தொடர்கள்
பொது
ஹீராபென் மோடி 100. - பால்கி

20220522135432232.jpg

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி ஜூன் 18, 2022 அன்று தனது 100 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்தார். இதனை முன்னிட்டு, குஜராத்தின் காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்ற மோடி, இல்லத்தில் தனது தாயின் முன்னிலையில் கடவுளர்களுக்கு பூஜை செய்தார். பின்னர் தாயின் பாதங்களை நீரினால் அபிஷேகம் செய்து பூஜை செய்தார். அந்த அபிஷேக நீரை தனது கண்களில் ஒற்றிக்கொண்டார். தாயின் பாதங்களில் விழுந்து வணங்கியும் ஆசி பெற்றார்.

முன்பெல்லாம் சாதாரணமாக காணக்கிடைக்கும் இந்த செயல்பாடு, இன்றைய தினங்களில், குருகி போய்க்கொண்டிருக்கிறது நம் பாரதப் பண்பாடு. இந்த காட்சி பார்போர் நெஞ்சை நெகிழ வைத்தது . ஹீராபென் அம்மையார் தனது இளம் பிராய காலத்தை எண்ணி இன்ப நினவலையில் நிச்சயம் சென்றிருப்பார்.

தாயாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் அம்மா பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அம்மா

அம்மா- அகராதியில் இதற்கு இணையான வேறு சொல்லைக் காண முடியாது. அன்பு, பொறுமை, நம்பிக்கை இதுபோன்ற எத்தனையோ விதமான முழுமையான உணர்வுகளை இது உள்ளடக்கியுள்ளது. உலகம் முழுவதும், நாடு அல்லது மதம் என எதுவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர்களது அன்னையின் மீது தனிப்பாசம் இருக்கும். தாய் என்பவள் தனது குழந்தைகளை பெற்றெடுப்பதுடன் இல்லாமல் அவர்களது மனம், ஆளுமை, தன்னம்பிக்கை ஆகியவற்றை வடிவமைக்கிறாள். அவ்வாறு செய்யும்போது, தாய்மார்கள் சுயநலம் தவிர்த்து தங்களது சொந்த தேவைகளையும், விருப்பங்களையும் தியாகம் செய்கிறார்கள்.

எனது தாயார் திருமதி ஹீராபாய் தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைப்பதை பகிர்ந்துகொள்ளும் நல்வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது பற்றி, இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். இது அவரது நூற்றாண்டாக இருக்கப்போகிறது. எனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் அவரும் தனது நூறாவது வயது நிறைவு நாளை சென்ற வாரம் கொண்டாடியிருப்பார். எனது அன்னையின் நூற்றாண்டு தொடங்குவதும் எனது தந்தையின் நூறாண்டு நிறைவடைவதும் இந்த 2022 என்பதால் இது ஒரு சிறப்பான ஆண்டாகும்.

கடந்த வாரம் எனது மருமகன் காந்தி நகரில் இருந்து அன்னையின் சில வீடியோக்களை பகிர்ந்திருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். எனது தந்தையின் புகைப்படம் ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டிருந்தது. எனது அன்னை மஞ்ஜீராவை இசைத்து கொண்டு பஜனை பாடல்கள் பாடுவதில் ஆழ்ந்திருந்தார். வயது காரணமாக உடல் ரீதியாக தளர்வடைந்த போதிலும், மனதளவில் சுறுசுறுப்பாகவே இன்னும் உள்ளார்.

20220522135459946.jpg

முன்பெல்லாம் எங்களது குடும்பத்தில் பிறந்த நாட்களை கொண்டாடும் வழக்கம் இருந்ததில்லை. இருந்தாலும் இளம் தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகள் எனது தந்தையின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 100 மரக் கன்றுகளை நட்டனர். எனது வாழ்க்கையில் எல்லாம் நன்றாகவே இருந்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனது குணம் நன்றாக இருப்பதற்கு எனது பெற்றோரே காரணமாவர். இன்று நான் டில்லியில் இருந்தாலும், எனது கடந்த கால நினைவுகளில் நான் மூழ்கியிருக்கிறேன்.

அம்மா வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவி வந்தார். எங்களின் சொற்ப வருமானத்திற்கு துணையாக சர்க்காவை சுற்றவும் அவள் நேரம் ஒதுக்குவாள். பருத்தி உரிப்பது முதல் நூல் நூற்பு வரை அனைத்தையும் செய்வாள். இந்த முதுகை உடைக்கும் வேலையில் கூட, பருத்தி முட்கள் நம்மைக் குத்தாமல் இருப்பதை உறுதி செய்வதே அவரது முதன்மையான அக்கறை,”

மற்றவர்கள் மகிழ்வதைக் கண்டு அம்மா மகிழ்வார். எங்களது வீடு சிறியதாக இருந்தாலும், அவர் பரந்த சுபாவம் கொண்டவர். எனது தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசித்து வந்தார். அவர் எதிர்பாராவிதமாக காலமானதும், அப்பா அவரது நண்பரின் மகனான அப்பாஸை, எங்களது வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் எங்களது வீட்டில் எங்களுடன் தங்கி அவரது படிப்பை முடித்தார். எனது சகோதர சகோதரிகள் மீது காட்டுவதைப் போன்றே அம்மா, அப்பாஸிடமும் பாசம் காட்டி அவரை கவனித்துக் கொண்டார். ஆண்டுதோறும் ரமலான் பண்டிகையின் போது, அப்பாஸிற்கு பிடித்த திண்பண்டங்களை அம்மா செய்து கொடுப்பார். பண்டிகைகளின்போது, பக்கத்து வீட்டு குழந்தைகள் எங்களது வீட்டிற்கு வந்து அம்மா தயாரித்த சிறப்பு திண்பண்டங்களை ருசித்து செல்வார்கள்.

