உதயநிதி ஸ்டாலின் “நிவர்” புயல் காரணமாய் தேர்தல் பிரச்சாரத்திற்கு லீவ் லெட்டர் தந்ததால், அவர் வீட்டில்தான் இருந்தார்.
“வாப்பா மிஸ்டர் ரீல்... என்ன இந்தப் பக்கம்? நான் அவ்வளவு பெரிய தலைவர் எல்லாம் இல்லையே” என்றபடி உதயநிதி ஸ்டாலின் மிஸ்டர் ரீலை வரவேற்றார்.
“டிஜிபிய எல்லாம் ‘இரு, உன்னை வச்சிக்கிறேன்’ என்று மிரட்டுகிற அளவுக்கு பெரிய தலைவர் ஆயிட்டீங்க. ஆனாலும், இந்த தன்னடக்கம் உங்களை எங்கேயோ கொண்டு போகப் போகுது” என்று மிஸ்டர் ரீல் ஆரம்பித்தார்.
உடனே உதயநிதி “அவரை வெச்சிக்க அவர் என்ன சினிமா நடிகையா... அப்படியெல்லாம் சொல்லவில்லை. அஞ்சு மாசம் கழிச்சி பார்த்துக்கிறேன் என்று தான் சொன்னேன்” என்றார் உதயநிதி காலர் தூக்கியபடி!
உடனே மிஸ்டர் ரீல், “ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நல்லவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். அவருடைய திருமதி பீலா ராஜேஷ் கூட சுகாதாரத்துறை செயலாளரா இருந்தாங்க, இப்ப அவங்கள மாத்திட்டாங்க” என்று மிஸ்டர் ரீல் சொல்ல...
உடனே உதயநிதி, “அவரா.... ரொம்ப ரொம்ப நல்லவர். நான் பிரச்சாரத்திற்கு போன இடத்தில் எல்லாம் என்ன கைது பண்ணி கல்யாண மண்டபத்துக்கு கூட்டிட்டு போய், என்னை மணமகள் அறையில் போய் உட்கார வச்சாங்க. ‘நான் ஒன்னும் பொம்பள கிடையாது, என்னை ஏன் மணமகள் அறையில் வைக்கறீங்க... என்னை மணமகன் அறையில் வையுங்கள்.. அல்லது நானும் தொண்டர்களுடன் சேர்ந்து ஹாலிலேயே உட்காருகிறேன்’ என்று சொன்னேன்.
அப்போதுதான், ‘டிஜிபி உத்தரவு சார். உங்களை எங்கு கைது பண்ணாலும், மணமகள் அறையில் தான் உட்கார வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்’ என்று காக்கிகள் என்கிட்ட சொன்னாங்க” என்றார் உதயநிதி சூடாக!
உடனே மிஸ்டர் ரீல், “மணமகன் அறையைவிட மணமகள் அறையில் வசதிகள் ஜாஸ்தியாக இருக்கும். முக்கியமா கண்ணாடி பெரிசா இருக்கும். நீங்க வேற ஒரு சினிமா பிரபலம்..அதிலும் உங்க முதல் படமே ‘ஒரு கல்..ஒரு கண்ணாடி’. அதனால் கூட இருக்கும் இல்லையா” என்று மிஸ்டர் ரீல் கேட்க...
உடனே உதயநிதி ஸ்டாலின், “அது சரி. ஆனா, அங்க எதுக்கு அந்த ரூமிலெல்லாம் நயன்தாரா ப்ளோஆப் படம் வெச்சாங்களாம்?” என்று அங்கலாய்த்தார்.
மிஸ்டர் ரீல், “இதற்கு காவல்துறை என்ன செய்யும் சார், மண்டப உரிமையாளர் நயன்தாரா ரசிகராக இருந்திருப்பார்!” என்று சொல்ல...
உதயநிதி “சரி நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நான் கைது பண்ணி உட்கார வைக்கிற எல்லா கல்யாண மண்டபத்திலும் மணமகள் அறையில் நயன்தாரா படம். அது மட்டும் ஏன் பொதுவா இருந்திச்சு?! பொதுவா கைது பண்ணி கல்யாண மண்டபத்துல உட்கார வச்சுட்டு, ரெண்டு மூணு மணி நேரத்துல என்னை ரிலீஸ் பண்ணிடுவாங்க. ஆனால், நாகப்பட்டினத்தில் மாத்திரம் ராத்திரி பதினோரு மணி வரை என்ன வெளியே விடவே இல்லை. நானும் நயன்தாரா படமும் மட்டுமான ஒரு சூழ்நிலை! இப்படி தனியா இருந்தா என்ன அவஸ்தை என்பது எனக்கு தான் தெரியும்” என்ற உதயநிதி ஸ்டாலின் வார்த்தையில் நிஜமானதொரு துக்கம்...தொண்டையடைப்பு!
