
மதநல்லிணக்க மகான் - கபீர்தாஸ்...
சமணமும், பௌத்தமும் இந்திய மண்ணில் தோன்றி தழைத்து வளர்ந்து, கிழக்காசிய நாடுகளிலும் கிளை பரப்பி வளர்ந்தன. மன்னர்கள் இம்மதங்களைத் தழுவி வளர்த்தனர். அப்போது இந்து மதத்தைக் காக்க இந்தியாவில் பக்தி இயக்கம் தோன்றியது. இராமானுஜர், இராமனந்தர், துளசிதாசர், துக்காராம், மீரா ஆகியோர் இசைப் பாடல்களால் இறைவனைப் போற்றி, இந்து சமயத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். தமிழகத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இந்த பக்தி இயக்கத்தில் பெரும் பங்காற்றினர். இவர்களின் வரிசையில் பதினைந்தாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் தோன்றியவர் கபீர்தாஸ். கவித்துவம் மிக்க பக்தி பாடல்கள் வழியாக இறைவனைப் போற்றியவர் கபீர்தாஸ்.
இவரின் பிறப்பு பற்றி பல கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பிராமணப் பெண்ணின் உள்ளங்கையில் தோன்றிய கபீர்தாஸ், காசி அருகில் உள்ள லகர்டேலா என்னும் ஏரியில் ஒரு தாமரை மலரில் விடப்பட்டார் என்றும், அவர் ஒரு இஸ்லாமியரால் எடுத்து வளர்க்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அவர் பிறந்த ஆண்டு பற்றியும் பல கருத்துக்கள் உள்ளன. எனினும் அவர் இஸ்லாமியர் வீட்டில் வளர்க்கப்பட்டார் என்பதும், இந்து மதத்தால் ஈர்க்கப்பட்டு, வைணவ மகான் இராமானந்தரிடம் சீடரானார் என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. கபீர் தனது வாழ்நாளில் பெரும்பாலான பகுதியை தில்லி அருகில் உள்ள ஃபரிதாபாத்தில் கழித்திருக்கிறார் .
இஸ்லாமியராக வளர்க்கப்பட்ட கபீர், இந்து மதத்தையும் ஆர்வத்துடன் அறிந்து கொண்டார். இரு மதங்களின் ஈர்ப்பும் அவருக்கு இருந்தது. மத உண்மைகளை ஆராய்கையில், இருவரையும் கேள்வி கேட்கத் துவங்கினார். இரு சமயங்களையும் விமர்சித்தார்.
‘மதப்பிடிப்பை விட அன்பே பெரிது’ என்று அவர் முழங்கினார். “அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமல்ல” என்றது கபீரின் கோட்பாடு. இந்த ரீதியில் அவர் சிந்தித்தார், இதையே போதித்தார். இவரின் கொள்கைகளை இந்துக்களும் எதிர்த்தனர், இஸ்லாமியரும் எதிர்த்தனர். அவ்வாறே இவரை இந்துக்களும் சொந்தம் கொண்டாடினார்கள், இஸ்லாமியரும் தங்கள் சொந்தம் என்றார்கள்.
கபீர் பாடிய பாடல்கள் வாய் வழியாகவே, சீடர்கள் மூலம் தலைமுறைகள் தாண்டி கடத்தப்பட்டன. அவை பதினேழாம் நூற்றாண்டில் தான் நூலாக தொகுக்கப்பட்டன. கபீரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ரவீந்திரநாத் தாகூர். ‘கபீரின் 100 கவிதைகள்’ எனப்படும் அந்நூல் 1915 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. “கபீர் பந்த்” எனப்படும் பிரிவினர் அவர் கற்பித்த நெறிமுறைகளைக் கடைப் பிடிக்கின்றனர்.
சமயச் சடங்குகள் பொருள் அற்றவை என்று கபீர் உரைத்தார். சமயத்தின் பெயரில் நடக்கும் சண்டைகளை வெறுத்தார். வேதங்களைப் படிப்பதாலோ, சடங்குகளை அனுசரிப்பதாலோ இறைவனை அடைய முடியாது. கடவுளிடமும், சக மனிதரிடமும் அன்பு செலுத்துவதே இறைவனை அடையும் வழி என்றார்.
