தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 35 - மதன்

2021031622361883.jpeg

அக்பர்…

தந்தையும் மகனும்!

பல்வேறு மதங்களையெல்லாம் கடந்து நின்று, பரந்த நோக்குடன் இந்தியாவை ஆட்சி புரிந்த தனிப்பெரும் சக்ரவர்த்தி என்றும், அசோக சக்ரவர்த்திக்கு இணையானவர் என்றும் அக்பரை வரலாற்று அறிஞர்கள் பலர் பாராட்டினாலும், ‘கடவுளுக்கு இணையாகத் தன்னை நினைத்துக்கொண்டு, அந்தச் சுயநலம் காரணமாக இஸ்லாத்தின் நெறிமுறைகளை விட்டு வெகுதூரம் விலகிச் சென்ற ஒரு மன்னர் அக்பர்…’ என்று அவர் காலத்திய வரலாற்று ஆசிரியர் பாதானி குற்றம்சாட்டுகிறார். மேலும்…

‘இந்துக்கள் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக, ‘சிவராத்திரி’ என்கிற ஒரு பண்டிகையின்போது நூற்றுக்கணக்கான சாமியார்களை அரண்மனைக்கு வரவழைத்து, அவர்களோடு சேர்ந்துகொண்டு தானும் இந்துக்களைப் போல் விரதம் இருந்தார் பாதுஷா. சம்ஸ்கிருத மொழியில் அமைந்துள்ள ஏதோ ஆயிரத்தோரு சுலோகங்களை ஜபித்தவாறு தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கமும் சக்ரவர்த்தியைத் தொற்றிக் கொண்டது. அதற்கேற்ப அரசரைச் சந்திக்கும் பிராமணர்களும் சாமியார்களும் ‘ராமர், கிருஷ்ணர் போல சக்ரவர்த்தியும் ஒரு அவதாரம்’ என்று நைச்சியமாகச் சொல்லி அவரை ஏமாற்றினார்கள். ‘இப்படி ஒரு அவதார புருஷர் தோன்றுவார் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொல்லிப் பசப்பினார்கள் இவர்கள். அதற்கென்று சில பொய்யான ஓலைச்சுவடிகளை வேறு தயாரித்து, பாதுஷாவிடம் காட்டினார்கள் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள். மன்னரும் இவர்கள் சொன்னதையெல்லாம் நம்பினார். போகப் போக இறைச்சி உண்ணுவதைக்கூட நிறுத்திவிட்டார் பாதுஷா. தாடி வைத்துக்கொள்வதைக்கூட தவிர்த்தார்!’ என்று அக்பரை ஒரு வாங்கு வாங்குகிறார் பாதானி!

‘அக்பர் ஆட்சிக்கு வருவதற்குமுன், ஐந்நூறு ஆண்டுகளாக எத்தனையோ சுல்தான்கள் ஆட்சி புரிந்தும் யாராலும் இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அக்பர் மட்டுமே இந்துக்களை அரவணைத்துக் கொள்வதன் மூலம், தான் நிலையான, கட்டுப்பாடான ஓர் ஆட்சியைத் தரமுடியும் என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொண்ட புத்திசாலி!’ என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அக்பரின் மகன் சலீம் ‘எல்லா மதங்களிலும் இனங்களிலும் உள்ள நல்ல விஷயங்களையெல்லாம் மென்மையாக மதித்து ஏற்றுக்கொண்டவர்தான் என் தந்தை. அதே சமயம், மனதளவில் உண்மையான இஸ்லாமியராகவே கடைசிவரை வாழ்ந்தார்’ என்று தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். ஆனால், அக்பர் பாதுஷாவைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எந்தக் காலத்திலும் மகன் சலீம் அவரோடு நெருக்கமாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

‘பலவிதங்களில் தனக்குத் துரோகம் இழைத்தவர் தந்தை’ என்று சலீமும், ‘தனக்குப் பிறகு ஆட்சிக்கு வர எந்தத் தகுதியும் இல்லாதவன் மகன்’ என்று அக்பரும் வெளிப்படையாகவே நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொள்வதுண்டு!

