தொடர்கள்
பொது
கொரோனா இரண்டாவது அலை?! – ஆர்.ராஜேஷ் கன்னா.

20210314200652281.gif

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தனது இரண்டாவது அலை தொடங்கி விட்டது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது பெரிய போரின் தொடக்கம் தான் தடுப்பூசி திருவிழா. பாரதப் பிரதமர் மோடி, இதை அறிவித்து நாடு முழுவதும் துவங்கி வைத்தார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போடுங்கம்மா ஓட்டு என்று ஓலிபெருக்கிகள் அலறியது. அரசியல் கட்சி பிரசார கூட்டத்திற்கு மக்கள் வெள்ளம் என திரண்டனர்.

அரசியல் கட்சியினர் கொடுத்த அன்பளிப்பிற்காக, கொரோனா தடுப்பிற்கு அணியும் முக கவசம், சமுக இடைவெளி எதுவுமின்றி மக்கள் கூட்டம் அலைமோதியது.

தேர்தல் முடிந்ததும், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட, பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் வரை சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட, பலரும் மருத்துவமனை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

20210314200718753.jpg

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முக கவசம் அணியாதவர்களை பிடித்து ரு. 200 பைன் போடும் காட்சி அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.

குடும்பத்துடன், ஏசி கார்களில் வருபவர்களையும் மடக்கி, முககவசம் அணிய காவல்துறையினர் நிர்பந்திப்பதாக வாகன ஒட்டிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இதனை போக்குவரத்து காவல்துறையினர் கைவிட வேண்டும்.

முக கவசம் அணியவில்லை என்று சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் அபராதம் என்ற பெயரில் ரு. 200 பைன் போடும் காவல் துறையினர், அந்த பைன் தொகைக்கு ஈடாக முக கவசங்களையும் சானிடைசர்களையும் அவர்களிடம் கொடுத்து, தடுப்பு கவசங்களின் அவசியத்தை உணர்த்தலாம் என்பதே சமுக ஆர்வலரகளின் கருத்தாக உள்ளது.

தமிழகத்தில், கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவில் அரசு மருத்துவமனைகளில் ஸ்டாக் இருந்தும், பொதுமக்கள் தைரியமாக போட்டு கொள்ள முன்வரவில்லை.

தமிழகத்தில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டால், இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பிறழ்வு ஏற்பட்டாலும், பெருமளவில் உயிர் சேதமின்றி தப்பிக்கலாம் என்று அரசாங்க மருத்துவர் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவும் இந்த சூழலில்... கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுப்பதற்கு முகக் கவசம், கையுறை, சானிடைசர் மற்றும் சமூக இடைவெளி என்று மூச்சுக்கு முன்னூறு முறை விளம்பரப்படுத்தும் மத்திய அரசு, இவற்றின் அவசியத்தை உணர்ந்து, கொரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொது மக்கள் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டுமென இந்தியா முழுவதுமுள்ள சமூக ஆர்வளர்கள் மற்றும் பொது மக்களின் ஆதங்க குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது.

கடந்த வருடம் வந்த கொரோனா வைரஸ் நோய் பரவல் வேகத்தினை விட தற்போது இரண்டாம் அலை கொரோனா எந்தவித அறிகுறிகளின்றி துரிதமாக பரவி வருகிறது.

20210316223902869.jpeg

நன்றி: தினமணி

சாதாரணக் காய்ச்சல் முதல் சளி, உடம்பு வலி மற்றும் அசதி ஏற்பட்டால் கூட காலம் தாழ்த்தாமல் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய் பரவலை ஆரம்பத்திலே கண்டுபிடித்து, சிகிச்சை பெற்றுகொள்ளவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தமிழகத்தில், கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் குறைந்து இருந்தது.

தமிழகத் தேர்தல் பரப்புரைக்கு பின்பு, கடந்த ஒரு வாரத்தில் நாளொன்றுக்கு 2000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

தேர்தலுக்குப் பின்பு, தமிழகத்தில் இரண்டாவது கொரோனா வைரஸ் பரவல் அலை தீவிரமாக இருக்கும் என்று கடந்த இரு வாரங்களுக்கு முன்பே மத்திய சுகாதாரத்துறை தமிழகத்தை எச்சரித்தது.

20210314200840105.jpg

தமிழகத்தை விட்டு கொரோனா வைரஸ் ஓடிவிட்டதாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேலியும் கிண்டலுமாக தங்களது பரப்புரையில் பேசியதை, பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி கருணாநிதி முதல் பிஜேபி அண்ணாமலை வரை கொரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது என்று கடந்த சில மாதங்களாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்தும், தமிழக மக்கள் குறிப்பாக சென்னைவாசிகள் பலர் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் சுற்றி திரிந்தனர்.

