தயக்கம் வேண்டாம்

ஜூனியர் விகடன் மதன் சார், ராவ் சார் இருவரும் பார்த்துப் பார்த்து செதுக்கிய ஒரு அழகிய சிற்பம். அது ஒரு பொக்கிஷம் கூட. இன்றைய பல புலனாய்வு பத்திரிகைகளுக்கு, ஜூனியர் விகடன் தான் பாடப்புத்தகம். ஜூனியர் விகடன் மாதிரியே கூட சில இதழ்கள் வந்தது.
ராவ் சார் விரட்டி விரட்டி வேலை வாங்குவார். அதே சமயம் வஞ்சனையில்லாமல் பாராட்டுவார். இன்றைக்கு பல பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் ஜொலிக்கும் பல பத்திரிகையாளர்களுக்கு அவர்தான் ஆசான், எனக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.
ஆனால்.... அவர் இதுபோன்ற பாராட்டுக்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார். நீங்க நல்லா எழுதினிங்க, அதனால் முன்னேறினிங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அது தான் ராவ் சார்.
ஜூனியர் விகடன் செய்திகளை முந்தித் தரும். ஆனால், அந்தச் செய்தி உண்மைதானா என்பதை பலமுறை, பல வழிகளில் உறுதிப்படுத்திக் கொண்டுதான் ராவ் சார் அச்சுக்கு அனுப்புவார்.
ஜூனியர் விகடனை கண்டித்து, வக்கீல் நோட்டீஸ் வரும், கண்டன அறிக்கை வரும். அப்போதெல்லாம் ராவ் சார்... நாம் உண்மையை எழுதி இருக்கிறோம், அதனால் அவர்கள் கோபப்படுகிறார்கள் என்று சொல்லிவிட்டு விட்டுவிடுவார்.
1996 தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். அப்போது அவர்... நம் கட்சி தோல்வி அடைந்ததற்கு, ஜூனியர்விகடன் தான் முக்கியக் காரணம் என்று வெளிப்படையாகவே சொன்னார்.
நான் அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதி இருக்கிறேன். ஆனால், சினிமா பிரபலங்களை பேட்டி கண்டது இல்லை. ஒரு முறை ஆனந்த விகடன் சமையல் ஸ்பெஷலுக்காக நடிகர் எம்.என். நம்பியாரை பேட்டி கண்டிருக்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சிவாஜி கணேசனை பேட்டிக் கண்டிருக்கிறேன், அவ்வளவுதான்.

