தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 31 - கலைமாமணி பாரதி திருமகன்

20210730135353907.jpg

பொதுவாக நாம் நினைப்பது – வில், ஸ்ரீராமனோடு மட்டுமே தொடர்புடையது என்று. ஆனால், அந்த வில் ஸ்ரீ கிருஷ்ணரோடு தொடர்பு ஏற்பட்டது எப்படி..? பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் சொல்லும்போது, உடனிருந்து கேட்டது அர்ஜூனன் மட்டுமல்ல… ‘வில்’லும்தான்..!

பகவத்கீதை முழுவதையும் பரந்தாமன் கிருஷ்ணர் வாயால் கேட்ட பாக்கியம் வில்லுக்கு இருப்பதால்தான், இறைவனுக்கு உகந்த – இசைந்த கருவியாகி, இன்று ‘வில்’லிசை வளர்க்கும் கருவியாகி, உலகமெங்கும் அனைத்து மக்களோடு வலம் வந்துகொண்டிருக்கிறது!

நான் எப்போதும் மேடையில் ‘தந்தனத்தோம்’ என்ற முதல் பாடலைப் பாடும்போது, அதற்கிடையே ஒரு சரணம் பாடுவேன். இது, ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் இணைத்து பெருமைப்படுத்தும் இசை இலக்கியம்!

எப்படி என்கிறீர்களா..? ராமர் கைபட்ட வில்லு… கிருஷ்ணரின் கீதோபதேசம் கேட்ட வில்லு… மகாபெரியவாள் ஆசி வழங்கிய வில்லு – என்னே பாக்கியம்..! வில்லும் சொல்லும் என்றுமே வெல்லும்!
இப்பேர்பட்ட பெருமையுடைய வில்லிசையின் ஆரம்ப காலகட்டத்தில், இன்றைக்கு நாம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடும் சமயத்தில், சிந்திக்க வேண்டிய ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கிறது!

காஞ்சிபுரம் அருகே ஒரு சிறு கிராமத்தில் கிருஷ்ணர் கோயில் உள்ளது. முன்பொரு சமயம் இக்கோயிலில் எங்களின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. முன்னதாக, அன்று காலை காஞ்சி மடத்துக்கு சென்று, மகாபெரியவாளை சந்தித்து, அவரிடம் ஆசி பெற்று வில்லிசை நிகழ்ச்சிக்கு புறப்பட்டோம்.

அன்று – என் தந்தையின் வில்லிசையில் மகாபெரியவாளின் ஆசியும் கலந்திருந்தது. முன்னதாக, அன்று காலை என் தந்தையிடம், ‘‘சுப்பு! உன் வில்லுப்பாட்டுல புல்லாங்குழல் உண்டோடா..?’’ என்று மகாபெரியவா திடீரென கேட்டார்.

இதற்கு அப்பா, ‘‘பெரியவா உத்தரவு… காஞ்சிபுரத்துல இருக்கிற ஒரு நல்ல புல்லாங்குழல் வித்வானா பார்த்து உடனடியா சேர்த்துக்கறேன்..! இதுவரைக்கும் நான் வில்லிசையில புல்லாங்குழல் வெச்சுக்காததற்கு காரணம் – அது, வடஇந்திய வாத்தியமாச்சே… அதான் பெரியவா..!’’ என மனதில் நினைத்ததை சொல்லிவிட்டார்.

மகாபெரியவாளிடம் இருந்து மிக அழகான சிரிப்புடன், மின்னல் ஒளி போல் ஒரு தெய்வீக வாக்கு – ‘‘ஆமா… ஆமா..! இது, கிருஷ்ணரோட வாத்தியம்தான்..!’’

20210730135745982.jpeg

இந்த உரையாடலை, அன்று மாலை வில்லிசை மேடையில் என் தந்தை சொன்ன விதம், எப்படி தெரியமா..?

