தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார்

துரைமுருகன் வருந்துகிறார்...

20210316230819253.jpeg


விகடகவியார் உள்ளே நுழைந்ததும்... “நீர் எதுவும் கருத்துக்கணிப்பு எல்லாம் சொல்ல மாட்டீரா” என்று கேட்டதற்கு... “கருத்துக்கணிப்பெல்லாம் சொல்கிற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை” என்று தன்னடக்கத்தோடு சொன்னார். கூடவே “ஸ்டாலின், பதவியேற்பு தேதி, யார் அமைச்சர்கள், முதல்வர் பங்களா என்றெல்லாம் பிளான் பண்ண துவங்கிவிட்டார். அதன் பிறகு இன்னும் உமக்கு எதற்கு கருத்துக்கணிப்பு” என்றார் விகடகவியார்.

“அப்படியா... அப்படி என்றால்... அவரது பிளான் எல்லாவற்றையும் நீர் சொல்ல வேண்டியது தானே” என்றோம். அவர் பதவி ஏற்பு விழா மே 6-ஆம் தேதி நடைபெறும். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தான் பதவி ஏற்பு விழா நடைபெறும் இடம். தற்போது, சித்தரஞ்சன் சாலை வீடு வாஸ்துப்படி சரியில்லை என்பதால், அவர் முதல்வர் ஆனதும் பசுமைவழிச் சாலை.. அதாவது கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் வீடு இருக்குமாம். திமுக தரப்பில் இப்படியெல்லாம் ஏற்பாடுகள் ஜரூராக நடக்கிறது. பிரசாந்த் கிஷோர் கூட ஒரு தனியார் தொலைக்காட்சியில் அதிமுக மற்றும் தோழமை கட்சிகள் 50 இடங்கள் வெற்றி பெற்றால் ஜாஸ்தி என்று அடித்து சொல்லியிருக்கிறாரே... அப்புறம் என்ன?” என்ற விகடகவியார்... சிரித்தபடியே...

“ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் தயார் செய்ய... சிலநாள் ஓய்வெடுக்க முதலில் சுவிட்சர்லாந்து, லண்டன், மாலத்தீவு என்றெல்லாம் யோசித்தார். அவரது சுகாதார ஆலோசகர் துர்கா, அதற்கெல்லாம் தடைபோட்டு... கொடைக்கானல் என்று முடிவு செய்தார். இரண்டு தனி விமானத்தில் அவர் குடும்பம், சபரீசன் குடும்பம், உதயநிதி குடும்பம் என்று இவர்கள் மட்டும் மூன்று நாட்கள் தங்கி ஆலோசனை செய்ய போயிருக்கிறார்கள்” என்று விகடகவி யார் சொன்னதும்....

“அதாவது கிச்சன் கேபினட் மட்டும் என்கிறீர்... அப்படித்தானே..?” என்று கேட்டதற்கு... விடகவி யார்... “அப்படியும் சொல்லலாம்... ஆனால், மூத்த தலைவர்களுக்கு இப்படி தனியாக சென்றது, சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் குறிப்பாக துரைமுருகனுக்கு” என்று விகடகவியார் சொன்னதும்... நாம்... “அவருக்கு என்ன சந்தேகம்..? கட்சியின் பொதுச் செயலாளர். ஸ்டாலினுக்கு அடுத்து அவர் தானே எல்லாம்” என்று அப்பாவியாய் கேட்டோம்...

அதற்கு விகடகவியார்... “அதெல்லாம் சரிதான். அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக விரும்புகிறார். ஆனால் ஸ்டாலின், இந்த முறை எடப்பாடியை போல், நாமே பொதுப்பணித் துறையை வைத்துக் கொண்டால் என்ன என்று யோசிக்கிறாராம். இது தவிர, துரைமுருகன் உடல்நிலையையும் வயதையும் காரணம் காட்டி, ஒரு ஒப்புக்குச் சப்பாணி இலாகாவை தந்து, அவரும் அமைச்சர் தான் என்று அளவில் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி துரைமுருகன் காதுக்கு எட்டியது. இதனால் பார்க்கிறவர்களிடமெல்லாம், அந்தக் காலம் முதல் தற்போது வரை, அவர் கட்சிக்கு எப்படியெல்லாம் உழைத்தார் என்று மலரும் நினைவுகளை காட்சிகளாக விவரித்துச் சொல்கிறாராம். அவரைப் பார்க்கப் போகிறவர்கள் எல்லாம், ஆளை விடுங்கள் என்று ஓடி விடுகிறார்கள். இந்த முறை மூத்த தலைவர்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, இளைய தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்கலாம் என்பது ஸ்டாலினின் திட்டம். ஆனால், அதை எந்த அளவுக்கு செயல்படுத்த முடியும் என்பது தெரியவில்லை” என்றார் விகடகவியார்.

