தொடர்கள்
பொது
பெட்ரோல் படுத்தும் பாடு? - கே. பாலஸ்வாமிநாதன்

20211019153140355.jpeg

பெட்ரோல், டீசல் விலை எப்போதுமே ஏறுமுகமாக இருப்பது மட்டுமல்ல... அது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவும் இருந்து வருகிறது. நம்மைப் போன்ற சாமானியர்கள் பெட்ரோல், டீசல் என்றால், அவற்றின் விலை ஒன்றைப்பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். ஆனால், அந்த விலைக்குப் பின்னால் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.

இன்று லிட்டர் சுமார் 100 ரூபாய்க்கு வாங்கும் பெட்ரோலின் ஆரம்ப விலை லிட்டருக்கு ரூபாய் 39 தான். இந்த விலை, சுத்திகரிப்புக்கு முன்னால். இதை சுத்திகரிக்க ஒரு லிட்டருக்கு ஆகும் செலவு ரூபாய் 8.88. உபயோகப்படுத்துவதற்கு தயாராக இருக்கும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூபாய் 48.28. இதேபோல் டீசல் சுத்திகரிக்கப்பட்ட பின் விலை ரூபாய் 49.62. இந்த விலையில் இறக்குமதி செலவு, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் மற்றும் போக்குவரத்து செலவுகளும் அடங்கும். மத்திய, மாநில அரசாங்கங்கள் எந்த வரியையும் விதிக்காவிட்டால் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 49.22-க்கும், டீசல் ரூபாய் 49.62-க்கும் கிடைக்கும். ஆனால் இப்போதுதான் வரிகளின் கோரத்தாண்டவம் ஆரம்பமாகிறது. (வரி விதிப்பதை குற்றமாகக் கருத முடியாது. அரசாங்கத்திற்கும் வருமானம் வேண்டுமே! எந்த அளவுக்கு வரி விதிக்கலாம் என்பதில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.)

முதலில் மத்திய அரசாங்கத்தின் வரிகளைப் பார்ப்போம். மத்திய அரசாங்கம் கூடுதல் கலால் வரி (excise duty), சாலை வரி (Road Cess) என்ற கணக்கில் லிட்டருக்கு ரூபாய் 27.9 பெட்ரோல் மீதும், ரூபாய் 21.80 டீசல் மீதும் வரி விதிக்கிறது. இதைத் தவிர பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களுக்கு லிட்டருக்கு ரூபாய் 3.80 மற்றும் டீசலுக்கு ரூபாய் 2.60 ஒதுக்கப்படுகிறது. ஆக மொத்தம் மாநில வரி விதிப்புக்கு முன்னால் பெட்ரோல் விலை ரூபாய் 79.98, டீசல் விலை ரூபாய் 74.02 என்றும் நிர்ணயமாகிறது.

இப்போது மாநில அரசாங்கத்தின் பங்குக்கு வரி விதிக்க ஆயத்தமாகிறது. மத்திய அரசாங்கத்தின் கலால் வரி விகிதம் இந்தியா முழுவதும் ஒரே அளவுதான். ஆனால் மாநில அரசாங்கங்கள் ஒவொவ்ன்றும் தன் இஷ்டப்படி வரி விகிதங்களை நிர்ணயித்துக் கொள்கின்றன. மாநிலங்கள் VAT (value added tax) முறையில் வரி விதிக்கிறது. இதற்கு மதிப்பு கூட்டு வரி என்று பெயர். இதுவும் விற்பனை வரி போன்றதுதான் என்றாலும் சற்றே வித்தியாசமானது. ஏற்கனவே கலால் வரி, சாலை வரி, பெட்ரோல் பங்க் கமிஷன் போன்ற அனைத்து தொகைகளையும் சேர்த்து, அதன் மேல் விதிக்கப்படும் வரி தான் VAT. தமிழகத்தில் 32.11 சதவீதம் VAT வரியாக வசூலிக்கப்படுகிறது. இதிலிருந்து வரும் தொகை நேராக தமிழக அரசாங்கத்தின் கஜானாவுக்கு சென்றுவிடும்.

