உலக அரங்கில் கால் பந்து ஆட்டத்தின் கதாநாயகன்.. ஜாம்பவான் என்ற ஒரு சிறப்பினை பெற்றவர் அர்ஜென்டினா கால் பந்து விளையாட்டு வீரர் டியாகோ மரடோனா..
டியாகோ ஆர்மண்டோ மரடோனா அக்டோபர் 30 ஆம் தேதி 1960 ஆம் வருடம் அர்ஜென்டைனாவில் உள்ள வில்லா பியரிட்டோ என்ற ஊரில்......
டியாகோ சீனியர் மற்றும் டோனா டோட தம்பதியினருக்கு எட்டு குழந்தைகளில் முதல் மகனாக பிறந்தவர்.
ஏழையாக வாழ்ந்த மரடோனாவிற்கு அவரின் மூன்று வயதில் அவரின் சித்தப்பா ஒரு ஃபுட்பாலை பரிசாக கொடுத்தார்.. அன்று தன் அதிசிய மந்திரக் காலால் கால் பந்தை விளையாட ஆரம்பித்தார் இந்த உலக கால் பந்தாட்ட நாயகன்.
தன் பத்து வயதில் லாஸ் செபாலோடஸ் என்ற அர்ஜென்டைனா ஜூனியர் டீமில் சேர்ந்த விளையாட ஆர்ம்பித்தார்.. அந்த ஃபுட் பால் கிளப் தான் அர்ஜென்டைனாவின் பெரிய பிரபல கிளப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லாஸ் செபாலோடஸ் கிளப்பின் ஃபுட் பால் வீரராகவே 136 விளையாட்டை தோல்வி இல்லாமல் விளையாடி வெற்றி பெற்ற போது, அவருக்கு வயது 16....! அந்த பிறந்த நாளுக்கு முன்னரே சீனியர் டீமில் இணைக்கப்பட்டார் மரடோனா. அதை தொடர்ந்து கிளப் டீம்களின் தலைவராக இத்தாலி, ஸ்பெயின் நாட்டு டீம்களுடன் விளையாடி சாம்பியன்ஷிப்பை அர்ஜென்டைனாவுக்கு பெற்றுக் கொடுத்த பெருமை இவரை சாரும்.
1986 ஆம் வருடம் மெக்ஸிகோவில் நடந்த உலக கோப்பை போட்டியில் இவரின் ஃபுட் பால் விளையாட்டில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இங்கிலாந்துக்கும் அர்ஜென்டைனாவிற்கும் நடந்த போட்டியில், மரடோனாவின் இடது கையில் பந்து பட்டு கோல் போஸ்டினுள் சென்றது. ரெஃப்ரி, அந்த பந்து தலையில் பட்டு தான் கோல் போஸ்டினுள் சென்றது என்று முடிவு செய்துள்ளார்.
அந்த கோலை மரடோனா குறிப்பிட்டது, ‘கடவுளின் கரம்’ ‘Hand of God’. அதை உலகம் இன்றளவும் மறக்கவில்லை.
அர்ஜென்டைனா தேசிய டீமுக்காக 1982.. 1986.. 1990.. மற்றும் 1994 ஆம் வருடங்களில் உலக கால்பந்து போட்டியில் விளையாடி வெற்றி பெற்றார். 1994 ஆம் வருட விளையாட்டில் இவர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார். காரணம், போதைப் பொருள் உட்கொண்டிருந்தார் எனும் குற்றச்சாட்டால்!
மரடோனா சவுத் அமெரிக்கன் சாம்பியன்ஷிப் விளையாட்டை 1987 மற்றும் 1989ல் விளையாடி வெற்றி பெற்றார். 2008 ஆம் வருடம் அர்ஜென்டைனாவின் தேசிய கால் பந்து டீமின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்தார்.
.
கிளாடியா வில்லபானே என்ற கால் பந்து ரசிகையை மரடோனா 1984 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு டால்ம நீரேயா மற்றும் கியாணின்னா டினோரா என்ற இரண்டு மகள்கள்.
2003 ஆம் வருடம் மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.... அதே வேளையில் இருவரும் பல இடங்களுக்கு ஜாலி டூர் சென்றதை ஆச்சரியமாக பார்த்தனர் அவரது நண்பர்கள்...
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மரடோனா மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி மாரடைப்பால் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி உலகளவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது...
ரசிகர்களின் நெருக்கடியால் 26 ஆம் தேதி அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 1960 ஆம் ஆண்டு பிறந்த மரடோனா தன் 60-வது வயதில் காலமானார்..
உலகம் முழுவதும் அதிதீவிர ரசிகர்கள் மரடோனாவுக்கு உண்டு...
பத்திரிகையாளர் ஸ்ரீனிவாசன் வெங்கட்ராமன் கூறும் போது, “மரடோனாவின் மிகச் சிறந்த 5 உலகக்கோப்பை கோல்களை பார்த்தாலே பரவசம்! முக்கியமாக நான்கு மற்றும் ஐந்தாவது கோல்கள் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும். ஒரு விஷயம்... எல்லோருக்கும் மூளை தலையில் இருக்கும், மரடோனாவுக்கு மட்டும் இடது கால் விரல்களில் அது குடியிருந்திருக்கும் போலத் தோன்றுகிறது.
