தொடர்கள்
கவிதை
மதிப்பிற்குரிய ஆசான்களே....!! - பாலா

20211019153450501.jpeg

மதிப்பிற்குரிய ஆசான்கள்..
மதியிழக்கும் செயல்களினால்
மரபு மறந்தே போனீர்களோ...?

மதிமயங்கி தன்னிலையில்லா
மானம் கெடும் வக்கிரங்களால்
மாண்பு குன்றிட செய்தீர்களோ...?

வாழ்வின் உயரம் தொடுதற்கு
வழிகாட்டும் மார்க்கம் தருவோர்
வழிதடம் தான் மாறினீர்களோ...?

பிஞ்சு பெண் உள்ளங்களில்
வஞ்சகமாய் சொல் பேசியே
நெஞ்சுடைய செய்தீர்களோ...?

ஓரிருவர் எங்கோ என்றெண்ண..
புற்றுநோய் போன்று நீங்கள்
பெருகித் தான் போகிறீர்கள்...!

அறிவுக்கண் திறக்க மறந்தே
பிள்ளைகள் கனவுக்கண் மூடியே
அவமானச் சின்னம் ஆனீர்களே...!!

கற்பிப்பவன் காமுக னாவதும்
காமத்தில் பாலியல் பேசுவதும்...
புரியாது பிள்ளையும் பரிதவிக்கும் ..!

துயர் சொல்ல வழியென்ன..?
சொல்வதின் விளைவென்ன..?
குடும்பத்தின் நிலை யென்ன..?

தொக்கி நிற்கும் கேள்விகளில்
அழுந்திடும் மன வலிகள்...!
சிதறிடும் சிறு உள்ளங்கள்...!

கல்விக் கனவு சிதையுண்டு
பெயர் கெட்டு வாழவெதற்கு
உயிர் துறக்க துணிந்தனரோ...?

கண்மணியே பிள்ளைகளே...!

ஒருகணம் எண்ணிப்பார்...!

மரணம் இயற்கை யென்றால்
நெஞ்சம் கணத்து விடும்...!
நீ மரணம் கொடுத்து கொண்டால்
பிறர் நெஞ்சின் ஈரம் உரைந்திடும்...!

வஞ்சகர்கள் இடர் வந்தால்
வலை வீச்சில் வீழாதீர்கள்..!
நெஞ்சில் உரம் கொண்டு
நெருஞ்சி முள் ஆகுங்கள்...!

துயர் சொல்லத் துணிந்திடுங்கள்...
துன்பச் சுமைதனை இறக்கிடுங்கள்...
தோழன் தோள் கொடுப்பார்
தொய்வென்றால் பற்றிக்கொள்.‌.!

பெற்றோர் போல் சுமைதாங்கி
இப்பூவுலகில் யாருமில்லை...!
ஒளிவு மறைவின்றி என்றும்
உள்ளத்தை காட்டுங்கள்...!

உன்னத உறவெல்லாம்
உனைச்சுற்றி உள்ளனவே..!
உள்ளத்தில் உள்ளதனை
ஓரிடத்தில் சொல்லிவிடேன்..!

உலகம் உந்தன் கைகளில்
உத்வேகம் என்றும் மனதனில்
சிறகை விரித்து வானில்
சிறப்பாய் பறந்து வாரீர்...!!