
மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை என்றார் மகாகவி பாரதியார். அவர் அன்று சொன்னது தாய் மொழிக் கல்வியல்லாது ஆங்கிலக் கல்வி பற்றி. இந்தக் கல்வி மண்ணுக்கும் பிரயோஜனப்படாது என்றார்.
ஆனால் அவர் அன்று சொன்னபடி இன்றுள்ள கல்வியே பயனில்லையோ என்று தோன்றுகிறது.
அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்தால் ரொம்ப வயதான ஆசாமி போல தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. இப்படித்தான் துவங்க வேண்டும் போலும்.
சேது லக்ஷிமி பாய் மேல் நிலைப் பள்ளி நாகர் கோவில். ஏழாவதோ எட்டாவதோ ஞாபகம். அது ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்றாலும் ஒவ்வொரு வகுப்பிலும் ஒன்றிரண்டு பெண்கள் படித்தனர். என்னுடைய வகுப்பில் லக்ஷ்மி என்ற பெண் படித்தாள். அந்தப் பள்ளியில் வரலாற்று ஆசிரியர் போத்தி சாரின் மகள். பார்த்தவுடன் தங்கையாகவே வரித்துக் கொண்டு விடும் மங்களகரமான முகம்.
எஸ்.எல்.பி பள்ளியில் மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது. கடும் கட்டுப்பாடு உண்டு. எனக்குத் தெரிந்து லக்ஷ்மியுடன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ஆனாலும் எனக்கு அடுத்த ரோல் நம்பர் என்பதால் என் பெயரைக் கூப்பிட்டவுடன் கொஞ்சம் காலதாமதமாகவே எழுந்து எஸ் டீச்சர் சொல்லுவேன். அந்த சில கணங்களில் லக்ஷ்மியின் தவிப்பு ரசிக்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் அடுத்து அவள் தானே எஸ் டீச்சர் சொல்ல வேண்டும். ரொம்ப மிக மிக சாதாரண சீண்டல் தான்.
இதை அனேகமாக அப்பாவிடம் சென்று போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் ஏதோ நிகழ்ச்சியில் மேடையேறிப் பேசிக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி. தரையில் எங்கோ ஒரு மூலையில் இலங்கை மாணவன் டென்னிசுடன் நான் கதைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக லக்ஷ்மியின் பேச்சுக்கும் எங்கள் சம்பாஷணைக்கும் சம்பந்தமேயில்லை. இருந்தாலும் மேடையிலிருந்து எங்களை தலைமையாசிரியர் சந்திரசேகர பாண்டியன் பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.
அடுத்த நாள் அழைத்து “அந்த புள்ள பேசும் போது என்னல குமைச்சுக்கிட்டு இருந்தீங்க” என்றார். அடுத்ததாக அவர் அறை வாயிலில் ஒரு வாரம் நிற்க வைக்கப்பட்டோம். பள்ளிக்கு வரவேண்டும் நேரடியாக அவர் அலுவலக வாசலுக்கு சென்று நிற்க வேண்டும். பேச்சே கிடையாது. இப்படியே செய்யாத குற்றத்திற்கு தண்டனை கொடுத்த அந்தாளின் அநீதிக்கு எதிராகவே சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். நாகர்கோவிலில் இயற்கை சூழ் பள்ளியிலிருந்து சென்னையின் அரசுப் பள்ளிக்கு மாற்றம்.
சந்திரசேகர பாண்டியன் இப்போது இருக்கிறாரா தெரியாது. ஆனால் அவர் கீழே போட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவருக்கு நெஞ்சு வலி வருவது நிச்சயம்.

ஒரு மாணவனும் மாணவியும் பேசக் கூட இல்லை, சும்மா பார்த்ததற்கே ச.சே.பா. டென்ஷனானார் என்றால் வகுப்பில் மடியில் படுத்துக் கொண்டு மொபைல் பார்க்கும் இந்தக் காட்சிக்கு மாரைப் பிடித்துக் கொண்டு விழுந்து விடுவார்.
இந்த வார சமூக ஊடகங்களில் வந்த காணொளிகளும், அதைத் தொடரந்த அறிவுரைகளும் சுருக்கமாக பார்த்து விடுவோம்.
இப்படிப் பட்ட கலாட்டாக்கள் தற்போது தான் நடக்கிறதா ? சில பல வருடங்களுக்கு முன் நடந்ததில்லையா ?? நிச்சயம் நடந்தது. ஆனால் அந்த நாளில் ஆசிரியர்களின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது. இன்னொரு குட்டி ஃபிளாஷ்பேக்.
