
கடந்த மூன்று நான்கு மாதங்களாக எதிர்க்கட்சிகள், 2024 பாராளுமன்ற தேர்தலைப் பற்றி ஆலோசிப்பது, பேசுவது என்று ஆரம்பித்து இருக்கிறது.
இந்திய அரசியலில் இப்போதைய சித்தாந்தம் இதுதான்... மோடி எதிர்ப்பு, மோடி ஆதரவு என்பது தான். மற்றபடி விலைவாசி, வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பற்றி பெரிதாக எந்தக் கட்சிகளும் அலட்டிக் கொள்வதில்லை. இப்போது எதிர்க்கட்சிகளின் வேலை பாரதிய ஜனதாவை எதிர்க்க ஒன்று சேர்வது என்ற ஒரு வரி அஜெண்டா தான்.
ஜூலை மாதம்... காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மற்ற எதிர் கட்சிகளை அழைத்து, ஆலோசனை நடத்தினார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார். ஆனால், அது பயனளிக்கவில்லை. காரணம்... காங்கிரஸ் கட்சியை அழைக்காமல் போனதுதான் முக்கியக் காரணம். அதன் பிறகு மம்தா பானர்ஜி, டெல்லியில் முகாமிட்டு பாரதிய ஜனதாவை எதிர்த்து வியூகம் அமைக்க எதிர்க்கட்சித் தலைவருடன் பேசினார். அதன் பிறகு, சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து, பாரதிய ஜனதாவை எதிர்ப்பதற்கான காரண காரியங்களைப் பற்றி பேசத் தொடங்கினார். ராகுல் காந்தியும் இதே வேலையை செய்தார்.

ஆகஸ்ட் 20, ராஜீவ் காந்தி பிறந்த தினம், அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டினார் சோனியாகாந்தி. முதலில் இந்தக் கூட்டத்தை, சோனியா தனது வீட்டில் எல்லா அரசியல் தலைவர்களையும் நேரில் அழைத்து ஆலோசனை செய்ய இருந்தார். அதன் பிறகு, இப்போது வேண்டாம் என்று காணொளி மூலம் இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் தேசிய, மாநிலக் கட்சிகள் என்று 19 கட்சிகள் இந்த காணொளியில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை சொன்னது. இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து சோனியா பேசும்போது, 2024 பாராளுமன்ற தேர்தல் தான் நமது இலக்கு. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, பாரதிய ஜனதாவை வீழ்த்த தயாராக வேண்டும். நாம் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் சொன்னார் சோனியாகாந்தி.
இந்த கூட்டத்திற்கு... அகாலி தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி அழைக்கப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இந்த காணொளி கூட்டத்தில் மம்தா, சரத் பவார், ஸ்டாலின் ஆகியோர் பேசியது யோசிக்க வேண்டிய விஷயம்.

மம்தா பானர்ஜி பேசும்போது... இது வரவேற்க வேண்டிய கூட்டம்தான்... ஆனால், இத்துடன் இது முடிய கூடாது. இதுபோன்ற கூட்டங்களை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும், சந்தித்து பேசவேண்டும். நாம் எல்லா எதிர்க்கட்சிகளையும் அழைக்க வேண்டும். நம்முடன் கூட்டணி இல்லை என்று சில கட்சிகளை நாம் தவிர்க்கக்கூடாது. ஆம் ஆத்மி, அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சிகளை அழைக்காமல் விட்டது பற்றி சுட்டிக் காட்டினார் மம்தா பானர்ஜி. அதன் பிறகு, அவர் பேசியது தான் மிகவும் முக்கியமானது. இந்தக் கூட்டணியில் முகம் யார்... அதாவது பிரதமர் வேட்பாளர் யார் என்று எதிரணி கேள்வி எழுப்பும். அதை நாம் இப்போது தவிர்ப்போம். ஒரு குறிப்பிட்ட தலைவரையோ, ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவரையோ இந்தக் கூட்டணியின் முகமாக நாம் அடையாளப் படுத்தக் கூடாது. அதற்கான நேரமும் இதுவல்ல... நமது தனிப்பட்ட நலன்களை நாம் இப்போது தள்ளி வைப்போம். நாட்டு நலன் என்ற கொள்கை முகத்தை நாம் இப்போது உருவாக்குவோம். மக்கள் தான் நம் அணிக்கு தலைவர். நாம் ஒரு கூட்டுக் குழுவை உருவாக்கி, நம் வேலையை நாம் கவனிப்போம். இப்போதைய நமது இலக்கு, பாரதிய ஜனதாவை வீழ்த்துவது என்பதாக இருக்கட்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி வரும் நேரத்தில், மம்தா பானர்ஜி இந்த பேச்சு முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பட்டும் படாமல் தான் பேசினார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து, பாரதிய ஜனதாவுக்கு மாற்றான செயல்திட்டத்தை செயல்படுத்துவோம், அனைவருக்குமான இந்தியாவாக மாற்றுவோம் என்று பேசினார்.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நமது ஒற்றுமை, மக்கள் நம்பும்படி இருக்க வேண்டும் என்று சொன்னார்.
சரத் பவார் பேசும்போது, மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள எல்லோரும் இந்த அணியில் இணைய வேண்டும் என்றார்.
கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா, இதே அணி ஒற்றுமையாக 2022-ல் நடக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்த்து, நாம் ஒன்றாக இணைந்து அவரை தோற்கடிக்க வேண்டும் என்றார். அதாவது எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை, உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெரிந்துவிடும் என்று சூசகமாகச் சொன்னார் டி. ராஜா.
திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நமது ஒற்றுமைக்கு சாட்சி என்று குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் மேகதாது விஷயத்தை எழுப்ப டி.ஆர். பாலு விரும்பியபோது, ராகுல் காந்தி அதை தடுத்து விட்டார். அதற்குக் காரணம் கர்நாடக காங்கிரஸ் எம்பிக்கள், மேகதாது அணைக்கு ஆதரவாகப் பேசுவார்கள். அது வீணான குழப்பத்தை நம்மிடம் ஏற்படுத்தும் என்றார் வேறுவழியின்றி டி.ஆர். பாலு ஒப்புக்கொண்டார்.
எல்லா தலைவர்கள் பேசிய பிறகு, மீண்டும் சோனியா காந்தி பேசினார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல நாடாளுமன்றத்தில் நாம் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டோமோ, அதேபோல் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நாம் ஒற்றுமையாக இருப்பதை தவிர, நமக்கு வேறு வழியில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் சோனியாகாந்தி.
அதன் பிறகு 19 கட்சித் தலைவரும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளவில்லை. காரணம்... அவர் தொடர்பு கொள்ளமுடியாத ஒரு கிராமத்தில் இருந்ததால், அவரால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை சோனியா காந்திக்கு தொலைபேசியில் விளக்கம் சொல்லி, கூடவே... தனது ஆதரவை தெரிவித்தார்.

ராகுல் காந்தி தீவிர அரசியலில் இல்லை.. ஒதுங்குகிறார், பண்ணுகிறார் என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களே விமர்சனம் செய்தது எல்லாம் இப்போது பழங்கதை ஆகிவிட்டது. தற்சமயம் மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. ஆகஸ்ட் 3ஆம் தேதி, எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மதிய விருந்து தந்தார் ராகுல்காந்தி. அந்த விருந்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு முறையான அழைப்பு வரவில்லை என்பதால் அவர்களும் கலந்து கொள்ளவில்லை. அப்போதும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை, அதன் அவசியத்தை பற்றி பேசினார் ராகுல் காந்தி. இந்த முறை நமது ஒற்றுமை குரலை அடக்க பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ்-க்கு ரொம்பவும் கடினமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ராகுல் காந்தி. இது தவிர சைக்கிள் பேரணி, டிராக்டர் பேரணி என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார் ராகுல்காந்தி. குறிப்பாக செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கிறார். பெகாஸஸ் பற்றி ஏன் விவாதிக்க கூடாது என்று நிருபர்கள் சந்திப்பில் கேள்வி கேட்டார் ராகுல் காந்தி.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்களைத் தாங்களே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் பிஸியாக இருக்கிறது என்று சமீபத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ராகுல்காந்தி.
தவிர தடுப்பூசி பற்றாக்குறை, வினியோக திட்டம், விலை நிர்ணயம் என்று ராகுல்காந்தி எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லி வருகிறார்.
சோனியாவின் காணொளி கூட்டத்திற்கு பிறகு, அன்று இரவு.. மோடி, அமித்ஷா மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை செய்தார்கள். ஆனால் கருத்து எதுவும் சொல்லவில்லை. காரணம்... இப்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவான முடிவின்றி குழப்பத்தில் இருக்கிறார்கள். இதை நாம் கொஞ்ச காலம் வேடிக்கை பார்ப்போம் என்று முடிவு செய்திருக்கிறது மோடி, அமித் ஷா கூட்டணி.

கேரள முதல்வர் பினராயி விஜயனை, டாலர் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்ததும், அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். மேற்குவங்கத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் அடுத்து, பாரதிய ஜனதா தான் செல்வாக்குள்ள கட்சி. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அங்கு மிகப் பெரிய பின்னடைவு. 19 கட்சிகளில்... திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, கேரள காங்கிரஸ் தேசிய மாநாடு மக்கள் ஜனநாயக கட்சி, லோக்தந்திரிக் ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்று மாநில கட்சிகளும் இந்தியா முழுவதும் பெரிதாக செல்வாக்கில். ஆக கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான், காங்கிரஸ் தலைமையில் ஒரே அணியில் தற்போது இணைந்து இருக்கிறது.

உத்திரப்பிரதேச தேர்தல், இந்த கூட்டணியின் உண்மை முகத்தை நிச்சயம் வெளியே தெரிய வைத்து விடும். இப்போதைக்கு அவசர படேல் என்ற மோடி, அமித் ஷாவின் முடிவு சரிதான்.

Leave a comment
Upload