சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீடீர் மாற்றம் ஏன்?! - டெல்லிவாலா
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசராக பணியாற்றி வந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியாற்ற மாறுதல் உத்திரவினை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்து உத்திரவிட்டது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்ஜிப் பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்ற உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இந்த ஆண்டு ஜனவரி 4 ந் தேதி பதவியேற்று கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய தலைமை நீதியரசர் சஞ்ஜிப் பானார்ஜி, கடந்த 10 மாதங்களாக திறம்பட வழக்குகளை கையாண்ட விதம் இங்கிருக்கும் மூத்த வக்கீல்களிடையே அவருக்கு நற்பெயரை சம்பாதித்து கொடுத்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா கட்டுபாட்டு காலத்தில், வழக்கறிஞர்கள் நேரடி விசாரணை நடத்த சென்ற மார்ச் மாதம் முதல் நீதிமன்றத்தின் உள்ளே செல்ல முடியவில்லை. இருப்பினும் ஆன்லைன் முலம் வழக்குகளை எந்த சிரமுமின்றி நடத்த, வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.
தலைமை நீதியரசர் சஞ்ஜிப் பானர்ஜி தன்னிடம் வந்த வழக்குகளை விசாரித்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் திறந்த நீதிமன்றத்தில் தன்னுடைய தீர்ப்பினை டிக்டேட் செய்வது, தீர்ப்பினை அவையறிய வெளியிடுவது வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பல்லாண்டுகளாக தேங்கிக் கிடந்த வழக்குகளை மற்ற நீதிபதிகளின் துணையுடன் விரைந்து முடித்து முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
சென்னை உயர்நீதிமன்றம் பிரிட்டிஷ் மகாராணியால் துவக்கப்பட்ட பராம்பரியமிக்க நீதிமன்றம் என்பது வரலாறு. சென்னை நீதிமன்றத்தில் தற்போது 75 நீதிபதிகள் பணியாற்றி வரும் மிகப்பெரிய நீதிமன்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம், சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு மாறுதல் உத்திரவினை தயார் செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து இருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சென்ற ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து இருந்த நேரத்தில், தேர்தல் கமிஷன் சட்டமன்ற தேர்தல்களை நடத்தி வருவதை கண்டித்தார். அத்துடன் கொரோனா நோய் அதிவேகமாக பரவி வரும் நேரத்தில், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் (Election Commission officers should be booked on murder charges probably) என்று நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையின்போது கடுமையாக சாடினார்.
பாண்டிச்சேரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கட்சியினர் சிலர் ஆதார் அட்டைகளில் பதியப்பட்டிருந்த செல்போன் எண்களுக்கு தங்கள் கட்சிக்கு வாக்கு அளிக்க எஸ்எம்எஸ் என்ற குறுஞ்செய்தி அனுப்பியதை வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானார்ஜி கடுமையாக சாடினார்.
இது ஒரு பக்கம் இருக்க... சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சொல்லும் கருத்துக்களை மீடியா மற்றும் செய்திதாள்கள் வெளியிட தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதிமன்றத்தின் கருத்து சுதந்திரத்தினை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் மனுவினை தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் போதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுபாடு ஏற்பட்டது குறித்து வழக்கு நடைப்பெற்றது. ஆக்சிஜன் தட்டுபாடின்றி, அனைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு சுட்டிகாட்டினார். கொரோனா தடுப்பூசியும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக போய் சேர வேண்டும் என்று தனது தலைமையிலான அமர்வு நீதிமன்றத்தில் சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்து இருந்தார்.
சமுக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளுக்கு வரைமுறை குறித்து மத்திய அரசு The Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 என்ற சட்டத்தினை அமுல் படுத்தியது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, IT Rules 2021 ஊடகங்களின் சுதந்திரத்தினை பறிக்கலாம், இந்த சட்டம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என இடைக்கால தடை உத்திரவிணை நீதிமன்றத்தில் பிறப்பித்தார்.
அடுத்து நீட் தேர்வில், ஒபிசி பிரிவினருக்கு அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்குவது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியது.
