கெஞ்சியும் பலனில்லை. அவர்களும் மனிதம் தொலைத்து தங்கள் லட்சியத்தில் பிடிவாதமாக இருந்தனர்.

அப்துல் முன்னே செல்ல, இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.


அடர்ந்த பகுதியில் நின்றுக்கொண்டு, அப்துல் ஓடு. சீக்கிரம் ஓடு என்றார்.

“சார் கடைசியா ஒரு தடவை மனிதாபிமானத்தோட யோசித்து செய்யுங்க” என்றார் எஸ்ஐ.சிங்காரம்.

“நான் என்ன செய்ய? நாம் நமது கடமையைதானே செய்றோம்” என்றார் அலெக்ஸ்.

“சீக்கிரம் ஓடு. அப்துல்...”

“சார் வேணாம் சார். பாவமாக தெரியலையா சார்.. நான் புள்ளைக் குட்டிக்காரன் சார்” எனக் கெஞ்சினான் அப்துல்.

“நோ, சீக்கிரம் ஓடு. நேரம் இல்லை” என விரட்டினார் அலெக்ஸ்.

ஓடினான் அப்துல் கையைத் தூக்கிக் கொண்டே, அடர்ந்த புதருக்குள் ஐம்பது அடி ஓடியிருப்பான்.. சரசரவென சப்தம் எழும்பியதும், புதரினுள் இருந்து பறவைகளும், சில மயில்களும் படபடவென பறக்க ஆரம்பித்தன. அவன் ஓடிக் கொண்டிருக்கும் போதே, குறி பார்த்து சுட்டார் அலெக்ஸ்.

நடைபயிற்சியில் இருந்த மக்கள் குண்டு சத்தம் காதை துளைத்ததும் அச்சத்துடன் பார்த்துவிட்டு நமக்கேன் வம்பு என வழக்கம் போல் ஒதுங்கிக் கொண்டனர்.

“போங்க சிங்காரம் போய் அதைத் தூக்கி வண்டியிலே போடுங்க. இந்தாங்க துப்பாக்கியை எடுத்த இடத்திலேயே துடைத்து வைத்திடுங்க. லோக்கல் குண்டு்தான். காணலைனு கணக்கு எழுதிடுங்க. நான் போய் மத்த வேலைகளைப் பார்க்கிறேன்” என்றார் அலெக்ஸ்.

“சார் முடிச்சுட்டேன் சார்” என்று தகவல் பறந்தது டிஎஸ்பிக்கு.

“குட் ஜாப். நீங்க எதுவும் ஃபீல் பண்ணலையே?” எனக் கேட்டார் டிஎஸ்பி.

“அதெல்லாம் ஒன்றும் இல்ல சார். நம்ம எஸ்ஐ சிங்காரம்தான் கொஞ்சம் பயந்தாரு” என்றார்.

“மத்த பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிங்க. நாங்க ஒரு மணிக்கு வந்துவிடுவோம் என்றார் டி.எஸ்.பி.

நேராக ஓய்வு இல்லத்திற்கு வண்டி பறந்தது....

“வா அப்துல், இதுதான் அரசு பயணியர் ஓய்வு இல்லம். எப்படி இருக்கு? வேண்டிய சாமான்கள் எல்லாம் இதோ இங்கே இருக்கு. அதை நல்லா பக்குவமா பிரியாணி, சூப்பு எல்லாம் செஞ்சு உன் கைப் பக்குவத்தைக் காட்டிடு. என்ன செய்யறது அப்துல்? மேலதிகாரிங்க ஆசைப்படறாங்க. மயில் பிரியாணி சாப்பிடனுமாம். ஏதோ வியாதிக்கு நல்லதாம், அதுலேயும் நீ தான் செய்யனும் என ஆர்டர் வேற. நல்லா செஞ்சிடுங்க. நாங்கள் ஒரு மணிக்கு சாப்பிட வருவோம். ஓகே” என கூறி விட்டு.. ஓய்வெடுக்கச் சென்றார் ஆய்வாளர் அலெக்ஸ் தனது வீட்டுக்கு.

“என்னங்க, தூங்கினது போதும் எந்திரிங்க, டியூட்டிக்கு நேரமாகிட்டு, தோசைமாவு வைத்திருக்கேன் சுட்டு சாப்பிட்டுகிடுங்க. நான் கிளம்புகிறேன்” எனக் கூறி கிளம்பினாள் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆய்வாளர் அலெக்ஸின் ஆசிரியை மனைவி.

“சே, எல்லாம் கனவா? நேரத்திற்கு ஒழுங்கா தூங்கலைன்னாலே இப்படித்தான்” என அலுத்துக்கொண்டு எழுந்தவர் தனக்கான தோசையைச் சுட ஆரம்பித்தார்.