‘தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு 60 சட்டமன்ற தொகுதிகளில் நல்ல வாய்ப்பு’ என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் அடிக்கடி சொல்லி வருகிறார். துணைத் தலைவர் துரைசாமி இன்னும் ஒரு படி மேலே போய், பாரதிய ஜனதா தலைமையில் தான் கூட்டணியே அமையும் என்கிறார். இதற்கிடையே ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான், ஆட்சியில் பாரதிய ஜனதா பங்குபெறும்’ என்கிறார் வானதி சீனிவாசன் தன் பங்கிற்கு.
இந்த மூவருமே டெல்லியில் செல்வாக்குள்ள தலைவர்கள்....எனவே இது இவர்களின் சொந்தக் குரல் தானா அல்லது பாஜக மேலிடத்தின் கருத்தா என்று அதிமுகவில் ஒரு பெரும் விவாதமே நடந்து வந்தது.
இந்த சூழ்நிலையில்தான் சென்னைக்கு உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாவில் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கக் கூடியவரான அமித்ஷா வந்தார். அவர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகளுக்கும், அவர் இலாகாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்னைக்கு அவர் வருவதற்கு இந்த நிகழ்ச்சிகளெல்லாம் ஒரு சாக்கு, அவ்வளவுதான்.
உள்துறை அமைச்சரை வரவேற்க ஆளுநர் வரவில்லை. ஆளுநர் அவரை சந்திக்கவும் இல்லை. ஆனால், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று எல்லோரும் விமான நிலையத்திற்கே சென்று அமித்ஷாவை வரவேற்றார்கள். வழிநெடுக அமித்ஷாவுக்கு தரப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், சீன அதிபரின் மாமல்லபுர விஜயத்தை நினைவுபடுத்தியது. இந்த விமான நிலைய மற்றும் ரோட்டோர வரவேற்பில் பாரதிய ஜனதா தொண்டர்களை விட அதிக அளவில் அதிமுக தொண்டர்கள் அமித்ஷாவை வரவேற்கக் கூடியிருந்தது அனைவரின் புருவத்தையும் ஆச்சர்யத்தில் உயர்த்தியது.
அமித்ஷா வருவதற்கு முன் தினம், அதிமுக மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி பேசும்போது, ‘கூட்டணியை முதலில் உறுதிப்படுத்துங்கள்’ என்று டெல்லியில் இருந்து தங்களுக்கு அழுத்தம் தரப்படுவதாக ஓபிஎஸ் சொன்னார், எடப்பாடி அதை ஆமோதித்தார்.
அமித்ஷா தமிழக வருகைக்கு முன்பாக...பாரதிய ஜனதாவை அதிமுக கழற்றி விடப் போகிறது என்று நடுவிலே ஒரு பேச்சு வந்தது. அதிமுக நிர்வாகிகள் அது பற்றிய தங்களது சந்தேகங்களைப் பேசவே அன்றைய கூட்டத்தில் திரண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு அரசு விழாவில் ஓபிஎஸ் ‘அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்’ என்று பேசினார். அதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடியும் அதனை வழிமொழிந்தார். ஆனால் அமித்ஷா எதுவும் சொல்லவில்லையே என்று பேசியவர்களுக்கு... அதிமுக தரப்பு சொன்னது இதை தான்! ‘பாரதிய ஜனதாவுக்கு நம்மை விட்டால் வேறு வழி இருக்கிறதா... திமுகவுடன் அவர்கள் சேர முடியாது, ரஜினியின் அரசியல் கதவு மூடப்பட்டு விட்டது. தேமுதிக, பாமக எல்லாம் சேர்ந்து தனி அணி அமைத்தால் கூட, அது எடுபடாது. தேமுதிக வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. அன்புமணி இராமதாசுவும் தோற்றுப்போய் பின்வாசல் வழியாக, ராஜ்ய சபாவிற்கு நுழைந்திருக்கிறார். பாமகவின் ஓட்டு வங்கியும் இப்போது இறங்குமுகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மை விட்டால் அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்?! எனவே நம் கூட்டணி தொடரும்” என்று கட்சிக்காரர்களிடம் முதல்வரும் அவரது துணையும் அன்று இணையாகவே ஒத்து ஊதினார்கள்.
இருவரும் அன்று பேசியதற்கு ஏற்றவாறே இருவரும் அமர்ந்திருந்த அதே மேடையில் தான், வாரிசு அரசியல் பற்றி அமித்ஷா பேசினார். தமிழக அரசை மானாவரியாக பாராட்டினார். இதெல்லாம் போதாதா என்று தம் கட்சியினரிடமே ஆனந்தக்கேள்வி கேட்கிறார்கள் இப்போது இரண்டு பிஎஸ்களும்!.
