101 தாசிகள் ஏன் கொல்லப்பட்டார்கள்?
செங்கல்பட்டு - திருவிடைச்சுரத்தில் பிணை ஏரி, குப்பச்சிகுன்று ஏற்பட்ட வரலாறு:
பழைய காலத்தில் செங்கல்பட்டு - திருவிடைச்சுரத்தில் பிணை ஏரி, குப்பச்சிகுன்று எப்படி உருவாகின? 101 தாசிகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? வன்னிய அரசர்கள் வெள்ளாளர்களுடன் நடத்திய போர்கள் - கொடூரமான நிகழ்வுகள் -
சென்னை பெருநகர் வரலாற்று கட்டுரை தொடரில் இந்த வாரம் திருவிடைச்சுரத்தில் நடைபெற்ற பல போர்கள், வீரம், துரோகம், தியாகம் உள்ளடக்கிய பல அதிசயமிக்க நிகழ்வுகளைப் பற்றி மெக்கன்சி ஆவணங்கள் தெரிவிக்கும் வரலாற்று செய்திகளை தெரிந்துகொள்ளலாம்:
இந்தச் சுவடியில் அரசர்களுக்கும், வெள்ளாளர்களுக்கும் இருக்கும் பகையைப் பற்றியும், நடந்த போர்களைப் பற்றியும், இதில் சிக்கிய 101 தாசிகளைப் பற்றியும், அவர்கள் மொத்தமாக கொல்லப்பட்டதை பதிவு செய்யும் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வருகிறது.
வன்னிய அரசர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக நவபத்து எனும் தோல்வாத்தியத்தை, ஒரு தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தினார்கள் என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.
“திருவிடைச்சுரம் கோட்டை வரலாறு (டி.3098)”
1. “செங்கல்பட்டுச் சில்லாவைச் சேர்ந்த திருவிடைச்சுரத்திலிருக்கும் புராதீனக் கோட்டையில் ஆண்டு கொண்டிருந்த வன்னிய அரசர்களான காத்தவராயன், சேத்துராயன் என்றவர்களின் விசேஷித்த சரித்திரம் சகாதேவ நாட்டான் வாக்குமூலத்தை பிடித்தெழிதினது. (திருவிடைச்சுரம் - செங்கற்பட்டு - திருப்போரூர் சாலையில் இல்வூர் உள்ளது செங்கற்பட்டுப் புகைவண்டி நிலையத்திலிருந்து ஐந்தரை மைல் தொலைவில் உள்ளது).
2. “பூறுவீகத்தி லிந்த ஸ்தளத்தின் குறும்ப பிறபுக்கள் புராதீனமாய் ராஷ்சிய பரிபாலனம் பண்ணிக்கொண்டு வந்தார்கள். அவர்களை யாதொண்டைச் சோளன் தஞ்சை நகரத்திலிருந்து வந்து சம்மாரம் பண்ணி தொண்டைமான் சக்கரவற்தி யென்ற கிதாப்பு பெத்த பின்பு, அவர்களுக்குப் பதிலாக கொண்டைகட்டி வெள்ளாழர் ஸ்தாபிக்கப்பட்டார்கள். (ஆதொண்டைச்சோழன் என்பவன் ஒளவையார் பாடிய தொண்டைமான் இளந்திரையனா என்பது ஆய்வுக்குறியது).”
3. “அந்த நாள்களில் வன்னியர் என்ற பள்ளி ளிந்தக் கோட்டையை தேசாதிபதி உத்திரப்படிக்கு ஸ்வாதீனம் பண்ணிக்கொண்டு, பிறபுத்துவம் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆனாயிவர்கள் ஆந்திர, கன்னிட, திராவிட தேசாதிபதிகளுக்கு கப்பங் கட்டிக்கொண்டு வந்தார்கள்......”
4. “இவர்கள் பிறபுத்துவத்தின் சமுசாவழிச் சரித்திர மொருவராலும் கார்க்கப்பட்டதில்லை (பாதுகாக்கப்பட்டதில்லை).”
5. “இப்படி யிருக்கிற நாளையிலே, இவர்கள் வமுசத்தில் காத்தவராயன், சேத்துராயன் என்ற யிரண்டு அரசர்களிந்தப் பட்டத்துக்கு வந்தார்கள்”.
6. “இவர்கள், ளதீக புத்திவந்தர்களா யிருந்தபடியினாவே, தாங்களிருந்த பூற்வீகக் கோட்டையை மகா பலமாய்க் கட்டினார்கள். அந்தக் கோட்டையின் பரப்பிருக்கிற பிறகாரம் அளந்து கண்ட வயணம் (விவரம்).
7. தெற்கு வடக்கு 1149 அடி:
கிழக்கு மேற்கு 1206 அடி:
இந்தக் கோட்டை அலங்கச் சுவர் இருபதடி விசாலமாயிருக்குது.
இந்தக் கோட்டையைச் சுத்திலும் முப்பதடி விசாலத்துக்கு உரு (ஒரு) 1 அகிள் (அகழி) இருக்குது.
8. “இப்படியாய் இந்த கோட்டைக்கு மத்தியிலே ஒரு சிறப்பான உள்க்கோட்டையும் மரண்மனையும், மலைமேலே கட்டியிருக்குது யிது அளந்து கண்டது:
9. கிழக்கு மேற்கு 280 அடி;
தெற்கு வடக்கு 195 அடி; (சுவடியில் எண்கள், தமிழ் எண்களே காணப்படுகின்றன)
“இந்தப் பிறகாரம் கோட்டையைப் பிலக்கக் (பலமாக) கட்டி வெகு சூரத்துவ முள்ளவனாய் ராச்சியம் பண்ணுகையிலே, மேலான தேசாதிபதிக்கு மாமூல்ப் (வழக்கம்போல)
பிற்காரம் கப்பம் கட்டாமல் உடாகிக்கப் (மறுத்து) போட்டார்கள்.. இவர்களுடைய பிரபல மதிகப்பட்டுது”.
10. “இதில், காத்தவராயன் மாத்திரம் தீர சூரத்தனமுள்ளவரை யிருந்தான். இவனுக்கு கோட்டைக்கு வடக்கு ஒருனாழி வழிதூரம் கோமாளம் மலையில் நவபத்து (தோல்வாத்தியம்), கோட்டைக்கி அக்கினி மூலையில் ஒரு கல் தூரத்து மலைமேல் நவபத்து, கோட்டைக்கு தெற்கு னாலுனாழிவழி தூரத்தில் மாதிளங்குப் மலைமேல் நவபத்து, கோட்டைக்கு மேற்கு பெரிய மலைமேல் ஞான புரியீஸ்பரர் சவசஸ்தம்பத் தடியில் நவபத்து, இந்தப்படி னாலுதிக்கிலும் வாத்திய முழங்க,
11. “யிதன்றி, வேறே யாதொரு தேசாதிபதியும் நிகரில்லை யென்று வெகு போகத்தை யனுபலித்துக் கொண்டிருந்தான்”.
12. “இவன் பேரில், ராயர் (கிருஷ்ணதேவராயர்(?) தண்டு (சேனை) சண்டைக்கு வந்தபோது, இவன் மேலாகச் சொல்லப்பட்ட மலைகளி லெல்லாமிருந்து நவபத்து முழங்கப்பண்ணி, எந்த மலைமேலே யிருக்கிறானென்கிற தடம் தெரியாமல் வெகுனாள் லோலாயப் (அல்லல்) பட்டு, கடையாந்திரம் (கடைசியில்) ஒருனாள் ராயத்தண்டு ஓய்ந்திருக்கிற சமையம் பாத்து, தன் தண்டுகளோட வந்து விழுந்து வெகு ராணுக்களை (சேனை) அடுக்கடையாய் (மீண்டும் எழாதபடி) வெட்டித் தள்ளினான்”.
13. “அப்போ, ராயருடைய தளகர்தனுக் கதீக்கிற (அதிகமான) கோபம் வந்து, வெகு தளங்களோடே வந்து விழுந்துததினாலும் சண்டை பண்ணினவிடத்தில், இவன் தானிருக்கிற சோடை (சுவடு) தெரியாமல் சண்டை குடுத்து, வெகு ராணுக்களை மடியப்பண்ணி அழிந்தான்”.
