தொடர்கள்
தொடர்கள்
மாண்புமிகு மனிதர்கள் 2 - 2-சைதை துரைசாமி

20220330092440151.jpeg

சைதை துரைசாமியை எனக்கு கிட்டத்தட்ட 37, 38 ஆண்டுகளாக தெரியும்.சைதை துரைசாமி -சட்டமன்ற உறுப்பினர்,மேயர், மனிதநேயர், சமூக சேவகர் நல்ல மனிதர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

1984இல் சைதை துரைசாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைக்கும் உதாரணமாக இருப்பவர் அவர்தான்.சட்டசபை கூட்டத்தின் எல்லா நாட்களிலும் அவர் கலந்து கொண்டார். அதாவது இப்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாதிரி கையெழுத்துப் போட்டுவிட்டு எட்டிப் பார்த்துவிட்டு போகும் சட்டமன்ற உறுப்பினர் அவரல்ல.

சட்டமன்ற நாட்களில் அவை முடியும் வரை அவையில் இருப்பார் தனது கருத்துக்களை பதிவு செய்வார். சட்டமன்றத்தில் நிறைய கேள்வி கேட்டவர் என்று தொடர்ந்து சட்டமன்ற பதிவுகளில் சாதனையாக சைதை துரைசாமி செயல்பாடு பதிவாகி இருக்கிறது. இவர் கேள்வி கேட்டாலே அமைச்சர்கள் அதி ஜாக்கிரதையாக மிகுந்த கவனத்துடன் பதில் சொல்வார்கள் ஏதோ போகிற போக்கில் ஏனோ தானோ என்று பதில் இருந்தால் அவர்கள் சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் சிக்கிக் கொண்டார்கள் என்றுதான் அர்த்தம். ஏனென்றால் முழு புள்ளிவிவரம் அவர் கைவசம் இருக்கும்.

ஒரு முறை உள்ளாட்சித் துறை அமைச்சர் சென்னை நகரில் இந்த அரசு செய்த சாதனைகள் என்று பட்டியலிட்டுக் கொண்டே வரும்போது குறுக்கிட்ட சைதை துரைசாமி நீங்கள் சொல்கிறபடி எல்லாம் பெரிதாக நடந்ததாக எனக்கு தெரியவில்லை. குறிப்பாக தனியார் தெருக்களில் இன்றும் அடிப்படை வசதி எதுவும் இல்லை சாலை வசதி குடிநீர் வசதி கழிவுநீர் வசதி மின்சார வசதி தெருவிளக்கு வசதி போன்றவை உறுதிசெய்யப்படவில்லை என்று சொல்ல அமைச்சர் ஒரு மாதிரி சமாளித்து வேறு விஷயத்துக்கு போய் விட்டார்.எம்.ஜி.ஆர், அமைச்சர்கள் சட்டசபையில் சைதை துரைசாமி இடம் மாட்டிக்கொண்டு. முழிப்பதை பார்த்து ரசிப்பார்.

20220330092529247.jpeg

காவல்துறை என்பது புனிதமான பணியாக இருந்த காலத்தில் சில திரைப்படங்களில் காவல் துறையின் கண்ணியத்தை குறைப்பது போல் மரியாதையை குறைப்பது போலிருந்த சில காட்சிகளை சுட்டிக்காட்டி தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா என்று கேட்டவர் சைதை துரைசாமி. அப்போது வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தை குறிப்பிட்டுகாவல்துறை அதிகாரியை கொள்ளைக்காரர் போல் சித்தரித்திருக்கிறார்கள் இதெல்லாம் தவறு இந்த போக்கு முற்றிலும் மாற வேண்டும்என்று அப்போதே சட்டசபையில் பேசியவர் சைதை துரைசாமி.

தெருக்களில் ஜாதி பெயரை நீக்க வேண்டும் என்று முதல்வர் எம்.ஜி.ஆர் கொள்கை முடிவு எடுத்தார் அதை வரவேற்று சட்டசபையில் சைதை துரைசாமி. ஜாதி பெயரை நீக்க வேண்டும் என்பது ஒரு நல்ல முடிவுதான் ஆனால் அதற்கு சில விதிவிலக்குகளை நாம் அனுமதிக்க வேண்டும். டாக்டர் ரங்காச்சாரி சாலை என்பது அவரின் சேவைக்கு அடையாளமாக நாம் அந்த தெருவுக்கு அவர் பெயரை வைத்தோம் ரங்காச்சாரியிலுள்ள சாரி என்பதை நீக்கி டாக்டர் ரங்கா தெரு யாருக்கும் தெரியாது காலப்போக்கில் நாம் டாக்டர் ரங்காச்சாரியை மறந்துவிடுவோம். இதேபோல் இன்னொரு உதாரணம் டாக்டர் லட்சுமணசாமி முதலியார் என்று அவர்மிகச்சிறந்த கல்வியாளர் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் என்று எல்லோருக்கும் தெரியும் முதலியாரை நீக்கிவிட்டு லட்சுமணன் என்று அவர் பெயரைப் பயன்படுத்தினால் யாருக்கு தெரியும் காலப்போக்கில் லட்சுமணசாமி முதலியாரை நாம் மறந்து அவர் கல்விக்காக ஆற்றியதொண்டும் மறந்துபோகும்.எனவே புகழ் பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்த தைரியசாலி அவர்.

வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று 1986 சட்டசபையில் பேசியவர் அவர். இந்த யோசனை நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தேர்தல் ஆணையத்திற்கு வந்தது. அதேபோல் தேர்தல் செலவு பற்றிய விவாதத்தில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவு செய்ய 50,000 நாடாளுமன்றத் தேர்தல் செலவு செய்ய ஒன்றரை லட்சம் மட்டுமே அனுமதி இங்கே இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் உண்மையில் தேர்தல் செலவு 50 ஆயிரம் தான் செலவு செய்தோமா என்று உண்மையை வெளிப்படையாக பேசிய அப்பாவி சட்டமன்ற உறுப்பினர் அவர்..

பாதாள ரயில் திட்டம் பற்றி 1986லேயே பேசியிருக்கிறார் சைதை துரைசாமி இதேபோல் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகிறது. இதனால் குடிநீர் கழிவுநீர் வடிகால் ஆகியவற்றினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி சட்டசபையில் விரிவாகப் பேசி இதனால் சென்னையில் சுத்தமான காற்று கூட ஒருகட்டத்தில் கிடைக்காமல் போகும் என்ற உண்மையை சொல்லி சென்னைக்கு வெளியே இது போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளைகட்டும் திட்டங்களைசெயல்படுத்துங்கள் என்று யோசனை சொன்னவர் அவர். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தது என்னவோ மூன்று வருடங்கள் தான் ஆனால் இப்போதும் அவரது சட்டமன்ற பதிவுகள் பேசும் பொருளாக இருக்கிறது காரணம் அவர் பேசியது எல்லாம்சமுதாய கவலை சார்ந்திருக்கும்.

ஒருமுறை அவரை நான் சந்திக்க சென்றபோது ஒருவர் கோரிக்கை மனுவுடன் அவரை சந்திக்க காத்திருந்தார். சைதை துரைசாமி வந்ததும் அவரிடம் அவரது கோரிக்கை மனுவை நீட்டும்போது அருகிலிருந்த கட்சிக்காரர் "அண்ணா இவர் திமுக காரர் இவர் நமக்கு ஓட்டு போடவில்லை "என்றார் சைதை துரைசாமி பதட்டப்படாமல் திமுக- , அதிமுக என்பதெல்லாம் தேர்தலோடு முடிந்து விட்டது இவருக்கும் சேர்த்து தான் என்னை மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர் எந்த கட்சியாக இருந்தால் என்ன அவரும் நமது தொகுதி சார்ந்தவர் தானே "என்று சொல்லி அவர் மனுவை வாங்கிப் படித்துப் பார்த்து உடனே அதற்கான நடவடிக்கையை எடுக்க சொன்னார். இப்போது அப்படிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை.

2011 முதல் 2016 வரை சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி இருந்தார். அரசு கார் அரசு தொலைபேசி இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் இதே போல் அரசுப் பயணமாக வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு சென்ற போது கூட தனது சொந்த செலவில் தான் சென்று வந்தார். 2015இல் கடுமையான வெள்ளத்தின் போது இவரது கார் பாதிக்கப்பட்டது. வெள்ளைப் பகுதிகளை பார்வையிட அரசு வாகனத்தை பயன்படுத்தினார். எத்தனை நாள் பயன்படுத்தினார் என்பதை கணக்கு வைத்துக்கொண்டு அதற்கான கட்டணத்தை அரசு கஜானாவில் உடனே செலுத்தியவர் சைதை துரைசாமி.

இவர் மேயராக இருந்தபோது இவர் செய்த சாதனைகளை ஒரு புத்தகமாகவே போடலாம் ஆனால் இந்த சாதனைகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டுகிறார் போல்அவர் ஒரு சாதனை செய்தார் அதுதான் அம்மா உணவகம்.

20220330093206701.jpeg

அம்மா உணவகம் என்பது இவர் யோசனையில் உதித்தது தான்.அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மலிவு விலை உணவகம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை சொன்னார். முதல்வரும் மனமகிழ்வுடன் அந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தந்தார்.