“அப்புறம் என்ன ஆச்சு” என்று ஆர்வத்துடன் மிஸ்டர் ரீல் கேட்க...
உதயநிதி “என் அம்மாதான் நான் பார்க்கக் கூடாதது எதையோ பார்த்து பயந்துட்டேன்னு சொல்லி நரசிம்மர் கோயில் பெருமாள் தீர்த்ததை என் மூஞ்சியில் தெளித்தார்கள். ‘இனிமேல் எதைப் பார்த்தாலும் நீ பயப்பட மாட்ட’ என்றும் சொன்னார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று அந்த தீர்த்த பிரசாதத்தை இப்போது காரிலேயே வைக்கச் சொல்லி இருக்கிறேன். மறுபடியும் நயன்தாரா ப்ளோஅப்பை எங்காவது பார்த்தால், நாமே அந்த தீர்த்த பிரசாதத்தை மூஞ்சியில் தெளித்து சமாளிக்கலாம் என்று முடிவும் செய்திருக்கிறேன்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.
நயன்தாராவை பார்த்து, இவர் ஏன் இப்படி பயப்படுகிறார் என யாராவது சினிமா ஆளுங்ககிட்டதான் விசாரிச்சுப் பார்க்கணும் என யோசித்தபடியே மிஸ்டர் ரீல் எழுந்து வெளியே வந்தார்.
அமித்ஷாவை சென்னையில் பார்க்கலாம் என்று மிஸ்டர் ரீல் நினைத்தார். ஆனால், அதெல்லாம் முடியாது. டெல்லிக்கு வா, அங்கு பேசலாம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் மிஸ்டர் ரீலுக்கு தகவல் அனுப்பி விட்டார் அமித்ஷா.
டெல்லிக்குப் போய் அமித்ஷா வீட்டில் நுழையும்போதே “சஷ்டியை நோக்க” என்று கந்த சஷ்டி கவசம் ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது. மிகப் பெரிய முருகர் சிலை, விபூதி என்று அந்த அறையே முருகர் சன்னதி மாதிரி இருந்தது. அமித்ஷா வந்ததும் “இந்தா பஞ்சாமிர்தம் சாப்பிடு... இப்ப வர விருந்தாளிகளுக்கு எல்லாம் டீ, காபி எல்லாம் கிடையாது, பஞ்சாமிர்தம் தான்” என்றார் அமித்ஷா.
உடனே மிஸ்டர் ரீல் “ஏன் இந்த மாற்றம்” என்று கேட்க...
அமித்ஷா, “வடக்கே ராமர், தெற்கே முருகர். இதுதான் எங்கள் இரு கடவுள் கொள்கை” என்றார்.
மிஸ்டர் ரீல், “இருமொழிக் கொள்கை மாதிரியா இது?!” என்று கேட்க...
உடனே அமித்ஷா, “அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஆயிரம் ரூபாய் நோட்டில் கூட இனிமேல் காந்தி கிடையாது, முருகர் தான். கந்தசஷ்டி அன்று மத்திய அரசு விடுமுறை அறிவிக்கும் திட்டம் கூட இருக்கு. கந்தசஷ்டி கவசம் கூட புதிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தில் சேர்த்தாச்சு” என்று அமித்ஷா அடுக்கிக் கொண்டே போக...
மிஸ்டர் ரீல், “ஏன் இந்த திடீர் முருகர் பாசம்?” என்று கேட்டார்.
உடனே அமித்ஷா, “தமிழ்நாட்டில் தேர்தல் வருகிறது இல்லையா, அதற்காகத்தான். தமிழ்நாட்டில் தாமரை மலர வேண்டும், அதற்கு முருகன் அருள் வேண்டும். அதனால்தான், தலைவர் கூட முருகன் எனும் பெயருடையவராகவே தேர்ந்தெடுத்தோம். துணைத் தலைவர் அண்ணாமலை. இதுதவிர அண்ணாமலை படத்தில் நடித்த குஷ்பூ. இப்படி தமிழக பாரதிய ஜனதாவை சைவ சித்தாந்த கழகமாக நாங்க மாற்றி விட்டோம். அதனால் தான் கூட்டணியைக் கூட பழனிச்சாமியுடன் வைத்திருக்கிறோம். ஆமாம். அதுதான் உண்மை. தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டைகளுக்கு மாதம்தோறும் இலவச விபூதி பாக்கெட் வழங்கும் திட்டம் கூட இருக்கு. அப்புறம் தைப்பூசத்துக்கு இலவச காவடி, பஞ்சாமிர்தம் இதெல்லாம் கூட” என்று அமித்ஷா அடுக்கிக்கொண்டே போக...
