சிவரஞ்சனி
பி சுசீலா
நமது இசையமைப்பாளர்களுக்கு இந்த ராகம் அவ்வளவு பிடித்திருக்க வேண்டும்! எத்தனை எத்தனை சிவரஞ்சினிகள்... தேடத் தேட புதையலாக வருகின்றன. இந்தப் பாடல் அழகு என்றால், மற்றொன்று இன்னும் அழகு! எனக்கு எப்போதும் உடனே நினைவுக்கு வருவது... ‘உனக்கும் எனக்கும் இடையே என்ன வகையான விசித்ர பந்தம் இது’ பாடலே! 1980-களில் இந்தியா முழுக்க காதலர்களின் தேசிய கீதமாக ஒலித்த பாட்டு. ‘ஏக் துஜே கெலியே’ படத்தின் ‘தேரே மேரே பீச் மே... கைசா ஹை யே பந்தன் அஞ்ஞானா’ வரிகளைதான் எனக்குத் தெரிந்த இந்தியிலிருந்து மொழி பெயர்த்தேன்! தமிழ் கமல் இந்தி பேசும் ரதி அக்னிஹோத்ரியை கோவாவில் மாய்ந்து மாய்ந்து காதலிக்கிறார். இறுதியில் அது நிறைவேறாது போகிறது. டைரக்டர் கே.பி.யின் நெஞ்சைத் தொடும் படம். இதற்கு முன் 1978-ம் ஆண்டு ‘மரோ சரித்ரா’ என தெலுங்கில் வெளியாகி ஒரு வருடம் ஓடியது தான் அசல்!
எஸ்.பி.பி
‘தேரே மேரே’ பாடல் சோக ராகமான சிவரஞ்சனியில் அவ்வளவு கச்சிதமாக உட்காரும். இந்தக் காதல் துயரத்தில் தான் முடிய போகிறது என்பதை ‘சிம்பாலிக்காக’ சொல்லத்தான் அதை தேர்ந்தெடுத்தார்களா இசையமைப்பாளர்கள் லட்சுமிகாந்த் பியாரிலால் எனத் தெரியவில்லை. தெலுங்கிலும் இதே ராகம். பாடலின் மெல்லிய சோகமே கேட்க கேட்க சுகம். லதா மங்கேஷ்கரும், எஸ்.பி.பி-யும் பாடுகிறபோது அந்த ராகம் இன்னும் அழகாக இருக்கும். சிவரஞ்சனிக்கு ‘சிக்னேச்சர்’ பாடல் என சொல்வேன்.
மனதை சட்டென்று பாரமாக்கிவிடும் ராகம் இது. கருணை ரசத்தின் வெளிப்பாட்டிற்கும் இதை இசையமைப்பாளர்கள் பயன்படுத்துவது உண்டு. இந்துஸ்தானியிலிருந்து நம்ம ஊருக்கு வந்தது இது. இங்கு பாடும் சிவரஞ்சனிக்கு ஆரோகணம் அவரோகணம் இரண்டிலும் ஐந்து ஸ்வரங்கள். இதற்கு மிகவும் நெருக்கமான ராகங்கள் என்றால் நீலமணி மற்றும் விஜயநாகரி. சினிமா பாடல்களை பொறுத்தவரை சிவரஞ்சனியில் பல சமயங்களில் இந்த இரண்டு ராகங்களும் கலந்தே இருக்கும். அவர்களுக்கு காதிற்கு இதமாக இருந்தால் போதும். இலக்கணத்தைப் பற்றியும், ராக லட்சணங்களைப் பற்றியும் மானாமதுரைக்காரர்களுக்கு என்ன கவலை?
மதுரை சோமு
கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் இந்த ராகத்தில் கீர்த்தனைகள் இயற்றவில்லை. காரணம், 20-ம் நூற்றாண்டிற்கு பின்பே இது அதிகம் புழக்கத்திற்கு வந்ததாக இசையுலக வல்லுனர்கள் சொல்கிறார்கள். தவிர, இது விஸ்தாரமாக பாடுவதற்கு அழுத்தமான ராகமும் இல்லை. ஆனால் இதில் சில இனிய துக்கடாக்கள் இசை வட்டாரத்தில் பிரபலம். அவற்றில் ஊருக்கே தெரிந்தது.. ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’. பாடலின் முதல் பகுதிதான் சிவரஞ்சனியே தவிர அப்புறம் சரணங்களின் ராகங்கள் மாறும். எம்.எஸ். உபயத்தால் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. ராஜாஜி எழுதி கடையநல்லூர் வெங்கட்ராமன் என்பவரால் இசையமைக்கப்பட்டது. சங்கீத உலகில் திகட்டிப் போகும் அளவிற்கு பாடி இன்னும் பாடுகிறார்கள் நம் பாடகிகள்! காலம் காலமாக கொலுவுக்கு நிச்சயம் உண்டு.