தற்போது பல ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், உங்களது மகன் நாட்டின் பிரதமரானதை நினைத்து நீங்கள் பெருமிதம் அடைகிறீர்களா என்று அவரிடம் எப்போது கேட்டாலும், அம்மா அவர்களுக்கு மிகுந்த பொறுப்புடன் பதில் சொல்வார். “உங்களைப் போன்றே நானும் பெருமிதம் அடைகிறேன். எதுவும் என்னால் ஆனதல்ல. ஆண்டவனின் திட்டத்தில் நான் ஒரு சிறு துரும்புதான்என்று அம்மா கூறுவார்.

நான் பங்கேற்கும் எந்த அரசு அல்லது பொது நிகழ்ச்சிகளுக்கும், அம்மா என்னுடன் வந்ததில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடந்த காலங்களில் இரண்டே இரண்டு முறை மட்டும் அவர் நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளார். ஒருமுறை, ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்து லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றிவைத்து ஸ்ரீநகரிலிருந்து நான் திரும்பி வந்த போது, அகமதாபாதில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்று எனது நெற்றியில் திலகமிட்டார்.

என் தாயாருக்கு அன்று மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஏனெனில், ஏக்தா யாத்திரை சென்ற சிலர் பக்வாராவில், தீவிரவாத தாக்குதலில் இறந்து விட்டனர். இதை கேட்டு அம்மா மிகவும் கவலைப்பட்டார். அப்போது இரண்டு பேர் என்னை பார்க்க வேண்டும் என்று அழைத்தனர். ஒருவர், அக்ஷர்தம் கோயிலின் ஷ்ரதே ப்ரமுக் ஸ்வாமிகள். இன்னொருவர் என் அம்மா. அம்மாவை பார்க்க போனபோது அவர்களின் நிம்மதி எனக்கு நன்றாக தெரிந்தது.இரண்டாவது நிகழ்ச்சி, 2001-ம் ஆண்டில் நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது நடந்தது. 20 வருடங்களுக்கு முன், நான் குஜராத் முதல்வராக பதவியேற்ற விழாவில் தான் என் அம்மா என்னுடன் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் என்னுடன் எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. நான் குஜராத் முதல்வராக பதவியேற்றபோது, எனது ஆசிரியர்கள் அனைவரையும் பொதுமேடையில் கவுரவப்படுத்த நினைத்தேன். என் தாயாரை தான் என் வாழ்க்கையில் பெரிய ஆசிரியையாக நினைத்திருந்தேன். நமது வேதங்கள் கூட, அம்மாவை தவிர வேறுயாரும் பெரிய குரு இல்லை என்று தெரிவிக்கின்றன. அதனால் என் அம்மாவை விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தேன். ஆனால் என் அன்னை மறுத்து விட்டார். நான் ஒரு சாதாரண பிரஜை. நான் உன்னை பெற்றெடுத்திருந்தாலும், கடவுளின் அருளும், மக்களின் ஆசியும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளன. அதனால் எனக்கு கவுரவம் வேண்டாம் என்று தெரிவித்து விட்டார். விழாவில் மற்ற ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

என் அம்மா, தனது வாழ்நாளில் எந்தஒரு குறையையும் சொல்லி நான் கேட்டதில்லை. அவர் யாரைப் பற்றியும் எந்தவொரு குறையையும் சொன்னதில்லை. அவர் யாரிடமிருந்தும் எந்த ஒன்றையும், எப்போதும் எதிர்பார்ப்பதுமில்லை. என் அம்மாவுக்கு எப்போதும் எந்த சொத்துகளும் இல்லை. என் அம்மா ஒரு எறும்பு அளவு தங்கம் அணிந்திருப்பதையும் நான் பார்க்கவில்லை. என் அம்மா எப்போதும், எதன் மீதும் ஆசைப்பட்டதுமில்லை. என் அம்மா இப்போதும் ஒரு சிறு அறையில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு நான் அவரைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு, எனக்கிருக்கும் பெரும் பொறுப்புகள் மீதான அக்கறையை நழுவவிட்டுவிடக்கூடாது என்ற கவலை. அவரிடம் எப்போது தொலைபேசியில் பேசினாலும் எந்த தப்பையும் செய்துவிடாதே, எந்த காரணத்தை கொண்டும் லஞ்சம் மட்டும் வாங்காதே என்று கூறினார். யாருக்கும் எந்ததீங்கும் செய்துவிடாதே, ஏழைகளுக்காக பணியாற்று என்று கூறிக்கொண்டே இருப்பார்.

ஒவ்வொரு வறுமைக்கதைக்கு பின்னாலும், ஒரு அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம் ஒளிந்திருக்கிறது.ஒவ்வொரு சவாலுக்கும் பின்னே ஒரு அன்னையின் உறுதியான முடிவு ஒளிந்திருக்கிறது.

அம்மா உங்களுக்கு மிக மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களைப்பற்றி விரிவாக பொதுவெளியில் எழுதும் துணிச்சல் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை.

அம்மா! உங்களது ஆரோக்கியமும், நலனும் சிறந்திருக்க நான் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

எங்களது அனைவருக்கும் உங்களது ஆசிர்வாதங்களை வேண்டி நிற்கிறேன்.

உங்கள் காலடியில் தலைவணங்குகிறேன்.

இப்படி முடியும் மோடியின் கடிதம் நாடு முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான வாட்நகரில், அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்யும் வகையில், மத நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரெய்சன் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு பூஜ்யா ஹிராபா மார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று உள்ளூர் மேயர் தெரிவித்தார்.

ஹீரா பென் அம்மையார் நோய் நொடியின்றி வாழ எல்லா வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறது விகடகவி. !!!