தொடர்கள்
கதை
“ஜனன நாடகம்...” - வெ. சுப்பிரமணியன்

2021031616212639.jpeg

“முருகேசா… உன்னோட அண்ணன் சக்திவேலுக்கு, கல்யாணங்-காட்சி ஏதும் நடக்காததாலே, தம்பிங்கிற முறையிலே, நீதான் கொள்ளி போடணும்” என்றார் ஒரு பெரியவர்.

முருகேசனோ, “என் ஒரே மகன் குமாரை, அண்ணன் சக்திவேல், தன் சொந்தப் பிள்ளையாட்டமா பாசத்தோட வளர்த்தார்ங்கிறது, உங்க எல்லோருக்குமே தெரியும். அதனால, என் பையனே, அவரோட சிதைக்கு, தீ வைக்கட்டும்” என்றார்.

“டேய் குமார்… என் அண்ணனுக்கு கொள்ளிவைக்க, என்னைவிட உனக்குதான் உரிமை அதிகம். அதனால, நீயே செய்துடுப்பா” என்ற முருகேசனின் வார்த்தைகளைத் தட்டாமல், குமாரும் தன் பெரியப்பாவின் உடலுக்கு தீ மூட்டினான்.

பச்சைத்தண்ணீர் கூட பல்லில் பட மனமில்லாததால், முருகேசனின் அம்மா கோமதியோ, மாடியிலேயே, தன் மூத்தமகன் சக்திவேலின் மறைவால், தனக்குள் விழுந்த சோகத்தை, தன் கண்ணீரால் கழுவிக் கொண்டிருந்தாள்.

முருகேசனின் மனைவி ‘பைரவி’, சூடாக கொஞ்சம் காஃப்பி எடுத்துக்கொண்டு, மாடிக்குப் போய், தனியறையிலிருந்த தன் மாமியாரை சந்தித்தாள்.

“ஏம்மா இப்படி பச்சைத்தண்ணிகூட பல்லிலே படாம இருக்கீங்க. உங்க பெரிய புள்ளை போனதால, உங்களைப் போலவே நாங்க எல்லாருமே மனதுக்குள்ளே புழுங்கி போயிருக்கோம்”, என்றாள்.

கையசைவால், பைரவியை அழைத்து, தன் அருகே அமரச் சொன்னாள் கோமதி.

தன் மருமகளின் தலையைத் தடவிய படியே, “பைரவி… உன் கணவன் முருகேசன், மற்றும் அவனது அண்ணன் சக்திவேல், இருவரின் பிறப்பை பற்றிய ரகசியத்தை, இந்த வீட்டிலிருக்கும் யாரிடமும் சொல்லாமல், பல வருஷமா மறைச்சு வைச்சிருக்கிற பாவியம்மா நான்” என்று புலம்பினாள்.

‘ரகசியமா…!’ என்று ஆச்சரியத்துடன் கேட்ட தன் மருமகளிடம், கோமதியே தொடர்ந்தாள். “என் கணவர் ரத்தினத்துக்கும், எனக்கும் திருமணமாகி நான்கு வருடங்களாகியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில், வேற்றுமதப் பெண்ணை, காதல் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்ட என் கணவரின் ஆத்ம-நண்பரும் அவரின் மனைவியும், வெளியூரிலிருந்து, எங்கள் வீட்டுக்கு வந்து, எங்களோடு சேர்ந்து தங்கி இருந்தனர்.
அவர்கள் வந்த அதிர்ஷ்டமோ என்னமோ, நானும், அந்த நண்பரின் மனைவியும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில், கருவுற்றோம்.

என் கணவரின் நண்பர், வியாபார விஷயமாக, அடிக்கடி, வட மாநிலங்களுக்குச் சென்று வந்ததால், பிரசவம் முடியும்வரை, அந்தப் பெண்ணும், என்னோடவே இருக்கட்டுமென்று நான்தான் கட்டாயப்படுத்தினேன். அவளும் என்னை சகோதரியாகவே பாவித்து, சேர்ந்திருக்க சம்மதித்தாள்.