சலீமை ஒரேயடியாகக் குற்றம் சொல்லவும் முடியாது. ‘தந்தையின் காலம் முடிந்து, தான் பட்டத்துக்கு வரலாம்’ என்று பார்த்தால்… நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த பிறகும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் மன்னர் அலுக்காமல் வளைய வந்தது கண்டு, முப்பது வயது நிரம்பிவிட்ட சலீமுக்கு ஒரு சுயபச்சாதாபமே வந்துவிட்டது! சில ஜோதிடர்களை அழைத்து, ‘‘பாதுஷாவை அவதாரம் என்றெல்லாம் வேறு சொல்கிறார்கள்… ஒருவேளை அப்பா இறக்கவே மாட்டாரோ..?!’’ என்று கவலையுடன் மகன் விசாரித்ததாகக்கூடத் தகவல்!

அக்பரைப் பொறுத்தவரை, அவருடைய மூன்று மகன்களுமே ‘உருப்படாத கேஸ்’தான்!

(1593-ல் மொகலாயப் படை தட்சிண பீடபூமியில் இருந்தபோது, அக்பரின் முதல் மகன் சலீமுக்கு - வயது 24, இரண்டாம் மகன் முராத்துக்கு - வயது 23, தானியேலுக்கு - வயது 21).

தெற்கே அக்பரின் படை வெற்றிகளைக் குவிக்காமல் சற்றுத் தடுமாறியதற்கு ஒரு முக்கிய காரணம் - படைக்குத் தலைமை வகித்த முராத், பாதி நேரம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்ததுதான். வெறுத்துப் போன அக்பர், மகனைப் பதவியிலிருந்து அகற்றி, தனக்கு நெருக்கமான அமைச்சர் அப்துல் ஃபஸலை அனுப்பித் தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்ல வேண்டி வந்தது. இதனால் கோபப்பட்ட மொடாக்குடியரான முராத் புலம்பித் தள்ளிவிட்டு, அளவுக்கு மிஞ்சிக் குடித்துவிட்டு விழுந்தார். மறுநாள் கூடாரத்தில் அவருடைய உயிரற்ற உடலைத்தான் மற்றவர்கள் பார்த்தனர்.

மற்ற இரு மகன்கள் சலீமும் தானியேலும் குடி விஷயத்தில் முராத்துக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ஓபியம், மது இரண்டு விஷயங்களிலும் புகுந்து விளையாடினார்கள் இருவரும். தானியேலைவிட சலீம் சற்றுத் தேவலை எனலாம். சில சமயங்களில் அவர் சற்று நிதானத்துடன் இருப்பதுண்டு. இப்படி ‘நிதானமான’ ஒரு சூழ்நிலையில்தான் (கி.பி.1600-ல்) சலீம் மூளைக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்த பட்டத்து ஆசை ஒரேடியாக வெடித்தது..!

வங்காளத்தில் உஸ்மான்கான் என்ற ஆப்கானிய தளபதி ஒருவர் அக்பருக்கு எதிராகப் புரட்சியில் இறங்க, அந்தச் சமயத்தில் தெற்கே மொகலாய சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கப் படையுடன் கிளம்பிச் சென்றிருந்த அக்பர், ‘உடனே வங்காளம் சென்று புரட்சியை அடக்கச் சொல்லி’ சலீமுக்கு ஓர் ஆணையனுப்பினார்.

