தொடர்கள்
கதை
நம்பிக்கை...! - தில்லைக்கரசி சம்பத்

20210316222018500.jpeg

“நீ கடவுளே இல்லன்னு.. எத வச்சி சொல்ர?” என்று வேகமாக கேட்ட மாணிக்கத்திடம்...

“இருந்திருந்தா மனுசன் அவனவன் வாழ்க்கையில் கொடூர கஷ்டங்கள அனுபவிக்கும் போது, வந்து காப்பாத்தி இருக்க மாட்டானா மாணிக்கம்?” என்றார் சிவராசு.

“எல்லாம் நம்பிக்கை தானே சிவராசு..! உலகமே ஏதோ ஒரு நம்பிக்கைய புடிச்சு தானே ஓடிக்கிட்டு இருக்கு..!”

“அடப்போப்பா..! நாளைக்கே ஒலகம் அழியப்போகுதுன்னு மனுச இனத்துக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க..? அப்பவும் தன்னை காப்பாத்த வராத கடவுளை தான் கும்பிட்டுக்கிட்டு அழுதுக்கிட்டு இருப்பானுங்க.. என்ன நம்பிக்கையோ போ..! ஒன்னும் வெளங்கல..!”

“ம்ம்.. சரி அத விடு.. இப்ப உன் பேரனுக்கு எப்படி இருக்கு??”

“8 மாசமா இந்த வயித்து வலி வந்து படாத பாடு படறான். சாப்பிட கூட முடியல. லோக்கல் டாக்டர்கிட்ட காமிச்சு மருந்து மாத்திரை வாங்கி குடுத்தும் ஒன்னும் சரியாவ மாட்டேங்கிது.. இவன் அம்மா ஜுரத்துல போய் சேர்ந்துட்டா..! தாயில்லா புள்ளை.. இந்த 12 வயசுல இப்படி அடிவயிற புடிச்சிக்கிட்டு “வலிக்குது தாத்தா”ன்னு சுருண்டு படுக்குறத பாக்கும் போது என் நெஞ்சு திகுதிகுன்னு எரியுது மாணிக்கம்.. இவன் அப்பனும் “அப்பா..! என் பெண்டாட்டி போனதிலிருந்து எனக்கு ஒன்னும் பிடிக்கலை.. இங்க இருந்தா அவ ஞாபகம் தான் வருது.. சூர்யாவையும் கூட்டிக்கிட்டு நான் வேலையை டெல்லிக்கு மாத்திட்டு போறேன்”னான். நான் தான் “உடம்பு சரியில்லாத புள்ளைய வச்சிக்கிட்டு எப்படி‌ வேலைக்கு போவ..? என்கிட்ட விட்டுடு நான் பாத்துக்கிறேன்”ன்னு சொன்னோன... சரின்னு போய்ட்டான். இவனுக்காக கோயில்குளம் ஏறி இறங்குறேன். சாமிக்கு கண்ணு அவிஞ்சு போன மாதிரி, காதும் அவிஞ்சு போச்சு போல.. நாளுக்கு நாள் பேரனுக்கு வலி அதிகமாவுது தவிர ஒன்னும் குறைஞ்சமாதிரி தெரியல” என்றவாறு தன் மேல் துண்டை எடுத்து வழிகின்ற கண்ணீரை துடைத்து கொண்டார் சிவராசு.

சிறிது நேரம் யோசித்தவாறு அமர்ந்திருந்த மாணிக்கம் சிவராசிடம்... “நான் ஒன்னு சொல்றேன் கேளு.. என் அண்ணன் பையன் ஒருத்தன் மாதவன்ன்னு பேரு... பெரியாஸ்பத்திரியில டாக்டரா இருக்கான், நல்ல திறமைசாலி.. அவனுக்கு நான் ஃபோன் பண்றேன், நாளைக்கே போய் அவன‌பாரு... உன் பேரபுள்ள நல்லா குணமாயிடுவான்.. என்ன நாஞ்சொல்றது சரிதானே?!”

பெருமூச்சுடன்.. “சரி மாணிக்கம்.. நாளைக்கே சூர்யாவை கூட்டிட்டு போறேன்” என்றவாறு வீட்டுக்கு கிளம்பினார்.

மறுநாள்...

“வணக்கம் டாக்டர்” என்றவாறு கன்சல்ட்டிங் ரூமில் நுழைந்த சிவராசிடம்...

