எதற்காகத் தோப்புக்கரணம்?
கோவில்களில் போடப்படும் தோப்புக்கரணம் என்பது நம் முன்னோர்களின் உடல் அறிவியல். அவர்கள் கோவிலில் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று செய்து காட்டினர். அவர்கள் அறிவியலை ஆன்மீகம் மூலமாக ஊட்டினர். இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையாகத் தோப்புக்கரணம் இருந்து வந்துள்ளது. விநாயகரை வணங்கும் போது தோப்புக் கரணம் போட்டு நெற்றியில் இரு கைகளால் மாற்றி மாற்றி நெற்றியில் கொட்டிக் கொண்டு விநாயகரை வணங்க வேண்டும் என்றனர். நம்முடைய சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ விஷயங்களை, கோவில்களில் நாம் செய்யும் நடைமுறைகளாக மாற்றி வைத்திருக்கின்றனர், ஆனால் நாமோ அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.
காஞ்சி மஹா பெரிவா சொன்ன விளக்கம்:
தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணு. ஒரு முறை மருமகன் விநாயகரைப் பார்க்கக் கைலாயம் சென்றவர் குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காக தன் சக்கரத்தைச் சுற்றிக் காட்டினார். குழந்தை தன் தும்பிக்கையை நீட்டி சக்கரத்தைப் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டது. என்ன செய்தும் அதைத் திருப்பி வாங்கமுடியாமல் கடைசியில் விஷ்ணு தன் நான்கு கைகளினாலும் தன் இரு காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்த குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க, வாயிலிருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டது சமஸ்கிருதத்தில் தோர்பிஹ் (கைகளால்) கர்ணம் (காது) என்று குறிப்பிடப்பட்டது. இதுதான் காலக்கிரமத்தில் 'தோப்பிக்கரணம்', 'தோப்புக்கரணம்' என்றாகியிருக்கிறது. மஹாவிஷ்ணுதான் இதை முதலில் தொடங்கினார், அன்றுமுதல் தோப்பிக்கரணம் போடும் வழக்கம் வந்தது. இதைத் தினமும் விநாயகப் பெருமானை வழிபடும்போது போட்டால் அவருடைய அருளும் கிட்டும். உடலுக்கும் நரம்பு மண்டலத்திற்கும் நல்ல உடற்பயிற்சியுமாகும்.
தோப்புக் கரணம்:
மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.
தோப்புக்கரணம் போடுவது என்பது முன்பெல்லாம் பள்ளிகளில் மிகச் சாதாரணமாகக் குழந்தைகள் தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதத் தவறினாலோ ஆசிரியர்கள் குழந்தைகளைத் தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள். பள்ளிகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்குத் தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்தது. அதனை வழிவழியாக அதன் உண்மையான காரணம் அறிந்த பெரியவர்கள், தவறு செய்தவர்களுக்கு, தான் செய்த தவறு என்ன என்பதை உணர்வதற்குத் தேவையான ஒரு அறிவைப் பெறும் அல்லது ஒரு நினைவைப் பெறும் முயற்சியாகவே தோப்புக்கரணத்தைப் பயன்படுத்தினர்.
தோப்புக்கரணம் போடும் பழக்கம் தற்காலத்தில் குறைந்து கொண்டே தான் வருகிறது. ஆனால் தோப்புக்கரணம் போடுவதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றது.
பல ஆண்டுகளாக நமக்குத் தெரியாமலேயே செய்து வரும் யோகாசனம் தான் தோப்புக்கரணம். நாம் மற்ற உடற்பயிற்சிகள் செய்யாவிட்டாலும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், நாம் பல நன்மைகளை அடையலாம். இதை வெளிநாடுகளில் சூப்பர் பிரெயின் யோகா என்று குறிப்பிடுகின்றனர்.
லாஸ் ஏஞ்சலைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் றொபின்ஸ் (Dr.Eric Robins) தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாகக் கூறுகிறார். பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறுகின்றார்.
யேல் பல்கலைக்கழக (University of Yale) நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் அங் (Dr.Eugenius Aug) இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் பயன்கள்:
தோப்புக்கரணம் போடும் போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைவதால் அது நம்மைச் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. காலை நேரங்களில் தோப்புக் கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவி செய்கிறது.
மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவுகின்றது. அதைத்தவிர மூளைக்குச் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற உதவுகிறது.
தோப்புக்கரணம் போடும் போது இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து உட்கார்ந்து எழும் போது, மூளையில் உள்ள இருபகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகச் செல்வதால் மூளை பலமடையும்.
இந்த தோப்புக் கரணத்தைத் தொடர்ந்து செய்து வருவதால் மூளை சுறுசுறுப்படைந்து, நினைவு செல்கள் விழிப்படையச் செய்கின்றது. இவற்றைத் தவிர ஆட்டிசம் (Autism) போன்ற குறைகளையும் குணப்படுத்த உதவும்.
ஆட்டிசம் நோய் குணமாகும்:
குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் வளர்ச்சிக் குறைபாடாக இருப்பதையே ஆட்டிசம் நோய் எனக் கூறுவார்கள். ஆட்டிசம் மற்றும் மன இறுக்கம் போன்ற நோய்கள் தோப்புக் கரணம் போடுவதால் குணமடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பயிற்சியைத் தினமும் ஐந்து நிமிடம் செய்து வந்தால் போதும் உடலில் பல விதமான மாற்றங்களை உணர முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் நமது முறையை வெளிநாட்டவர்கள் “பிரைன் யோகா” எனக் கூறியதால் நாமே பிள்ளைகளின் மனப்பாடம் செய்யும் திறன் அதிகரிக்க இந்த மாதிரியான இடங்களுக்குப் பயிற்சிக்கு அனுப்பி அளிக்கிறோம்.
இனிமேலாவது நமது இளைய தலைமுறையினர் தினமும் கோயிலிலோ, வீட்டிலோ அதிகபட்சம் ஐந்து நிமிட நேரம் தோப்புக்கரணம் போட்டு வந்தால் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகச் சென்று, உடலின் ஆற்றல் நிலை தூண்டப்பட்டு, ஞாபகசக்தி அதிகரிக்கும், உடலில் புத்துணர்ச்சியும், செயல்களில் ஊக்கமும் உண்டாகும். மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு விலகும், மேலும், உடல் கை கால் தசைகள் எல்லாம் இறுகி, உடல் வலுவாக விளங்கி, ஆரோக்கியமாக வாழலாம்.
Leave a comment
Upload