“உங்க கல்யாணத்தை பெரியவங்களா பொருத்தம் பார்த்து நடத்திவைச்சாங்க? நீயும், அப்பாவும் காதலிச்சுதானே கட்டிக்கிட்டீங்க? அதேமாதிரி… நானும் காதலிச்சவனையே, கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். இதை ஏன் தப்புன்னு சொல்லறீங்க?” என்றாள் ஹேமா.
“நானும், உன் அப்பாவும் ஒரே ஜாதி, ஒரே மதம். அதுமட்டுமில்லே… எங்களோட இரண்டுபேர் வீட்டிலேயும், எங்க காதலைச் சொல்லி, அவங்களோட சம்மதம் வாங்கிகிட்டுதான், நாங்க கல்யாணம் செஞ்சுகிட்டோம். உன்னைமாதிரி… வேற்று மதத்தை சேர்ந்த பையனை, நானொன்றும் காதலிக்கலேயே?” என்று கொதித்தாள் ஹேமாவின் அம்மா ‘மைதிலி’.
“அப்போ… நான் வேற மதத்துப்பையனை காதலிப்பதைத்தான் தப்புன்னு சொல்லறீங்களா? எனக்கு இந்த ‘மதம்… மண்ணாங்கட்டி’ இதைப்பத்தியெல்லாம் அக்கறையில்லை. என் சந்தோஷந்தான் எனக்கு முக்கியம்” என்றாள் ஹேமா.
“புரிஞ்சுக்காம பேசறியே ஹேமா… அந்த மதத்தை சார்ந்து வாழப்போனால், குழந்தையிலேயிருந்து நீ அனுபவிச்சுவந்த பல ‘சுதந்திரங்களை’ இழக்க நேரிடும். குறிப்பா… ‘பூவும், பொட்டும்’ வைச்சுக்க முடியாது, நாட்கிழமைகளில் கோவிலுக்குக்கூட போக முடியாது” என்றாள் மைதிலி.
“பிறந்தது முதல் சைவ உணவு பழக்கத்தையே ஃபாலோ பண்ணும் நீ எப்படி, அசைவத்துக்கு உன்னை மாத்திப்பே?” என்றார் ராகவன்.
“இதைப்பற்றி ஏற்கனவே நாங்க இரண்டுபேரும் நிறைய பேசிட்டோம். அவரொண்ணும் ‘மதவெறி’ பிடிச்ச தீவிரவாதியில்லே. எந்தக் காலத்திலேயும் என்னோட உரிமைகளுக்கு ‘தடை’ சொல்லமாட்டார். என் பிரச்சனைகளை நானே பார்த்துக்கட்டும்னு விட்டுடாம, தானும் என்னோட சேர்ந்து போராடுவேன்னு, ‘அவர்’ எனக்கு வாக்குறுதி குடுத்திருக்கார்” என்றாள் ஹேமா.
“ஆனால்… திருமணத்துக்கு முன்னாடி நீ அவங்க மதத்துக்கு மாறணுங்கிறது ‘நடைமுறையிலுள்ள’ அவங்களோட மதக்கோட்பாடுன்னு உனக்குத் தெரியுமா?” என்றார் ராகவன்.
“இருக்கட்டுமே மாறிட்டுப்போறேன்… எல்லா மதத்திலேயுந்தான் கட்டுப்பாடுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் இருக்கு. நான் மதம் மாறுவதை, பாவமாகவோ, தவறாகவோ நினைக்கலை”என்றாள் ஹேமா.
“படிச்சு ‘எம்.சி.ஏ.’ பட்டம் வாங்கிட்டு, ஒரு ஐ.டி. கம்பெனியிலே வேலையும் கிடைச்சு, கைநிறைய சம்பாதிக்கிற வரையில் ‘நாங்க’ உனக்கு தேவைப்பட்டோம். இப்போ… ‘மதம் மாறியாவது’ கல்யாணம் பண்ணிகிட்டு, எங்களை தூக்கியெறியவும் தயாராயிட்டே” என்ற மைதிலி… “எக்கேடோ கெட்டுப்போடீ… நான் ‘மலடியாவே’ இருந்துட்டேன்னு நினைச்சுக்கிறேன்” என்று புலம்பினாள்.
