தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 54 - மதன்

ஔரங்கசீப்

20210727144214605.jpeg
ஆலம்கீர் - ஒரு அலசல்..!

‘இன்றளவும் ஔரங்கசீப் என்னும் தனி மனிதரை ஒரு வட்டத்துக்கு அடக்கி, முத்தாய்ப்பாக விவரிக்க முடியவில்லை’ என்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இருந்தபோதும் சரி, இறந்த பிறகும் சரி - ஒரு புரிபடாத, விடுவிக்க முடியாத பெரும் புதிராகவே விளங்கினார் ஔரங்கசீப்!

பாதுஷாவின் குறைகளை மட்டும் வரிசைப்படுத்தி, ‘மிக மோசமானதொரு அரசர்’ என்று முத்திரை குத்தும் சரித்திர ஆசிரியர்கள் உண்டு. ‘இவரை மிஞ்சிய சிறந்த ஆட்சியாளர் எவருமில்லை’ என்று புகழ்பாடுபவர்களும் உண்டு. இரு தரப்பினருக்குமே எடுத்துக் கையாள, ஏராளமான வாதங்கள் வரலாற்றின் கைவசம் உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது!

‘ஔரங்கசீப் ஒரு சரியான கொலைகார ஆசாமி’ என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. ‘மற்ற பல மன்னர்களைவிட அப்படி ஒன்றும் ரத்தம் சிந்துவதில் ஔரங்கசீப் ஆர்வம் காட்டியதாகச் சொல்ல முடியாது. தைமூரைப் போலவோ, அலாவுதீன் கில்ஜியைப் போலவோ, முகமது பின் துக்ளக்கைப் போலவோ கணநேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, யார் தலையையும் சீவியதில்லை பாதுஷா. ஒவ்வொரு சுல்தான் ஆட்சியிலும் அரியணைக்காக வாரிசுகள் வாளெடுத்து மோதிக் கொண்டதுண்டு. ஷாஜஹான் தனக்குப் போட்டியாக இருந்த ‘உடன்பிறப்புகளை’யெல்லாம் தீர்த்துக்கட்டச் செய்த பிறகே, ரத்தப் படிக்கட்டுகளில் ஏறி மகுடம் சூட்டிக்கொண்டார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். ஆகவே, இந்த விஷயத்தில் ஔரங்கசீப்பை மட்டும் தனிமைப்படுத்தி ‘கொலைகாரர்’ என்று குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் நியாயம்?’ என்கின்றனர் சில சரித்திர ஆசிரியர்கள்.

பாதுஷாவின் அண்ணன் தாரா ஷுகோ ஓர் அறிஞராகவும், மென்மை மிகுந்தவர் என்ற இமேஜ் கொண்டவருமாக இருந்ததால், அவர் மரணம் உணர்ச்சிகரமாக அமைந்து, அதிகளவு கவனத்தைக் கவர்ந்தது. தந்தையார் ஷாஜஹானை ஔரங்கசீப் நடத்திய விதம் மோசமானதே. பெரும்புகழுடன் கோலாகலமாக ஆட்சி புரிந்த சக்ரவர்த்தியை நிராதரவாக வீட்டுச் சிறையில் தள்ளி, கேவலமாக மகன் நடத்தியது குறித்து யாராலும் பொருமாமல் இருக்க முடியாது.

தங்கள் முன்னேற்றத்துக்கு இடையூறாக அமைந்த தந்தையையும், வளர்த்து ஆளாக்கிய பெரியவர்களையும் வெட்டிச் சாய்த்துவிட்டு அரியணைக்குச் சென்றவர்கள், இந்திய மற்றும் உலக வரலாற்றுப் பக்கங்களில் நிறையவே பவனி வருகிறார்கள். ஏதோ, ஔரங்கசீப் தந்தையை உயிருடனாவது விட்டார்!