“வாங்க ஐயா.. சித்தப்பா சொன்னார். இது தான் உங்க பேரனா? நீங்க உக்காருங்க.. உங்க பேரனுக்கு சில டெஸ்ட் எல்லாம் எடுக்க போறேன்..
ரிசல்ட் இந்த வாரம் வந்துடும்.. அதுவரைக்கும் வலிக்குறைய சில மாத்திரைகள் தரேன். வேளாவேளைக்கு கொடுங்க. அடுத்த வாரம் வாங்க..!” என்றபடி புன்னகைத்தார் அந்த இளம்டாக்டர்.

வார முடிவில்... “டாக்டர்... சூர்யாவோட ரிசல்ட் வந்துருச்சு.. இந்தாங்க..!” என்றபடி நர்ஸ் டாக்டரின் டேபிளில் வைத்தார். அதை படித்த டாக்டர் மாதவன், உடனடியாக ஃபோனை எடுத்து சித்தப்பா மாணிக்கத்திடம் பேசினார். பின்பு பேரனை அழைத்து வரும்படி சிவராசிடம் தகவல் அனுப்பினார்.

பேரனை அழைத்து கொண்டு நம்பிக்கையுடன் வந்த சிவராசிடம்.. “கவலைப்பட ஒன்னுமில்லைங்கய்யா..! சாதாரண வயித்து வலிதான்.. 6 மாசத்துக்கு மாத்திரைகள் எழுதி தரேன்.. நல்ல சத்தான உணவுகளை கொடுங்க.. சித்தப்பா உங்க சூழ்நிலையை சொன்னார். முடிஞ்சா உங்க கிராமத்துக்கு வேணா கூட்டிட்டு போயிடுங்க.. தூய்மையான காத்து சுற்றுப்புற சூழ்நிலையில கொஞ்ச நாள் இருக்கட்டும்.. உடம்பு முடியலைன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க என்னப் பண்ணனும்னு நான் சொல்றேன்..” என்று கூறியவரை பார்த்து... சந்தோஷமான சிவராசு... “ஒன்னுமில்லைன்னு சொல்லி என் வயித்துல பாலை வார்த்தீங்க டாக்டர்.. தாயில்லா பிள்ளை இவன்.. என் வம்சத்துக்கு இவன் ஒருத்தன் தான். நீங்க சொன்ன மாதிரி இவனை நான் கிராமத்து வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறேன். தென்னந்தோப்பு, மாந்தோப்பு, கொள்ளிட ஆறு வயலுன்னு பச்சபசேலா வளமா இருக்கும் எங்கூரு.. 6 மாச மாத்திரை தீர்ந்து போனா திரும்பவும் வரனுமா..?”

“வேணாம்... வேணாம்.. அதே மாத்திரைகளை திரும்ப வாங்கிக்கிங்க... உடம்பு முடியாட்டி மட்டும் எனக்கு ஃபோன் பண்ணுங்க...”

“நீங்க உங்க பொண்டாட்டி புள்ளக்குட்டியோட நல்லா இருக்கனும் தம்பி.. என் பேரன் முகத்துல இப்பதான் சிரிப்பை பாக்குறேன்.. குணமாயிடும்... நீங்க சொன்னதை கேட்டு எவ்வளவு சந்தோஷப்படுறான் பாருங்க.. டேய் சூர்யா.. இவர் கொடுத்த மருந்து எல்லாம் கரெக்டா நேரநேரத்துக்கு சாப்பிட்டீனா நல்லா குணமாகிடுவ.. சரியா..!”

“நான் சாப்பிடுவேன் தாத்தா.. எனக்கு என்னமோ இந்த டாக்டர் மாமாவை பார்த்தா, ரொம்ப நம்பிக்கை வருது.. எனக்கு சீக்கிரம் சரியாகிடும் தாத்தா..!” என்று சிரித்தபடி சூர்யா சொல்ல...

“சரி.. டாக்டர் கால்ல விழுந்து கும்பிடுடா..! ஊருக்கு கிளம்புவோம்”
என்றார் சிவராசு.

“ஐயோ.. அதெல்லாம் வேண்டாம்” என்று தடுத்த டாக்டரின் முகத்தில் ஒரு கணம் வேதனையின் ரேகை ஓடியது.

அதை கவனிக்காமல் நன்றி என்று சொல்லி, உற்சாகத்துடன் தாத்தாவும் பேரனும் கைக்கோர்த்து பேசியபடி செல்லும் காட்சியை கண் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர்.

ஒரு வருடம் சென்றது. கிராமத்து சூழ்நிலையில் மருந்து மாத்திரைகள் என தாத்தாவின் கவனிப்பில் சூர்யாவின் வயித்து வலி முற்றிலும் குறைந்து போக... நல்ல ஆரோக்கிய உணவுகளையும் எடுத்துக் கொண்டதில் உடம்பும் நல்ல ஆரோக்கியமாக விளங்கினான்.