“தெரியும்மா… என்னோட ‘பாதையை பிளாக்’ பண்ண நீயும், அப்பாவும் இந்த ‘சென்டிமென்டை’ யூஸ் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன். அடுத்தது என்ன…? வாய்க்கு வந்தபடி திட்டுவீங்க, முடிஞ்சா அடிப்பீங்க, வீட்டுக்கு வராதேன்னு விரட்டுவீங்க, சொத்தெல்லாம் கிடையாதுன்னு மிரட்டுவீங்க… இதெல்லாம் நடந்தாலும் நான் ‘அவரைத்தான்’ கட்டிப்பேன்” என்று உறுதியாகச் சொன்னாள் ஹேமா.
“இப்படியெல்லாம் என் ‘மகள்’ பேசறதுக்கு, காரணம் என்னன்னு, நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றார் ராகவன்.
“காதல்தான்பா… உங்களுக்கும் அம்மாவுக்குமிடையே முப்பது வருஷத்துக்கு முன்னாடி துளிர்விட்டிருந்த அதே ‘அன்பின் ஈர்ப்பு’, இப்போ எனக்கும் ‘அவருக்குள்ளும்’ மலர்ந்திருக்கு. உங்களுக்குள்ளே ஏற்பட்ட அந்த ‘விழையலை’ சரின்னு சொன்ன உங்க மனம், அதையே இப்போ நான் செய்யும் போது ஏத்துக்க மறுக்குது. அதுக்குக் காரணம் உங்க மனசிலே இருக்கிற மத-துவேஷம்” என்று சீறினாள் ஹேமா.
“சரிம்மா… அந்தப்பையனை நாளைக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா. அவனிடமே சில விஷயங்களை நான் நேர்ல பேசறேன்” என்றார் ராகவன்.
“கண்டிப்பா கூட்டிகிட்டுவரேன்… ஆனால், ‘அவரை’ மிரட்டவோ, அவமானப்படுத்தவோ கூடாது” என்று ஹேமா கண்டிஷன் போட்டாள்.
ஹேமா கிளம்பி வெளியே போனதும், “என்னங்க… அவதான் கிறுக்குத்தனமா பேசறான்னா… நீங்களும், அந்தப்பையனை இங்கேயே கூட்டிகிட்டு வரச்சொல்லறீங்க…” என்றாள் மைதிலி.
“நாம அவளோட காதலுக்கு, தடை போடறதுக்கு, அந்தப்பையன் மாற்று மதத்துக்காரனாக இருப்பதுதான் காரணம்னு ஹேமா நினைக்கிறா. அந்த பையனோட ‘காதல்’ போலியானதுன்னு, புரிஞ்சுகிட்டாள்னா… ஹேமாவே அவனை விட்டு விலகிடுவா. எதுக்கும் நாளைக்கு அந்தப் பையங்கிட்டே பேசுவோம்” என்றார் ராகவன்.
அடுத்தநாள் காலையில் பத்துமணியளவில், தன் ‘காதலன்’ வந்ததும், அவனை ‘பெற்றோருக்கு’ அறிமுகப்படுத்தினாள் ஹேமா.
“நீங்களும், ஹேமா வேலைபார்க்கும் அதே கம்பெனியிலேயே ஒர்க் பண்ணறீங்களா?” என்றார் ராகவன். “ஆமாம் சார்… அதே கம்பெனிதான், ஆனால்… வேற ‘பிராஜெக்டிலே’ இருக்கேன்” என்றான் அவன்.
ஹேமாவின் காதலனை தீர்க்கமாக பார்த்த ராகவன், “உங்கள் திருமணத்துக்கு நாங்கள் சம்மதிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
தன் காதலன் வாய்மூடி மௌனமாக இருக்கவே, துணுக்குற்ற ஹேமா “அப்படி ஒரு முடிவோட நீங்க பேசினால், நாங்க உங்களோட ஒப்புதல் இல்லாமலேயே, கல்யாணம் பண்ணிப்போம்” என்றாள்.
“அதாவது… ஓடிப்போய், திருட்டுக் கல்யாணம் பண்ணிப்போம்னு சொல்லவரே” என்றார் ராகவன்.
“நாங்க ஏன் ