தொடர்கள்
பொது
ச்சும்மா அதிருதுல்ல... - தில்லைக்கரசி சம்பத்

காஃபி ஷாப்பில் நான்கு அழகான இளைஞிகளின் அழகிய மாலை சந்திப்பு...

20201027160953679.jpeg

“ஹாய் ஹாசினி, ஸ்ருதி, எஸ்தர் சீக்கிரமே வந்துட்டீங்களா..!” என்று அங்கே உட்கார்ந்திருந்த இளம் பெண்களை நோக்கி உற்சாகமாய் கை காட்டியப்படி அந்த நவீன காஃபி ஷாப்பின் உள்ளே நுழைந்தாள் ரம்யா.

“ஹேய்.. ஏன் லேட்..?

“செம ட்ராஃபிக்.. டூ வீலர்ல வந்ததால ட்ராஃபிக் நடுவுல புகுந்து புகுந்து வந்தேன். அதுல ஒருத்தர் “ஏம்மா இந்த மழையில கூட அடங்கி ஒடுங்கி வீட்டுல உட்கார மாட்டீங்களா?”னு கோபமா வேற கேட்டாரு.

“அடங்கி உட்கார்ந்தா, வீட்ல அம்மாக்கு மருந்து வாங்க, பேங்க் வேலை முடிக்க, ஏடிஎம்ல பணம் எடுக்க எல்லாம் நீங்க வரீங்களா..?”னு கேட்க வேண்டியது தானே என கோபத்துடன் கேட்டாள் ஸ்ருதி...

“சரி விடுப்பா.. பெண்கள்னாலே அமைதியா, அடக்கமான, பொறுமையா கட்டிய கணவன் காலால் எட்டி உதைத்தால் கூட... “நாதா.. என்னை உதைத்து உதைத்து தங்களின் வலது கால் நோகப் போகிறது.. தயவு செய்து சிறிது நேரம் இடது காலால் என்னை உதையுங்கள்”னு பழைய காலம் போல காலை பிடிச்சு கும்பிட்டு கேட்கனும் போல..!” என‌ அதே போல் ரம்யா நடித்துக் காட்ட குபீரென்று சிரிப்பு கிளம்பியது.

ஆர்டர் செய்த டல்கோனா காஃபி வர... பருக ஆரம்பித்தபடி ஸ்ருதி “இப்ப நிலைமை பரவாயில்லை.. ஆனா பெண்களை அடக்கி ஆளனும்ன்னு ஒரு பொதுவான கருத்து காலகாலமா இருக்கு... ஆண்களின் இது போன்ற மனோபாவத்திற்கு காரணம் என்னவா இருக்கும் எஸ்தர்..?”

“வேறென்ன..? நம்ம மத புத்தகங்களை மிக முக்கியமான காரணமா சொல்லலாம்.. பெண், ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள், ஆணுக்கு உரிமையாக்கப்பட்டவளே பெண்.. பெண் என்பவள் ஒரு ஆணின் மனைவி ஆகி, வாரிசுகளை பெறுவதே அவளின் தலையாய கடமை. பெண் என்பவள் தந்தை, சகோதரன், கணவன், பின் மகனுக்கு அடங்கி நடக்க கடமைப்பட்டவள்ன்னு எழுதி வச்சிருக்காங்களே..!”

“ஐ........ நல்லா இருக்கே நியாயம்.. ஆண்களே எழுதி, ஆண்களே அதை வழிமுறைகள் படுத்தி, ஆண்களே அதை பின்பற்றுவாங்களாம்.. ஆனா அதுல ரூல்ஸ் பெண்களுக்கு மட்டுமே இருக்குமாம்.. செம போங்காட்டம் இது..!”

“ஏய் ரம்யா.. இந்த புனித நூல்களை ஆண்கள் எழுதாம, பெண்கள் எழுதி இருந்தா எப்படி இருந்திருக்கும்?” கண்களை விரித்தபடி உற்சாகமாக கேட்டாள் ஹாசினி.

“இரு நான் சொல்றேன்” என்றபடி எஸ்தர்...

“செம இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்...

“முதல் பாயிண்டே ‘ஆணையும், பெண்ணையும் கடவுள் ஒரே நேரத்தில் படைத்து உயிர் கொடுத்தார்’ என்பதாகத்தான் இருந்திருக்கும்!” என ஒருத்தி சொல்ல... “டார்வின் சார் இந்த டுபாக்கூர் வசனத்திற்காக இந்த பாவிகளை மன்னியுங்கள் ..” என மேலே பார்த்து எஸ்தர் கும்பிட... திரும்பவும் சிரிப்பு ஒலி எழுகிறது.