ஒவ்வொரு வாரமும் சிவராசுக்கு ஃபோன் செய்து விசாரித்து கொண்டிருந்த மாணிக்கம்... “இந்த சித்திரையோட ஒரு வருஷம் ஆவுதே..! சூர்யாவுக்கு இப்ப வயித்துவலியே வரதில்லன்னு நீ சொல்றதை கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சிவராசு. மாதவன் ஒவ்வொரு மாசமும் சூர்யாவ பத்தி என் கிட்ட விசாரிப்பான். ஒரு முறை இங்க வந்து மாதவன் கிட்ட காண்பிச்சுட்டு போயேன்ப்பா!! நானும் உங்களைப் பாத்து ரொம்ப நாளாச்சே...”

“அதுவும் சரிதான் மாணிக்கம்.. டாக்டர், அவரை பார்க்க வர வேண்டாம்ன்னு சொன்னதால‌தான் நான் வரல.. இப்ப நீயே கூப்பிடும் போது கண்டிப்பா ரெண்டு நாள்ல கிளம்பி வரேன்..!”

மெலிந்த உடல், சிறிது சதைபிடித்து நல்ல ஆரோக்கியமாக தாத்தாவின் கையை பிடித்து கொண்டு வரும்போதே விளையாட்டாய் குதித்தபடி வந்த சூர்யாவை சில நிமிடங்களுக்கு ஆச்சரியமாக பார்த்த டாக்டர் மாதவன்... “நீங்க இங்க இருங்க.. சூர்யாவுக்கு சில டெஸ்ட்டுகளை எடுக்கனும்.. முடிவு வர ஒரு வாரம் ஆகும்.. எங்க தங்குவீங்க?”

“மாணிக்கம் வீட்டிலேயே தங்கிடுறோம் டாக்டர் தம்பி..” என்றார் சிவராசு.

சரி. என்றபடி சூர்யாவை டெஸ்ட்டுக்கு அழைத்து சென்றார் மாதவன்.

டெஸ்ட் எடுத்து முடித்தப்பின் மாணிக்கம் வீட்டுக்கு வந்ததும், பல கதைகளை பேசி களித்துகொண்டிருந்தார்கள் சினேகிதர்கள் இருவரும்.. நடு நடுவில் சூர்யாவை ஆச்சரியத்துடன் கண்கொட்டாமல் பார்க்கும் மாணிக்கத்தை... “என்னப்பா... என் பேரனை அப்படி பாக்குற..?” என்று சிரித்தபடி கேட்கும் சிவராசுக்கு...

“ஒன்னுமில்லப்பா...” என்று சிவராசும் சிரித்தபடி பதில் சொல்வார்.

நான்காம் நாளே ஆஸ்பத்திரியிலிருந்து அழைப்பு வந்தது. மாணிக்கம் தானும் வரேன் என்று கிளம்பி வர... மூவருமே ஆஸ்பத்திரிக்கு போனார்கள்.

டாக்டர் மாதவன் சோதனை முடிவுகளை கையில் வைத்தபடி சந்தோஷமாக வரவேற்றார்...

“டாக்டர் தம்பி.. இப்ப வந்த ரிசல்ட்டில் என்ன எழுதியிருக்காங்க” என்று சிவராசு கேட்க...

“உங்க பேரன் நல்ல ஆரோக்கியத்தோட நூறு வருஷம் வாழ்வான்ன்னு எழுதி இருக்காங்க..!” என்று கூறி புன்னகைத்தார் டாக்டர் மாதவன்.

“தம்பி.. நீங்க ஏற்கனவே கொடுத்த மருந்து, கடந்த 6 மாசமா சாப்பிட்டதுல அவனுக்கு உடம்பு நல்லா ஆகிடுச்சு. வயித்து வலி வரது இல்ல... நல்லா சாப்பிடறான்.. மத்த பிள்ளைங்களோட ஓடி விளையாடுறான்.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல! வயசுல சின்னவர் நீங்க.. இல்லன்னா உங்க கால்ல விழுந்திருப்பேன் நானு..!” என்று உணர்ச்சி பெருக்கில் சொல்லிக்கொண்டிருந்த சிவராசுவை... முதுகில் தட்டி சாந்தமாக்கினார் மாணிக்கம்.

“ஐயா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க.. நான் எதுவும் செய்யல.. கடவுளும் உங்க நம்பிக்கையும் தான் காரணம். இன்னும் சில மாத்திரைகள் எழுதி தரேன்.. 3 மாசம் சாப்பிட்டால் போதும்... வருடம் ஒரு முறை வந்து இங்கே சூர்யாவின் உடல்நிலையை செக் செய்து கொள்ள வேண்டும். அதுவும் ஒரு பாதுகாப்புக்காக தான்.. வேறு பிரச்சினை எதுவும் இல்லை..” என்றார்.