‘புதிரால் சுற்றப்பட்ட முரண்பாடுகளின் மொத்த உருவம்’ என்று ஔரங்கசீப் வர்ணிக்கப்பட்டாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எளிமை, கட்டுப்பாடு, கண்டிப்பு மிகுந்ததாக அமைந்தது. உணர்ச்சிகளுக்கு அவர் கடைசிவரை அடிமையானதில்லை (ஹீராபாய் விஷயத்தில் சற்றே பாதுஷா தடுமாறியதை மறப்போம்!). குடிப்பழக்கம் அவருக்கு இருந்ததில்லை. உணவு மற்றும் உடை விஷயத்தில் ஆடம்பரத்தை அவர் அனுமதித்ததில்லை. பேரக்குழந்தைகளுடன் எப்போதாவது நேரம் கழித்தபோதும், அவர்களை மடியில் அமர்த்தி, இறைவனின் பெருமைகளைத் தெளிவாகவும், சுவையாகவும் சொல்வதுதான் தாத்தா ஔரங்கசீப்பின் வழக்கம். அர்த்தமில்லாத விளையாட்டுகள், வெட்டிப் பேச்சுகள்… மூச்..!

ராஜாங்க விஷயங்களிலும் ஆஸ்தான சபையிலும் மரபுகளும், சம்பிரதாயங்களும் சட்டதிட்டங்களும் துளிகூட மீறப்படக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பு காட்டினார் ஆலம்கீர். பாதுஷாவின் சமகாலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று குறிப்பாளர் விவரிக்கிறார்… ‘பாதுஷா ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது, சபையில் ஒரு கௌரவமான அமைதி நிலவும். யாரும் தப்பும் தவறுமாக எதையும் பேசி நான் பார்த்ததில்லை. சபையில் இல்லாத ஒருவரைப் பற்றிக் கேலியாகப் பேசுவது பெரும் குற்றமாக பாதுஷாவால் கருதப்பட்டது. யாராக இருந்தாலும் சரி, மிகவும் மரியாதையான, அடக்கமான வார்த்தைகளையே பேச்சில் உபயோகிக்க வேண்டும். சொல்வதைத் தெளிவாக, தீர்க்கமாகச் சொல்ல வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து, மக்கள் குறைகளைக் கேட்பார் ஔரங்கசீப். அப்போது யார் வேண்டுமானாலும் தங்கள் பிரச்னைகளை மன்னரிடம் நேரடியாகக் கூறலாம். சாமானியராக இருந்தாலும், அவர் சொல்வதை சக்ரவர்த்தி மிகுந்த கவனத்துடன் கேட்டு, உடனே தீர்ப்பு வழங்குவார். அவமரியாதையாகப் பேசுபவர்கள், அகம்பாவமாக நடந்து கொள்கிறவர்கள் டெல்லி நகரைவிட்டே அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டார்கள்..!’

சபையில் தன்னிடம் தரப்பட்ட மனுக்களை உடனுக்குடனே படித்து, அதில் குறிப்புகள் எழுதுவது பாதுஷா கடைசிவரை கடைப்பிடித்த ஒரு வழக்கம்.

‘இந்த டெல்லி மன்னரின் பார்வை கூர்மையானதாக இருந்தது. மூக்குக்கண்ணாடி உதவி எதுவுமின்றி, அலுப்புத் தட்டாத முகபாவத்துடன் விறுவிறுவென்று மனுக்களைத் தானே படித்து, அதில் உடனுக்குடன் குறிப்புகளை சக்ரவர்த்தி எழுதுவதைப் பார்த்தபோது வியப்புதான் மேலிட்டது!’ என்று 1695-ம் ஆண்டு இத்தாலியிலிருந்து டெல்லிக்கு வந்து, சில காலம் அரண்மனையில் தங்கியிருந்த கேரேரி என்னும் மருத்துவர் குறிப்பிடுகிறார். (‘மூக்குக்கண்ணாடி..?!’ என்று புருவத்தை உயர்த்துபவர்களுக்கு: கி.பி.700-ம் ஆண்டுவாக்கிலேயே சீனாவிலும் இந்தியாவிலும் மூக்குக்கண்ணாடிகள் புழக்கத்தில் வந்துவிட்டன. இம்போர்ட்டட் என்பதால் விலைதான் சற்று அதிகம்!)

வெகுதொலைவில் முகாமிட்டிருக்கும் தளபதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கவர்னர்களுக்கும்கூட பாதுஷாவிடம் இருந்து ‘ரெகுலராக’க் கடிதங்கள் போகும். அவற்றில் பல நூற்றுக்கணக்கான (பாதுஷா எழுதிய மற்றும் ‘டிக்டேட்’ செய்த) கடிதங்களே இன்றளவும் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ளன! ஔரங்கசீப்பின் குணநலன்கள் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள இவை உதவுகின்றன…

தந்தையோடு தகராறு செய்து கொண்டிருந்த சமயம்… ஔரங்கசீப், அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் சில வரிகள் -

‘ஓநாயாகப் பிறந்துவிட்டு, ஆடு மேய்க்கும் வேலை பார்க்க விரும்பக்கூடாது! ஒரு மன்னருடைய கடமை, குடிமக்களைக் கட்டிக் காப்பது. உல்லாசமாக வாழ்வதிலும், கேளிக்கைகளில் ஆர்வம் காட்டுவதிலும் அல்ல…’

‘உடல்நலம் கருதி ஆலம்கீர் சற்று ஓய்வெடுக்க வேண்டும்…’ என்று ஒரு தளபதி, பாதுஷாவுக்குக் கடிதம் எழுதினார் - அதற்கு

‘இறைவன் கருணையால் நான் நாடாள அனுப்பப்பட்டிருக்கிறேன். கடைசிவரை உழைக்க வேண்டியது என் கடமை. எனக்காக அல்ல… குடிமக்கள் நலனுக்காக. மக்கள் மகிழ்ச்சியோடு பின்னிப் பிணைந்தாலே ஒழிய, எனக்கு என்று தனிப்பட்ட மகிழ்ச்சி எதுவும் கிடையாது…’ என்று ஔரங்கசீப்பிடமிருந்து பதில் போனது!

தன் சாம்ராஜ்ய வெற்றிகளைப் பற்றி ஷாஜஹான் பெருமையுடன் ஔரங்கசீப்புக்குச் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் எழுதினார். ஔரங்கசீப்பின் பதில் கடிதம் இப்படியாக முடிந்திருந்தது.

‘… பெரும் வெற்றி கண்ட மன்னர்கள் எல்லாம் சிறந்த மன்னர்கள் என்று அர்த்தமல்ல. நாகரிகம் இல்லாத காட்டுமிராண்டி மன்னர்கள்கூடப் பல நாடுகளை வெற்றி கண்டிருக்கின்றனர். அவர்கள் சிறப்புமிக்க மன்னர்கள் என்று பொருளா என்ன? அதேபோல மிகப்பெரிய வெற்றிகள் எல்லாம் சில ஆண்டுகளில் உதிர்ந்து துகள்களாகப் போன நிகழ்ச்சிகளும் உண்டு. ஆகவே, ஒரு மன்னன் நாட்டை எப்படி ஆள்கிறான் என்பதுதான் முக்கியம்…’

ஒரு சமயம் வரி கட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட, அதுகுறித்து பாதுஷாவின் யோசனை கேட்டு, கவர்னர் கடிதம் எழுதினார். பாதுஷாவின் பதில் - ‘நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மழையே இல்லாமல் போனாலோ அல்லது இயற்கையின் எதிர்பாராத ஏதேனும் சதியால் விவசாயம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டாலோ, அதற்காக விவசாய மக்களைப் பிரச்னைக்கு உள்ளாக்க வேண்டாம். வரியைத் தள்ளுபடி செய்துவிடவும்…’ கூடவே, ‘வரி கட்ட முடியாமலிருப்பது உண்மைதானா என்பதை நன்கு விசாரிக்க வேண்டும்’ என்றும் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகிறார். பாதுஷா!

சோம்பிச் சாய்ந்த நிலையில் ஔரங்கசீப்பை யாரும் கண்டதில்லை! உடல்நலக்குறைவாக இருந்தபோதும் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிடுவது, மனுக்கள் வாங்குவது… எதையும் தள்ளிப் போட்டதில்லை சக்ரவர்த்தி.

