தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 15 - மதன்

கிஸிர்கான்‌..
சிகந்தர்‌ லோடி..
இப்ரஹீம்‌ லோடி...

20201027233319505.jpeg

பிறகு...!


பிரோஸ்‌ துக்ளக்கின்‌ மூச்சு நின்ற கையோடு, டெல்லி சுல்தான்களின்‌ ஆட்சியும்‌ இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. மறைந்த மன்னரின்‌ வாரிசுகள்‌ என்ற பெயரில்‌ பிற்பாடு அரியணை ஏறியவர்களின்‌ முகங்கள்‌ மக்கள்‌ மனதில்‌ பதிவதற்கு முன்பே, அவர்கள்‌ காணாமல்‌ போனார்கள்‌! ராஜ வம்சத்தில்‌ பிறந்தவர்கள்‌ என்‌ற பெருமையைத்‌ தவிர, நாடாள்வதற்கான வேறு எந்தத்‌ தகுதியும்‌ அவர்களுக்கு இருக்கவில்லை.

பிரோஸ்‌ துக்ளக்குக்குப்‌ பிறகு, அவர்‌ பேரன்‌ துக்ளக்‌ ஷா ஆட்சிக்கு வந்து அரண்மனையை ஒரு ‘ஜாலியான கிளப்‌’ போல நடத்திவிட்டு, ஜந்து மாதங்களில்‌ அமீர்களால்‌ மேலுலகம்‌ அனுப்பப்பட்டார்‌.

பிறகு அபுபக்கர்‌ என்னும்‌ இன்னொரு பேரப்‌ பிள்ளைக்குப்‌ பிரபுக்கள்‌ பட்டம்‌ சூட்டினார்கள்‌. ஆட்சிக்கு வந்து ஆண்டு விழாவைக்கூட நடத்தவிடாமல்‌, அவருடைய மாமன்‌ முகமது (பிரோஸ்‌ துக்ளக்‌கின் மகன்‌) டெல்லியைக்‌ கைப்பற்றினார்‌. நான்கு ஆண்டுகள்‌ ஆட்சி என்ற பெயரில்‌ கும்மாளம்‌ போட்டு, மக்களை வெறுப்பேற்றியவர்‌ இவர்‌. அவருக்குப்‌ பிறகு, அவர்‌ மகன்‌ மகமது ஷா என்பவர்‌ அரியணை ஏற... அவருடைய அங்கியைப்‌ பிடித்து இழுத்து மல்லுக்கு நின்றார்‌, அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்‌ நஸ்ரத்‌ ஷா.

அடித்துக்கொண்ட இந்த இருவரையும்‌ தூண்டிவிட்டு, அதில்‌ குளிர்‌ காய்ந்தது சுயநலம்‌ மிகுந்த பிரபுக்கள்‌ கூட்டம்‌! அதற்கேற்ப மகமது ஷா, நஸ்ரத்‌ ஷா இருவரும்‌ ‘நான்தான்‌ டெல்லி சுல்தான்‌’ என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, ஏக காலத்தில்‌ டெல்லியின்‌ வெவ்வேறு பகுதிகளில்‌ அமர்ந்து ‘தர்பார்‌’ பண்ணிய தமாஷும்‌ நடந்தது.

செப்டம்பர்‌ 22, ஆண்டு 1398-ல்‌...

இந்தத்‌ தமாஷை முடித்து வைத்து, தரையெங்கும்‌ ரத்தம்‌ பாய்ச்ச வந்து சேர்ந்தான்‌ நம்‌ முதல்‌ அத்தியாயக்‌ கதாநாயகன்‌(1) தைமூர்‌!

காபூலுக்கு வடக்கேயிருந்து ஆவேசத்‌துடன்‌ வந்து சேர்ந்த தைமூரைக்‌ கொண்டு, இந்தப்‌ புத்தகத்தை ‘மங்களகரமாக’ ஆரம்பித்து வைத்ததும்‌, அவனுடைய கொலை வெறியாட்டத்தைப்‌ பார்த்து நாம்‌ கதிகலங்கி உடனே ‘ஃப்ளாஷ்பேக்‌’குக்கு ஓடிவிட்டதும்‌ வாசகர்களுக்கு தெரிந்ததே!