நடிகை அமலாவை எனக்குத் தெரியும். எப்படியென்றால்... அவர் கராத்தே தியாகராஜன் வைத்திருந்த வீடியோ லைப்ரரிக்கு வந்து வீடியோ கேசட்டுகளை எடுத்துச் செல்வார். அமலா, கராத்தே தியாகராஜன் இருந்த அதே சாலையில், நாலு வீடு தள்ளி வாடகை வீட்டில் இருந்தார். அவர் நடந்து தான் வருவார். சினிமா பிரபலம் என்ற பந்தா எல்லாம் இல்லாமல், சாதாரணமாகத்தான் அவர் இருப்பார், பேசுவார். ரொம்ப எளிமையாக இருப்பார். தியாகராஜன் அங்கிருந்தால் அவரிடம் சில நிமிடம் பேசுவார். அப்படி ஒருநாள் பேசும்போது, தியாகராஜன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதுமுதல் அமலா, அந்த வீடியோ லைப்ரரிக்கு வரும்போது நான் இருந்தால் ஒரு சின்ன புன்னகை செய்து ஹலோ சொல்லி விட்டுப் போவார். இதைத்தான் நான் பழக்கம் என்று சொல்கிறேன்.
ஆனந்த விகடன் சினிமா ஸ்பெஷலுக்கு நான் நடிகை அமலாவை பேட்டி காணவா என்று ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர் வியெஸ்வி சாரிடம் நான் கேட்டபோது... அவர், நடிகை அமலா அரசியல் தலைவர் அல்ல.. அவர் ஒரு சினிமா பிரபலம். அவரை உங்களுக்கு எப்படித் தெரியும், சான்ஸே இல்லை என்று சொல்லிவிட்டார். அப்போதும் நான் விடாமல்... உங்களுக்கு அமலா பேட்டி வேண்டுமா, வேண்டாமா? அதை மட்டும் சொல்லுங்கள் என்றேன். அப்போதும் அவர் நம்பிக்கை இல்லாமல், உங்களுக்கு அவரை எப்படித் தெரியும்? பிரபல நடிகைகள், எப்போதும் சினிமா பிஆர்ஓ மூலம் தான் தொடர்பு கொண்டு தான் பேட்டி வாங்க முடியும். அப்படி இருக்கும்போது, உங்களால் எப்படி வாங்க முடியும் என்றார். அப்போதும் நான் பிடிவாதமாக... நான் பேட்டி வாங்கித் தருகிறேன் என்றேன். என்னை ஒரு மாதிரி பார்த்து, முதலில் பேட்டி வாங்குங்கள். அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.
சமீபத்தில் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி, அந்தக் காலத்தில் அமலாவின் செயலாளராகவும் இருந்தார். சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு பன்முக திறமைசாலி. அவருக்குத் தெரியாத தொழிலோ, விஷயமே இல்லை என்று சொல்லலாம். ஓட்டல் நடத்தினார். தொலைக்காட்சிகளில் டாக் ஷோ, சீரியல், சினிமா என்று அவர் தொடாத துறையே இல்லை.
கராத்தே தியாகராஜனிடம், அமலா பேட்டி வேண்டும் என்று சொன்னதும்... அவர் சுரேஷ் சக்கரவர்த்தியை அழைத்து, அமலா பேட்டி விகடனுக்கு ஜாசன் கேட்கிறார் ஏற்பாடு பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டார். கராத்தேவிடம், சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஒரு பயம் கலந்த மரியாதை என்பதால், எதுவும் சொல்லாமல் அவர் போய்விட்டார். ஆனால் நடிகை அமலாவிடம் பேசிவிட்டு, ஒப்புதல் வாங்கி விட்டார். அதை அவர் என்னிடம் சொன்னார்.
நான் உடனே வியெஸ்வி சாரிடம் சொன்னேன். சரி, போய் பாருங்கள் என்றார்.
நான் பேட்டி கண்டும் முடித்ததும்... நடிகை அமலா, ஜாசன் நீங்க என்ன எழுதுகிறீர்கள் என்பது எனக்கு தெரிய வேண்டும். நாளை காலை... நான் வாகினி ஸ்டூடியோவில் சூட்டிங்கில் இருப்பேன், அங்கு வந்து எனக்கு படித்துக் காண்பியுங்கள் என்றார். சொன்னபடி பேட்டியை டைப் செய்து, வாகினி ஸ்டுடியோ சென்று அவரைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் வெளியே வந்தார். அவரது கவர்ச்சி உடை என்னை சங்கடப்படுத்தியது, இருந்தாலும் நான் ஒவ்வொரு கேள்வி - பதிலாக படிக்க.... அவர் ரைட்.. ரைட் என்று சொல்லிக்கொண்டே வந்தார். எல்லாவற்றையும் நான் படித்து முடித்ததும், குட்... நீங்க உங்கள் சொந்த சரக்கு எதையும் சேர்க்கவில்லை, நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே எழுதி இருக்கிறீர்கள் என்று என் முதுகில் தட்டினார் அமலா. அப்போது அவர் முன்னணி நடிகை. அவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுடன் காதல் என்று ஒரு கிசுகிசு எல்லாம் வந்து கொண்டிருந்த சமயம். நான் அவரைப் பேட்டி கண்டபோது... உஷாராக அமலா - நாகர்ஜூனா காதல் கிசுகிசு பற்றி கேட்கவில்லை. காரணம்... கோபப்பட்டு பேட்டி வேண்டாம் என்று சொல்லி விடுவாரோ என்ற பயம் தான். ஆனால், மறைமுகமாக கிசுகிசு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்... அது பத்திரிகைகள், தேவையில்லாமல் தனிப்பட்டவரின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறார்கள் என்று பதில் சொல்லியிருந்தார்.
பேட்டி வெளிவந்தது... சினிமா செய்திகளை தொடர்ந்து அதிகமாக எழுதி வரும் நிருபர் சண்முகம், என்னிடம் அமலா பேட்டி பார்த்தேன். நீங்கள் சீனியர் நிருபர்... ஆனால், நடிகை அமலாவிடம் நாகர்ஜுனா - அமலா காதல் பற்றிய கேள்வி கேட்காமல் கோட்டை விட்டு விட்டீர்கள். அந்தக் கேள்விதான் உங்கள் பேட்டியின் ஐ லைட் ஆக இருந்திருக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு சுரீரென்று இருந்தது. நாம் சரியாக செய்யவில்லை போலிருக்கிறது என்று யோசித்தேன்.
அடுத்த சில தினங்கள் கழித்து, தியாகராஜன் கேசட் கடையில் நடிகை அமலாவை பார்த்தேன். வழக்கப்படி ஒரு வீடியோ கேசட் எடுக்க வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் பேட்டி படித்தேன், நன்றாக இருந்தது என்றார். நான் அப்போது... சினிமா நிருபர், உங்களிடம் நான் நாகார்ஜுனா காதல் விஷயம் பற்றிக் கேட்காமல் கோட்டை விட்டுவிட்டேன் என்று என்னை திட்டி விட்டார் என்று சொன்னேன். அதற்கு நடிகை அமலா அமைதியாக, அவர் சொன்னது சரிதான். நீங்கள் ஏன், அந்தக் கேள்வியை என்னிடம் கேட்கவில்லை. நானே, நீங்கள் அதைக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். கேட்டிருந்தால்... நான் பதில் சொல்லி இருப்பேன் என்றார். நான் வாழ்க்கையே வெறுத்துப் போனேன். அப்போதுதான், தயக்கம் என்பது நம் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை என்று முடிவு செய்தேன்.
முற்றும்...

Leave a comment
Upload