அலஹாபாத்தில் ஒரு படையுடன் இருந்த சலீமுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘வாழ்நாள் பூராவும் பாதுஷாவுக்கு எடுபிடியாகவே நான் காலம் தள்ள வேண்டுமா… இவர் சொல்லி, நான் என்ன கேட்பது..?’ என்று குமுறிய சலீம், அக்பரின் ஆணையைப் புறக்கணித்ததோடு விடாமல், பீஹார் மாநிலத்திலிருந்து பாதுஷாவுக்கு வந்து சேர்ந்த சுமார் முப்பது லட்ச ரூபாய் வரிப் பணத்தைத் தானே எடுத்துக் கொண்டார். அதோடு, தன் சகாக்கள் சிலருக்கு பீஹாரின் சில பகுதிகளை ‘பட்டா’வாகப் பிரித்துத் தந்தார். இதையெல்லாம்விட, அவர் செய்த பெருங்குற்றம் - தன் பெயரில் நாணயங்கள் அச்சிட்டுக் கொண்டது! சக்ரவர்த்தி மட்டுமே இதைச் செய்யலாம்!

மாதிரிக்குச் சில நாணயங்களை மன்னருக்கே மகன் அனுப்பியது - உச்சக்கட்டம்!

இதனாலெல்லாம் கடுங்கோபம் கொண்ட அக்பர் ஆக்ரா திரும்ப, சலீம் முப்பதாயிரம் குதிரை வீரர்களுடன் தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்து சேர்ந்தது. ‘உடனடியாக அலஹாபாத் திரும்பிச் செல். இல்லையேல், கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்!’ என்று மகனுக்குச் சொல்லியனுப்பினார் அக்பர்.

சற்றுக் கலவரப்பட்டுப் போன சலீம், ‘மன்னரின் கட்டளையை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று கேட்டுக்கொண்டு வாபஸ் வாங்கினார்!

சலீமின் ஏடாகூடமான செயல்களைக் கண்ட அக்பர் அலுப்புடன் ‘பிரச்னை பண்ணும் இந்த மகனை நான் என்னதான் செய்வது?’ என்று கேட்டு, தெற்கே படைத் தளபதியாகப் பணியில் இருந்த அப்துல் ஃபஸலுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

‘மகன் என்றெல்லாம் பார்க்க வேண்டாம். இளவரசர்மீது கடும் நடவடிக்கை எடுப்பதே சரி. சக்ரவர்த்தி ஆணையிட்டால், நானே சலீமைக் கைது செய்து, தங்கள்முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன்!’ என்று அப்துல் ஃபஸலிடமிருந்து அக்பருக்குப் பதில் வந்தது!

அதைத் தொடர்ந்து அப்துல் ஃபஸலை பாதுஷா டெல்லிக்கு வரச் சொல்ல, அவரும் கிளம்ப… செய்தி சலீமுக்கு ஒற்றர் மூலமாகப் போய்ச் சேர்ந்தது. ஏற்கெனவே அப்துல் ஃபஸல் தன் தந்தையுடன் ரொம்பவும் நெருக்கமாக இருந்ததைச் சற்றும் விரும்பாத சலீம், ‘இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’ என்று தீர்மானித்தார்.

ஜான்ஸிக்கு அருகே உள்ள பிரதேசத்தை நிர்வகித்து வந்த தன் நண்பர் வீர்தேவ் சிங் என்ற ராஜபுத்திர வீரருக்கு, ‘கோள்மூட்டும் இந்தக் கிழவன் அப்துல் ஃபஸல் டெல்லி போய்ச் சேரக்கூடாது. வழியிலேயே தீர்த்துக் கட்டவும். இதை வெற்றிகரமாகச் செய்தால், பிற்காலத்தில் என் முழு அன்பும் ஆதரவும் தங்களுக்குக் கிடைக்கும்!’ என்று சலீம் கடிதம் அனுப்பினார்.

ஆகஸ்ட் 12, 1602… வீர்தேவ் சிங் அனுப்பிய ஒரு கொலைப் படை, அப்துல் ஃபஸலை வழிமறித்து வெட்டிக் கொன்றது. அந்தப் பெருமகனின் தலை அலஹாபாத்தில் இருந்த சலீமுக்கு அனுப்பப்பட்டது. தட்டில் வைத்து கொண்டு வரப்பட்ட அப்துல் ஃபஸல் தலையைப் பார்த்து ஏக திருப்தியுடன் வாய்விட்டுச் சிரித்த சலீம், அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்து கேவலமாக நடந்து கொண்டதாக வரலாறு தெரிவிக்கிறது. தான் முன்னின்று நடத்திய இந்தக் கொலை பற்றி சுயசரிதையில் சற்றும் தர்மசங்கடப்படாமல் விவரமாகக் குறிப்பிடும் சலீம், ‘அவரைக் கொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகப் போனது!’ என்று வலியுறுத்தவும் செய்கிறார்.

அப்துல் ஃபஸலுக்கு நேர்ந்த கொடுமையான முடிவு பற்றிக் கேள்விப்பட்ட அக்பர் பாதுஷா கலங்கிப் போனார். மூன்று நாட்கள் மன்னர் யாரையும் சந்திக்கவில்லை. ‘‘சலீம்… என்னைக் கொலை செய்துவிட்டு, அவரை விட்டிருக்கலாமே..!’’ என்று அழுது அரற்றிக் கொண்டிருந்ததாகத் தகவல்.

எட்டு மாதங்கள் கழித்து, அக்பரின் வயது முதிர்ந்த அத்தை குல்பதன் பேகம் மற்றும் அரண்மனைப் பெண்கள் ஒருவழியாக அக்பரையும் மகனையும் சந்திக்க வைத்துச் சமாதானம் செய்வித்தார்கள்.

சும்மா இருப்பாரா தந்தை? மன்னனாகும் தகுதி பெறவேண்டுமெனில், தளராமல் தன் கடமைகளைச் செவ்வனே செய்தாக வேண்டும் என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த பாதுஷா, இளவரசர் சலீமுக்கு இன்னொரு பொறுப்பைத் தந்தார்…

ராணா பிரதாப்சிங் மறைந்த பிறகு, அவருடைய மகன் அமர்சிங் ஒரு கொரில்லாப் படையுடன் அக்பரை எதிர்த்து புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒரு படையுடன் மேவார் பகுதிக்குச் சென்று அமர்சிங்கை அடக்கச் சொல்லி சலீமுக்கு ஆணையிட்டார் பாதுஷா. கிளம்பிய இளவரசருக்குக் கொஞ்சம் தொலைவு போனதும் கிறுக்குப் பிடித்துவிட்டது. ‘என் தந்தைக்கு வேறு வேலையில்லை. இப்படி ஏதாவது என்னை வேலை வாங்கிக் கொண்டிருப்பார்!’ என்று நண்பர்களிடம் அலட்சியமாகச் சொல்லிவிட்டு அலஹாபாத் திரும்பியவர் ஓபியம், மது என்று ஜமாய்த்துவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டுவிட, தகவல் கேட்ட அக்பரின் கண்கள் சிவந்தன. ‘இவனை ஒருவழி பண்ணினால்தான் சரிப்படும்!’ என்று கர்ஜித்த மன்னர் அலஹாபாத்துக்குக் கிளம்ப, அந்தச் சமயம் பார்த்து அக்பரின் சிற்றன்னை உயிரை விட்டுவைக்க, தப்பித்தார் சலீம்!