20210314200807618.jpg

சென்னையின் பிரபலமான காசிமேடு மீன் கடை முதல் கொத்தவால் சாவடி மார்க்கெட், கோயம்பேடு மார்க்கெட் என எங்கு பார்த்தாலும் மனித தலைகள் மாஸ்க் போடாமல், சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்கிச் சென்றதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

மாஸ்க் அணிந்து வருபவர்களை பார்த்து சென்னைவாசிகள் சிலர், கடந்த நான்கு மாதங்களாக வெளியில் வரும் போது மாஸ்க் போடத நபர்கள், கேலியும் கிண்டலும் செய்த நிகழ்வுகளும் நடந்தது.

சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும் திருமணங்கள், பர்த் டே விழா, வளைகாப்பு, நிச்சயதார்த்தம் என அத்தனை நிகழ்ச்சியையும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எதையும் கடைபிடிக்காமல் ஏசி ஹால்களில், அதிக மக்களை ஓரு சேர அமரவைத்து, விழாக்களை ஜாம் ஜாம் என்று நடத்தினர். மாஸ்க், சமுக இடைவெளி போன்றவை காற்றில் பறக்க விடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுபடாமல் அதிகரிக்க இதுவும் முக்கியக் காரணம் என சுகாதாரத்துறை கவலை தெரிவிக்கிறது.

சென்னையையும் அதன் சுற்றுபுறங்களில் நடக்கும் இறுதி ஊர்வலங்களில் பலரும் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியின்றி கும்பலாக சென்றது கொரோனா நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

டாஸ்மாக் மற்றும் பார்களில், கடந்த நான்கைந்து மாதங்களாக எப்போதும் இல்லாத அளவிற்கு மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு, முக கவசம், சமூக இடைவெளியின்றி சுற்றி திரிந்தனர். மதுப்பிரியர்கள் சாலைகளில் அமர்ந்து மயக்கும் பானங்களை அருந்தி மட்டையானது சென்னைவாசிகளை முகம் சுளிக்க வைத்தது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட ஒரு பெரியவர்… மூன்று நாட்கள் கழித்து, காலை மாலை என இரண்டு வேலையும் மனம் மயக்கும் மதுபானத்தை இன்று வரை மகிழ்ச்சியாக அருந்திக் கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க... கடந்த செவ்வாய்கிழமையன்று ஓரே நாளில் சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் பாதித்தவர்கள் 2482 பேர் என்ற உச்சத்தை தொட்டது.

2021031420091647.jpg

நன்றி: தினமணி

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டது.

சென்னையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகம் அதிகரித்து இருப்பதால்... சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 13 கொரோனா சிகிச்சை வார்டுகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 11 ஆயிரத்து 775 படுக்கைகள் கொண்டுள்ளது. ஆக்சிஜன் உருளைகள், வென்டிலேட்டர் என அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.

சென்னை - கிண்டி கிங் இன்சிடிடியூட் மையத்தில் 525 படுக்கைகளும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 1500 படுக்கைகளும், பாரதி மகளிர் கல்லூரியில் 350 பதிவுகளும், அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில் 240 படுக்கைகளும் உருவாக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அத்திபட்டு அரசு வீட்டுவசதி கழகத்தில் இருக்கும் குடியிருப்புகளில், 5000 படுக்கைகள் உருவாக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்னதான் கொரோனா தொற்று அதிகமாக இருந்தாலும், சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் இருப்பவர்கள், கும்பலைக் கூட்டி திருமணம் செய்வது தற்போதும் தொடர்கிறது. அதற்காக தமிழக கோவில்களில் நடக்கும் திருமணத்தில், மணமகன் மற்றும் மணமகள் வீட்டு சார்பாக 10 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கி தமிழக அறநிலையத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை புறநகரில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில், பெண் நீதிபதிக்கு இரண்டாவது தடவையாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு, ஆபத்தான நிலைமையிலிருந்து மருத்துவமனை சென்று மீண்டு வந்துள்ளார். தமிழக நீதிமன்றங்களில், அதிகளவு மக்கள் கூடுவதை உடனடியாக தடுக்க வேண்டும். அவசர வழக்குகள், ஜாமீன் வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பெருமளவு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம் என்று சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்களின் சங்க நிர்வாகி நம்மிடம் தெரிவித்தார்.

