பத்தாண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. இப்போது நம்ப ஆட்சி, இந்த டயலாக் திமுக பகுதி செயலாளர், வட்டச் செயலாளர்கள் மட்டத்தில் உலா வருகிறது. ஆனால், இது தான் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் மறந்து போனார்கள்.
உதாரணத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் ஒருவர் செய்த அட்டகாசத்தை சுட்டிக் காட்டுகிறார்கள் நடுநிலையாளர்கள்.
தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் சில வாரங்களுக்கு முன், போக்குவரத்துக்கு பாதிப்பில்லாமல் உங்கள் வாகனத்தை நிறுத்துமாறு கூறிய தலைமைக் காவலரை கன்னத்தில் அறைந்தார். அந்த உதவியாளர் பெயர் கிருபா. உடனே தலைமை காவலர் எழுத்து மூலம் புகார் தர, உடனே விஷயம் கேள்விப்பட்ட அமைச்சர் தன் செல்வாக்கை பயன்படுத்தி தலைமைக் காவலரை வற்புறுத்தி புகாரை வாபஸ் பெற வைத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முதல்வர் எரிச்சல் பட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இதுதான் உங்கள் சட்டம்-ஒழுங்கு லட்சணமா என்று கேள்வி கேட்டார். இந்தப் பிரச்சனை முடிவதற்குள் அடுத்த வாரம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வலதுகரம், உதவியாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் என்று பல பதவிகள் வகித்த பில்லா ஜெகன் என்ற ஜெகன் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தீபாவளி அன்று தமிழ்நாடு சுற்றுலா மாளிகை ஊழியர் சதாம் சேட் என்பவர் ஒரு புகார் தந்தார்.
அந்தப் புகாரில் அவர் நவம்பர் 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழ்நாடு சுற்றுலா மாளிகை வளாகத்தில் உள்ள ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை தனி நீதிபதி ஆணையர் அலுவலகம் முன்பாக டிஎன் 69 எண் கொண்ட டொயோட்டா காரின் முன்பு ஜெகன் என்ற பில்லா ஜெகன் மற்றும் ஐந்து பேர் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம், இங்கு மது அருந்த கூடாது... வளாகத்தை விட்டு வெளியே போங்கள் என்று சொன்னேன். அப்போது ஜெகன், நீதிபதி அறையைத் திறந்து கொடுங்கள் நாங்கள் அங்கு உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என்று கேட்டார். நான் அதற்கு இது நீதிபதி அலுவலகம், அங்கு போகக் கூடாது என்று கூறினேன். அதற்கு அவர் நான் தான் நீதிபதி, உன்னால் திறக்க முடியுமா முடியாதா என்று கேட்டார். நான் முடியாது என்று சொன்னதும், என்னை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினார். அவருடன் வந்தவர்கள் என்னை தாக்கினார்கள். பாதுகாப்புக்கு அங்கிருந்த காவலர்கள், அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றினார்கள் என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விஷயமும் பரபரப்பானது.... உடனே கடும் கோபப்பட்ட முதல்வர் ஸ்டாலின், ஜெகனை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவிட.... அதைத் தொடர்ந்து துரைமுருகன் பெயரில், ஜெகன் கட்சியைவிட்டு தற்காலிக நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியானது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு அவரையும் கடுமையாக எச்சரித்தார் ஸ்டாலின்.
சில வாரங்களுக்கு முன்பு முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள், இதுவும் அரசியல் பின்னணி தான் காரணம்.
அமைச்சர் பெரியகருப்பன் இலாகாவில் அவரது சம்பந்தி நாட்டாண்மை செய்கிறார் என்ற தகவல் முதல்வர் காதுக்கு எட்டியது. போக்குவரத்து துறை அமைச்சர் பற்றி, அவரது வாரிசு பற்றி முதல்வருக்கு புகார் மேல் புகார் வந்து கொண்டே இருக்கிறது. கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, தன் பேச்சை துறைச் செயலாளர் அபூர்வா கேட்பதில்லை என்று முதல்வரிடம் புகார் சொன்னார். கூடவே ஒரு குறிப்பிட்ட அதிகாரியை தனக்கு செயலாளராக போட சிபாரிசு செய்தால். அதற்கு முதல்வர், மாற்றல் சொன்னதுடன் நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள், யாரை நியமிப்பது என்பது எனக்கு தெரியும் என்று அப்போது சொன்னார்.
அதிகாரிகள் மாற்றல் உத்தரவு அறிவிப்பு வந்தபோது, அமைச்சர் காந்தி மகிழ்ச்சி அடைந்தார். காரணம்... அவர் சிபாரிசு செய்த தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தற்சமயம் துரைமுருகன் மீது, முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருக்கிறார். எனவே காந்தியை திருப்திப்படுத்தி துரைமுருகனை எரிச்சல் படுத்தி இருக்கிறார். இதேபோல் ஏவா வேலு, பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனாவை மாற்றி தயானந்த் கட்டாரியாவை நியமிக்க கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையையும் முதல்வர் நிறைவேற்றினார். இதேபோல் செந்தில் பாலாஜி, தனது துறை செயலாளர், மின்வாரிய தலைவர் இருவரையும் மாற்றுமாறு கோரிக்கை வைத்தார். மின் வாரியத் தலைவரை மாற்றாமல், துறை செயலாளரை மட்டும் மாற்றல் செய்தார்.