தீபாவளிக்கு முன்பு மத்திய அரசாங்கம் கலால் வரியை பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்துவிட்டு, மாநில அரசாங்கங்களும் தங்கள் சார்பில் VAT வரியை குறைக்கும்படியும் கொண்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் உடனடியாக VAT வரியை ஐந்து ரூபாய், ஏழு ரூபாய் என குறைத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு இதுவரை குறைக்கவில்லை. கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். தமிழகத்திற்கு பெருமளவு வரும் வருமானம் டாஸ்மாக் மற்றும் பெட்ரோலியம் VAT வரி மூலமாக தான் வருகிறது. இதிலும் பாதிப்பு ஏற்பட்டால் பற்றாக்குறை பெருமளவு அதிகரிக்கலாம். என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் வரி விதிப்பை GSTயின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் கொண்டு வந்தால், அதன் உச்சகட்ட வரி விதிப்பு ஆணை 28 சதவீத கட்டத்திற்குள் தான் கொண்டுவரப்படும். இதனால் பெட்ரோல், டீசல் விலை பெருமளவுக்கு குறையும். ஆனால், இதை ஏன் பாஜக எதிரணியிலுள்ள மாநிலங்கள் எதிர்க்கின்றன? விஷயம் ரொம்ப சிம்பிள். ஒரு பொருளின் வரிவிதிப்பு ஜிஎஸ்டி வலைக்குள் வந்தால், அதன் மேல் வேறு எந்த வரி விதிப்பும் செய்ய முடியாது. இப்போது VAT மூலமாக மாநிலங்களுக்கு வரும் வருமானம் நின்றுவிடும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் வரும் வருமானத்தில் பாதி தான் மாநிலங்களுக்கு போய்ச் சேரும். மக்கள் நலனா அல்லது மாநில அரசாங்க வருமானமா என்பதை யார் முடிவு செய்வது?

மாநில வருமான இழப்பை மத்திய அரசு எப்படி ஈடு செய்யும் என்று கேட்கிறது தமிழக அரசு.

பெட்ரோல் டீசல் மூலம் வரும் வருமானத்தையும் விட்டுவிட்டால், சாராய வருமானம் ஒன்றே கதி என தமிழகம் அஞ்சுகிறது. மக்களைப் பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை ஏறக் கூடாது. மாநிலங்களைப் பொறுத்தவரை வரி மூலம் வரும் வருமானம் குறையக் கூடாது. இதற்கு என்னதான் தீர்வு?

மாநிலங்கள் இன்னும் சிறப்பாக திட்டமிட வேண்டும். சாராய வருமானமே இல்லாமல் குஜராத் அரசு திறம்பட செயல்படுகிறது? பலன் தராத செலவினங்களைக் குறைக்க வேண்டும். முதலீடுகள் பெருகவேண்டும். வருமானத்தை கூட்டத் திட்டமிடல் வேண்டும்.

மக்கள் நலனே முக்கியம்.


சொட்டு செய்திகள்

* பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே கச்சா எண்ணெயிலிருந்தே (க்ரூட் ஆயில்) தயாரிக்கப்படுகிறது.

* இந்தியாவில் சுத்திகரிப்பு செலவு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 8.88-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 10.22 ம் ஆகும்.

* இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் (பேரல்) கணக்கில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பீப்பாயில் 159 லிட்டர் கச்சா எண்ணெய் இருக்கும்.

* ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 84.15 டாலர்கள். அதாவது 159 லிட்டர் கச்சா எண்ணெயின் இந்திய மதிப்பு ரூபாய் 6266.

* மத்திய அரசாங்கம் கலால் வரி தவிர சாலை வரி (road cess) என்ற வரி விதிப்பின் மூலம் வரும் தொகையை அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்காக செலவிடுகிறது.

* சாலை வரி மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் சுமார் 80 கோடி மக்களுக்கு covid-19 பாதிப்பு காலத்தில், ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

* கடந்த ஏழு வருடங்களில் 40,000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.