தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

20210316225727113.jpeg

சித்தரஞ்சன் சாலையில் உதயநிதி ஸ்டாலினை மிஸ்டர் ரீல் சந்திக்கப் போனபோது, அங்கு இரண்டு ஸ்டாலினும் இல்லை. திருமதி துர்கா ஸ்டாலின், சுந்தரகாண்டம் படித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், மிஸ்டர் ரீல்... “அதுதான் தேர்தல் முடிந்துவிட்டதே, பிரசாந்த் கிஷோர் நீங்கதான் ஆட்சி... எப்படி இருக்கீங்க, உங்க வீட்டுக்காரர் தான் முதல்வர் என்று சொல்லிவிட்டாரே” என்று சொன்னதும்...

துர்கா ஸ்டாலின், அதற்கு... “ஆட்சியைப் பிடிப்போம், அது நிஜம். ஆனால், முதல்வரெல்லாம் அவர் இல்லை. அரசியல் கட்சிக்கு அவர் தலைவர், ஆட்சிக்கு தலைவர் நான்தான். கோட்டைக்கு எப்பவும் தலைவி தான் ராசி” என்றார்.

உடனே மிஸ்டர் ரீல்... “ஏற்கனவே ஹேஷ்யமா வந்தது உண்மைதானா” என்று கேட்க... அதற்கு அவர்... “அது எனக்குத் தெரியாது. ஆனால், துர்கா ஸ்டாலின் தான் முதல்வர். அது உறுதி” என்றார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “நீங்கள் முதல்வர் பதவியில் உட்கார்ந்ததும், உங்கள் முதல் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்... குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் அதுதானே” என்று கேட்க... அதற்கு துர்கா ஸ்டாலின்... “அதெல்லாம் இல்லை. கோட்டையில் ஒரு நரசிம்மர் கோயில் கட்டுவதுதான். பூமி பூஜைக்கான தேதி குறித்து முடிவு செய்வதுதான் என் முதல் கையெழுத்து. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தினந்தோறும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி, முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அமைச்சர்கள் கோப்புகளில் கையெழுத்து போடும் முன், ஸ்ரீராமஜெயம் எழுதி தான் கையெழுத்துப் போட வேண்டும். அரசு அலுவலர்கங்கள், ஏகாதேசி, துவாதசி, சஷ்டி, கிருத்திகை போன்ற நல்ல நாட்களில் அரசு பொது விடுமுறை. அஷ்டமியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தவும், துவக்கவும் கூடாது. நவமியில் பயணங்கள் கூடாது என்பதால் அன்று ஓட்டுநர்களுக்கு விடுமுறை. இப்படி பல அதிரடி உத்தரவுகள் எனது முதல் கையெழுத்தில் இருக்கும்” என்றார் துர்கா ஸ்டாலின்.

அப்போது மிஸ்டர் ரீல்... “வருங்கால முதல்வர் மேடம், நீங்க இப்படி எல்லாம் பண்ணினா... ஆசிரியர் வீரமணி கோச்சுப்பார்... தொல் திருமா கதறி அழுவார்” என்று சொல்ல...

அதற்கு திருமதி துர்கா, “நான் நிறைய யோசித்து விட்டேன். சுப்பிரமணி, சீனிவாசன், ராமச்சந்திரன், மகாலட்சுமி, துர்கா இப்படி உம்மாச்சி பெயரை வைத்துக்கொண்டு, பெருமாள் பற்றி தப்பு தப்பா பேசினா அவர் கண்ணை குத்தி விடுவார். எங்க தாத்தா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். திருமா என்பதே மகாவிஷ்ணு பெயர்தான். வீரமணி என்ற பெயரில் ஒருவர் எவ்வளவு ஐயப்ப பாடல்கள் பாடி இருக்கிறார். அவர் பெயரை வைத்துக்கொண்டு, அவரைப் பற்றி இவர் அவதூறு பேசலாமா.. அபச்சாரம்.. அபச்சாரம்” என்று சொல்லி தப்பு.. தப்பு என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார் துர்கா ஸ்டாலின்.