மகாராஜபுரம் சந்தானம்
இந்த ராகத்தில் மகாராஜபுரம் சந்தானம் பாடும் ஒரு தில்லானா ரொம்ப பிரசித்தி பெற்றது. அவரது வசீகர குரலில் அது ஓஹோவென்றிருக்கும். இப்போது அவரது சிஷ்யர் டாக்டர் கணேஷ் அந்த வழியில் பாடுகிறார். ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை... முருகா.. என்று மதுரை சோமு ஒரு உருப்படியை பாடுவார். அந்த உருக்கம் அவரது குரலுக்கு மட்டுமே சொந்தம். இப்பாடல் சிவரஞ்சனிக்கு நெருக்கமான நீலமணி என்றாலும், சிலர் சிவரஞ்சினியிலும் பாடுகிறார்கள்.
‘அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமியும் பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை..’ என்று அனு பல்லவியை பாடும்போது அவர் குரல் உண்மையிலேயே கமறும். ‘குருநாதா’ என கலங்குவார்.
‘என்ன கவியை’ பெண்களில் அருணா சாய்ராம் தொடர்ந்து பாடுகிறவர். ‘மாடு மேய்க்கும் கண்ணா’வுக்கு சமமாக சீட்டு வரும் பாடல். வித்வான்களில் சூரிய பிரகாஷ் நிறைய பாடுகிறார். மதுரை மணி அய்யரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் என்றாலும் மதுரை சோமு என்றால் அவருக்கு உயிர்! இந்த பாடலில் அவர் போலவே உருகுவார்! சரி, சினிமாவுக்கு திரும்பலாம்.
லதா மங்கேஷ்கர்
‘தில்லானா மோகனாம்பாளில்’ வரும் ‘நலம்தானா’வை அவ்வளவு சுலபமாக மறக்கமுடியுமா? இதில் சிவரஞ்சனியுடன் நீலமணியும் கலந்திருக்கும். இப்பாடலில் எந்த வரியை சொல்வது, எதை விடுவது? மதுரை எம்.பி.என். சேதுராமன், பொன்னுசாமியை ஒரே இரவில் வானத்தில் வட்டமடிக்க விட்ட பாடல். அதே போல் பி. சுசீலா!
‘என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நான் அறியேன்
புண் பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்?’ - சுசீலாவின் உருக்கமும், நாதஸ்வரம் அதை வாங்கி வாசிக்கும் விதமும், அந்த மகா மேதை மகாதேவனுக்கு ஒரு கும்பிடு போடச் சொல்லும். சிவாஜி, பத்மினியின் காதல் மனதை எவ்வளவு மென்மையாக சொல்லிவிட்டார்... கவியரசர் கண்ணதாசன்! குறிஞ்சி மலரை போன்ற அபூர்வம் அது.
‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்’ என்று செளக்கார் ஜானகி, ‘ஒளி விளக்கு’ படத்தில் உடம்பு பூராவும் கட்டு போட்டு உயிருக்கு போராடும் எம்.ஜி.ஆர். எழுந்திருக்க வேண்டி பாடுவார். அதே பாட்டை முதல்வர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெறும்போதும் ரத்தத்தின் ரத்தங்கள் ஊர் பூராவும் மைக்கில் கதற விட்டதை மறந்திருக்க முடியாது. சுசீலாவிற்கு பெரிய பெயரை பெற்று தந்த சிவரஞ்சனி ராக பாடல். இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-யின் அற்புதம் என்றால் கே.வி. மகாதேவனின் அருமை ‘கலைமகள் கை பொருளே’. படம் ‘வசந்த மாளிகை’ என்று சொல்லத் தேவையில்லை. முதல் சரணத்தில் ‘நான் யார் உனை மீட்ட, வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட’, என்று மத்திம காலத்தில் பாடிவிட்டு ‘ஏனோ துடிக்கின்றேன்’ என்று மேல் ஸ்தாயிக்குப் போய் மன்றாடுவது நெஞ்சை பிசையும் இடம். ‘உன் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன்’ என்பது போல பாட்டில் ஆங்காங்கே வீணை ஜோராக வந்து போகும். ‘இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?’ அவரது இசையில் இதயத்தை தொடும் இன்னொரு சுசீலா பாடல்.
சூர்ய பிரகாஷ்
‘நான் அடிமை இல்லை’ படத்தில் ‘ஒரு ஜீவன் தான்’ என்றொரு ரஜினி, ஸ்ரீதேவி டூயட் உண்டு. எஸ்.பி.பி-யும், ஜானகியும் மெய்மறந்திருப்பார்கள். ‘பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது’ என்று ஒரே வரியில் அந்த ராகத்தின் சாறை பிழிந்து தந்திருப்பார் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். இப்பாடலை மிஸ்ர சிவரஞ்சனி என்றும் சொல்வர். காரணம் அன்னிய ஸ்வரம் சேர்ந்திருப்பதால்.
முடிக்கும்போது ஒரு வம்பு... ஒரு பிரபல பாடகர். அவர் கச்சேரியில் சிவரஞ்சனி பாடினால் அதற்கு அர்த்தம் வேறு. ராகத்தின் பெயருடைய ‘கேர்ள் பிரெண்ட்’ வந்துவிட்டாள் என பொருள். அப்பெண்ணை எனக்கும் தெரியும். ஞானமான பளிச் பெண். தெய்வீக காதலோ என்னவோ..!
ராஜா, ரஹ்மானின் சிவரஞ்சனி அடுத்த வாரம்!
- இசை பெருகும்
Leave a comment
Upload