‘‘மெய்யன்பர்களே… மகாபெரியவா வாக்கு கிடைச்சதும், நான் என்ன நினைச்சேன் தெரியுமா..? நாமெல்லாம் மனிதர்கள்…

வாத்தியங்களிலேகூட வடக்கு, தெற்கு என திசை பேதங்கள்..! நமக்கெல்லாம் திசை தெரியுது… ஆனால், மகாபெரியவாளுக்கு, பகவான் கிருஷ்ணர் தெரிந்திருக்கிறார். இதைத்தான் நாம புரிஞ்சுக்கணும் – எது நம்ம பலவீனம், எது ஞானிகளோட பலம்னு.. இது தெரிஞ்சாலே, நாம பக்குவமான பக்தியில இருக்கோம்னு அர்த்தம்!’’ என்று வில்லிசை பதிவு செய்தார். அவரது கருத்துக்கு மக்களின் கரகோஷம் விண்ணில் அதிர்ந்தது.

இதையடுத்து சென்னை நாரதகான சபாவில், வில்லிசையில் பகவத்கீதை 3 நாட்கள் நடைபெற்றன. எனது தந்தையின் வில்லிசை என்பதால், அதிகாரிகளும், அம்மாமார்களும் ஒண்ணுமே படிக்க தெரியாமல் ரசிக்க வந்தவர்களையும் ஒரே இடத்தில் ஒன்றுசேர்க்கும்!
அன்று ‘கர்மயோகம்’ குறித்து என் தந்தை வில்லிசையில், ‘‘கர்மயோகம்னா என்ன தெரியுமா..? தெரிஞ்சாதானே கடைப்பிடிக்க வசதியா இருக்கும். இப்ப இருக்கிற சிலபேர் என்ன சொல்றா, தெரியுமோ..? ‘கர்மம்னா… வீட்ல சாப்பிடறது! ‘யோகம்’னா… ஓட்டல்ல சாப்பிடறது’னு புரியாம சொல்லுவாங்க! (கூட்டத்தில் குபீர் சிரிப்பு…)
ஆனால், ஆண்டவனின் ‘நாணாக’ இருந்து, அவரவர் வேலையை ஒழுங்காக செய்வதுதான் கர்மயோகம்… நம்ம வேலைகளை நமக்குள் இருக்கும் ஆண்டவன் செய்கிறார் என்ற பக்குவம் வந்தால், நாம செய்ய வேண்டிய வேலையை தெய்வமா நினைச்சு செய்வோம்..!’’னு முடிச்சாங்க.

நிகழ்ச்சி முடிந்து நாங்கள் வெளியே வரும்போது, எங்களை பார்த்தபடி ஒரு ஆட்டோ டிரைவர் தயங்கியபடி நிற்கிறார். அவர் என் தந்தையிடம் பேச விரும்புகிறார் என்பதை அறிந்து, நான் அவரை அழைத்தேன்.
என் தந்தையிடம் அவர் கேட்ட கேள்வி – ‘‘எங்களுக்கு எல்லாம் வில்லுப்பாட்டு புரியற மாதிரி சூப்பரா சொன்னீங்க ஐயா! இன்னிக்குத்தான் கர்மயோகம்னா என்னனு புரிஞ்சுது. ஒரு கேள்வி… நான் ஆட்டோ ஓட்டும்போது, ‘நான் ஓட்டலை… ஆண்டவன்தான் ஓட்டறார்’னு நினைக்கறது தப்பில்லையே… ஆட்டோ தொழில் என்பதால் கேட்டேன் ஐயா..!’’

இதைக் கேட்டதும் என் தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சி… ‘‘தம்பி, இன்றைய நிகழ்ச்சியின் பலன் – வெற்றியே நீங்கதான்! வில்லிசை மொழியின் வெற்றி – உங்களுக்கு புரிஞ்சதுதான்! கண்டிப்பாக ஒவ்வொரு ஆட்டோவிலும் கடவுள் இருக்கிறார்…’’ என்று ஆட்டோ டிரைவரை தட்டிக்கொடுத்து அனுப்பினார்.

‘கலை என்பது மக்களுக்காகவே…’ என்பதை ஒவ்வொரு கலைஞர்களும் மனதில் வைத்தால், இதுபோன்ற வெற்றிகள் எளிது என்பதை உணர முடிந்தது. இன்னும் சுவையான சம்பவங்களுக்கு…

– காத்திருப்போம்