தமிழக இந்து அறநிலையத்துறையின் (HR&CE) ஆலோசனை குழவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இந்து சமயத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உறுதி மொழி ஏற்காமல் நியமிக்கப்பட்டது குறித்து பொது நல வழக்கினை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானார்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு முற்றிலும் குறும்புதனமானது. இந்த வழக்கின் சாரம்சங்கள் மோசமான சுவையில் இருப்பதும், வழக்கில் கோரப்பட்ட பரிகாரம் மோசமான சுவையில் இருக்கிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் கடவுளின் பெயரிலோ அல்லது அரசியலமைப்பு சட்டத்தின் பெயரிலோ பதவிப் பிரமாணம் செய்ய அனுமதிக்கிறது. இந்தப் பொது நலவழக்கினை தொடுத்தவர் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற பெஞ்சின் வெளிப்படையான அனுமதியைப் பெறாமல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று உத்திரவிட்டு, வழக்கின் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்தனர்.
இந்தியாவில், பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற வேண்டும். அதன்பின் 2006 சட்டத்தின்படி திட்டம் குறித்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்ய வேண்டும். இது அரசு சார்பாக அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்று சுழலுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் திட்டமிருந்தால் அனுமதி வழங்கும், இல்லையென்றால் அனுமதி மறுக்கும் என்பது பழைய நிலை. இதனை மாற்றி அமைக்க Draft Environmental Impact Assessment (EIA) Notification 2020 அனைத்து மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்ற வழக்கில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சுற்று சூழல் பாதுகாப்பு சட்டம் வரைவு அறிக்கை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று உத்திரவிட்டார்.
மத்திய அரசு, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு ரு. 5000 உதவி தொகை வாங்கும் கிஷோர் விஞ்ஞான் புரதஷன் யோசனா என்ற தேர்வினை 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் எழதலாம். இந்தத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்த தேர்வில் அந்தந்த மாநில மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். இதனால் அந்தந்த மாநில மொழிகளில் படிக்கக்கூடிய பல கிராமப்புற மாணவர்கள், அறிவியல் ஆர்வத்துடன் தேர்வில் பங்கு பெற்று வெற்றி பெற முடியும் என்று வந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு கூறியது..
இந்த வழக்கில் அறிவியல் ஆர்வமுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு, ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அறிவியல் கண்டுபிடிப்புப்களில் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள், தங்களின் தாய் மொழியில் கல்வி கற்கின்றனர். நமது கிராமப்புற மாணவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் தான் முக்கியமான மொழி என்றும் தமிழில் அறிவியல் கலை சொற்களை மொழி பெயர்க்க வல்லுநர்கள் இல்லை என்று கூறி, புறவாசல் வழியாக இந்தியை நுழைக்க முற்படுகிறீர்களா என்று நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு, மத்திய அரசை சரமாரியாக கேள்விகனைகளால் துளைத்தது. அத்துடன் நவம்பர் 7 ந்தேதி நடைபெறவிருந்த தேர்வினை நடத்தக் கூடாது, மாநில மொழிகளில் கேள்வித்தாள் வெளியிட வேண்டும் என்று இடைக்கால தடைவிதித்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டது.
இப்படியாக கடந்த பத்து மாதத்தில் 70-க்கும் மேற்பட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ள தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, சில வழக்கில் அளித்த தீர்ப்புக்கள் மற்றும் அவரது கேள்வி கணைகள் மத்திய அரசினை கேள்வி கேட்டது, மத்தியில் ஆளும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் செயல்பாடுகள் மீது மத்திய அரசிற்கு லேசான அதிருப்தி வர ஆரம்பித்தது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் மாற்றம் குறித்து செயல்படும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் என்ற குழு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா கோர்ட்டுக்கு மாற்ற கடந்த செப்டம்பர் மாதமே மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து இருந்தது.