ஆறு மாதங்கள்‌ மட்டுமே டெல்லியில்‌ தைமூர்‌ தங்கியிருந்தான்‌. டெல்லியில்‌ கணுக்கால்‌ அளவு ஓடிய ரத்த ஆற்றைக்‌ கால்‌ பதியக்‌ கடந்து, அவன்‌ தன்‌ சொந்த ஊரான சாமர்கண்ட்‌ திரும்பிய பிறகு, சில மாதங்கள்‌ டெல்லியில்‌ நடமாட்டமே இல்லாமல்‌ போய்விட்டது. அப்புறப்‌படுத்தப்படாமல்‌ பல்லாயிரக்கணக்கில்‌ சின்னாபின்னமான உடல்கள்‌ கிடந்ததுதான்‌ காரணம்‌. பிறகு தப்பி ஓடிப்‌ போயிருந்த மகமது ஷா திரும்பி வந்தார்‌. டெல்லி வீதிகளை முடிந்தவரையில்‌ சுத்தப்படுத்‌திவிட்டு, சில ஆண்டுகள்‌ பெயருக்கு ‘ஆட்சி’ செய்தார்‌.

கி.பி.1412-ல்‌ மகமது ஷா இறந்ததோடு சரித்திரம் துக்ளக்‌ சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்‌புள்ளி வைத்தது.

அதைத்‌ தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு அரசர்‌ இல்லாமல்‌, தெளலத்கான்‌ லோடி என்ற பிரபுவின்‌ நிர்வாகத்தில்‌ அப்படி, இப்படியென்று டெல்லி சமாளித்தது!

தைமூர் இந்திய எல்லைக்குள்‌ நுழைந்தபோது வெள்ளைக்கொடி காட்டி, அவனுடன்‌ சேர்ந்து கொண்டார்‌ கிஸிர்கான்‌ சையது என்ற பிரபு. அதை மனதில்‌ வைத்துக்கொண்டு, போவதற்குமுன்‌ கிஸிர்கானை முல்தான்‌ மற்றும்‌ லாகூருக்குத்‌ தன்‌ ஆளுநராக நியமித்தான்‌ தைமூர்‌.

கி.பி.1414-ல்‌ லாகூரிலிருந்து ஒரு சிறு படையுடன்‌ கிளம்பி வந்த கிஸிர்கான்‌, டெல்லியைக்‌ கைப்பற்றிச்‌ சிம்மாசனம்‌ அமர்ந்தார்‌. கிஸிர்கானும்‌ அவரது வாரிசுகளும்‌ வரிசையாகத்‌ தொடர்ந்து முப்பத்தேழு ஆண்டுகள்‌ டெல்லியில்‌ ஆட்சி புரிந்தனர்‌.

அலாவுதீன்‌ கில்ஜி காலத்தில்‌ வடக்கே சிந்து மாகாணத்திலிருந்து கிழக்கே வங்காளம்‌ வரையிலும்‌ தெற்கே மதுரை வரையிலும்‌ பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்யம்‌, யானை தேய்ந்து சிற்றெறும்பு ஆன கதையாகப்‌ போன காலகட்டம்‌ இது. மொத்த ராஜ்யமே டெல்லியைச்‌ சுற்றி ஒன்பது மைல்தான்‌ என்றால்‌ நிலைமையைப்‌ புரிந்து கொள்ளலாம். டெல்‌லி எல்லையில்‌ உள்ள கிராமத்து ஜமீன்கள்கூட வரிகட்ட மறுத்ததால்‌, படையனுப்பி மிரட்டி வசூல்‌ செய்ய வேண்டிய சூழ்நிலை!

இந்த நிலையில்‌, லாகூரை நிர்வகித்து வந்த பலூல்‌ லோடி என்னும்‌ ஆளுநர்‌ டெல்லியைக்‌ கைப்பற்றி, ‘லோடி ஆட்சி’க்கு வழிகோலினார்‌. முதல்‌முறையாகச்‌ சுத்த ஆப்கானிய ரத்தத்தில்‌ உருவாக்கப்பட்ட அரசு டெல்லியில்‌!

பலூல்‌ லோடி 37 ஆண்டுகள்‌ டெல்லியை ஆண்டதோடு, எல்லைகளைச்‌ சற்று விஸ்தாரமும்‌ செய்தார்‌!