பிரசவத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு, அவசர வேலையாக மும்பைக்குப் போயிருந்தார் என் கணவரின் நண்பர். வழக்கமாக நான்கு நாட்களுக்குள் வந்துவிடுபவர், பத்து நாட்களாகியும் திரும்ப வரவில்லை. என் கணவர் எவ்வளவோ முயன்றும், அவரின் நண்பரைப் பற்றிய செய்தி எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை.

பிரசவத்திற்காக, எங்கள் இருவரையும் என் கணவர், அவரின் நெடுநாளைய நண்பரான ஒரு டாக்டர் நடத்திவந்த, நர்ஸிங்ஹோமில் சேர்த்தார்.

அடுத்த நாளே, காலையில், அந்தப் பெண்ணுக்கு, பிரசவம் ஆனது. சொல்லிவைத்த மாதிரி, அன்று மாலையில், எனக்கும் குழந்தை பிறந்தது.
மயக்கத்திலிருந்த நான், கண்விழித்து பார்த்தபோது, என் அருகே, இரண்டு ஆண்குழந்தைகள் இருந்தன.

என் கணவருடைய நண்பரின் மனைவி, பிரசவத்தின் போது, இறந்து போனதால், அவள் பெற்ற குழந்தையையும் என்னருகே கிடத்தியிருப்பதாக, என்னிடம் சொன்னார்கள்.

நான் எவ்வளவோ, மன்றாடியும், இரண்டு குழந்தைகளில் எது நான் பெற்ற பிள்ளை என்பதை, டாக்டரும், மருத்துவமனை செவிலியரும், சொல்ல மறுத்துவிட்டார்கள். என் கணவரும், உண்மையை சொல்லக் கூடாதென்பதில், உறுதியாக இருந்தார்.

குழந்தைகள் பிறந்து, ஒரு வாரத்திற்கு பிறகு, என் கணவரின் நண்பர், மும்பையில், சாலை விபத்தில் இறந்து போய்விட்டதாக, செய்தி கிடைத்தது.

அதனால், அநாதையாகிப் போன, அந்த நண்பரின் குழந்தை யாரென்பது தெரியாமலேயே, அதையும் சேர்த்து, வளர்க்கும் கட்டாயமும், பொறுப்பும், என்மேல் விழுந்தது.

குழந்தைகளை அடையாளப் படுத்திக்கொள்ள, நாங்களே, சக்திவேல் மூத்தவன் என்றும், முருகேசன் இளையவன் என்றும் வைத்துக் கொண்டோம்.

“குழந்தைகளின் பிறப்பு பற்றிய ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது” என்று என் கணவர், என்னிடம் சத்தியம் வாங்கியதால், நடந்தவைகளை என் பிள்ளைகளுக்குக்கூட சொல்லவில்லை. இப்போ, என் கணவரும் இல்லை, பெரியவன் சக்திவேலும் போயிட்டான்.

“செத்துப்போனது என் பிள்ளையா? உயிரோட இருப்பது என் பிள்ளையா? என்று தெரியாம தவிக்கிறேனம்மா. மனசுக்குள்ளேயே புதைத்து புறையோடிப்போன இந்த ‘ரகசியத்தை’ உன்னிடம் சொன்ன பிறகுதான், கொஞ்சம் ஆறுதலா இருக்கு” என்று சொல்லி பெருமூச்சு விட்டுக்கொண்டாள் கோமதி.

“தன் மாமியார் சொன்ன ரகசியத்தை, கணவனுக்கும், பிள்ளைக்கும் தெரியாமல் எப்படி இனிமேல் மறைப்பது” என்ற குழப்பத்தோடு மாடியிலிருந்து இறங்கினாள் பைரவி.

அடுத்த நாள் காலையில், தன் அண்ணனுக்குச் செய்யவேண்டிய, சில சாங்கியங்களைச் செய்துவிட்டு, வீட்டில் தனது அறையில் தனிமையிலிருந்த முருகேசனைக் காணச்சென்றான் குமார்.

