தொடர்கள்
தொடர்கள்
நேசித்த புத்தகங்கள் - 39 - வேங்கடகிருஷ்ணன்

20211021193045352.jpg

பாலகுமாரனின் முகநூல் பக்கம்

எழுத்துச்சித்தரால் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஜோதிடர் “ஜெயம் சரவணன்” அவர்களால் எனக்கு சொல்லப்பட்ட புத்தகம். அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். எழுத்துச்சித்தர் எழுதிய சில நாவல்களுக்கு தகவல்கள் தந்து உதவியவர். அவர் சொல்லித்தான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். அவர் FB யில் எழுதிய எல்லாவற்றையும் தொகுத்து வழங்கியிருக்கும் நூல் இது. பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாய் இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய உண்டு.

முதலில் என் மனதில் நின்று விட்ட ஒரு இலக்கிய வார்த்தை “வினை முடித்தன்ன இனியள்” ஒரு காரியம் செய்து முடித்தது போல அந்த சுகம் போல உண்டானவள் என் காதலி என்பது அதன் பொருள். என்ன ஒரு அழகான எடுத்துக்காட்டு, தமிழ் ஒரு அழகு.

ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் “ஞானியரைக் கண்டு கொள்ளல் எளிது. சொல்லில் செயலில் வெளிப்பட்டுவிடுவார். சத்யம் அங்கிருந்து பீறிட்டெழும் . உதாரணம் ஹிந்து கேசவின் கிருஷ்ணர் ஓவியங்கள், அந்தப் பசுக்கள் க்ருஷ்ணரைப் படுத்தும் பாடு எழுத்தில் கொணரமுடியாதது. யார் பசு? நாம் தான். சுத்த மனம் தான் கிருஷ்ணனும் விரும்புகிறான்.” அந்த ஓவியங்களை இந்தப் பார்வையில் அணுகமுடியுமா?

“நீங்க SSLC பெயில் ணே, நான் எட்டாப்பு பாஸ் ணே, பாஸ் பெரிசா, பெயில் பெரிசா” செந்திலின் இந்த புகழ்பெற்ற “ஜென்டில்மேன்” பட டயலாக்கை பாலகுமாரன் எழுதும்போது... அவர் மனைவி மூளையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் என்று தெரிய வரும்போது, அவருடைய தொழில் பக்தி புரிகிறது. சோகத்திலும் காமெடி டயலாக் எழுத முடிந்த அவருடைய மனநிலை நமக்கு தெளிவாகிறது.

குணா படத்தில் ஆஸ்பிடலில் கமல் சுத்தி சுத்தி சொல்லும் அந்த டயலாக், தியேட்டரில் கைதட்டல் வாங்கிய அதனை நான் வியந்து பார்த்திருக்கிறேன். அது எழுதியபோது தானும் அதுபோலவே அந்த அறையில் சுத்தியதாகவும், பிடிக்காத அவருடைய அப்பா பற்றி நினைத்துக்கொண்டு எழுதியதாக சொல்லியிருக்கிறார். அது ஒரு புறம் ஆச்சரியம், மறுபுறம் பாவமாய் இருக்கிறது.

மகாளய அமாவாசையின்போது எழுத்தாளர் சுப்ரமணிய ராஜு, சுஜாதா மற்றும் எஸ்ஏபி ஆகியோருக்கு, தர்ப்பணம் செய்வதாய் அவர் சொன்னது மனதை நெகிழவைத்தது. பழசை மறக்காத அந்த உள்ளம், அது தான் பாலா.

திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் உடனான அனுபவங்களை அங்கங்கே தந்திருக்கிறார். அது ஆச்சரியமான அனுபவங்கள்.

செல்போன் காலர் ட்யூன் பற்றி தனது கோபத்தை தெரிவிக்கிறார். வெறும் ட்ரிங் ட்ரிங் போதுமே. நான் ஒருவர் பேசப்போகிறார் என்று காத்திருக்கையில் குறை ஒன்றும் இல்லை என MS அம்மாவே பாடினாலும் எனக்கு பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்கிறார்.

கங்கை கொண்ட சோழபுரம் நாவல் எழுதியதை ஒவ்வொன்றாக சொல்கிறார். அவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை நமக்கு தெளிவாக்குகிறது.
ஒரு தகவலை பதிவிட்டபின் FB ஞானிகள் சொல்லலாமே, அறிவார்ந்த FB சபை சொல்லலாமே என்று அவர் எழுதுவது, உண்மையாய் சொல்கிறாரா? அல்லது கிண்டல் செய்கிறாரா? என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.

பாதி கட்டுரைகளுக்குப் பிறகு அவர் எழுதிய கவிதைகள் தரப்பட்டிருக்கின்றன. முதல் கவிதை முதலாழ்வார் மூவர் திருக்கோவிலூரில் சந்தித்துக்கொண்ட நிகழ்வு, கண்முன்னே விரியும் கதை, கவிதையாய் தொடர, பல வார்த்தைகள் வந்து விழுந்தவை என்பது புரிகிறது.

முடிவாய் மயிலை முண்டக்கண்ணி அம்மன் வரலாறு கவிதையாய். படிக்க படிக்க கவிதையில் நாமே கரைந்து போகிறோம். எழுத்து சித்தர் என்கிற பெயர் பொருத்தம் தான். ஒருவகையில் அவரை புரிந்து கொள்ள உதவும் புத்தகம் என்று இதனை சொல்லலாம்.

பாலகுமாரனின் முகநூல் பக்கம் - பாலாவின் மறுபக்கம் ?