“பெண் ஆணுக்காக படைக்கப்படவில்லை, ஆட்டுக்காகவும் படைக்கப்படவில்லை (திரும்பவும் சிரிப்பு). பெண்ணும் ஆணுக்கு சம உயிர் ஆவாள். அவள் விருப்பங்களுக்கு அவளே உரிமைப் பட்டவள். யாரையும் சார்ந்து வாழ அவளுக்கு அவசியமில்லை. கல்வி, உத்யோகம், அரசாள்வது என அனைத்திலும் சிறந்து விளங்கி வாழ அவளுக்கும் முழு உரிமை உள்ளதுன்னு எழுதி இருக்கலாம். மிக முக்கியமா யாரும் யாருக்கும் அடிமை இல்லை. உலகில் பிறந்த அனைவரும் அவரவர் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ முழு உரிமை இருக்கிறது. இதை மீறும் மனிதர்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி, நரகத்தை சேருவார்கள்ன்னு பயமுறுத்தி எழுதி இருக்கலாம்...”

“அப்படி எழுதியிருந்தா பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களின் நிலைமை மாறிப் போயிருக்கும். பாவம் . உனக்கு தெரியுமா எஸ்தர்..? இசை மேதை மொசார்ட்டோட சகோதரிக்கு, அவருக்கு சமமான அளவுல இசை ஞானம் இருந்தாலும், கல்யாண வயசு வந்த பின்னே மேடைகளில் அவர் வாசிக்க அவர் பெற்றோராலேயே அனுமதி மறுக்கப்பட்டு, அப்புறம் கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு அவங்க வாழ்க்கைப் பாதையே மாறி போயிடுச்சு.. இல்லன்னா மரியா மொசார்ட் (Maria Anna Mozart) நம்ம வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட்க்கு சரிசமமா, ஏன்... அவரை விட மேலாகவே ஒரு இசை மேதையாக புகழப்பட்டிருப்பாங்க.”

“இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு ஸ்ருதி.. நியூட்டன் தான் புவியீர்ப்பு விசையை கண்டுப்பிடிச்சாரு, டார்வின் தான் பரிணாம வளர்ச்சி கண்டுபிடிச்சாரு, ஐன்ஸ்டீன் தான் ரிலேட்டிவிட்டி தியரி கண்டுபிடிச்சாருனு ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கு கூட நல்லா தெரியும். ஆனா நம்ம பிரபஞ்சம் என்பது அங்கே முழுவதும் மிக அதிகமா சிதறி கிடக்கும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆனதுனு கண்டுபிடிச்சது யார் தெரியுமா..? எந்த புத்தகத்திலும் போட்டிருக்க மாட்டாங்க..!”

“யாருப்பா அது?” என கேட்ட ஸ்ருதிக்கு பதிலளிக்கும் விதமாக...

“அவங்க செசிலியா பய்ன் (Cecilia Payne) என்ற பெண் வானவியல் விஞ்ஞானி. அதுமட்டுமல்ல.. சூரியன் எவற்றால் ஆனது என்பதையும் அவர் தான் கண்டுப்பிடித்தார். இன்றைக்கு வான் நட்சத்திரங்கள் ஆராய்ச்சிகளுக்கு இதுவே அடிப்படையாக விளங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த கண்டுப்பிடிப்பையும் “ஹென்றி நோரிஸ் ரஸ்ஸல்” என்ற சக வானியல் துறை விஞ்ஞானி ஏமாற்றி எடுத்துக் கொண்டார். இப்படி காலம் காலமாக பெண்களை மூளை இல்லாதவர்கள், திறமை குறைந்தவர்கள் என புனித புத்தகங்களில் எழுதி அடக்கி வைத்தது பத்தாதுன்னு... இது போல் வெட்கம் இல்லாம ஏமாற்றி, அவங்க கஷ்டப்பட்டு செஞ்ச சாதனைகளையும் ஆட்டைய போட்டது தான் மிச்சம்” என ரம்யா பதிலளித்தாள்.