சென்னை ராஜாமுத்தையா மேல்நிலைப் பள்ளி. அது அரசு தனியார் பள்ளி. கணக்கு வாத்தியார் ஹேமநாதன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனந்தன், மற்றும் கிட்டுவுடன் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வழக்கமாக கணக்கு பாடத்தின் போது அந்த மரத்தடி தான் எங்கள் பொழுது போக்கு. திடீரென அந்தப் பக்கம் வந்த தலைமையாசிரியர் இங்க ஏன் உக்காந்துருக்கீங்க என்றார் ? சார் வாத்தியார் தான் வெளிய அனுப்பிட்டாரு என்று புளுகினோம். கம் வித் மி என்றார். கூடவே ஆடுகள் போல பின் தொடர்ந்தோம்.
ஏன் சார் இந்த பசங்கள நீங்க தான் வெளிய அனுப்பிச்சீங்களா என்றார் த.ஆ.
மெதுவாக நடந்து வந்த ஹேமநாதன் டீச்சர் எங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு ஆமா சார் நாந்தான் வெளிய அனுப்பிச்சேன் என்று சொல்ல த.ஆ. தொலைங்கடா என்று பார்த்து விட்டு நகர்ந்து சென்றார்.
கணக்கு வாத்தியார் எங்களிடம் மெதுவாக “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” என்றார் . அன்றிலிருந்து கணக்கு பீரியடில் கட் அடிப்பதே இல்லை. இது தான் திருத்துதல்.
தனியார் பள்ளிகளில் இருக்கும் ஒழுக்க விதிமுறைகளும், ஓரளவிற்கான கல்வியின் மீது ஆர்வமும் அரசுப் பள்ளிகளில் இல்லாததன் காரணம் என்ன ??
ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் சாருடன் பேசினேன்.

(லக்ஷ்மிகாந்தன் - ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்)
மனிதர் பொரிந்து தள்ளி விட்டார். அவர் சொன்னதன் சுருக்கம் இது தான்.
நீங்களெல்லாம் அரசு பள்ளி ஆசிரியர் என்பவர் கை நிறைய சம்பாதிக்கிறார். எந்த கஷ்டமும் இல்லை என்று நினைக்கிறீர்கள். நாய் படாத பாடு எங்கள் நிலை. அரசாங்கம் முன்பெல்லாம் எலக்ஷன் டியூட்டி அல்லது சென்சஸ் என்பதற்குத் தான் எங்களை பயன்படுத்துவார்கள். இப்போது இலவசங்கள் அறிவித்து விட்டு அதையெல்லாம் பட்டுவாடா செய்வதற்கும் அதற்கு கணக்கு காட்டுவதற்கும் எங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். எப்படி ஆசிரியப் பணி செய்வது ??
ஏசி ரூமில் டி.பி.ஐ.யில் ஆறு பேர் அமர்ந்து தமிழ்நாட்டு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
பல பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. ஆட்கள் நிரப்பப்படாமல் இருக்கிறார்கள். பி.டி. ஆசிரியர் அல்லது கிராஃப்ட் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் சார்ந்த எந்த விஷயமும் நடப்பதில்லை. அந்த நேரத்திலும் மாணவர்களுக்கு பாடம் தான் எடுக்கிறோம். விளையாடாத பையனுக்கு என்ன வடிகால் ??
இன்றைய ஒழுங்கீனத்திற்கெல்லாம் முதல் காரணம் கரோனாவில் பள்ளி தடைபட்டது தான். அவன் இரண்டு வருசமா போனும் கையுமா இருந்துட்டான். அவனோட கவனத்தை ஈர்ப்பதே பெரிய விஷயம். முன்னாடியெல்லாம் ஒரு வகுப்பு துவங்குமுன் 5 நிமிடத்தில் மாணவர்களை வகுப்பின் கவனத்துக்கு கொண்டுவந்து விட முடியும். இப்போது 30 நிமிடங்கள் வேண்டும்.
பையனை அடிக்க கூடாது. மிரட்டக் கூடாது. ஆனால் பையன் நல்லா படிச்சு பெரிய ஆளா வந்துரணும். நான் கேக்கறேன் ஆசிரியர்களை ஆசிரியப் பணி மட்டும் பண்ண விட்டா தானே அடுத்த நாள் பாடத்துக்கே தயார் செய்துக்கிட்டு போக முடியும். ??
மேலும் ஒரு வகுப்புக்கு 50 பேர் 70 பேர் இருக்கும் நிலையில் யாருக்கு எப்படி பாடம் நடத்த முடியும் ??
முன்னொரு காலத்தில் மாரல் சயின்ஸ் என்று ஒரு வகுப்பு இருந்தது. இப்போதெல்லாம் அது பேப்பரில் மட்டும் இருக்கிறது. அப்படி ஒரு வகுப்பு எந்த அரசுப் பள்ளியிலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் பண்ணியே ஆக வேண்டும், வருடத்தின் எந்த நேரத்திலும் வந்து பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம், எந்த நிர்பந்தமும் தேர்வும் இல்லை என்றால் எவன் படிப்பான் ??
அப்படியும் நாங்கள் ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் வைத்து கேக் பிஸ்கெட்டெல்லாம் கைக் காசு போட்டு வாங்கிக் கொடுத்து ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தாலும் சார், லாப் டாப் ஓசி, சைக்கிள் ஓசி, புக்கு ஓசி, ஆல் பாஸ் அப்புறம் ஏன் சார் படிக்க வேற சொல்லி டார்ச்சர் பண்றீங்க என்கிறானுங்க. என்ன செய்ய ??
கல்விக்காக எனக்கு தெரிந்து 6 சதவிகிதம் தான் பட்ஜெட்டில் அரசு ஒதுக்குகிறது. அதை மூன்று மடங்காக்க வேண்டும்.
விளையாட்டு கூடங்கள், நல்ல நூலகங்கள் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் ஆட்கள் நியமிக்க வேண்டும்.
பெற்றோர்கள் வீட்டில் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களெல்லாம் ஏழை மாணவர்கள். அவர்களுக்கு கல்வியில் ஆர்வம் வர என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்தே ஆக வேண்டும். அப்போது தான் ஒழுக்கமும் வரும்.
இதெல்லாம் விடுங்க சார். அரசு பள்ளியில் நல்ல கழிவறைகள் கூட கிடையாது. அதிலும் மாணவிகள் காலை வந்தால் வீட்டுக்கு போகும் வரை இயற்கை உபாதைகளை கூட அடக்கி கொண்டு தான் இருக்க வேண்டியிருக்கிறது. இது மனதளவிலும், உடல் ரீதியாகவும் அவர்களை பயங்கரமாக பாதிக்கிறது.
நமது உட்கட்டமைப்பை இப்படி வைத்துக் கொண்டு தான் மாணவ மாணவிகளிடமும் குறைகளை தேடுகிறோம்.
கைபேசியை தடை செய்ய வேண்டும். சினிமா பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருக்கிறது. நடக்குமா ?? இன்றைய தேதிக்கு மாணவ மாணவிகளாக இருப்பதும் பெரிய சவால் தான்.
வள்ளுவரையும், பாரதியையும் இழுக்காமல் இந்த கட்டுரை முழுமை பெறாது.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்!
எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டிருக்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. இன்று ஆசிரியரை கை நீட்டி அடிக்கச் செல்லும் மாணவனை அன்றே தெரிந்து தான் எழுதியிருக்கிறார் போலும்.
இதெல்லாம் உருப்படுமா என்று கடந்து செல்ல முடியாது. உருப்பட வைக்க வேண்டும்.
ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அழிக்க கல்வியில் கை வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மெக்காலே கல்வி முறை அப்படித்தான் செய்து விட்டுச் சென்றது.
இந்தியர்களே இந்தியக் கல்வியைப் பார்த்து கேவலமாக நினைக்க வைத்தது தான் வெள்ளைக்காரர்களின் புத்திசாலித்தனம்.
பாரதி தன் பங்குக்கு ஆங்கிலக் கல்வியை சாடி விட்டுத் தான் சென்றார்.
அவரே
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
கல்வியைப் புகட்டுவது அதிலும் ஏழை மாணவருக்கு கல்வியை புகட்டுவது உலகிலுள்ள தர்மங்களிலெல்லாம் தலை சிறந்தது என்கிறார்.
அரசு கல்வியை புகட்ட தயாராகத்தான் இருக்கிறது. பெற்றோர்களும் ஆசையாகத்தான் இருக்கிறார்கள்.
பாழாய்ப்போன சினிமாவும், டாஸ்மாக்கும், இன்ன பிற கவனச்சிதறல்களும் தான் அவர்களை திசைமாறிப் போக வைக்கிறது. கலாச்சார சீரழிவு தமிழ்நாட்டில் தலைதூக்கி நிற்பதற்கு காரணம் இவைகள் தான்.
ராஜம் ராமகிருஷ்ணன் தனியார் பள்ளியில் இருபது வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தவர்.
அவரிடம் கேட்ட போது ஒரு அருமையான நிகழ்வை விவரித்தார்.

(ராஜம் ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை)
நெல்லையில் மூணு மாசம் ஒரு அரசு பள்ளியில் வேலை பார்த்தேன். அப்ப நடந்தது இது.
ஏழைப் பையன். படிக்க அவனுக்கு ரொம்ப ஆசை. ஆனா குடிகார அப்பன். அம்மாவை போட்டு தினம் அடிப்பாரு. பையன படிக்க வைக்கறதுல அவருக்கு விருப்பமே இல்லை. அனுப்புங்க அனுப்புங்கன்னு சொல்லுவாரு. பையன் எங்கிட்ட அழுதான்.