சில மூத்த அமைச்சர்கள், சில அதிகாரிகளை மாற்று மாறும், சில அதிகாரிகளை நியமிக்குமாறு செய்த சிபாரிசு, இதுவரை முதல்வரால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் காந்தி மற்றும் வாலாஜா செயலாளர் புகழேந்தி இருவருக்கும் நடக்கும் மோதல் தற்சமயம் உச்சகட்டத்தில் இருக்கிறது. புகழேந்தியை நகரச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு காந்தியின் வாரிசுகள் கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க... இன்னொரு பக்கம்.. வாலாஜா நகரச் செயலாளர் புகழேந்தியை நேரில் அழைத்து, நீங்களே ராஜினமா செய்தால் உங்களுக்கு நல்லதுஎன்று மிரட்டி இருக்கிறார்கள். ஆனால், அவர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். காரணம்... வரும் நகரசபைத் தேர்தலில் தலைவர் பதவிக்கு புகழேந்தி போட்டியிட இருக்கிறார். அமைச்சர் காந்தி மனதில் வேறு கணக்கு. இதெல்லாம் பொதுச்செயலாளர் துரைமுருகன் கவனத்திற்கும் போனது. புகழேந்தி நேரில் போய் முறையிட்டார். அப்போது துரைமுருகன்... அறிவாலயத்தில், இப்போதைக்கு என்னைவிட காந்திதான் செல்வாக்கு ஜாஸ்தி, நான் ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
இதன் நடுவே அமைச்சர்களின் பிஏ க்களை முதல்வர் கண்காணிக்க உத்தரவிட்டிருக்கிறார். இதில் சில அமைச்சர்களின் வாரிசுகளும் அடங்கும்.
இது எல்லாம் போதாது என்று திமுகவின் போக்கு, கூட்டணி கட்சிகளை குழப்புகிறது.
நவம்பர் 5ஆம் தேதி கேதார்நாத்தில் பிரதமர் மோடி ஆதிசங்கரர் சிலை திறப்பு மற்றும் சில நல்ல திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை தமிழகத்தின் 16 கோயில்களில் எல்இடி ஸ்கிரீன் வைத்து நேரலையாக ஒளிபரப்பினார்கள். சிலை திறப்பு, மோடியின் உரை போன்றவை ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் அண்ணாமலையும், ராமேஸ்வரம் கோயிலில் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்ற பாரதிய ஜனதா தலைவர்கள் இந்த நேரலை நிகழ்ச்சியை பார்த்தார்கள். தற்போது இதுவும் சர்ச்சைக்குரியது ஆகிவிட்டது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வைணவர் ரங்கராஜன் நரசிம்மன், இந்த நேரலை ஒளிபரப்பு பற்றி காவல்துறையில் புகார் செய்தார். இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் அவரை மிரட்டியதாகவும், அவர் சமூக வலைத்தளங்களில் சொல்லி வருகிறார்.
கோயில்களில் பிரதமரின் நேரலை ஒளிபரப்பை கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திக தலைவர் வீரமணி ஆகியோர் பாரதிய ஜனதா கோயில்களை தங்கள் பிரச்சார மேடையாக பயன்படுத்துவதாக குற்றம் சொல்லி அறிக்கை வெளியிட்டார்கள்.
அண்ணாமலை மீது புகார் சொல்லி ஆன்லைனில் ரங்கராஜன் நரசிம்மன் கொடுத்த புகாருக்கு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் ஒப்புதல் ரசீது தந்து, அத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டது. ஆனால், அண்ணாமலை... இதில் எந்த விதி மீறலும் இல்லை. போலீஸ் தாராளமாக விசாரிக்கட்டும் என்று பதில் சொல்லியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் திமுக எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கிறது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தலைமைச் செயலாளர் இறை அன்பை தொடர்புகொண்டு, தமிழகத்திலுள்ள 16 கோயில்களில் பிரதமரின் கேதார்நாத் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பு செய்ய வசதி செய்து தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்போது தலைமைச் செயலாளர் முதல்வரை ஆலோசித்து சொல்வதாக பதில் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு இரு தினங்களுக்குப் பிறகு மீண்டும் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன முடிவு செய்தீர்கள். இல்லையென்றால் நானே முதல்வரிடம் பேசவா என்று கேட்க. இல்லை.. இல்லை.. முதல்வர் அனுமதி தந்துவிட்டார். அறநிலைத்துறை அந்த ஏற்பாடுகளை செய்யும் என்று சொல்லி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை தான் 16 கோயில்களில் எல்இடி ஸ்க்ரீன் வைத்து, இந்த நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்தது. இந்த விஷயம்... கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி தான். ஆனால், கண்டுகொள்ளவில்லை.
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குழுவில், முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருவை ஆளுநர் நியமித்திருக்கிறார். இவர் தமிழக அரசின் நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போன்றவற்றில் திமுகவை கடுமையாக விமர்சித்தவர். இதற்கும் திமுக மௌனம் சாதிக்கிறது. தற்சமயம் மோடியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான திருப்புகழ், சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து எப்படி மீட்பது என்று ஆலோசிக்க ஆலோசகராக தமிழக அரசு நியமித்திருக்கிறது.
நீட் தேர்வு மசோதா, ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. இதுபற்றியும் திமுக எதுவும் பேசவில்லை. என்ன நடக்கிறது என்று தெரியாமல், திமுக முக்கிய தலைவர்களே பாவம் பேய் முழி முழிக்கிறார்கள்.
Leave a comment
Upload