20210316231111886.jpeg

நாம்... “திமுகவை, அமித்ஷா உடைப்பார், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவார் என்றெல்லாம் சொன்னீர்களே” என்று கேட்டதற்கு... அந்தத் திட்டம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், திமுக 150-170 என்று மிகப்பெரிய வெற்றி பெற்றால், அவர்களை தொந்தரவு செய்ய மாட்டாராம் அமித்ஷா. ஆனால், தங்களை ஆதரிக்கும் நிலைக்கு மாறும் வேலையில் இறங்கி விடுவாராம் அமித்ஷா. தற்போது டி.ஆர். பாலு அமித்ஷாவின் தொடர்பில் இருக்கிறார். அவர் அங்கு திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அதே சமயம்... ஸ்டாலினிடம் பேசும்போது, தேவையில்லாமல் மத்திய அரசிடம் நமக்கு எதற்கு உரசல் என்று அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். இதுபற்றியெல்லாம் ஸ்டாலினும் யோசிக்கிறார். எது எப்படியோ டிஆர் பாலுவின் மகன் அமைச்சர் பட்டியலில் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை” என்றார் விகடகவியார்.

“அதிமுகவை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்” என்று நாம் கேட்டபோது...

“கருணாநிதி முதல்வரானதும், ஜெயலலிதா வீட்டில் ரெய்டெல்லாம் நடத்தி, அவருக்கு அனுதாபத்தை தேடித்தந்தது போன்ற வேலையை ஸ்டாலின் செய்ய மாட்டாராம். இவர்களை எப்படி சட்டபூர்வமாக எதிர்கொள்வது என்று சில ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரிடம், திமுகவின் மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் அரிபரந்தாமன் மற்றும் இன்னும் சிலர். இது தவிர, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிபதிமன்ற நீதிபதி குன்ஹா ஏப்ரல் ஏழாம் தேதி ஓய்வு பெற்றார். அவரை புகழ்ந்து தள்ளி, முரசொலியில் தலையங்கம் எழுதி இருக்கிறார்கள். எனவே தனி நீதிமன்றம் அமைத்து, சரியான தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றும், அவரின் ஆலோசனையைக் கேட்கவும் முயற்சிகள் நடப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அதேசமயம்” என்று சொல்லிவிட்டு விகடகவியார் புன்னகைத்தார்.

நாம் அவரிடம்... “இந்தப் புன்னகையின் பின்னால் உள்ள செய்தியை நீர் சொல்லிவிட்டால், உமக்கு உடனே கபசுரக் குடிநீர் வழங்குவோம்” என்று சொன்னதும்... “சில அமைச்சர்கள், நீங்க எங்களை கண்டுக்காம இருக்கணும்... அதற்கு பதிலுக்கு நாங்க என்ன செய்யணும் என்று ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு செய்தி வருகிறது” என்று விகடகவியார் சொன்னதும்.... நாம் அவருக்காக தயாராக வைத்திருந்த கபசுர குடிநீரை தந்தோம். அதை அவர் ஒரே மடக்கில் குடித்தார்.

20210316231152869.jpeg

அடுத்ததாக.. “அதிமுகவில் நம்பிக்கை ஒளி எதுவும் இல்லையா” என்று கேட்டபோது... அதற்கு விகடகவியார்... “அவர்கள் இவர்கள் மாதிரி அமைச்சரவை பட்டியல் வரை எல்லாம் போகவில்லை. எடப்பாடியின் தேர்தல் வியூக நிபுணர் சுனில், 136 தொகுதியில் நாம் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் எடப்பாடி விடாமல், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் எனக் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு, தொகுதி நிலவரம் பற்றி கேட்டபோது... 90 முதல் நூறு இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். மீதி 30 இடங்கள் அப்படி இப்படி என்று சொல்லி இருக்கிறார்கள். சில அமைச்சர்கள், பெண்கள் வாக்கு நிறைய பதிவாகியிருக்கிறது, பெண்கள் வாக்கு எப்போதும் அதிமுகவிற்க்குதான் சாதகம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, தக்க நடவடிக்கை எடுக்க தயாராகத்தான் யோசித்து வருகிறார்” என்றார் விகடகவியார்.

அவரே தொடர்ந்து, ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் சைதை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் தேர்தல் வெற்றியை எதிர்த்து முறையீடு செய்ய.. அது தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டாலின் பெற்ற வெற்றி அதிகார துஷ்பிரயோகம் செய்து பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டுடன் மேல்முறையீடு செய்தார் சைதை துரைசாமி. ஏப்ரல் 13ஆம் தேதி மென்ஷனிங் அப்ளிகேஷன் என்ற முறையில், அதை துரித வழக்காக காணொளி மூலம் விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார் சைதை துரைசாமி. அனேகமாக அது, இந்த மாதம் இறுதியில் விசாரணைக்கு வரும்” என்றார் விகடகவியார்.

இதற்கு “திமுகவில் ரியாக்க்ஷன் என்ன” என்று கேட்டோம்...

அதற்கு... “இது மோடியின் திருவிளையாடல் தான், சமாளிப்போம் என்கிறார்கள் அசராமல் திமுகவினர்”.

விகடகவியார், மறக்காமல் முகக் கவசத்தை மாட்டிக்கொண்டு ஜூட் விட்டார்