அதற்குப் பிறகு நான்கு மாதங்கள் கழித்து தான் சலீம் தலைநகருக்குத் திரும்பினார். இந்த முறையும் பாட்டி, அத்தை போன்ற அரசகுலப் பெண்மணிகள் சலீமை அந்தப்புரத்தில் ஒளித்து வைத்துவிட்டு, அக்பர் வருகை தந்தபோது மெள்ள மகனை அவர்முன் அனுப்பினார்கள். காலில் விழுந்து அழுத சலீமைத் தூக்கி அணைத்துக் கொண்டு, ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கதவை உள்ளே தாழிட்டுவிட்ட அக்பர், தன் மகனைப் பிரம்பால் விளாசித் தள்ளியதாக அநேகமாக எல்லா வரலாற்று ஆசிரியர்களும் (சற்று மகிழ்ச்சியுடனேயே?!) குறிப்பிடுகின்றனர். அதோடு, ஓபியம் மற்றும் மதுவகைகளின் அருகே நெருங்க விடாமல் அறைக்குள் சலீமைப் பூட்டி வைக்க, இளவரசரின் கைவிரல்கள் நடுங்க ஆரம்பித்தன. கண்களில் நீர் வழிய அலறினான் சலீம் (மது இல்லாததன் விளைவுகள்!). ஒழிந்து போகட்டும் என்று அன்றைய டோஸ் ஓபியத்தையும் மதுவையும் உள்ளே அனுப்பினார் தந்தை. இந்த மோதலுக்குப் பிறகு தந்தையின் கடைசி மூச்சுவரை சலீம் அடங்கி ஒடுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மூன்றாம் மகன் தானியேலும் மது அரக்கனுக்குப் பலியாக, சலீமை விட்டால் வாரிசு இல்லை என்ற நிலை அக்பருக்கு ஏற்பட்டுவிட்டது.

தனக்குப் பிறகு சலீம் பட்டத்துக்கு வருவது குறித்து அக்பருக்குத் திருப்தியே இல்லை. அவருடைய பிரதம அமைச்சர் மான்சிங்கூட சலீமின் மகன் குஸ்ரூதான் (17 வயது) அக்பருக்குப் பிறகு அரியணை ஏறத் தகுதி பெற்றவர் என்று கருதினார். பேரப்பிள்ளைக்கு ஆதரவாக, அவசர அவசரமாக ஆள் திரட்ட முயன்று, அதில் தோல்வியடைந்தார் மான்சிங். இனியும் டெல்லியில் இருந்தால் ஆபத்து என்று முடிவு செய்து குஸ்ரூவை ரகசியமாகத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வங்காளம் சென்றார் அந்த அமைச்சர்.

திடீரென் ஒரு நாள் சக்ரவர்த்திக்கு (63 வயதில்) வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனில்லை. நிலைமை சீரியஸானது. வயிற்றுப்போக்குடன் ரத்தமும் நிறைய வெளியேற, மூன்று வாரங்கள் படுக்கையில் துவண்டுபோய்க் கிடந்தார் அக்பர்.

அக்டோபர் 15, 1605.

பாதுஷா பிழைக்கமாட்டார் என்று புரிந்துகொண்ட அரசவைப் பெரியோர்கள், சலீைம மெள்ள அழைத்துக் கொண்டுவர, மன்னரின் காலடியில் மண்டியிட்டார் மகன். தன் கண்களாலேயே சலீமை அருகில் அழைத்த சக்ரவர்த்தி, அமைச்சர்களைப் பார்த்து தலையசைக்க… அரச உடையும் மகுடமும் கொண்டு வரப்பட்டன. பெரியோர்கள் சலீமுக்கு அவற்றை அங்கேயே அணிவித்தனர். ஹுமாயூன் பாதுஷாவும், அவருக்குப் பிறகு தானும் உபயோகித்த பிரத்தியேக குறுவாளை எடுத்து சலீமுக்குத் தரச்சொல்லி சைகை செய்தார் அக்பர். கட்டிலில் ஒரு ஓரமாகச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அந்த வாளை மூத்த அமைச்சர் ஒருவர் எடுத்து வந்து மரியாதையுடன் நீட்ட… சலீம் அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு இடையில் அணிந்து கொண்டார். அடக்கமான குரலில் அங்கே வாழ்த்தொலி கிளம்பியது. மறுகணம் எல்லோரும் மண்டியிட்டு சலீமை வணங்கினர்.

ராஜ உடையுடன் தந்தையை வணங்குவதற்காகக் கட்டில் அருகே சென்றார் - ‘ஜஹாங்கீர்’ என்ற பட்டப்பெயருடன் பட்டத்துக்கு வந்த சலீம்.

அக்பர் பாதுஷாவின் உயிர் பிரிந்திருந்தது.