தன் இரண்டாவது மகனுக்கு ஔரங்கசீப் சொல்லிய அறிவுரை (கடிதம் மூலமாகத்தான்!) -

‘ஓய்வெடுப்பது, உல்லாசமாக விடுமுறை எடுப்பது… இதிலெல்லாம் ஆளப்பிறந்தவர்கள் நாட்டம் செலுத்தக்கூடாது. மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்பது ஒன்றே ஆட்சியாளர்களின் கடமை. அரசரும் சரி, தண்ணீரும் சரி - ஒரே இடத்தில் தேங்கக்கூடாது. தண்ணீர் கெட்டுப் போய்விடும். அரசரும் மதிப்பிழந்து போய்விடுவார்..!’

அதற்கேற்ப, ஔரங்கசீப் தெற்கே படைக்குத் தலைமை தாங்கிச் சென்றபோது, அவருக்கு வயது 65-ஐக் கடந்துவிட்டது. வழியில், நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மலைகள் குறுக்கிட்டன. நோய்களால் வீரர்கள் பாதிப்பு, குடிநீர்ப் பற்றாக்குறை, கொதிக்கும் வெயில், பஞ்சம்… எதற்கும் முகம் சுளிக்காமல், ஓர் இளம் வீரனுக்குரிய சுறுசுறுப்புடன் இயங்கினார் ஔரங்கசீப். இத்தனைக்கும் நடுவில் போர்த்திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள், அடுத்த தாக்குதல் எப்படித் திகழ வேண்டும் என்று படம் வரைந்து காட்டுதல், தளபதிகளை மாற்றுதல், புதிய தளபதிகளை நியமித்தல், ஒற்றர்களுக்கு ஆணைகள் பிறப்பித்தல்… அத்தனையையும் தளராமல், துவளாமல் கவனித்தார் பாதுஷா.

இப்படியாக, நிர்வாகம் சம்பந்தமாக எல்லாவற்றையும் பாதுஷா தானே இழுத்துப் போட்டுக்கொண்டு ஆணைகள் பிறப்பித்ததன் விளைவு - தலைமைப் பொறுப்பில் இருந்த மற்றவர்களுக்குச் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறமையே போய்விட்டது எனலாம்! பாதுஷாவின் ஆணை வரும்வரை, எந்தவொரு அவசர விஷயத்திலும்கூட முடிவெடுக்காமல் குழப்பத்தில் தவித்தனர் அதிகாரிகள்.

‘ஒரு தனி மனிதர் என்கிற முறையில் பக்தி, எளிமை, நீதி, வீரம், அறிவு, ஒழுக்கம் - எல்லாவற்றிலும் மிகச் சிறந்து விளங்கினார் ஔரங்கசீப் பாதுஷா. ஆனால், ஒரு நாடாளும் சக்ரவர்த்தி என்று பார்க்கும்போது பாதுஷா தோல்வி அடைந்ததாகத்தான் சொல்ல வேண்டும்…’ என்று கைஃபிகான் என்னும் ஔரங்கசீப் காலத்திய வரலாற்றுக் குறிப்பெழுத்தாளர் கருத்து தெரிவிக்கிறார்.

‘அதற்கு மிக முக்கிய காரணம் - இந்தியாவில் பெரும்பான்மையாக வாழ்ந்த இந்துக்களைப் பாதுஷா பாரபட்சமாக நடத்தினார். ஜிஸியா வரியை அவர்கள்மீது விதித்தார். சீக்கியர்களையும் மராட்டியர்களையும் பகைத்துக் கொண்டார். குறிப்பாக, தன்கீழ் பணிபுரிந்த எல்லோர் மீதும் இருந்த சந்தேகம் காரணமாகச் சின்னச் சின்ன விஷயங்களில்கூடத் தானே முடிவெடுத்ததும் அவர் தோல்விக்கு வழிவகுத்தது…’ என்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்கின்றனர்.

தவிர, சட்டத்தை ‘ஓவர் டோஸாக’ மக்கள்மீது பிரயோகித்த தவறையும் செய்தார் ஆலம்கீர். ‘ஒரு சிறு விதியை மீற அனுமதித்தால், அதுபோதும் - எல்லா விதிகளும் மீறப்படும்’ என்று ஒளரங்கசீப் ஒரு சமயம் சொன்னது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் அவரது பெருமைக்கு, அந்த அணுகுமுறை பாதகம் ஏற்படுத்தியது. ஏனெனில், இந்தக் கண்டிப்பின் காலடியில் நசுங்கி மடிந்தது, எந்தவொரு சக்ரவர்த்திக்கும் இருக்க வேண்டிய கருணை என்னும் குணநலன்! மதக்கோட்பாடுகளுக்கு அத்தனை முக்கியத்துவம் தந்த இந்த மன்னர், ‘எல்லையில்லாத கருணை கொண்டவன் இறைவன்’ என்ற ஒரு முக்கிய விஷயத்தை மறந்துவிட்டது துரதிர்ஷ்டவசமான விஷயம்!

ஒளரங்கசீப்பின் சாம்ராஜ்ய எல்லை 1690-க்குள் அக்பர் காலத்தையும் மிஞ்சி, மேற்கே காபூலிலிருந்து கிழக்கே சிட்டகாங் வரையிலும், வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே காவிரி நதி வரையிலும் பரந்து விரிந்திருந்தது. எவ்வளவுதான் சாமர்த்தியம் கொண்டிருந்தாலும், யாரையும் நம்பாத ஒரு தனிமனிதரால் எப்படி இத்தகைய பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டுக்கோப்பாக நிர்வகிக்க முடியும்..?!

ஆப்கானியர், மராட்டியர்கள், சீக்கியர்கள், ஜாட் இனத்தினர்… என்று நாலாப்புறமும் கிளம்பிய எதிர்ப்புச் சக்திகளைத் தற்காலிகமாகப் பாதுஷாவால் அடக்க முடிந்ததே தவிர, அடியோடு ஒழிக்கக் கடைசிவரையில் முடியவில்லை.

டெல்லிக்கு வெகுதொலைவில், தட்சிணப் பிரதேசத்தில் சக்ரவர்த்தி முகாம் அமைத்துத் தங்கியிருந்ததில், வடக்கே நிர்வாகம் சீரழிய ஆரம்பித்தது. ஒழுக்கத்தை மதித்த பாதுஷாவின் ஆட்சியில், டெல்லியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடியது. கலை விஷயங்களில் நாட்டின் முன்னேற்றம் அடியோடு நின்று போய்விட்டிருந்தது. குறிப்பாக, மனித வாழ்க்கைக்கு அழகும் அர்த்தமும் ஏற்படுத்தும் இசையின்மீது மன்னருக்கு ஏக வெறுப்பு என்பதால், இசை நிகழ்ச்சிகளுக்கு அடியோடு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இசைக் கலைஞர்கள் (பாட) வாயைத் திறந்தால், அவர்களைக் காவலதிகாரிகள் சிறையில் தள்ளினார்கள். இறைவணக்கத்துக்குரிய இறைப் பாடல்களைத் தவிர, மனிதன் பொழுதுபோக்குக்காகப் பாடுவதை அநாகரிகம் என்று தீர்மானமாகக் கருதினார் ஔரங்கசீப்!

இசைமீது ஔரங்கசீப்புக்கு இருந்த வெறுப்பு பற்றி சுவையான ஒரு கதைகூட உண்டு! -

ஒருமுறை டெல்லியில் இருந்தபோது ஔரங்கசீப் யானை மீது அமர்ந்து ஆக்ராவுக்குக் கிளம்பினார். அப்போது செங்கோட்டைக்கு வெளியே, ஜும்மா மசூதி அருகில் கூட்டமாகப் பலர் ‘ஓ’வென்று வாய்விட்டு அழுதவண்ணம் நிற்பதைக் கண்டு ஆர்வமிகுதியால் யானையைவிட்டுக் கீழே இறங்கி, அங்கே சென்றார் பாதுஷா. கொடும்பாவி ஒன்று பிணம் போல் மலர்கள் தூவப்பட்டுக் கீழே இருத்தப்பட்டிருந்தது. நகரத்தின் இசைக்கலைஞர்கள் பலர் அங்கே கூடியிருந்தனர்.

‘‘என்ன இது… ஏன் அழுகிறீர்கள்..?’’ என்று பாதுஷா வினவ, ‘‘சக்ரவர்த்தி! நாங்கள் எல்லோரும் இசைக்கலைஞர்கள். இதோ, கீழே கிடப்பது இசை. தங்கள் ஆட்சியில் அதன் உயிர் போய்விட்டதால், அதை நல்லடக்கம் செய்யக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்!’’ என்று ‘போடு’ போட்டார்கள்.

வந்த புன்னகையை அடக்கிக்கொண்ட ஒளரங்கசீப், முகத்தில் துளியும் சலனம் காட்டாமல், ‘‘ஓ… இசை இறந்துவிட்டதா..? அதில் எனக்குச் சற்று சந்தேகம் இருந்தது. இறந்தது உண்மை என்பது மகிழ்ச்சியான செய்தி. அதன் ஆத்மா சாந்தியடைய, நாம் எல்லோரும் இறைவனை வேண்டிக் கொள்வோம்!’’ என்று சொல்லிவிட்டுச் சென்ற சக்ரவர்த்தி திரும்பிப் பார்த்து, ‘‘மறுபடியும் உயிர் வந்து தொலைக்கப் போகிறது… ஆகவே, எதற்கும் சற்று ஆழமாகவே அடக்கம் செய்யுங்கள்!’’ என்றார். இசைக் கலைஞர்கள் வெறுத்துப்போய் உட்கார்ந்து விட்டார்கள்!

இவை தவிர… இலக்கியம், ஓவியம் எதுவும் வளரவில்லை, ஔரங்கசீப் ஆட்சியில்! கட்டடக் கலையில் ஓரளவு நாட்டம் செலுத்தினார் ஔரங்கசீப். அவர் மனைவி தில்ரஸ் பானு பேகம் கல்லறையைத் தெற்கே ஔரங்காபாத் நகரில் தாஜ்மஹால் பாணியில் கட்டினார் பாதுஷா. கட்டடக்கலை வல்லுநர்கள் அதை அழகான ஒன்றாகவே கருதுகிறார்கள். இருப்பினும், எல்லோரும் தாஜ்மஹாலுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்த்திப் பேசியே ஒருவழியாக்கி விட்டனர்.

செங்கோட்டைக்குள் பாதுஷா கட்டிய முத்து மசூதி கச்சிதமான, அழகான ஒரு படைப்பு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் ஜும்மா மசூதிக்கு ஷாஜஹான் ஊர்வலமாகச் சென்றபோது ‘டிராஃபிக் ஜாம்’ ஏற்படுவது வழக்கம். மக்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்று எண்ணிய ஔரங்கசீப், ஜும்மா மசூதியை மக்களுக்குத் தொழுகைக்காக விட்டுக் கொடுத்துவிட்டு, தனக்காகக் கோட்டைக்குள் கட்டிக்கொண்ட சிறு மசூதிதான் - முத்து மசூதி!

லாகூரில் சக்ரவர்த்தி கட்டிய பாதுஷாஹி மசூதி அழகிய, எளிமையான சதுர டிசைன்களுடன் நவீன அழகுடன் கட்டப்பட்டாலும், அதையும் சில வரலாற்று ஆசிரியர்கள் டெல்லி ஜும்மா மசூதியுடன் ஒப்பிட்டு ‘இரண்டாம் பட்சம்’ என்று உதட்டைச் சுழிக்கின்றனர்!

ஷாஜஹான் படைத்த தாஜ்மஹால், காதலையும் கனிவையும் சோகத்தையும் ஒரு கலைஞனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தையும் இனம் புரியாமல் பிரதிபலிக்கிறது. ‘மகா சீரியஸ்’ மன்னரான ஔரங்கசீப் படைப்புகளில் இதுபோன்ற உணர்ச்சிகள் எதுவும் பார்ப்பவர்களின் இதயத்தைத் தொட்டு சிலிர்ப்பை ஏற்படுத்தாததாலோ என்னவோ, பாதுஷாவின் படைப்புகளுக்கு வரலாற்றில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது!