தொடர்கள்
பேரிடர்
சென்னையை காப்பாற்றிய திருமலை எம்பெருமான்..! - ஆர்.ராஜேஷ் கன்னா

20211019172356763.jpg

வங்க கடலில் உருவான காற்றழத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கும் தெற்கு ஆந்திராவிற்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் செய்திருந்தது.

சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த பேய் மழையின் வீச்சை தாங்க முடியாமல், பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு... தற்போது தான் நீர் வடிய ஆரம்பித்து இருக்கிறது. இதற்குள் அடுத்த காற்றழத்த தாழ்வு நிலை, அதி கனமழை பெய்தால்... சென்னையும் அதன் சுற்றுபுறங்களும் எப்படி தாங்கும் என்ற பீதியில் மக்கள் இருந்தனர்.

ஆந்திராவில் இருக்கும் திருமலையின் ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி ஆகிய இரண்டு நடைபாதைகள் பக்தர்கள் நடந்து வர, ‘ரெட் அலர்ட்’ கொடுத்த இரண்டு நாட்களுக்கு முன்பே திருமலை தேவஸ்தானம் தடை விதித்து இருந்தது. திருமலை முழுவதும் பேரிடர் குழவினர் எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் சமாளிக்க தயார் நிலையில் இருந்தனர்.

வியாழக்கிழமையன்று காலை முதல் திருமலை மலை முழவதும் நான்ஸ்டாப் அதீத கனமழை பொழிந்து கொண்டிருந்தது. திருமலை தரிசனம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் திருமலை கோயிலின் நான்கு மாடவீதிகளிலும் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.

தமிழக கடற்கரையை வங்க கடல் காற்றழத்த தாழ்வு நிலை நெருங்குகிறது... இது சென்னைக்கு 130 கிமீ தென்கிழக்கே இருக்கிறது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல் அளித்து இருந்தது.

சென்னையில் அவ்வப்போதும் விட்டு விட்டு பகல் முழவதும் மழை பொழிந்து கொண்டிருந்தது. இந்த பகல் நேரத்தில், திருப்பதி திருமலையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதீத கனமழை பொழிந்து கொண்டிருந்தது.

கீழ் திருப்பதி பகுதியில் பெய்த கனமழையில், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில் திருமலை மலையிலிருந்து, கபில தீர்த்தம் மலையில் இருந்து வந்த வெள்ளம், கீழ் திருப்பதியினை நோக்கி செம்மண் நிறத்தில் பாய்ந்தது.

திருமலையின் நாலாபக்கமும் வந்த வெள்ளநீர், கீழ் திருப்பதியின் சாலைகளில் புரண்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் கீழ் திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 400 மோட்டர் சைக்கிள் மற்றும் 300 கார்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதுவரை இதுபோன்ற சீன்களை ஆங்கில சினிமாக்களில் மட்டுமே பார்த்திருந்த திருப்பதி மக்களுக்கு, மழையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.

இதற்குள் திருமலையின் வாகனங்கள் செல்லும் காட்சாலையில் உள்ள ஏறும் வழி, இறங்கும் வழி என இருபுறங்களிலும் மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் அதிவேகத்தில் உருண்டு ஒட தொடங்கியது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்திருந்த ஒருவர், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ள... அவர் மோட்டார் சைக்கிள் ஒருபுறமும்….. மறுபுறம் அவர் சாலையில் பாய்ந்து வந்த வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் இதனை பார்த்து அலற தொடங்கினர். வெள்ளநீரால் அடித்து செல்லப்பட்ட நபரை, அங்கிருந்த காவல்துறையினர் ஒருவழியாக காப்பாற்றினார்கள் .

திருமலையில் இருக்கும் ஆர்ஜிதம் அலுவலகம், பேரிடர் மேலாண்மை அலுவலகம் என எங்கும் வெள்ள நீர் வேகமாக புகுந்து கபளிகரம் செய்துவிட்டது. திருமலை வைகுண்டம் கியூ காம்ப்ளாக்ஸில் பக்தர்கள், பெருமாளை தரிசனம் செய்ய செல்லும் கியூவரிசையில் வெள்ள நீர் வேகமாக புகுந்து முட்டி கால் அளவிற்கு உயரத் தொடங்கியது.

திருமலை எம்பெருமான் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் கோயிலின் உள்ளேயும் நான்கு மாடவீதிகளிலிருந்து புரண்டு வந்த வெள்ள நீர் புகுந்துவிட்டது. திருமலை கோயிலின் உள்ளே இருக்கும் வெள்ள நீரை, 13 ராட்சத பம்புகள் முலம் அவசர கோலத்தில் பேரிடர் மேலாண்மை குழவினர் இறைக்க தொடங்கினார்கள்.