சென்னை மாநகர பேருந்தில் பயணம் செல்லும் பயணிகள் பலர் முக கவசம் அணிவது இல்லை. பேருந்து நிறுத்தங்களில், காவல்துறையினர் தடுப்பு ஏற்படுத்தி, சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்தவர்களை மட்டும் பஸ் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். பஸ்ஸில் முககவசமின்றி பயணிகள் பயணிக்கிறார்கள். இதனாலும் கொரோனா வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது என்று பஸ்ஸில் பயணிக்கும் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

பேருந்துகளில் முக கவசம் கட்டாயம் அணிந்து பாதியளவு பயணிகளை மட்டுமே பஸ்ஸில் ஏற்றிகொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையும் தன் பங்குக்கு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த நான்கு வாரங்களுக்கு பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமுக இடைவெளியுடன் பயணிப்பது, தேவை இருப்பின் வெளியிடங்களுக்கு செல்வது எனப் பாதுகாப்புடன் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் இரண்டாவது அலையிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

உலக நாடுகளில்... பிரேசில் நாட்டில் தான், கொரோனா வைரஸ் நோய்பரவல் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அடுத்து தற்போது இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை தாக்கினால், கடும் சேதம் ஏற்படுவதற்கு முன்பு அரசு அறிவித்திருக்கும் கொரோனா பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் குறைந்திருந்தது. கடந்த நான்கு வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் பெரிதாக இல்லையென்றாலும், கொரோனா வைரஸ் நோயின் பரவல் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க, நாடு முழுவதும் 78 கோடி தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் அறிகுறிகள் தெரியாது.. ஆனால், பலவீனம், மூளைச் சோர்வு, தலைச்சுற்றல், நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, மூட்டு வலி, மார்பு அழுத்தம் என லேசான அறிகுறிகள் தென்பட்டால்... அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துகொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் இப்போதைக்கு முடிவுக்கு வராது, பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி ஒருங்கிணைந்த முயற்சியால்தான், இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது போடப்படும் கோவின், கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளுடன், ரஷ்யாவிலிருந்து 91.6% செயல்திறன் கொண்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவின் ரெட்டி லேப் மூலம் விநியோகம் செய்ய, மத்திய அரசு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி ஆண்டுக்கு, 85 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், மூன்று நாட்களாக நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவில் 10.85 கோடி பேருக்கு மத்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது.

தடுப்பூசிகள் மாறுப்பட்ட கொரொனா வைரஸ் மற்றும் இரண்டாவது கொரோனா அலையை தடுத்து எதிர்த்து போராடும் போர்குணம் கொண்டது. 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. கொரோனா வைரஸ் நோய்பாதிப்பு ஏற்பட்டாலும், உயிரிழப்பினை தடுக்கும் என சுகாதாரத் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

சென்னையில் கொரோனா நோய் பரவல் காரணமாக பலர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற, தனி ரூம் வேண்டும் என்று காத்து நிற்கிறார்கள்.

தற்போது, இரண்டாவது அலை கொரோனா வைரஸ், வீரியம் மிக்கது என்பதால் தனியறை பெற்று சிகிச்சை தொடங்கவேண்டும் என்று காத்திருப்பதை விட, ஆரம்ப நிலையிலேயே, அரசாங்கம் புதிதாக உருவாக்கியிருக்கும் தற்காலிக அவசர மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி, சிகிச்சை செய்துகொள்வது உயிரிழப்பை தடுக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவிக்கிறார்.

தனியார் மருத்துவமனைக்கு ஈடாக அரசு மருத்துவமனையும், அதிலுள்ள மருத்துவர்களும் திறன் பெற்றவர்கள். அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் ஸ்டாக் இருப்பதால், அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கொரனோ நோயாளிகளுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது அலை, கொரோனா சிகிச்சைக்காக 900 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாராக உள்ளது. ஆக்சிஜன் மேலும் தேவைப்பட்டால், தொழிற்சாலைகளுக்கு விற்கப்படும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திவிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனங்கள் மனமுவந்து தெரிவிக்கிறது.

தமிழகத்தில் லாக்டவுன் மீண்டும் வருமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஒலிக்கிறது தானே..

மத்திய அரசு பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் இரண்டாவது கொரோனா அலையில் இருந்து தப்பிக்க ஒரே வழி… முக கவசம், சமுக இடைவெளி, அடிக்கடி சோப் போட்டு கைகழவுவதால், தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தாலே கொரோனா நம்மை விட்டு விலகும்!