14. “அப்போ, ராயரானவர் இவன் வெகு பலாஷ்ட்டியரை (பலவான்) யிருக்கிறான் என நினைத்து சண்டையை நிறுத்தி, யாதொரு மூலமா யிவனுக்கு அபாயம் வருத்திவிக்க வேணுமென்று நினைத்துக்கொண்டிருக்கையில்,
15. “காத்தவராய னாகப்பட்டவன், தொண்டைமான் சக்கிறவத்தியினாலே குறும்பருக்கு வதிளாக (பதில்) வைத்திருக்கு வெள்ளாழ பிறபுக்களை யதிகமாய் சின்னம்பண்டணி (சிதைத்து) கொடுமைப்படுத்தினான்”.
16. “அதினாலே வெள்ளாழர் மூர்க்கமாய் எழும்பினார்கள். வெள்ளாழர் வந்து ராயரிடம் பிறாது (புகார் செய்தல்) பண்ணினபடியினாலே, ராயரவர்கள் விசாரிச்சு, உய்யாள்வார் பாளையக்காரனை அனுப்பி அவனை சம்பாரம் (அழித்தல்) பண்ணச் சொல்ல அவனும் வந்து ராணுக்களோடே சண்டை பண்ணினான்”.
17. “இப்படி ஆறுமாசத் (ஆறுமாதம் வரை) தறுதி உயித்தியம் (யுத்தம்) பண்ணி உய்யாள்வாரால் நிறுவாகப்படாமல் (சேதமாகாமல்), தன் தளங்களோடே நிறுபங்கப்படாமல் நெல்லுப் பாளையமே சேர்ந்து, காத்தவராயனுடைய ராசதான்யாகிற திருவிடைச்சுரத்துக்கு வேகு காறரை யனுப்பி, உபாயத்தினாலே (தந்திரம்) காத்தவராயனை செயங்கொள்ளலாம் என்று பார்த்துவரச் சொல்லி யனுப்பினான்”.
18. “அப்போ, வேகுகாறர் (ஒற்றர்): வந்து பார்க்குமிடத்தில் அப்போ யிந்த திருவிடைச்சுர தேவஸ்தானத்துக்குச் சமீபத்திலே 101 தாசிகள் வீடு யிருந்தது. அதில், குப்பச்சி என்று பேர் கொண்டு, தாசிகளுக்குள்ளாக பெருநாட்டாள் என்று பேர்க்கொண்டு ஒரு தாசி மகா ரூப லாவணிய சவுந்தரியமாயிருந்தாள்”.
19. “அவளோடே சொல்லப்பட்ட காத்தவராயன் சினேகம்பண்ணி, யிவளுடமருந்து மயக்கத்திலே வசப்பட்டு, தன் வேலை நேரம் போக மத்த வேளைகளிலெல்லாம், அவள் மயக்கத்தில் சிக்கிக்கொண்டு யிரவும் பகலும் அவளிடத்திலேயே சாப்பிட்டுக்கொண்டு அவள் சொற்பேச்சு கடவாமல் நடந்துகொண்டிருந்தான்”.
20. “இதை வேகுகாறர் அறிந்து உய்யாள்வாருக்கு அறிக்கை பண்ணினார்கள். அந்தச்சிணம் (அந்தக்ஷணம்) உய்யாள்வாரும் கடலூர் வெள்ளாளரும் அந்தக் குப்பச்சி என்ற தாசியிடம் வந்து, அவளுக்கு நாலுபை விராகன் வெகுமதி வைத்து, காத்தவராயன் தலையை வெட்டி தங்களுக்கு கொடுத்துக் காப்பாத்த வேணுமென்று கெஞ்சினார்கள்”.
தாசிகளுக்குள்ளாக பெருநாட்டாள் குப்பச்சி காத்தவராயனை காட்டிக்கொடுக்க சம்மதித்தாளா?
(தொடரும்)
- ஆர். ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை:தொடர்புக்கு 9841010821 rangaraaj2021@gmail.com
Leave a comment
Upload