“எதற்காக நேற்று பெரியப்பாவிற்கு என்னை கொள்ளி போடச் சொன்னீர்கள்? நேற்று நீங்கள் எடுத்த முடிவுக்கு, நிச்சயம் எதாவது காரணம் இருக்கும்” என்ற குமாரை வாஞ்சையுடன் பார்த்தார் முருகேசன்.

“நீ சொல்வது கூட உண்மைதான் குமார். வாலிபனாய் வளர்ந்து நிற்கும் உன்னிடம், என்னிக்காவது சொல்ல வேண்டிய ஒரு ரகசியத்தை, இப்போ சொல்வதுதான் பொருத்தமா இருக்கும். ஆனால், நான் சொல்வதை நீ யாரிடமும், எக்காலத்திலும் சொல்லமாட்டேன், என்று சத்தியம் செய்துகொடு” என்றார் முருகேசன்.

“நான் உங்க பிள்ளைப்பா. சத்தியம் தவறமாட்டேன்” என்றான் குமார்.

முருகேசனோ குமாரிடம், “நான் உங்க அம்மா பைரவிக்கு தாலி கட்டியது வாஸ்த்தவம்தான். ஆனால்… உன் அப்பா நான் இல்லை” என்றதும், குமார் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டான்.

முருகேசனே தொடர்ந்து பேசினார். “என் அண்ணன் சக்திவேல், திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று முடிவு செய்ததால், அடுத்து எனக்கு, பைரவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.
திருமணம் முடிந்த மூன்றாவது நாளில், நான், ஸ்கூட்டரில் வெளியே போய்விட்டு வரும்போது, எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் பலத்த அடிபட்டு, அவசர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டேன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குணமான என்னை வீட்டுக்கு அழைத்துப்போக, என் அண்ணனும், பைரவியும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தபோது, மருத்துவர் எங்கள் மூவரிடமும் ஒரு உண்மையைச் சொன்னார்.

நடந்த விபத்தில், எனக்கேற்பட்ட “நரம்பு பாதிப்பால்”, என்னால் நேரடியாக ஒரு பெண்ணுக்கு, குழந்தை கொடுக்க முடியாது. ஆனால், ‘ஆர்ட்டிஃபீஷியல் இன்செமினேஷன்’ முறைப்படி, குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்”.

“சில மாதங்களுக்குப் பின், என் அம்மாவின் வற்புறுத்தலாலும், வாரிசு வேண்டிய நிர்பந்தத்தாலும், பைரவியின் தாய்மை-தவிப்பினாலும், மருத்துவரின் ஆலோசனையை கேட்க, என் அண்ணனைக் கூட்டிக்கொண்டு, நான் ஆஸ்பத்திரிக்குப் போனேன்.
அங்கே மருத்துவர், என்னை பரிசோதனை செய்துவிட்டு, என்னுள் ஜீவ-அணுக்களின் உற்பத்தி இல்லை என்றார். டாக்டர் சொன்னதைக் கேட்டதும் நாங்கள் அதிர்ந்து போனோம்.

வேறு வழிதெரியாததால், என் அண்ணன், சக்திவேலின் உயிர் அணுக்களைக் கொண்டு, உன் அம்மாவுக்கு, ‘செயற்கை-கருவூட்டல்’ மூலம் கர்ப்பம் தரிக்கச் செய்தோம். என் அண்ணனின் குழந்தையைத்தான் சுமக்கிறோம் என்ற உண்மை தெரியாமல் பைரவியும், உன்னை தன் கருவில் தாங்கினாள்.

உன்னுடய ஜனனத்திற்கு காரணமான, என் அண்ணனின் சிதைக்கு ‘உன்னை’ ஏன் நான் தீ மூட்டச் சொன்னேன் என்று புரிந்ததா?” என்று சொன்ன முருகேசனை, ஆச்சரியமும், சோகமும் இழையோடப் பார்த்தான் குமார்.

“டேய் குமார்… பாட்டி, உன் அப்பாவை பார்க்கணுமாம், மாடிக்கு வரச்சொன்னார்கள்” என்ற பைரவியின் குரலைக் கேட்டதும், முருகேசன், மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்.

