
மும்பை தாராவி 6 லட்சம் பேர் வசிக்கும், ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைவாசிகள் பகுதி. மும்பையில் எப்போதும் வாடகை அதிகமாக இருக்கும் என்பதால் சிறு தொழில் புரிபவர்கள் வசிக்கத் தேர்ந்தேடுப்பது தாராவி பகுதியை தான்.
தாராவி 2.1 சதுர கிமீ பகுதியில், 15000-க்கு மேற்பட்ட சிறிய அளவிலான தொழிலகங்கள், முறையான அனுமதியின்றி இயங்கி வருகிறது. தாராவி டெக்ஸ்டைல், உணவு, தோல் தொழில்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி என புலம் பெயர் தொழிலாளர்களூடன் இயங்கி வரும் ஒரு குடிசை கம் தொழில் பகுதி.

தாராவியில் பத்தடி இடம் இருந்தால் போதும் அதில் 10 பேர்கள் சர்வ சாதாரணமாக குடும்பத்துடன் வசிப்பார்கள். எங்கிருந்தாலும் உடனே தாராவி பகுதிக்குள் எளிதில் நுழைந்து விடக்கூடிய மெயின் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து அருகில் இருப்பதே தாராவியின் அட்ராக்ஷன். குடிசைப் பகுதி என்பதனை விட, மும்பையின் சிறு தொழில் முனைவோர்களின் கனவு உற்பத்தி மையம் என்றே தாராவியை சொல்ல வேண்டும்.
மும்பையில் ஏப்ரல் மாதத்தில் எந்தவித வெளிநாடுகளுக்கும் செல்லாத கார்மட் தொழில் செய்து வந்த 46 வயது ஆண் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனை தொடர்ந்து, தாராவியில் ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் தப்லீக் ஜமாத் கூட்டத்திற்கு சென்று திரும்பியவர்களால் கொரோனா தொற்று ஏற்பட்டு மெல்ல பரவத் தொடங்கியதும் மும்பை கார்ப்பரேஷன் கவனித்திற்கு வந்தது.
தாராவியில் பொது குடிநீர் மற்றும் பொது கழிப்பிடங்கள் அதிகம் என்பதால் அவர்கள் மூலம் கொரோனா வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக மும்பை வாசிகள் அஞ்சி நடுங்கினர்.
தாராவியில் அதிக அடர்த்தியான மக்கள் வசிப்பதால், நாள்தோறும் கொரோனா தொற்று ஏற்பட்டு மே மாதத்திற்கு பின் அப்பகுதியில் 2301 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தாராவியின் மேற்கு பகுதியில் மாகிம் இரயில் நிலையமும், கிழக்கு பகுதியில் சயான் இரயில் நிலையமும் இருப்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக பயணம் செல்லும் ரயில் நிலையங்களில் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் தாராவியில் வேகமாக பரவிய கொரோனா நோய் தொற்றினை பார்த்து மும்பை வாசிகள் அலறத் தொடங்கி விட்டனர். கொரோனா இறப்புகள் கூடவே, மும்பை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியில் தனது பணியாளர்களை மும்முரமாக இறக்கி விட்டது.

இதற்கிடையே தாராவியில் கொரோனா பரவத் தொடங்கியதும், பணியில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு கிளம்பி செல்லத் தொடங்கினர். மும்பை மாநகராட்சி, தாராவி பகுதியில் இருக்கும் ஒவ்வொரு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தியது. அத்துடன் கொரோனா டெஸ்ட்டும் எடுத்தது. நோய் உறுதியானால், அருகில் தனியாக அமைக்கப்பட்ட கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை மையத்தில் அந்நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
“தாராவியில் இருக்கும் பொது கழிப்பிடங்கள் அனைத்தும் சுகாதார துறையினரால் உடனுக்குடன் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினிகளை போர்கால அடிப்படையில் தெளித்தனர்.
தாராவியில் கொரோனா பரவியதும், அங்கிருந்த அனைத்து சிறு தொழில் நிறுவனங்களும் நூறு நாட்களுக்கு மேல் இழத்து முடப்பட்டது. தாராவி, அதனை சுற்றியுள்ள தனியார் மருத்துவர்களிடம் வரும் தாராவி மக்களுக்கு காய்ச்சல் இருந்தால், உடனே மும்பை மாநகராட்சிக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்து வந்தனர். கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் மக்கள் அடர்ந்த பகுதியில் கொரோனா கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
தாராவி மக்கள் லாக்டவுன் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்கு செல்வதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், மாநகராட்சி சுகாதார துறையுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் கொரோனா நோய் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
மே, ஜுன் ஆகிய இரண்டு மாதங்களில் கொரோனா தொற்று கட்டுபடுத்தப்பட்டு வெறும் 489 கொரோனா நோயாளிகள் ம்ட்டுமே சிகிக்சை பெறுபவர்களாக குறைக்க முடிந்தது. மற்ற கொரோனா நோயாளிகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்கள்” என்கிறார் மும்பை கார்ப்பரேஷன் அதிகாரி.

100 நாள் லாக்டவுனிற்கு பின்பு தாராவியில் பழையபடி குறைந்த தொழிலாளர்களுடன் அனைத்து குறு தொழிலகங்களும் இப்போது இயங்க ஆரம்பித்து விட்டது. தாராவியில் மிக பிரசித்தி பெற்ற ஆடை தொழிலகம் முதல் குடிசை தொழில்கள் மீண்டும் குறைந்த தொழிலாளர்களுடன் இயங்கத் தொடங்கி விட்டது.
2301 கொரோனா நோயாளிகள் இருந்த இடத்தில் தற்போது வெறும் 78 நோயாளிகள் மட்டுமே தாராவி ஐசியூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

“தாராவி பகுதியில் கொரோனா நோய் பரவிய போது, எப்படி தடுப்பது என்று தலை சுற்றியது. அதன்பின் மக்களின் பரிப்பூரண ஒத்துழைப்பு, மும்பை மாநகராட்சி மற்றும் மருத்துவர்களின் ஒத்துழைப்பால் உலகே இன்று தாராவியின் கொரோனா கட்டுப்படுத்தலை கண்டு அதிசயித்து நிற்கிறது. தனிமனித விலகல், முககவசம், காய்ச்சல் வந்ததும் மருத்துவ குழுவினருக்கு உடனடியாக தெரிவித்த மக்களின் ஒத்துழைப்பு போன்றவைதான் கொரோனா நோய் தடுப்புக்கு முக்கியக் காரணம். எங்களை இப்போது இதற்காக உலக சுகாதார நிறுவனமே பாராட்டி விட்டது” என்கிறார் மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர்.

Leave a comment
Upload