மத்திய அரசு எப்போதும் உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்யும் நீதிபதிகள் பதவி உயர்வு அல்லது பணிமாறுதல் அல்லது புதிய நீதிபதிகள் நியமனம் குறித்து அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு எடுக்காது. ஆனால் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக அல்லது நீதிமன்றத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை கேள்வி கணைகளால் துளைத்தெடுக்கும் தலைமை நீதிபதியை வெறும் 4 நீதிபதிகள் மட்டுமே இருக்கும் மேகாலயா கோர்ட்டுக்கு மாற்றும் பரிந்துரையை ஏற்று எந்தவித தாமதமின்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக அலகாபாத்தில் பணிபுரியும் மூத்த நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரியை பதவி உயர்வு அளித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
புதியதாக பொறுப்பேற்கும் புதிய தலைமை நீதிபதி, ஏற்கனவே அவர் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்த போது அவரது செயல்பாடுகள் குறித்து சிறந்த நிர்வாகம் மற்றும் நீதியின் நலன் கருதி (the interest of better administration) என்று கூறி உச்ச நீதிமன்றம் கொலீஜியம் அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது. சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் சிறந்த நிர்வாகம் மற்றும் நீதியின் நலன் கருதி என மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி எப்படி இப்போது இவ்வளவு பெரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்று டெல்லியின் மூத்த வழக்கறிஞர் நம்மிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்பு கொலீஜியம் பரிந்துரைந்த பணிமூப்பு காரணமாக பதவி உயர்வு பெற தகுதியுள்ள நீதிபதிகள் அனில் குரோஷி, குரியன் ஜோசப் போன்றவர்களுக்கு உரிய நேரத்தில் பதவியுயர்வு கொடுக்க பரிந்துரை செய்யாமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதற்குக் காரணம் மத்திய அரசில் உள்ள சிலருக்கு சாதகமாக செயல்படாததால், இவர்களுக்கு தகுதியிருந்தும் பதவி உயர்வு வழங்கபடவில்லை. தற்போது உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, எப்படி அவசர கதியில் சென்னை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட விஷயம் மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சஞ்ஜிப் பானர்ஜி இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒய்வு பெறுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரின் 10 மாத கால செயல்பாடுகளில் ஏதேனும் தவறு இருந்தால், அதனை உச்சநீதிமன்ற கொலீஜியம் மற்றும் மத்திய அரசு வெளியிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று சென்னை பார் அசோசியேஷனை சேர்ந்து 32 மூத்த வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு மனு அளித்து தங்களின் ஆட்சேபத்தை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் என்.ஜி. பிரசாத் உட்பட வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் பால் கேட் அருகே தங்கள் அடையாள தர்ணா போராட்டத்தினை திரளான வழக்கறிஞர்களுடன் நடத்தி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜியை பணியமர்த்த வேண்டும் என்று தங்கள் கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இது இப்படி இருக்க... திங்கட்கிழமை மாலை, சென்னை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகலாய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ததற்க்கான அறிவிப்பினை ஜனாதிபதி அலுவலகம் வெளியானது.
சென்னை தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜியின் நீதிமன்ற செயல்பாடுகள் மத்திய அரசிற்கு எதிராக எரிச்சல் ஊட்டும் வகையில் இருந்ததாலேயே, அவர் மேகலாய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாறுதல் செய்யப்பட்டார் என்று ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேசி வருகின்றனர்.
சென்னைக்கு கடந்த மூன்று வருடத்தில் மூன்று தலைமை நீதிபதிகள் வந்து சென்றுள்ளனர். புதியதாக பொறுப்பேற்கவிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் 12 தேதி ஒய்வு பெறுகிறார். தற்போது புதியதாக நியமிக்கப்பட்டிருக்கும் முனிஸ்வர் நாத் பண்டாரி வெறும் 10 மாதங்கள் மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளை அவசர கோலத்தில் மாற்றுவது என்பது புதிய யுக்தியாக இருக்கிறது என்று முன்னாள் நீதிபதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எந்த நீதிபதியாக இருந்தாலும், குறைந்தது இரண்டாண்டு காலம் நீதிமன்றங்களில் தொடர்ந்து பணிபுரிய வேண்டும். அப்போது தான் அந்தப் பகுதி மக்களின் நலன் சார்ந்த நீதி பரிபாலனம் பாதிக்காமல் இருக்கும். இது போன்ற குறுகிய காலத்தில் அடிக்கடி நீதிபதிகளை அவசர கோலத்தில் மாறுதல் செய்தால், வழக்காடிகள் வழக்குகள் பாதிக்கப்படும். அத்துடன் நீதிபதிகள் சுதந்திரமாக பணி செய்ய அஞ்சுவார்கள் என்பதே முன்னாள் நீதிபதிகளின் கருத்தாக உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பத்து மாதங்களில் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு ஏன் மாற்றப்பட்டார், அவர் என்ன தவறு செய்தார் என்று தகவலை உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்பதே சென்னை மூத்த வழக்கறிஞர்களின் கேள்வியாக உள்ளது.
