தொடர்கள்
தொடர்கள்
குறுந்தொகை துளிகள் - 16 - மரியா சிவானந்தம்

பார்வை ஒன்றே போதுமே...

20210316160755236.jpg

காதலனைப் பிரிந்த காதலி, வீட்டுக் காவலில் இருக்கிறாள். அவனைப் பார்க்கவோ, பேசவோ இயலாத கட்டுப்பாட்டில் அவள் கலங்கிக் கொண்டு இருக்கிறாள். காதல் நினைவுகளில், தன்னைக் கரைத்துக் கொள்கிறாள். காதலனின் முகம், ஒவ்வொரு நொடியும் அவள் கண் முன் வந்துச் செல்கிறது. தன்னை மறந்து விட்டானோ என்று அவள் நெஞ்சம் அலை பாய்கிறது.

“உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன் ,
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்”
(கண்ணதாசன்)

“காதலா, உன் பிரிவு என்னை வாட்டுகிறது. நான் என்ன செய்வேன்? என் நெஞ்சே, நீ அவரைத் தேடித் செல். செல்லும் போது என் கண்களையும் உடன் எடுத்துச் செல்... என் கண்கள் அவரைக் காண வேண்டும் என்று பிடுங்கித் தின்கின்றன” என்று தன் நெஞ்சைத் தூது விடுகிறாள்...

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
(குறள் 1244)

இந்த குறுந்தொகை காதலிக்கு பார்க்கும் இடம் எல்லாம் காதலன் முகமே தென்படுகிறது.

தன் நிலையை எண்ணிப் பார்க்கையில், கொம்பு தேனுக்கு ஆசைப்படும் முடவனின் நிலை என்று நினைத்துக் கொள்கிறாள். “உன்னோடு வாழும் பேறு எனக்கு கிடைக்காவிட்டாலும், உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்கும் வாழ்க்கை எனக்கு கிடைக்கட்டும், அதுவே எனக்குப் போதும்” என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறாள்.

“மலை உச்சியில், தேனீ கூடு கட்டி இருக்கிறது. அங்கிருந்த கூதளி மரம் ஆடியதால், தேன்கூட்டில் ஓட்டை உண்டாகித் தேன் மெல்ல மெல்லச் சொட்டிக் கொண்டிருக்கிறது. மலை அடிவாரத்தில் ஒரு முடவன் அமர்ந்திருக்கிறான். மலைத்தேன் சொட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும், அவன் அண்ணாந்து பார்க்கிறான். தேன் உண்ணும் ஆசை பெருக்கெடுக்கிறது. அவனுக்கோ கால்கள் இல்லை. தன் உள்ளங்கையை குழித்து, சொட்டுகிற தேனை அதில் ஏந்திக் கொள்வது போலவும், அக்கையை நாவால் சுவைத்து இன்புறுவது போலவும், அவன் பாவனை செய்கிறான். அந்த காலிழந்த முடவனின் நிலையில் நான் இருக்கிறேன். என் காதலன் என்னிடம் அன்பு இல்லாதவர். ஆனாலும், அவரை நான் தழுவி, இணைந்து வாழ இயலாது போனாலும், அவரை நான் கண்ணால் காணும் பேறு பெற்றால் போதும், என் நெஞ்சம் மகிழ்ந்திருக்கும்” என்கிறாள்.

பரணர் பாடிய மற்றுமோர் அழகான குறிஞ்சித்திணைப் பாடல் இது...

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே
(குறுந்தொகை -60 - பரணர்)

- தொடரும்