
சாப்பாட்டுப் புராணம்
இதன் ஆசிரியர் சமஸ். எங்க ஊரான திருச்சிக்காரர் என்பதால், இது தொடர் கட்டுரையாக தினமணி கொண்டாட்டம் இணைப்பில் “ஈட்டிங் கார்னர்” பகுதியில் வந்தபோது விரும்பி படிப்பேன். பின்னர் 2008-ல் புத்தகமாக வெளிவந்தபோது முதல் ஆளாய் வாங்கினேன், நம்ம மாதிரியே ஒருத்தர் என்ற நினைப்பில். அதுவே பின்னர் நமது “விகடகவி:யில் “ருசி ரசி” எழுத வழி வகுத்தது. அந்த வகையில் சமஸ் நம்ம முன்னத்தி ஏர்.
ஒரு கோப்பைத் தேனீர் என்று கவிதையாய் ஆரம்பிக்கிறார். டீக்கு மன்னார்குடி பேமஸ் என்று இதை படித்தபின் தான் தெரியவந்தது. அப்படியே என்னுடைய பேவரிட் தஞ்சாவூர் காபி பேலஸ் பற்றி சொல்லிக்கொண்டே போகிறார். நம்ம மூக்கில் காபி வாசனை, நாக்கில் ஜலம் ஊறுகிறது.
அடுத்தது அன்பே, அசோகா, தியாகப்ரம்மம் திருவையாரினை தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமென நினைக்கிறேன். (ஹீ... ஹீ.. அசோகா கண்டுபிடிக்கப்பட்டது சென்ற நூற்றாண்டு தான்... சும்மா எழுதினேன் திட்ட வேண்டாம்.) வாயிலே கரையும் இந்த ஐட்டம், ஆண்டவர் கடையின் வரம். ஒரு கொசுறு தகவல், ஆண்டவர் கடையின் ருசிக்கு கிட்டத்தில் வரும் சுவை சென்னை அக்ஷயம் ஹோட்டல் அசோகாவுக்கும் உண்டு என்பதை என் நண்பர் கிருஷ்ணகுமார் வாங்கி வந்து (பெயரைச் சொல்லாமல்) கொடுக்கும்போதே ஆண்டவர் அசோகா என்று சொல்லி கொடுத்தார். நீங்களும் ரசித்து ருசிக்க வாழ்த்துக்கள்.
அல்வான்னாலே திருநெல்வேலி என்று தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வைத்தாலும், சமஸ் சொல்வது புதிதாய் மன்னார்குடி அல்வா... அல்வா கொடுப்பதில் அவர்கள் வல்லவர்கள் என்று அறிந்த நமக்கு, அங்கு கோதுமை அல்வா ருசியான ஒன்று என்று சமஸ் சொல்லித்தான் தெரிய வருகிறது. நீங்களும் முயற்சித்து பாருங்கள், ராஜகோபாலசாமி அருள் செய்யட்டும்.
அல்வா தான் பேமஸ் என்று நினைக்கும்போதே பக்கோடாவும், முறுக்கும்.. குஞ்சான் கடை ஸ்பெஷல் என்று அடுத்த சிக்ஸர் அடிக்கிறார். பக்கோடாவுக்கு சின்ன வெங்காயம் தான் சேர்க்கிறோம் என்று அந்தக்கடை ஓனர் சொல்லும்போது.... எனக்கு ஒரு நிமிஷம் மதுரை முருகன் இட்லியில் தரும் ‘சின்ன வெங்காய ஊத்தப்பம்’ கண்ணில் வந்து போனது.... நல்லெண்ணையில் சின்ன வெங்காயம் வேகும் போதே ஒரு தனி மனம் அந்த ஏரியாவையே நிரப்பும், பசியைக் கிளப்பும். நான் சாம்பார், ரசம், மோர் என்று மூன்று சாதங்களுக்கும் பக்கோடாவையே தொட்டுக்கொண்டு சாப்பிடும் ஆள். நிச்சயம் மன்னார்குடி பக்கம் போக வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டேன்(கொரோனா தெய்வம் மனது வைக்க வேண்டும்). பல்லவனில் சென்னைக்கு கிளம்பும்போது, ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ‘வீஎல்ஆர்ல்’ இட்லி பார்சல் வாங்காமல் கிளம்பியதில்லை. பிறகுதான் பார்த்தேன், பல்லவன் எஞ்சின் டிரைவரும், கார்டும் ஸ்ரீரங்கத்தில் தான் பார்சல் வாங்குகிறார்கள். சமஸ் அதை ரசித்து கூறுகிறார். அந்த இட்லி பொட்டலத்தில், மூன்று இட்லி, ஒரு மெதுவடை, அடியில் கெட்டி சட்னி, சாம்பார் பேக்கட் என்று உங்கள் காலை டிபன் சூடாய் இருக்கும். வாங்கி சாப்பிட துவங்கினால், கொள்ளிடம் பாலம் முடிந்து, சமயபுரம் தாண்டுவதற்குள் முடித்து ஏப்பம் விட்டுவிடலாம்.
அப்படியே அவர் லாட்ஜ் கலாச்சாரம் பற்றி பேசிவிட்டு.... பசிக்கிறதா? வாங்க மாயவரம் லாட்ஜ்... அருமையான பொங்கல், ஆடை அவியல், ஒரு பிடி பிடிக்கலாம். 87 வருட பாரம்பரியம்... மதிய சாப்பாடு மதுரா லாட்ஜ்..... இப்படி.... அது ஒரு தனிப் புராணம்.