‘ஜெபமாலையை உருட்டுகிறாய்,
நெற்றி நிறைய விபூதி பூசிக் கொள்கிறாய்,
கற்றைச் சடைமுடியை கட்டிக் கொள்கிறாய்.
என்ன செய்தால் என்ன?
உன் நெஞ்சில் அன்பு இல்லை, ஈரம் இல்லை
நீ எப்படி இறைவனை அடைவாய்?”
என்று கேட்ட கபீர் இஸ்லாமிய சடங்குகளையும் விமர்சிக்காமல் விடவில்லை.
‘இறைவனை வெளியில் தேடாதே, உனக்குள் தேடு’ என்றார் கபீர். “மலர்களில் மணம் இருப்பது போல, கடவுளும் உன்னுள் இருக்கிறார். இதை அறியாமல், தன்னிடம் உள்ள கஸ்தூரி மணத்தை உணராத மான், புல்லில் அதைத் தேடுவது போல, நீ இறைவனை வெளியில் தேடுகிறாய்” என்றும், “நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறிவதில்லை” என்றும் அவர் கூறுகிறார்.
தன்னைத்தான் சுய சோதனை செய்கையில், “ஒரு தீயவனைத் தேடி நான் புறப்பட்ட போது யாரும் தென்படவில்லை. ஆனால் எனது மனதை நான் தேடிய போது என்னை விட தீயவன் யாரும் இல்லை என்று புரிந்து கொண்டேன்” என்கிறார்.
“நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்,
இன்று செய்ய வேண்டியதை இப்போதே செய்.
கண நேரத்தில் பிரளயமே ஏற்படக்கூடும்.
அப்போது என்ன செய்வாய்?” என்று கேட்கிறார் கபீர்தாஸ்.
கபீர்தாஸின் எண்ணங்களும், கருத்துக்களும் ஒரு ஆன்மிக மறுமலர்ச்சசியை ஏற்படுத்தியது. இறைவனை மையப்படுத்திய சமயச்சூழலில் அவர் மனிதனை மையப்படுத்தும் ஆன்மிகத்தை அறிவித்தார். இந்தி மொழியில் அவர் அமைத்த பாடல்களில் அவர் பரிந்துரைத்த அன்பின் வழி பொங்கி வழிகிறது.
“மனமே, பதட்டப்படாதே!
மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்
தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும்
பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்” என்று அமைதியான வாழ்க்கை முறையை வலியுறுத்துகிறார் கபீர்தாஸ்.
கபீர் சுந்தராவை மணந்து, தனது குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். இராமானந்தரை குருவாக பெற்ற பின் துளசி மாலை அணிந்து, திருநீறு பூசி ராமநாமம் ஜெபித்து வந்தார். நாள்தோறும் வீட்டுக்கு வரும் சாதுக்களுக்கு உணவளித்து வந்தார். ஒரு இஸ்லாமியராக இருந்த போதும் அவர் இந்து சமய வழிகளைக் கடைப்பிடித்து வந்ததற்கு அவர் தாய் அவரைக் கம்பால் அடிக்க, அந்த அடி பாண்டுரங்கன் முதுகில் விழுந்ததாம்.
1518ஆம் ஆண்டு கபீர் இறந்த போது அவர் இஸ்லாமியரா, இந்துவா, எந்த முறையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் விவாதம் ஏற்பட்டது. எப்படி எனினும் அன்பை, அமைதியை கற்பித்தவர் கபீர்தாஸ். இஸ்லாமியர், இந்துக்கள் இருவரும் இணக்கத்துடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தியவர். மதநல்லிணக்கம் பேசிய மகான் கபீர்தாஸ், இம்மண்ணின் அடையாளங்களில் ஒருவர்.
- தொடரும்

Leave a comment
Upload