எளிமையும் குறும்பும்‌ மிக்க ஒரு மன்னர்‌ பலூல்‌ லோடி என்கிறார்கள்‌ சரித்திர ஆசிரியர்கள்‌. அவர்‌ சிம்மாசனத்தில்‌ உட்கார்ந்ததேயில்லை. தரையில்‌ கால்‌ நீட்டிக்கொண்டு, ஹாயாக உட்காருவதுதான்‌ மன்னருக்குப்‌ பிடித்தமானது. வாயிற்‌காப்போனைகூட, போகிற வழியில்‌, “என்னப்பா... செளக்கியமா?” என்று தோளைத்‌ தட்டி விசாரித்துவிட்டுச்‌ செல்லும்‌ அளவுக்கு ஜாலியான டைப்‌!

இவருக்குப்‌ பின்‌ ஆட்சிக்கு வந்தவர்‌ சிகந்தர்‌ லோடி. இவருடைய தாய்‌, ஒரு இந்து பொற்கொல்லரின்‌ மகள்‌! இருப்பினும்‌, இந்து மக்களிடம் மிகவும்‌ கடுமையாக நடந்து கொண்டார்‌ சிகந்தர்‌ லோடி. சிறந்த வீரரான இவர்‌ பீஹார்‌, மால்வா போன்ற பகுதிகளை வென்று, டெல்லி ராஜ்‌யத்தை மேலும்‌ விரிவுபடுத்‌தினார்‌. பயணம்‌ என்று கிளம்பினால்‌, வழியில்‌ உள்ள இந்துக்‌ கோயில்களை இடித்துக்கொண்டே போவது இவரது வழக்கம்‌. ‘யமுனை நதியில் இந்துக்கள்‌ குளிக்கக்கூடாது’ என்று சட்டம்‌ போடும்‌ அளவுக்குப்‌ போனார்‌, இந்த ஆப்கானிய மன்னர்‌.

சிகந்தர்‌ லோடி ஆட்சியில்‌ நடந்த ஒரு நிகழ்ச்சியை, அநேகமாக எல்லா வரலாற்று ஆசிரியர்களும்‌ ஒரு பெட்டிச்‌ செய்தியாகக்‌ குறிப்பிடுகிறார்கள்‌.

ஒரு பொதுக்கூட்டத்தில்‌ பிராமண குலத்தைச்‌ சேர்ந்த பிரபு ஒருவர்‌, “இஸ்லாமிய மதம்‌, இந்து மதம்‌ இரண்டும்‌ ஒன்றுதான்‌. இரண்டுமே கடவுளிடம்‌ நம்மைக்‌ கொண்‌டு சேர்க்கும்‌ மேன்மையான இரு பாதைகள்‌” என்று பேச... இந்தச்‌ செய்தி சிகந்தர்‌ லோடிக்குப்‌ போனது. தர்பாருக்குக்‌ கொண்டு வரப்பட்டார்‌ பிராமணர்‌. “இவர்‌ இப்படிப்‌ பேசியது சரிதானா? எனக்குச்‌ சற்றுக்‌ குழப்பமாக இருக்கிறது...” என்று பக்கத்தில்‌ இருந்த மதகுருமார்களிடம்‌ சிகந்தர்‌ லோடி கேட்க, ஒருவர்‌ “மன்னா! இவர்தான்‌ இரண்டுமே ஒன்று என்கிறாரே... ஆகவே, இஸ்லாமிய மதத்தில்‌ சேருவதில்‌ இவருக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்‌?” என்றார்‌. “அதானே!” என்று சிகந்தர்‌ லோடி ஆமோதிக்க... “இரு மதங்களும் ஒன்று என்றுதான்‌ நான்‌ சொன்னேன்‌... அதன்படி இந்து மதத்திலேயே நான்‌ தொடர்ந்து இருப்பதில்‌, தங்களுக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்‌?” என்றார்‌ பிராமணர்‌ பதிலுக்கு.

“அரசர்‌ ஒன்று சொன்னால்‌ அதற்கு தலைவணங்காமல்‌, இப்படி அதிகப்பிரசங்கித்‌ தனமாகப்‌ பதில்‌ சொல்லிக்‌ கொண்டிருப்பதே முதல்‌ தவறு. இப்படிப்‌பட்டவர்களுக்கு நம்‌ ராஜ்யத்தில்‌ இடமில்லை. இவரை உடனே மேலுலகம்‌ அனுப்புங்கள்‌!” என்று ஆணையிட்டார்‌ சிகந்தர்‌ லோடி.