"சரி சிவராசு.. நீ போய் மாத்திரைகள் வாங்கிட்டு வெயிட் பண்ணு. நான் மாதவன் கிட்ட பேசிட்டு வரேன்..!” என்று சிவராசை அனுப்பி விட்டு வந்த மாணிக்கம்...

“மாதவன்..! எப்படி இது சரியாச்சுப்பா..?! என்னால நம்பவே முடியல..!”

“எனக்கும் தான் சித்தப்பா.. 6 மாசம் முன்னாடி சூர்யாவோட டெஸ்ட் ரிசல்ட்ல அவனுக்கு localised gastric cancer முற்றிய நிலை இன்னும் 6, 8 மாதங்கள் தான் உயிர் வாழ்வான்னு நினைச்சேன். உங்களுக்கு இத பத்தி ஃபோன்ல சொன்னப்ப... “சிவராசுக்கிட்ட எதுவும் சொல்லாதே.. தாங்க மாட்டார்”ன்னு நீங்க சொன்னதால, அவர்கிட்ட நான் சொல்லல.. இப்ப ரிசல்ட் எடுத்து பார்த்தா.. புற்றுநோய் சுத்தமா மறைஞ்சு போயிருக்கு.. நானே ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போயிட்டேன்..”

“அப்படி என்ன மாத்திரைகள் சூர்யாக்கு கொடுத்த...? கேன்சர் சரியாப்போறமாதிரி!”

“ஐயோ சித்தப்பா... நான் கொடுத்தது வெறும் விட்டமின், வலிநிவாரணி மாத்திரைகள்.. ஆனா, சரியாகிடும் என்ற நம்பிக்கை.. எஸ்.. அந்த நம்பிக்கை தான் சூர்யாவை காப்பாத்திருக்கு சித்தப்பா.. நிச்சயமா என்னோட சர்வீஸ்ல இது பெரிய மெடிக்கல் மிராக்கிள்..”

“சரி.. சிவராசுக்கோ சூர்யாவுக்கோ இந்த புற்றுநோய் விஷயம் எப்பவுமே தெரிய வேண்டாம்..!”

“ஓகே சித்தப்பா.. சூர்யாவுக்கு முழுமையா குணமாகிடுச்சு.. இத நானும் சொல்ல போறதில்ல..!”

“சரி வரேன்ப்பா.. நைட்டு சிவராசு ஊருக்கு கிளம்புறான்..” என்று சொல்லிவிட்டு, ஆஸ்பத்திரி வாசலில் பேரனுடன் காத்திருந்த சிவராசிடம் சென்றார்.

மாணிக்கத்தின் கையை பிடித்து கொண்ட சிவராசு...
“உன் அண்ணன் பையன் திறமையான டாக்டர்..! என் பேரனை குணமாக்கி கொடுத்தாரு” என்று குரல் தழுத்தழுத்தபடி சிவராசு சொல்ல...

“உனக்கு ஞாபகம் இருக்கா..?? ஒரு வருஷம் முன்னாடி.. நம்பிக்கை பத்தி பேசுனோமே..!
உன் நம்பிக்கை .., தான் குணமாகிடுவோம் என்கிற உன் பேரனோட நம்பிக்கை தான் அவனை காப்பாத்திச்சு.!”

“அப்படியா சொல்ற..!?”

“ஆமா.. ஏன்னா அந்த நம்பிக்கையோட ஒரு முனைய நீ பிடிச்சிருந்த.. அந்த நம்பிக்கை வளர வளர கடவுள் இன்னொரு முனையையும் பிடிச்சிக்கிட்டாரு.. அதான் நல்லது நடந்துருக்கு..!”

“நீ சொல்றது சரிதான் மாணிக்கம். மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் இழக்கவே கூடாத ஒரு விஷயம் தன்னோட நம்பிக்கையை.. எத இழந்தாலும், இத இழக்காம இருந்தா கடவுளும் நம்ம பக்கம் தான்.. என்ன சூர்யா நான் சொல்றது ரைட்டு தானே...”

“ஆமாம் தாத்தா..!” என்று சூர்யா சிரிக்க... அந்த அழகை தாத்தாக்கள் இருவருமே ரசித்தனர்.


பின் குறிப்பு: தமிழக அரசு மருத்துவர் ஒருவரின் உண்மையான அனுபவம் இது. (கதைக்காக சில மாற்றங்களுடன்)