முருகேசனைப் பார்த்ததும் ஆவேசப்பட்டாள் கோமதி... “சக்திவேல் செத்துப் போனதுக்கு, ஏண்டா ‘உன் பிள்ளையை’ கொள்ளிபோட வைத்து, எல்லார் மனசையும் நோகடிக்கிறே? நிச்சயமா நீ எனக்கு பிறந்த பிள்ளையே இல்லைடா! நீ யாரோ பெத்த அனாதை” என்று ஆத்திரத்தில் கதறினாள் கோமதி.

அமைதியாக, தன் தாயின் அருகில் அமர்ந்த முருகேசன், அம்மாவின் கண்களை ஒருவினாடி கூர்ந்து பார்த்தார்.

“அம்மா, எங்கள் இருவரில், யார் உன் குழந்தை என்று தெரியாமல், இத்தனை வருடமாக, உன்னுள் புதைத்து வைத்திருக்கும், ரகசியத்தின் அழுத்தத்தால்தான் நீ இப்படி பேசுகிறாய்” என்று முருகேசன் சொன்னதும், விழிகள் அசைவற்று அதிர்ச்சியில் சிலையானாள் கோமதி.

“என்னடா உளறுரே?” என்ற கோமதியிடம், “என் அப்பா…, அதாவது உன் கணவர் ரத்தினம், சாகக்கிடக்கும் போது, என்னையும், சக்திவேல் அண்ணனையும் தனியே அழைத்து, எங்கள் ‘ஜனன நாடகம்’ பற்றிச் சொன்னார்” என்றார் முருகேசன்.

“நானும், என் அண்ணன் சக்திவேல், இருவருமே உன் குழந்தைகள் இல்லை. அன்று மருத்துவமனையில் உனக்கு பிறந்த குழந்தை, சில மணித்துளிகளிலேயே இறந்து போனதாம். காலையில் நண்பரின் மனைவி, இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுவிட்டு, இறந்து போன அதிர்ச்சியில் இருந்த அப்பா, தன் குழந்தை இறந்துபோன பேரதிர்ச்சியால் மனமுடைந்து போனார்.

அப்போது, அங்கிருந்த அப்பாவின் டாக்டர்-நண்பர், அந்த சிக்கலான சூழ்நிலை முடிச்சுகளை அவிழ்க்க, ஒரு தீர்க்கமான யோஜனையைச் சொன்னார்.

அனாதையான, எங்களை, உன் அருகே கிடத்திவிட்டு, எங்கள் இருவரில் ஒருவனை தன் நண்பரின் குழந்தை என்றும், இன்னொருவனை உன் குழந்தை என்றும் சொல்லி, உன்னை நம்ப வைத்தார் உன் கணவர்”.

“எந்தக் காலத்திலும், உன்னிடம் இதைச் சொல்லக்கூடாது, என்று, எங்கள் இருவரிடமும், அவர் இறக்கும் முன், சத்தியம் வாங்கிக் கொண்டார்” என்று சொல்லி பெருமூச்சு விட்டார் முருகேசன்.

“இப்போ சொல்லுங்களம்மா… அண்ணனும் நானும், உங்கள் குழந்தைகளா? இல்லை… யாரோ பெற்ற அனாதைகளா?” என்று கேட்டுவிட்டு, மாடிப்படிகளில் இறங்கினார் முருகேசன்.

வழக்கம் போல், இரவு-உணவு கொடுப்பதற்காக, மாடியில் இருக்கும் மாமியாரின் அறைக்கு சென்றாள் பைரவி. அந்த அறையுள்…!
தான் பிரசவித்த போது நடந்த “ஜனன நாடகம்” என்னவென்று முழுமையாக முருகேசன் மூலமாக ‘தெரிந்ததால்’, ஏற்பட்ட அதிர்ச்சியால், உயிரற்று சடலமாய் கிடந்தாள் கோமதி. அவளுக்காக, ஓலமிட்டு கதறிக் கொண்டிருந்தாள், தான் குமாரை பிரசவிக்க காரணமான, “ஜனன நாடகம்” என்னவென்று ‘தெரியாத’ பைரவி.