ரொம்ப திறமையான பையன். வீட்ல நடக்கிற பிரச்சினையெல்லாம் சொன்னான். அந்த சமயத்தில ஆண்டு விழா வந்துச்சு. அந்த பையன் வீட்டில நடக்கிற பிரச்சினைகளை தமிழ் டீச்சர் கிட்ட சொல்லி நாடகம் எழுத சொல்லி, அந்தப் பையனையே நடிக்க வெச்சு அவங்க அப்பாவும் வந்து பாத்தாரு.
லுங்கி கட்டிக்கிட்டு வந்த அந்த ஆளு டிராமா முடியும் போது சொன்னா நம்ப மாட்டீங்க விக்கி விக்கி அழறாரு. ஐயோ என் பையனையா நான் இப்படி கொடுமை பண்ணினேன்னு. அதுக்கப்புறம் அந்த பையனை படிக்க வெச்சாரு. தொடர்ந்து படிச்சுருப்பான்னு நினைக்கிறேன்.
பெற்றோர்களையும் இப்படி திருத்த வேண்டியிருக்கு.
தனியார் பள்ளியில் ஒழுங்கீனம் இல்லைன்னு நினைக்காதீங்க. இங்க பள்ளிக்கூட காதல் ரொம்ப சர்வ சாதாரணம். இதை கவனிச்சு கலைச்சு விடறதுக்கே நேரம் சரியாயிருக்கும்.
போதை வஸ்துக்கள் வேற சர்வ சாதாரணமா கிடைக்கிற இந்த காலத்தில பசங்க கெட்டு போறதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு.
16 வயசுக்குள்ளயே எல்லாத்தையும் எக்ஸ்ப்ளோர் பண்ணனும்னு நினைக்கிறாங்க. காரணம் பியர் பிரஷர். அவன் பண்றானே நாமளும் அப்படி இருக்கணும்னு ஒரு வெறி.
நான் சொல்லப்போறது நிஜம். எனக்கு இப்ப இருக்கிற ஜெனரேஷனை நினைச்சு பயமா இருக்கு.
இதை எப்படி மாத்தறதுன்னு புரியலை.
ஒரே வழி பெற்றோர்கள் தினமும் பசங்களோட உக்காந்து பேசணும். அவர்களின் நடவடிக்கைகளை போலீஸ் மாதிரி வேவு பாக்க வேண்டாம். ஆனா அவர்களின் அசாதாரன அசைவுகளை கவனிக்னும்.
தனியார் பள்ளில இப்படியெல்லாம் வாத்தியாரை அடிக்கப் போனா டிசி குடுத்து அனுப்பிச்சுருவோம். இது மாதிரி வயலன்ஸ்லாம் ஆவாது ஆனா மத்த ஒழுங்கீனங்கள் நடந்துக்கிட்டு தான் இருக்கு. என்று முடித்துக் கொண்டார்.
கல்வி என்பது என்ன ??
எண்ணும் எழுத்தும் மட்டும் தானா ??
எண்ணமும் ஒழுக்கமும் தான்.
எது நல்லது எது கெட்டது என்று கேட்டால் வள்ளுவர் ஒன்று சொல்கிறார். ஆணி அடித்தது போல சொல்கிறார்.
வீட்டுக்குச் சென்று குடும்பத்தாருடன் நீங்கள் செய்த செயலை பகிர்ந்து கொள்ளக்கூடிய எதுவுமே நல்ல செயல் என்கிறார்.
இரண்டு அனுபவசாலியான ஆசிரியர்களும் சொன்னது ஒரு விஷயம் தான்.
தன் குழந்தைகள் கல்வியில் சிறந்து, தன்னுடைய குடும்பத்தை கரையேற்றும், பெருமைப்பட வைக்கும் என்று பள்ளிக் கூடத்திற்கு அனுப்பும் அப்பாவி பெற்றோர்களை ஏமாற்றும் இந்த ஒழுக்கமில்லா மாணவர்களின் செயல்களுக்கு யார் பொறுப்பு என்றால்,
25 சதவிகிதம் மாணவர்களுடையது என்றால் ஐம்பது சதவிகிதம் அரசுக்கு இருக்கிறது. நிர்வாகத் திறமையின்மை முக்கிய காரணம். கல்வித் தரம் இல்லை.
விலையில்லா பொருட்கள் அரசு வினியோகம் செய்வது போலவே தரமில்லா கல்வியும் வழங்கப்படுகிறது.
மீதமிருக்கும் 25 சதவிகிதம் பெற்றோர்களிடமே திரும்புகிறது.
இந்த ஒழுங்கீனங்களுக்கு தீர்வு சொல்வது சுலபமல்ல…
இந்த ஒரு வாரத்தில் இந்த பிரச்சினையைப் பேசி முடித்து விடவும் முடியாது…
அடுத்த வாரம் தொடர்வோம்…….

Leave a comment
Upload