ஒவ்வொரு முறையும் தனியாக பந்தை dribble செய்து கொண்டு சென்று கோல் போஸ்டில் அவர் லாவகமாக அதனை தள்ளுவது சிலிர்ப்பூட்டும் கவிதைகள்.
1980 களில் மரடோனாவின் பித்தன்னாகவும் விசிறியாகவும் இருந்து, அவரை பின் தொடர்ந்து ஓடியவர்களில் நானும் ஒருவன்... இனி எப்போ வருவாரோ இன்னோரு கால் பந்து கடவுள்!” என்று கண்கலங்கி முடித்தார்.
அதிதீவிர மரடோனா ரசிகர் முகுந்தன் நம்மிடம் வருத்தமாக பேசினார்,
“கால் பந்து ரசிகர்கள் மத்தியில், டியாகோ மரடோனா ஒரு மந்திரப் பெயர்..
உலக கால்பந்து வரலாற்றில், பீலேவிற்கு பின் உலகம் முழுவதும் பேசப்பட்ட பெயர்... அவர் கால்களின் மந்திர வித்தையை பார்த்து ஆச்சரியத்தில் பிரமித்துப் போனார்கள் கால் பந்து ரசிகர்கள். Ball control…. Dribbling ..போன்றவற்றில் அவருக்கு பின் வந்த பிரேசில் ரொனால்டோ.. என்னதான் ரொனால் டினோ போன்றவர்கள் ரசிகர்களின் மனதில் இவருக்குப் பின் இடம் பிடித்திருந்தாலும், மரடோனாவின் ஸ்டைல் தனித்தன்மை வாய்ந்தது. மரடோனாவின் பயங்கரமான செல்ஃப் ஆட்டம் விமர்சிக்கப்பட்டாலும், அவரின் செல்ஃப் ஆட்டத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உலக அரங்கில் உண்டு.
ரொனால் டினோவின் தீவிர ரசிகர்களான என்போன்றவர்களுக்கு கூட மரடோனாவின் அக்ரஸிவ் ஸ்டைல் ஆல் டைம் ஃபேவரைட்.
மரடோனா தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை கொண்டிருந்தாராம். இந்திய வாழ்க்கை கலாச்சாரத்தில் எதெல்லாம் தவறு என்று சொல்லப்பட்டதோ, அதிலெல்லாம் மாட்டிக்கொண்டு திண்டாடியவர் இந்த உலக கால் பந்து கதாநாயகன்..! அதே சமயம், கால் பந்து என்று வந்து விட்டால், இந்தியர்களின் மனதில் முதலிடம் பிடித்த விளையாட்டு வீரர் என்னவோ மரடோனா தான்.... அவர் ஒரு God of Football ....!
இந்தியாவுக்கு 2017 டிசம்பர் 11 ஆம் நாள் விஜயம் செய்தார் மரடோனா. கொல்கொத்தாவில் நடந்த ‘Diego versus Dada’ என்ற உதவி மற்றும் ஒற்றுமை கால் பந்து எக்ஸிபிஷன் மேட்சில் விளையாட வந்தார். வலது கையில் அடிபட்டதால் அந்த மேட்சில் விளையாடாமல் ஏழை பள்ளிக் குழந்தைகளை பார்க்க சென்று விட்டாராம்.
2012 அக்டோபர் 24 ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணனுர் மாவட்டத்திற்கு விசிட் செய்தார் மரடோனா. முனிசிபல் ஸ்டேடியத்தில் ஐம்பதாயிரம் ரசிகர்களின் கூட்டத்தில் ‘I Love Kerala’ என்று அவர் கூற... ரசிகர்களின் ஆர்பரித்த குரல் விண்ணைத் தொட்டது என்கிறார்கள் கேரளவாசிகள்.
செம்மண்ணுர் ஜுவல்லர்ஸ் முதலாளி பாபி செம்மண்ணுர் அழைப்பை ஏற்று, அந்த நகை ஷோ ரூமின் விளம்பரத்திற்காக வந்தார் மரடோனா... ‘அன்று முன்னாள் இந்திய கால் பந்து வீரர் விஜயன் மற்றும் எமது அமைச்சர்கள் உடன் மேடையில் அவர் கைகோர்த்து நின்றதை இன்னமும் மறக்க முடியவில்லை’ என்று கூறும் கேரள அரசு மரடோனாவின் மறைவிற்காக இரண்டு நாட்களுக்கு அரசு சார்பு துக்கம் அனுசரித்தது.
கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் மரடோனா. ஒவ்வொரு கால் பந்து போட்டியில் களம் இறங்கும் போதும் மைதானத்தில் மண்டியிட்டு அன்னை மரியாளிடம் தான் ஜெயிக்க வேண்டும் தன் நாட்டிற்காக என்று ‘அருள்நிறைந்த மரியே வாழ்க’ என்ற ஜெபத்தை அவர் கூறுவது வழக்கம். அதே போல ஒரு கோல் அடித்தவுடன், சிலுவை அடையாளத்தை தன்நெற்றியில் போட்டுக் கொள்வதை அவர் மறக்கவே மாட்டாராம்!.
இந்த உலக God of Football இறைவன் முன் இந்நேரம் தன் கால் பந்து விளையாட்டை துவக்கியிருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது....!.
Leave a comment
Upload