உடலுக்கு அரணாகும் அரைக்கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!
நாம் உண்ணும் ஒவ்வொரு கீரையும் ஒரு மருத்துவ குணத்தை கொண்டிருக்கிறது. கீரைகளை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுபவர்கள் அதிக நோய் தாக்குதல்களுக்கு ஆளாவதில்லை. சத்து நிறைந்த கீரை வகைகள் நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கையில் அரைக்கீரை என்பது நம் சமையலில் இடம்பெறும் கீரைகளில் முக்கியமான ஒன்றாகும். அரைக் கீரையில் அதிக அளவில் நன்மைகள் இருக்கின்றன. பெயருக்குத்தான் இது அரைக்கீரையே தவிர, அனைத்து சத்துக்களும் அடங்கிய முழுக்கீரையாகக் காணப்படுகின்றது. இது எல்லா மக்களுக்கும் ஏற்ற கீரை.
இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதனை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இது பல வியாதிகளைப் போக்கக்கூடிய சக்தி கொண்டது, எனவே எந்த வியாதி உள்ளவர்களும் சாப்பிடலாம். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நுரையீரல் நோய்கள் நீங்கும். வாதம், பித்தம், கபம் போன்றவை சரியாகும்.
“காய்ச்சற் குளிர்சந்நி காயநோய் பலபிணிக்கும்
வாய்ச்ச கறிந்தானாய் வழங்குமே” - (அகத்தியர்)
காய்ச்சல், குளிர்காய்ச்சல், ஜன்னி, காசம், வாத பித்தநோய் மற்றும் பல நோய்களை இந்த அரைக்கீரை தீர்க்கும்.
“அந்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்,
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்” என்ற திருமந்திரப் பாடலால் அரைக்கீரை விதை உணவுக்கு பயன்பட்ட விதத்தைக் காணலாம்.
அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை என பெயர் உண்டாயிற்று. இக்கீரைக்கு அரக்கீரை, அறுகீரை, அறைக்கீரை, கிள்ளுக்கீரை என்ற வேறு பெயர்களும் உண்டு.
இக்கீரை, கிளைவிட்டு வளரக் கூடியது. செங்குத்தாக நிற்கும் தன்மை பெற்றது. இது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்த கீரை வகைகளில் ஒன்றாகும். பொதுவாக ஓரடிக்கு மேல் இது வளர்வதில்லை. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறுத்தவை. அரைக்கீரை செடி சுமார் ஒரு வருடம் வரை பலன்தரும். இக்கீரை மேல்நிறம், பச்சை நிறமாகத் தோன்றும். அடிப்பாகம் மெல்லிய செந்நிறத்தோடு விளங்கும். இலையின் காம்புகளிலும் செந்நிறம் தோன்றும். இந்தக் கீரையும் இதன் விதையும் இரண்டுமே உணவாகப் பயன்படுகிறது.
அரைக்கீரையின் அற்புதங்கள்:
அரைக்கீரை மிகச் சிறந்த சுவையுடையது. இந்தக் கீரையில் தங்கச் சத்தும், இரும்புச் சத்தும் உள்ளன என்று கூறுவர். நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த சத்துணவாகும். மற்றும் இக்கீரை நோயாளிகளுக்கு எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது.
100 கிராம் அளவு அரைக்கீரையில் 91.69 கிராம் நீர் உள்ளது. 2.46 கிராம் புரதம், 0.33 கிராம் கொழுப்பு (லிபிட்), 4.02 கிராம் கார்போஹைடிரேடு, 215 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), 2.32 மில்லி கிராம் இரும்புச் சத்து, 55 மில்லி கிராம் மெக்னீசியம், 50 மில்லி கிராம் பாஸ்பரஸ், 611 மில்லி கிராம் பொட்டாசியம், 20 மில்லி கிராம் சோடியம் உள்ளது.
இக்கீரையில் பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு இரத்தசோகை வராமல் தடுக்கவும், இரத்த விருத்திக்கும் பயன்படுகிறது.
தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. இதை சாப்பிட்டால் நம் உடல் சூட்டை தணிப்பது மட்டுமில்லாமல் அதிகளவு குளிர்ச்சியை நம் உடலுக்கு தருகிறது. இதனை வெயில் காலங்களில் அதிகமாகவும், மழை மற்றும் குளிர் காலங்களில் குறைவாக சாப்பிடுவது நல்லது.
அரைக்கீரையின் மருத்துவ குணங்கள்:
அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜுரம், குளிர் ஜுரம், வாத ஜுரம், ஜன்னி, போன்றவை குணமாகும்.
அரைக்கீரை மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை குறைக்கும். பித்தத்தை தணிக்கும், நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும்.
அரைக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும். தாது விருத்தி ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும்.
அரைக்கீரை பெண்களுக்கு ஏற்ற ஒரு நல்ல உணவு ஆகும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும். பிரசவித்த பெண்களுக்கு உடனடி ஊட்டத்தை அளிப்பதோடு பால் அதிகம் சுரக்கச் செய்யும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். சோர்வு மற்றும் உடல் வலியைப் போக்கி புத்துணர்வு தரும். அரைக்கீரையில் உள்ள சத்துக்கள் தாய்ப் பாலில் கலந்து குழந்தைகளுக்கு எவ்வித நோய்களும் வராமல் தடுக்கும்.
பெண்களுக்குத் தலைமுடியை நன்றாகக் கறுத்தும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும். இளநரையை நீக்கும்.
அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி உள்ளது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.
அரைக்கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஏற்கனவே புற்று நோய் பாதிப்புகள் உள்ளவர்களும் அரை கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.
அரைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தேக பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் வலிமை பெறும். குடல் சுத்தமாக இருக்கும்.
அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பதனால், நாட்பட்ட நோய்களையும் சிறுகச் சிறுகக் குணப்படுத்தலாம். அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கீரைத் தைலம் மிகவும் சக்தி வாய்ந்தது. இத்தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. தலைமுடியானது செழித்து வளர இத்தைலம் உதவுகிறது.
அரைக்கீரை செடியை வீட்டிலும் வளர்க்கலாம்:
அரைக் கீரை வளர பெரிய மண் வளமோ, தண்ணீரோ தேவையில்லாமல் எளிதில் வளரக்கூடியது. அதில் கீரை விதைகளை தூவி விட்டால் போதும். நர்சரிகளில் விதைகள் விற்பனைக்குக் கிடைக்கும். ஒரு முறை வைத்த செடி, பல மாதங்களுக்கு பலன் தரும். கீரைகளுக்கு தண்ணீர் தெளிப்பான் மூலம் தெளித்தால் போதுமானது.
அடுத்தவாரம் மூட்டுவலிக்கு இயற்கையின் வரப்பிரசாதமான ‘முடக்கத்தான் கீரை’யைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!
Leave a comment
Upload