ரவா பொங்கல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 90-ஸ் கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்கும். ரவா பொங்கல்.... சென்னையில் எனக்குத் தெரிந்து எங்கும் கிடைப்பதில்லை. தஞ்சாவூர் வெங்கடா லாட்ஜ், திருச்சி ஆதி குடி க்ளப் இரண்டு இடங்களிலும், இன்றும் மணக்க மணக்க தொட்டுக்கொள்ள ரெண்டு வித சட்னியுடன் கிடைக்கிறது. நேராக வண்டியை கும்பகோணம் விடுவோம். பூரி - பாஸந்தி கேள்விப்பட்டதுண்டா? சுவைத்ததுண்டா? முராரி ஸ்வீட்சில் இன்றும் கிடைக்கிறது. அதே போல மங்களாம்பிகை “கடப்பா” (எழுதும்போதே வாயில் ஜலப்ரளயம்), சூடாக இட்லியும், அதன் மேல் சுடச்சுட கடப்பாவை ஊற்றி ஒரு விள்ளல் வாயில் போடும்போதே... துள்ளாத மனமும் துள்ளும்.... மதியம் மூணுமணிக்கு சுடச்சுட இலையில் வந்து விழும் வெங்கடா லாட்ஜ் கோதுமை அல்வாவும், (இந்த முறை என்னுடைய சுகர் கண்ட்ரோலை ஓரம் கட்டிவிட்டு ஒரு ஸ்பூன் வாயில் போட்டுக்கொண்டேன், ம்ம் என்பதற்குள் அது வயிற்றுக்குள் வழுக்கியது....). ஆஹா... தேவாமிர்தம் அது தான் போல. இப்படி நிறைய உண்டு... காளிமார்க் பானங்களின் பிறப்பிடம் அல்லவா, தனிச்சுவை பொவொண்டோவை, சுவைக்க மறக்க வேண்டாம்.
வண்டி அங்கேயிருந்து நேராக திருச்சிக்கு, திருவானைக்காவல் பார்த்த சாரதி விலாஸ், “சூப்பர்” என்று அவர்களால் சொல்லப்படும் நெய் ரோஸ்ட். எல்லா பத்திரிக்கைகளும் எழுதி ஓய்ந்து விட்டார்கள். எம்ஜிஆரின் பேவரிட். ஆனந்தவிகடனின் அட்டைப்படத்தை அலங்கரித்தது. போய் உட்கார்ந்து நீங்கள் ஆர்ட்ரை சொன்னதும், உள்ளே குரல் கொடுப்பார் சர்வர்... “சூப்பர் ரெண்டு”. உடனே கல்லில் தண்ணீர் தெளிக்கும் ஓசை கேட்கும், இன்றும் விறகடுப்புதான். தோசை வரும் வரை சாம்பாரில் நீச்சலடிக்கும் மெதுவடை, தொட்டாலே சிலுக்கு போல வழுக்கும் மேனி, பிட்டு வாயில் போட்டாலோ... ஒரே சறுக்கு தான்... தோசை வரும்... இலையில் வைத்துவிட்டு... சாம்பாரை ஊற்றுவார்கள் தோசைமேல், கொஞ்சம் பட்டும் படாமல் கொஞ்சம் முறுகல்... கொஞ்சம் குழையல்.. ஒன்றாகச் சேர்ந்தால்... சூப்பர்... என்று கூட பாடலாம். திருப்தியாய் சாப்பிட்டு முடித்தால் ப்போவ்.... என்று நெய் ஏப்பம் விடுவீர்கள். உடனே ஒரு மோர் ஆர்டர் செய்து குடியுங்கள்... பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாம் அரைத்து சரிவிகிதத்தில் கலந்து மோரோடு தரும்போது, சாப்பிட்ட தோசையோ ஜீரணமாக ஆரம்பித்துவிடும்.....
வக்கணையா தொட்டுக்க இல்லேன்னா இட்லி உள்ளேயே இறங்கமாட்டேங்குது என்று சொல்லும் நம்மாளா நீங்கள்? சமஸ் புண்ணியவான், அதற்கும் ஒரு இடம் சொல்கிறார். தஞ்சாவூர் ரயிலடி வீ.சுப்பையா டிபன்ஸ்.. இட்லி, தோசைக்கு ஏழு தொட்டுக்கைகள் கொடுக்கும் கடை. அப்புறமென்ன புகுந்து விளையாடவேண்டியது தான்.
பின்னர் மதுரை இட்லி, திருநெல்வேலி அல்வா, விருத்தாசலம் தவலை வடை, சிதம்பரம் கொத்சு என்று மற்ற ஊர்க்காரர்கள் கோபிப்பார்களே என்று அங்கேயும் கொஞ்சம் தலை காட்டிவிட்டு வருகிறார்.
கடைசியில், வடலூர் வள்ளலாரின் சத்திய தருமச் சாலை... 1867-ல் வள்ளலார் கையால் மூட்டப்பட்ட அடுப்பு, இன்னமும் அணையாமல் இருந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ வயிறுகளில் எரியும் பசித்தீயை அணைத்துக் கொண்டிருக்கிறது. இதை சொல்லியே புத்தகத்தை முடிக்கிறார். கனத்த இதயத்துடன், இன்றைய உணவைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல நினைக்கிறோம். அது தான் இப்புத்தகத்தின் வெற்றி!
சாப்பாட்டுப் புராணம் - அறுசுவை விருந்து.

Leave a comment
Upload