குறுக்கிட்ட மிஸ்டர் ரீல்... “ஆனா அந்த ஆறுபடையப்பா தான் உங்க வலையில் சிக்காமல் இருக்கிறார்” என்று மிஸ்டர் ரீல்சொல்ல...
உடனே அமித்ஷா அமைதியாக... “நீ நக்கல் பண்ற. குருமூர்த்தி கூட பாவம், ‘என்னால முடியல. ஒன்னு வரேன்னு சொல்லனும், இல்ல வரமாட்டேன்னு சொல்லணும். எப்ப கேட்டாலும், நான் சொல்றேன் நான் சொல்றேன், தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று திரும்பத் திரும்ப சொல்றாரு. தயவுசெய்து இந்த அசைன்மென்ட்டிலிருந்து என்னை கழற்றி விடுங்கள்’ என்று என்னிடம் கெஞ்சினார். நான்தான் இன்னும் 48 முறை முயற்சி பண்ணுங்க, அப்படி இல்லன்னா நம்ப அதிமுகவ வெச்சு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்” என்று கூலாக பதிலளித்தார் அமித் ஷா!
“அதிருக்கட்டும்...இந்த வேல் யாத்திரை போறவங்கள கைது பண்றாங்களே... உள்துறை அமைச்சர் என்ற முறையில் இதை நீங்க கண்டிக்க மாட்டீங்களா?” என்று மி.ரீ கேட்க...
உடனே அமித்ஷா, “எதுக்கு கண்டிக்கணும்... வேல் யாத்திரை போன முருகன் கைது என்று டிவி பிரேக்கிங் நியூஸ், பேப்பர்ல கொட்டை எழுத்தில் செய்தி. இப்படியெல்லாம் இலவச விளம்பரம் கிடைக்கும்போது, எதுக்கு கண்டிக்கணும்? இதெல்லாம் ஒரு மாதிரியான கூட்டணி தர்மம். எடப்பாடி சார் என்கிட்ட பேசிட்டு தான் செய்தார், செய்கிறார்” என்றார் அமித்ஷா அழுத்தமாக.
“ அது சரி. நீங்க சென்னை வந்த போது, வழி நெடுக தாமரைக் கொடியுடன் உங்களை ஏகப்பட்ட கூட்டத்தினர் வரவேற்றார்கள். உண்மையில் உங்கள் கட்சியில் அவ்வளவு தொண்டர்களா இருக்கிறார்கள்?” என்று மிஸ்டர் ரீல் கேட்க...
“அதெல்லாம் இல்லை. தொகுதிப் பங்கீடு மாதிரி தொண்டர்கள் பங்கிடு இது. அதிமுக தொண்டர்களை எங்க கட்சிக்கு கொஞ்சம் ஒதுக்கச் சொன்னோம், அவங்க தான் அந்த கூட்டத்தில் பெரும் பகுதி. வேல் யாத்திரையில் பெண்கள் நடனம் கூட அப்படித்தான். இதே மாதிரி டான்ஸ் அதிமுக அமைச்சர்கள் வரவேற்பில் நீ பார்த்திருப்பாயே, அவங்க தான் இவங்க” என்று அமித்ஷா ஓபனாகவே சொன்னார்.
“கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தான் இருக்கும். நீங்கள் தொண்டர்கள் பங்கீடு வரைக்கும் பண்ணிட்டீங்க... சரி. தொகுதிப் பங்கீடு எல்லாம் முடிஞ்சிடுச்சா” என்று மிஸ்டர் ரீல் முத்தாய்ப்பாக கேட்க...
அதற்கு அமித்ஷா, “அது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் ஒன்று மட்டும் முடிவாகி விட்டது. அதாவது..பாரதிய ஜனதா வேட்பாளர்கள் பெயர்கள் முருகன் என்றே முடியவடைய வேண்டும். அருள் முருகன், வேல்முருகன், பாலமுருகன் இப்படி எல்லா வேட்பாளர்களும் முருகர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள்” என்று அமித்ஷா மிஸ்டர் ரீலிடம் நம்பிக்கையோடு தன் பேட்டியினை முடித்தார்.
பிரசாந்த் கிஷோர் பாவம்... இந்த தாக்குதலை எப்படி சமாளிக்கப் போகிறாரோ என்ற கவலையுடன் டெல்லியிலிருந்து புறப்பட்டார் மிஸ்டர் ரீல்...!
Leave a comment
Upload