எந்தத் தவறும் செய்யாத தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பணியிட மாறுதல், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையா என்ற பில்லியன் டாலர் கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பெரும்பாலோனர் கேள்வியாக ஆவேசத்துடன் எழப்புகின்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை வழக்கமான தனது அமர்வில் வந்தமர்ந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, எந்தவித சலனமில்லாமல் தனக்கு மேகாலயா உயர்நீதிமன்ற மாறுதல் உத்திரவினை பெற்றுகொண்டதால் வழக்கின் விசாரணையை பகல் 12 மணியுடன் முடித்துக் கொண்டார். தலைமை நீதிபதி அறையில் குழுமியிருந்த வழக்கறிஞர்கள் அனைவரும் இறுக்கமான முகங்களுடன் இருந்தது, நெஞ்சை நெகிழவைப்பதாக இருந்தது.
புதன்கிழமை காலை…. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி தன் சொந்த ஊரான கொல்கத்தாவிற்கு 1666 கி.மீ. தூரம் காரில் புறப்பட்டு சென்றார். சஞ்ஜிப் பானர்ஜிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழாவையும் அவர் புறக்கணித்து விட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தையும் அதன் வழக்கறிஞர்களையும் விட்டு நான் தூரமாக செல்கிறேன். தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள். நாட்டிலேயே சென்னை வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள். தமிழகத்தை எனது சொந்த மாநிலம் என சென்ற 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன். தமிழகத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் முழுமையாக தகர்த்தெறிய முடியவில்லை. என சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, கனத்த இதயத்துடன் இதனை கடிதம் முலம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பெண் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி…!
குஜராத் கலவரத்தில், பில்கிஸ் பானு என்ற பெண்மணியை கூட்டு பாலியியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டபட்ட 11 பேரின் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையின் மேல்முறையீடு 2017-ம் ஆண்டு, பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அப்போது பெண் நீதிபதியாக இருந்த விஜயா கமலேஷ் தஹில்ரமணி இந்த வழக்கை விசாரித்தார். அவர், தனது தீர்ப்பில் குற்றம்சாட்டபட்ட 11 பேரின் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை உறுதி செய்தார். இந்த வழக்கில் போலீசார், மருத்துவர் உட்பட 7 பேரின் விடுதலையை தனது தீர்ப்பின் முலம் ரத்து செய்து, நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.
அதன்பின் 2018 ஆண்டு ஆகஸ்டு மாதம் 4 ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பம்பாயை சேர்ந்த விஜயா கமலேஷ் தஹில்ரமணி என்ற பெண் தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு வருடம் தலைமை நீதிபதி பதவியை வகித்தவருக்கு... உச்சநீதிமன்ற கொலீஜியம், மேகலாயா நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்து உத்திரவிட்டதை ஏற்று ஜனாதிபதி மாறுதல் உத்திரவிற்கான அறிவிப்பினை வெளியிட்டார். தன் மாறுதல் உத்திரவினை மறு பரிசிலனை செய்யச் சொல்லி உச்சநீதிமன்ற கொலீஜியத்தை விஜயா கமலேஷ் தஹில் ரமணி வேண்டுதல் வைக்க... அதனை உச்சநீதிமன்றம் கொலீஜியம் நிராகரித்தது.
இதற்கிடையே விஜயா கமலேஷ் தஹில்ரமணி தனது மாறுதல் கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்ததும், தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுப்பி வைத்தார். ஜனாதிபதியும், விஜயா கமலேஷ் தஹில்ரமணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதன்பின், விஜயா கமலேஷ் தஹில்ரமணி நீதிபதி பதவியில் இருக்கும் போது, அவர் வாங்கிய சொத்துக்கள் குறித்த முறைகேடுகளையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது சில தீர்ப்புகள் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட சந்தேகங்களையும் சட்டபடி விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது. அப்போதும் சென்னை மற்றும் பம்பாய் வழக்கறிஞர்கள் சிலர் விஜயா கமலேஷ் தஹில்ரமணி மாறுதல் உத்திரவினை, உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள் .
நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு வருட காலத்தில், தினமும் 70 முதல் 80 வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். ஒரு வருடத்தில் 5,040 வழக்குகளை முடித்து வைத்து இருக்கிறேன். நானும் எனது கணவரும் மும்பை செல்லாமல் அழகான சென்னையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்திருந்தோம். அதற்குள் எனக்கு மேகலாயவிற்கு மாறுதல் வந்துவிட்டது என்று தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசினார்.
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணியின் மாறுதல் உத்திரவும் சந்தேகத்திற்கிடமானது தான் என வழக்கறிஞர்களிடையே பரவலான பேச்சு உண்டு!
Leave a comment
Upload