தமிழகம் வந்திருந்த அமித்ஷா தங்கியிருந்த லீலா பேலஸில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் மூவரும் அவரை சந்தித்தனர். முதலில் அரசு கோரிக்கைகளை பற்றி பேசினார்கள். தொகுதிப் பங்கீடு பற்றி பேசும்போது, ஜெயக்குமார் வெளியே அனுப்பப்பட்டார். ஆனால் தொகுதி பங்கீடு பற்றி எடப்பாடி ஆரம்பித்தபோது, ‘இப்போது என்ன அவசரம்? பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று அமித்ஷா சொல்ல... அதற்கு எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் சம்மதித்து, ‘பிறகே பேசிக் கொள்ளலாமே’ என்று எழுந்து விட்டனர். மொத்த சந்திப்பு நேரமே 20 நிமிடம் தான். இதற்குள் எந்த முக்கிய முடிவும் எடுப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆனால், அமித்ஷா நூறு தொகுதிகள் கேட்டார் என்றும் இல்லை 60 என்றும், கிடையாது 45 தான் என்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் ரெக்கை கட்டி பறக்கிறது.
அமித்ஷா மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் இவர்களிடையே பேசும்போது... “முதலில் பூத் கமிட்டி அமையுங்கள். நிறைய உறுப்பினர்களை சேருங்கள், கட்சியை அடித்தளத்திலிருந்து வலிமைப் படுத்துங்கள். கூட்டணி, தொகுதிப் பங்கீடு இதுபற்றி எல்லாம் மாநில தலைவர், மாநில பொறுப்பாளர்கள் பேசி முடிவு செய்து கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டார். இதே சமயம், தமிழக சட்டசபையில் பாரதிய ஜனதாவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதையும் உறுதிபட சொன்னார் அமித்ஷா.
மறுநாள் காலை, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் அமித்ஷா பேசினார். கட்சிப் பிரமுகர்களுடன் பேசியதை விட அதிக நேரம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன்தான் அமித்ஷா பேசினார். “தமிழகத்தில் குறைந்தது 2 கோடி மக்களை நீங்கள் சந்தித்து, பாரதிய ஜனதா தமிழ்நாட்டிற்கு ஏன் அவசியம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். திராவிட அரசியல் மீது தமிழக மக்களுக்கு ஒரு அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறார். பாரதிய ஜனதாவை பொறுத்தவரை எந்த மாநிலத்திலும் வலுவாக காலூன்ற அது ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை தான் அந்த மாநிலத்தில் இழுக்கும். தமிழ்நாட்டிலும் அப்படியே முடிவு செய்திருக்கிறது. இப்போது ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் அந்த வேலையை செய்யத் துவங்கிவிட்டது.
வேல் யாத்திரைக்கு பெரும் கூட்டம் கூடுகிறது, திராவிட கட்சிகள் மாதிரி பணம் தந்து தான், தமிழக பாரதிய ஜனதாவும் கூட்டத்தை கூட்டுகிறது. திராவிட கட்சிகள் மாதிரி, யாத்திரையில் குத்தாட்டம் போடக் கூட பெண்களை தயார் செய்து வைத்திருக்கிறது. பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக வலுவாக இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அந்த வேலைகளை துவங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் அதிமுகவை எதிர்ப்பதை விட பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறது, திமுக. ஆனால் பாரதிய ஜனதாவை ஒரு அச்ச உணர்வோடு தான் திமுக எதிர்க்கிறது. go back Modi, go backamith sha, என்று சமூக தளங்களில் வைரலாகிய பதிவுகளில் திமுகவின் பங்கு இருப்பது பாரதிய ஜனதாவுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் ஹோட்டலுக்கு அருகே இறங்கி, சிறிது தூரம் நடந்தே சென்றார் அமித்ஷா.
எல்லாம் இருப்பினும், வேல் யாத்திரை, நடுத்தர வர்க்கத்தினரை பாரதிய ஜனதா பக்கம் கொஞ்சம் இழுக்க ஆரம்பித்திருக்கிறது என்பது உண்மையே.
‘இது பெரியார் மண் இங்கு பாரதிய ஜனதா காணாமல் போகும்’ என்று திராவிட கட்சிகள் மேம்போக்காக சொன்னாலும், அதற்கும் உள்ளுக்குள் ஒரு அச்சம் இருப்பது உண்மை. அதனால்தான், திமுக-வில் யாத்திரையை தடுக்க தோழமை கட்சிகள் மூலம் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டது.
அதன் பிறகு இன்னும் வேகமாக வேல் யாத்திரையை உத்வேகப் படுத்தினார் தலைவர் முருகன். பாரத் மாதா கி ஜேயுடன் வெற்றிவேல் முருகன் கோஷமும், இப்போது பாரதிய ஜனதாவில் கேட்க ஆரம்பித்துவிட்டது. இதுதான் பாரதிய ஜனதாவின் இந்துத்துவா அஜெண்டா. இதற்கு வசதியாக வழிப்படுத்தி கொடுத்தது கருப்பர் கூட்டம். ‘நாங்கள் இந்து விரோதிகள் அல்ல’ என்று பட்டியல் போட்டு பேசும் நிலைக்கு திமுகவை தள்ளிவிட்டது பாரதிய ஜனதா.
இதன் நடுவே மற்ற கட்சிக்காரர்களுக்கு வலைவீசும் வேலையையும் சாமர்த்தியமாக அது நகர்த்துகிறது. மு.க. அழகிரியுடன் பேச்சுவார்த்தை என்று ஒரு வெடியை கொளுத்திப் போட்டது. இப்போது மு.க. அழகிரி மகனை திமுக வளைத்துப் போட்டு, அவருக்கு பதவி தரவும், கணிசமான கரன்சி என்றும் பேரம் பேசப்படுகிறது என்றெல்லாம் செய்தி வரத் துவங்கிவிட்டது. இதெல்லாம் பாரதிய ஜனதாவிற்கு மட்டுமே சாத்தியம்.
அதே சமயம், பாரதிய ஜனதா தமிழகத்தில் மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் போது அது உடகட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல் ஆளுநர் நியமனம் செய்த துணைவேந்தர் மீது ஆளும் கட்சியான அதிமுக விசாரணை கமிஷன் வைத்ததை, அமித்ஷா கண்டிக்கவில்லை என்பது பலருக்கும் கட்சியில் வருத்தமே!.
ஆனால், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அமித் ஷாவை சந்தித்து சூரப்பாவின் அரசியல் விளையாட்டு பற்றி விலாவரியாக சொல்லிவிட்டார் என்றும் அதனாலேயே இந்த விஷயத்தை அமித்ஷா பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் பேசப்படுகிறது.
7 பேர் விடுதலை விஷயத்தில், சிபிஐ ‘இதுபற்றி முடிவெடுக்க வேண்டியது ஆளுநர் தான்’ என்று பந்தை ராஜ்பவன் பக்கம் தட்டிவிட்டது.
ஆனால், ராஜீவ் படுகொலையை விசாரித்து தண்டனை வாங்கித் தந்தது மத்திய அரசு அமைப்பான சிபிஐ தான். இதுவரை பல அரசியல் கட்சிகள், மத்திய அரசுக்குத்தான் அழுத்தம் தந்தது. இப்போது திடீரென்று ஆளுநர் மீது தங்களது அழுத்தத்தினை திருப்பி விடப்பட்டுள்ளன. 7 பேர் விடுதலையில் அவர்களுக்கு ஆதரவாக ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் அது சர்ச்சையில்தான் போய் முடியும், நீதிமன்றத்திற்கும் போய் ஒரு சிலர் இந்த விடுதலைக்கு எதிராக தடை வாங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஏழு பேரில் நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விடுதலையானால் எங்கே போவார்கள்? அவர்களை இலங்கை அரசு ஏற்காது. காரணம், அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது புலிகள் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். இதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. ‘அவர்களை தமிழர்களாக பார்க்காதீர்கள், கொலைக் குற்றவாளிகளாக பாருங்கள்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். இது தவிர, சட்ட நிபுணர்கள், இதை வேறு கோணத்தில் அலசி பார்க்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அது கருணை அடிப்படையில், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. குற்றவாளிக்கு ஒருமுறைதான் சலுகை தர முடியும். இரண்டாவது முறை பரிவு காட்ட சட்டத்தில் இடமில்லை. இது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்றெல்லாம் சுட்டிக்காட்டுகிறார்கள். முதல்வரும் அமித் ஷாவிடம் 7 பேர் விடுதலை பற்றி பேசினார். ஆனால், அவர் உத்தரவாதமாக எதுவும் சொல்லவில்லை. 7 பேர் விடுதலை சம்பந்தமாக இரண்டு முன்று தினத்தில் ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க இருக்கிறார் என்ற தகவல் திமுகவுக்கு கிடைக்க... நாங்கள் கேட்டதால்தான், ஆளுநர் செய்தார் என்று ஆளுநரை திமுக சந்தித்து முறையிட்டுள்ளது. ஆளுநரை துரைமுருகன் தலைமையிலான குழு தான் முதலில் சந்திப்பதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் அந்தப் பெருமையை நாம் மிஸ் பண்ண கூடாது என்று ஸ்டாலின் இணைந்தார். எது எப்படியோ அரசியலுக்காக எதையும் செய்யும் பாரதிய ஜனதா, ஏழு பேர் விடுதலைக்காகவும் எதையும் செய்யும்.
அமித்ஷா வாரிசு அரசியல் பற்றி சொன்ன கருத்துக்கு, அவர் ஓபிஎஸ் பற்றி சொல்கிறார் என்று சமாளித்தார் ஸ்டாலின். காங்கிரஸ் - திமுக ஆட்சியில் என்ன செய்தது என்ற கேள்விக்கு, டி.ஆர். பாலு பெரிய பட்டியலே வெளியிட்டார். “நிவர்” புயலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அமித்ஷாவின் சென்னை விஜயம், தமிழ்நாட்டில் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷாவின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்பது அமித்ஷாவுக்கு மட்டுமே தெரியும்.
Leave a comment
Upload