பொதுவாக சிகந்தர்‌ லோடி நிர்வாகத்‌ திறமை மிகுந்த மன்னராகத்‌ திகழ்ந்தார்‌. இவர்‌ ஆட்சி புரிந்தபோது, மாவட்ட ஆளுநர்கள்‌ கணக்கு வழக்கையெல்லாம்‌ சரியான முறையில்‌ வைத்திருந்தார்கள்‌. திடீர்‌ திடீரென்று கணக்குக்‌ கேட்கும்‌ வழக்கம்‌ சிகந்தர்‌ லோடிக்கு இருந்ததுதான்‌ காரணம்‌!

ஒவ்வோர்‌ ஆண்டும்‌ ‘வறுமைக்கோட்டுக்குக்‌ கீழே உள்ள ஏழை மக்கள்‌ எத்தனை பேர்‌’ என்று சென்ஸஸ்‌ ஒன்றும்‌ இவர்‌ ஆட்சியில்‌ எடுக்கப்பட்டது. அவர்களுக்கு உதவித்‌ தொகையும்‌ இலவச உணவும்‌ வழங்கப்‌பட்டன!

1504-ல்‌. ஆக்ரா என்னும்‌ புதிய ஊரை டெல்லிக்கு அருகே நிர்மாணித்தவர்‌ இவர்தான்‌.

ஜூலை 6, கி.பி.1505...

டெல்லியையும்‌ அதன்‌ சுற்றுப்புறங்‌களையும்‌ பயங்கரமான பூகம்பம்‌ ஒன்று தாக்கியது. மொகலாய சாம்ராஜ்யம்‌ துவங்குவதற்கான வேளை வந்‌துவிட்டது என்பதை, இயற்கை சற்றுப்‌ பலமாகவே முரசு கொட்டித்‌ தெரியப்படுததியதோ என்னவோ!

சிகந்தர்‌ லோடி இறந்த பிறகு பட்டத்துக்கு வந்த அவரது மகன்‌ இப்‌ரஹீம்‌ லோடி சிறந்த வீரராக இருந்தாலும்‌, முன்கோபத்தாலேயே அழிவைத்‌ தேடிக்‌கொண்டார்‌. இவரது கொடுங்கோல்‌ அணுகுமுறையை எதிர்த்து, ஆட்சேபணை கொடி தூக்கிய சொந்த சகோதரர்‌ ஜலால்‌ லோடியை இரக்கம்‌ இல்லாமல்‌ கொலை செய்துவிட்டு, ‘ஒரு கொடூர இலவச இணைப்பாக’ ஹூமாயூன்‌ என்னும்‌ ஒன்றுவிட்ட சகோதரரையும்‌ சிறைப்படுத்தி, சித்ரவதை செய்து சாகடித்தார் இப்ரஹீம்‌.

ஆப்கான்‌ பிரபுகள்‌ பொதுவாகவே விசுவாசமானவர்கள்‌. அவர்களையேகூடத்‌ தேவையில்லாத கடுமையுடன்‌ மோசமாக நடத்தியதால்‌, விரைவில்‌ மன்னருக்கு எதிராக வெறுப்பு உணர்ச்சியுடன் கிளர்ச்சிகள்‌ வெடித்தன. இதற்கு முத்தாயப்பாக, லாகூர்‌ கவர்னராக இருந்த தெளலத்கான்‌ தலைமையில்‌ பிரபுக்கள்‌ ரகசியக்‌ கூட்டம்‌ போட்டனர்‌. “எதற்கும்‌ உபயோகமில்லாத இந்த ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டிய தருணம்‌ வந்துவிட்டது. அதை வெற்றிகரமாகச்‌ செய்து முடிக்க ஒரு திறமையான வீரர்தான்‌ இப்போது தேவை. அண்மையில்‌ காபூலை வெற்றிகரமாகக்‌ கைப்பற்றி ஆட்சியில்‌ அமர்ந்திருக்கிறார்‌ ஒரு துடிப்பான வீரர்‌. பாபர்‌ என்று பெயர்‌... அவரை உதவிக்கு அழைத்தால்‌ என்ன?” என்று தெளலத்கான்‌ யோசனை சொல்ல… “அப்படியே செய்வோம்‌!” என்று ஏகமனதாகத்‌ தீர்மானம்‌ நிறைவேறியது!