20211019173040730.jpg

திருமலை எம்பெருமான் கோயிலுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் ஓய்.வி.சுப்பாரெட்டி, கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்ததை சரி செய்யும் ஊழியர்களுக்கு, தண்ணீரை வெளியேற்ற உரிய உத்திரவுகளை பிறப்பித்தார். திருமலை கோயிலுக்குள் அளவுக்கதிகமான வெள்ள நீர் வந்த செய்தி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரிவிக்கப்பட்டது. சித்தூர் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்ட ஆந்திர முதல்வர், போர்கால அடிப்படையில் கோயிலில் உள்ளே புகுந்த நீரை வெளியேற்ற வேண்டும் என்று உத்திரவினை பிறப்பித்தார்.

திருமலையில் அதீத கனமழையால், அனைத்து கம்பியூட்டர் சர்வர்களின் இயக்கங்களும் வெள்ள நீரால் ஸ்தம்பித்தது. இதனால் ஆர்ஜிதம் அலுவலத்தில் பக்தர்களுக்கு வழங்கும் சேவைகள் முற்றிலும் முடங்கியது.

திருமலையில் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி வீட்டில் வெள்ள நீர் புகுந்து விட்டது என்ற தகவல் வந்ததும், அவரது குடும்பத்தினரை காப்பாற்ற பேரிடர் மீட்பு குழ படகுடன் சென்றது.

திருமலையில் உள்ள நாராயண கிரி கெஸ்ட் அவுஸில் அருகிலிருந்த மலையிலிருந்து உருண்டு வந்த பாறை கற்கள் மோதியது. நல்ல வேளையாக இந்த கெஸ்ட் அவுஸில் பக்தர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை.

திருமலை காட் செக்ஷனில் செல்லும் சாலைகள், வெள்ளநீரால் லேசான நிலசரிவு ஏற்பட்டு சிறிய பாறைகள் சாலையில் வந்து விழந்தது. இதனால் திருமலை தேவஸ்தானம், இரவு முதல் பக்தர்கள் மலைக்கு செல்லும் இரு பாதையிலும் பக்தர்களின் வாகனம் செல்ல தடைவிதித்தது. பக்தர்கள் டிக்கெட் வைத்திருந்து, சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் வேறு எந்த தேதியில் வந்தும் எம்பெருமானை தரிசனம் செய்துகொள்ளலாம். அத்துடன் வெள்ளிக்கிழமை தரிசனம் முற்றிலும் தடை செய்யப்பட்டது என்றும் அறிவித்துவிட்டது.

திருமலையில் இருக்கும் அன்னதான கூடத்திலும் வெள்ள நீர்புகுந்து விட்டது. பக்தர்கள் அதீத மழை காரணமாக தாங்கள் தங்கியிருக்கும் கெஸ்ட் அவுஸ்களை விட்டு வெளியே வரவேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து விட்டது. பக்தர்கள் தங்கி இருக்கும் காட்டேஜ்களுக்கு உணவு பொட்டலங்களை திருமலை தேவஸ்தானம் அனுப்பி வைத்தது.

திருப்பதி மலையின் அனைத்து பக்கங்களிலும் மழை நீர் வழிந்து அருவி போன்று ‘ஓ’வென்ற சத்ததுடன் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது பெரும் மிரட்சியாக இருந்தது.

திருப்பதி மற்றும் திருமலையில் இதுவரை இப்படி ஒரு அதீத மழை பொய்ததில்லை என்று மக்கள் பேசி கொண்டனர்.

20211019174929508.jpeg

சென்னைக்கு பேரிழுவு ஏற்படுத்தவிருந்த காற்றழத்த தாழ்வு மண்டல மழையை, திருமலை எம்பெருமான் தன்னுடைய திருமலைக்கு, மழை நீர் காட்டாற்று வெள்ளத்தினை தன் சன்னதிக்குள் வரவழைத்து, சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களை காப்பாற்றி விட்டார் என்று திருமலை முழவதும் பெருமாளின் மகிமை என்று பேசி வருகின்றனர்.

அதே நேரத்தில் திருமலை எம்பெருமான் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்ததால்.... தேசத்தின் முக்கிய தலைவர் ஒருவருக்கு சங்கடங்கள் நிகழலாம் என்பது காலங்காலமாக சொல்லப்படும் செய்தி என நம்மிடம் பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர் தெரிவித்தார்.

திருமலையில் 5 நீர்தேக்கங்களும் அதீத மழையால் நிரம்பிவிட்டது. திருமலையில் இருக்கும் கோகர்பாம் மற்றும் பாபவிநாசம் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும், கீழ் திருப்பதி வெள்ளகாடானது என்று நகரவாசிகள் சொன்னார்கள்.

அதீத மழை திருமலையில் கொட்டி தீர்த்தாலும்.... வருண பகவான் திருமலை எம்பெருமானை தரிசிக்க வந்தார் என்றும் பேச்சாக உள்ளது.

20211019173649968.jpg

சென்னைக்கு வந்த அதீத மழை மேக கூட்டங்கள், திருமலையில் கொட்டி தீர்த்து சென்றததால்.... திருமலை எம்பெருமானின் கருணையால் சென்னை தப்பியது என்றே சொல்ல வேண்டும்.