2005ஆம் ஆண்டு சைதாப்பேட்டை பூக்கார தெருவில் மனித நேய அறக்கட்டளை சார்பில் மலிவு விலை உணவகம் ஒன்றை தொடங்கியிருந்தார் சைதை துரைசாமி அனைத்துஉணவுகளும் ஐந்து ரூபாய்தான் சுகாதாரமாகவும் சுவையாகவும் இருந்ததால் இந்த மலிவு விலை உணவகத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது அதன் தாக்கம்தான் அம்மா உணவகம்

காலையில் இட்லி விலை ஒரு ரூபாய் மதியம் சாம்பார் சாதம் கருவேப்பிலை சாதம் எலுமிச்சை சாதம் விலை ஐந்து ரூபாய் தயிர் சாதம் விலை மூன்று ரூபாய் இரவு இரண்டு சப்பாத்தி பருப்புக் கரைசலுடன் மூன்று ரூபாய் என்றும் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது. அந்த திட்டம் நல்ல வெற்றி அடைந்ததும் மலிவு விலை உணவகம் அம்மா உணவகம் என்று பெயர் மாறியது.

முதலில் ஏழை எளியவர்கள் நடைபாதை வாசிகளுக்கு பயன்பட்டும் என்று தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது .ஆனால் விலை தரம் அம்மா உணவகத்தின் சுகாதார நடுத்தர மக்களையும் ஈர்க்கத் தொடங்கியது.ஓட்டல்களில் ஒரு குடும்பம் உணவருந்த 400, 500 என்று செலவு செய்ய வேண்டியிருந்தது .ஆனால் அம்மா உணவகத்தில்குடும்பமே 40 ரூபாயில்நிறைவாக சாப்பிட முடிந்தது. அம்மா உணவகம் சென்னையில் பிரபலமானதும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியிலும் அம்மா தொடங்க விரும்பினார்கள்.தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் பிரபலமானது. அதன் பிறகுவெளி மாநிலங்களிலிருந்தும் அம்மா உணவகத்தை பார்வையிட்டு அந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களிலும் போன்ற மலிவு விலை உணவகங்களை தொடங்கினார்கள்.கர்நாடகா ஆந்திரா மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் உத்திரபிரதேசம் ஒடிசா என்று பல மாநிலங்களில் இதே போன்ற உணவகங்கள் தொடங்கப்பட்டன.

2015 கடுமையான வெள்ளத்தின் போது ஹோட்டல்கள் டீக்கடைகள் கூடஇயங்க முடியாமல் போனது அப்போது மேயர் சைதை துரைசாமி போர்க்கால நடவடிக்கையாக எல்லா அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்கிறார். அம்மா உணவகத்திற்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஆட்சி அமைக்க அம்மா உணவகம் ஒரு முக்கிய காரணம்.அம்மா உணவகம் சைதை துரைசாமி யோசித்து அறிமுகப்படுத்தியது ஆனால் இதற்காக அவரை பாராட்ட முற்பட்டால் எல்லாம் அம்மாவின் உற்சாக ஆதரவு தான் காரணம் பாராட்டை கூட உரிமை கோராத வித்தியாசமான அரசியல் தலைவர் அவர்.

2022033009330340.jpeg

இதேபோல் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை இன்றுவரை மத்திய மாநில அரசுத் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளித்து ஐ..எஸ்,.பி.எஸ் முதல் கிராம நிர்வாகி வருமான வரித்துறை ஆணையர் காட்டிலாகா அதிகாரி பலர் பல உயர் பதவியில் அமர மனிதநேய அறக்கட்டளை விளம்பர வெளிச்சம் இன்றி அமைதியாக சாதித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு பல ஐ..எஸ் அகாடமிகள் அரசு தேர்வை வியாபாரமாக்கி அகடமி என்ற பெயரில் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் மனித நேய அறக்கட்டளை பயிற்சி இலவசம் வெளியூரிலிருந்து இங்கு பயிற்சி பெறுவார்கள் உணவு இலவசம் தங்குமிடம் இலவசம் என்று கரிசனத்தோடு அவர்களை பார்த்துக் கொண்டு அவர்களை அரசு பதவியில் அமரவைத்து அழகு பார்க்கிறார் சைதை துரைசாமி.

சைதை துரைசாமி அரசியல் தலைவர் என்பதை தாண்டி மனிதநேயர் என்ற பெயர் இப்போது அவரை உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது. ஆனால் அவர் பாராட்டை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத சாமானியர் ஆகத்தான் இன்றும் சைதை துரைசாமி இருக்கிறார்.

காரணம் அவருக்கு இதுதான் மகிழ்ச்சியைத் தருகிறது.