“ரோஸ்லின் ஃப்ராங்க்லின் (Rosalind Franklin) கதை தெரியுமா? “இரட்டை விரிபரப்புச் சுருள்” (double_helix structure of DNA) என்கிற மரபணுக்களின் வடிவத்தை 1962 ல “ஃப்ரான்சிஸ்சும்”, “ஜேம்ஸ் வாட்ஸனு”ம் சேர்த்து கண்டுப்பிடிச்சதுக்காக நோபல் பரிசு வாங்குனாங்க.. 20 ஆம் நூற்றாண்டின் மிக பெரிய கண்டுப்பிடிப்பாக கருதப்பட்ட இந்த சாதனையை, உண்மையில் மெய்யாக்கியது அந்த ஆராய்ச்சியின் மிக முக்கியமான இறுதிப் புதிரை விடுவித்த ரோஸ்லின் ஃப்ராங்க்லின் என்ற பெண்மணி தான். ஆனால் அவருக்கு இந்த பெருமையில் எந்தவித பங்கையும் அளிக்காமல், அந்த இரு ஆண்களுமே அத்தனை புகழையும் நோபல் பரிசையும் வாங்கிக்கிட்டாங்க. பெண் என்பதால் மறுக்கப்பட்ட அவரின் சாதனையை கண்டறிந்து ரோஸிலின் உழைப்பை தற்போது அங்கீகரித்திருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் உலகம்.”

“அப்புறம் அவங்களுக்கு நோபல் பரிசு கிடைச்சுதா ஸ்ருதி?”

“இல்ல எஸ்தர்.. ஏன் மேரிக்யூரிக்கு கூட கதிரியக்க ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்காக குழுவில் இருந்த அவர் கணவர் பியரி க்யூரிக்கும், ஹென்றி பெக்யூரெல்க்கு மட்டுமே நோபல் பரிசு தர இயலும்னு சொன்னாங்க.. ஆனா பியரி க்யூரி, “என் மனைவியும் சேர்ந்து தான் இத கண்டுபிடிச்சாங்க. அவருக்கு பரிசு இல்லைனா எனக்கும் வேண்டாம்”னு வெளிநடப்பு செய்ய... வேறவழியில்லாம மேரிக்கும் சேர்த்துக் கொடுத்தாங்க.

ஆனா மிக பெருமைக்குரிய சாதனை என்னன்னா... இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில், மேரி செய்த சாதனைகளால் உலக வரலாற்றில் இதுவரை வெவ்வேறு அறிவியல் துறைகளில் முதன் முறையாக இருமுறை நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி மேரிக்யூரி தான் ஹாசினி..!”

“இது எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச மாதிரி, இந்த நாள்காட்டி கணக்கிடும் முறையை உலகத்தில் முதன்முறையாக கண்டுப்பிடிச்சதும் பெண் தான்.”

“எப்படி சொல்ற ரம்யா?”

“மாசத்துக்கு 28 நாள் என்பது அடிப்படை கணக்கு.. 28 நாட்கள் எதோட தொடர்பு உடையது சொல்லுங்க?”

“ஹேய்.. அது நம்ம பீரியட்ஸ் சுழற்சிக்கான நாட்கள்...”

“யெஸ் எஸ்தர்.. பெண்தான் அந்த கணக்கை வச்சு கேலண்டர் சிஸ்ட்டத்தையே கண்டுப்பிடிக்க‌ முதல் முயற்சி எடுத்து இருக்கா.. ஏன்னா 28 நாட்கள் என்பது ஆணுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஒன்னு.. இது எப்படி தெரிந்ததுன்னா... கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டியில மானிடவியல் துறையில் சில ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு எலும்பின் புகைப்படம் இருக்கிறது. அந்த எலும்பில் 28 கோடுகள் கீறி வைத்து இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை வைத்து இதுதான் ஆதி மனிதன் முதன் முறையாக பின்பற்றிய நாட்காட்டி என கூறுகிறார்கள். ஆனால் எந்த ஆண் எதை அடிப்படையாக வைத்து 28 நாட்கள் குறித்து வைத்திருப்பான் சொல்லு? அதனாலே உலகின் முதல் நாட்காட்டி முறையை கண்டுப்பிடித்ததும் பெண்ணே..! சூப்பர்ல்ல ரம்யா..!”

“ஆமாம்.. really great.. ok guys..... நேரம் ஆச்சு.. வீட்டுக்கு கிளம்பலாம். அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க..!” என ரம்யா கூற...

“சரி அடுத்த வாரம் சந்திக்கலாம்..” என்றபடி ஒருவருக்கு ஒருவர் பை சொல்லி அவரவர் வீட்டுக்கு சிட்டாகப் பறந்தனர்.