ஆப்கானிஸ்தானில்‌, காபூல்‌ அரியணையில்‌ அமர்ந்த கையோடு, தன்‌ நெருங்கிய ஆலோசகர்களிடம்‌ உரையாடிக்‌ கொண்டு இருந்த பாபர்,
“எனக்கு நீண்ட நாட்களாக ஒரு கனவு... இந்தியாவை ஆளவேண்டும்‌ என்று!” எனச்‌ சொல்லிக் கொண்டிருக்கும்‌போது... ‘இந்தியாவுக்கு வர முடியுமா? தங்கள்‌ உதவி தேவை!’ என்று தெளலத்கான்‌ தலைமையில்‌ பிரபுக்கள்‌ எழுதி அனுப்பிய கடிதம்‌, பாபர்‌ கைக்குப்‌ போய்ச்‌ சேர்ந்தது!

“இது எப்படியிருக்கு?” என்கிற பாணியில்‌ வாய்விட்டுச் சிரித்தார்‌ பாபர்‌...!


டெல்லியில்‌ உள்ள லோடி தோட்டத்தில்‌ இன்றைக்கும்‌ லோடி மன்னர்களின்‌ கல்லறைகளைக்‌ காணலாம்‌. பிரிட்டிஷ்‌ காலத்தில்‌ இந்தக்‌ கல்லறைத்‌ தோட்டத்துக்கு ‘லேடி வெலிங்டன்‌ பார்க்‌’ என்று பெயரிட்‌டார்கள்‌. நாடு சுதந்திரமடைந்த பிறகு ‘லோடி தோட்டம்’ என்ற நியாயமான பெயரே வைக்கப்பட்டது.

இங்கே உள்ள சிகந்தர்‌ லோடியின்‌ கல்லறையைச்‌ “சில நாட்களிலேயே குறைப்பிரசவமான தாஜ்‌மஹால்‌ என்று அழைக்கலாம்‌...” என்கின்றனர்‌ சில கட்டடக்‌கலை வல்லுநர்கள்‌.

இந்தக்‌ கல்லறையைச்‌ சற்று உன்னிப்பாகப்‌ பார்த்தால்‌, பெரிய தோட்டம்‌... நடுவில்‌ கட்டடம்‌... அதை அடைய நீண்ட பாதை... பிறகு படிகள்‌... நடுநாயகமாகக்‌ கிண்ணத்தைக்‌ கவிழ்த்ததைப்‌ போல கூரை…
இந்த அணுகுமுறையே பிற்பாடு மொகலாயர்‌ ஆட்சியில்‌ எவ்வளவு பிரமாண்டமாக முழுமை பெற்றது என்பதைப்‌ பார்க்கும்போது, மொகலாய சாம்ராஜ்யத்தில்‌ - குறிப்பாக ஷாஜஹான்‌ ஆட்சியில்‌ - கட்டடக்கலை எவ்வளவு உன்னதமாக உருவெடுத்து நின்று இந்தியாவுக்குப்‌ பெருமை சேர்த்தது என்பதைப்‌ புரிந்துகொண்டு பிரமிக்கலாம்‌! ஆனால்‌, பாபர்‌ காலத்தில்‌ கட்டடக்கலை பெரிதாகப்‌ பிரகாசிக்க ஆரம்பிக்கவில்லை. லோடி ஆட்சிக்‌ காலத்துக்‌ கட்டடங்களைவிட ஓரளவு முன்னேறியது என்றுதான்‌ கூற முடியும்‌. குறிப்பாக, லோடி கார்டனில்‌ உள்ள பாரா கும்பாத்‌ கல்லறை (இது கல்லறைதானா என்பது பற்றியே மாறுபட்ட கருத்துக்கள்‌ தொல்பொருள்‌ ஆராய்ச்சியாளர்களிடையே உண்டு என்பது வேறு விஷயம்‌!)...
அதையொட்டி இருக்கும்‌ மசூதி... அதன்மேல்‌ வரிசையாக உள்ள கூரைப்‌ பகுதிகளின்‌ அமைப்பு... அதில்‌, திடீரென்று இன்றைக்கு அரசியல்‌ பிரசித்தி அடைந்திருக்கும்‌ பாபர்‌ மசூதியின்‌ சாயலைப்‌ பார்க்கலாம்‌!