அப்போது மிஸ்டர் ரீல்... “இதெல்லாம் திமுக தலைவர் ஒப்புதலுடன் நடக்கிறதா” என்று கேட்க... அதற்கு துர்கா ஸ்டாலின்... “அவர் ஒப்புதல் எனக்கு எதற்கு..? நான் முதல்வர், நான் தான் முடிவு செய்வேன். அவர் வேண்டுமானால், கிச்சனில் நான் என்ன சமைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி சொல்லட்டும். அப்படியே அவருக்கு நான் சமைத்துப் போடுகிறேன். கட்சி வேற.. ஆட்சி வேற.. கிச்சன் வேற.. இது எல்லாவற்றையும் போட்டு நீங்கள் குழப்பிக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் ரீல்” என்றார். கூடவே கிச்சன் கேபினட் என்பது சமையல், சமையல் மெனு முடிவு செய்யும் இடம். அரசியல் மெனு எல்லாம் இல்லை. அது எப்பவும் நான் தான் முடிவு செய்வேன். தை அமாவசை அன்று கூட 11 கருடன் பார்க்கப் போனேன்.. போகும்போது.. மணத்தக்காளி வத்தக் குழம்பு, சுட்ட அப்பளமும் வேணும் என்று கேட்டார் தலைவர். உடனே, செய்து தந்தேன். அவர் தலைவர். ஆனால், நான் செயல் தலைவர், தலைவி. தெரிஞ்சுக்கோங்க” என்றார்.

“அது சரி மேடம்.... கோட்டையில், நரசிம்மர் கோவில் எதற்கு?” என்று கேட்டதற்கு... “ராமர் கோயில் அவா அவா கட்றா... முருகன் கோயில், முருகன் கட்றார். நரசிம்மர் பாவம்.. அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதனால், நரசிம்மரை நான் பார்த்துக்கொள்கிறேன். இதில் என்ன தப்பு.. காந்தி ஜெயந்தி மாதிரி, தமிழ்நாட்டில் நரசிம்மர் ஜெயந்தி விமர்சையாக கொண்டாட போகிறோம். அன்றைக்கு டாஸ்மாக் கடையில், எல்லோருக்கும் பானகம் தருவார்கள், டாஸ்மாக் தரமாட்டார்கள். எல்லா சினிமா தியேட்டர்களிலும், டிவி சேனல்களிலும், கலைஞர் டிவி உட்பட பக்த பிரகலாதன் படம் தான் திரையிடப்படும். நரசிம்மா நரசிம்மா என்று எல்லா இடத்திலும் அவர் நாமம் கேட்டுக்கொண்டே இருக்கும். அன்றைக்கு பிறக்கும் எல்லாம் ஆண் பிள்ளைகளுக்கும் நரசிம்மா என்றுதான் பெயர் சூட்டப்படும். பெண் குழந்தையா இருந்தா, செஞ்சி லட்சுமி. எல்லா குழந்தைகளுக்கும் 10 ஆயிரம் பரிசு. இப்படி நிறைய மக்கள் நல திட்டங்கள் என் கைவசம் இருக்கு. அண்ணாநகர் இருக்கு.. கலைஞர் நகர் இருக்கு... ஆனால், நரசிம்மர் பெயரில் ஏதாவது நகர் இருக்கிறதா..? எனவே ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு நரசிம்மர் நகர் இருக்கும். இதுவும் எங்க கட்சியோட கனவு திட்டம்” என துர்கா ஸ்டாலின் அடுக்கிக்கொண்டே போக...

மிஸ்டர் ரீல் ஒரு முறை அமித்ஷாவை நினைத்துப் பார்த்தார்... பார்க்க பரிதாபமாக இருந்தது. என்னவோ, ஏதோ என்று யோசித்தபடியே புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.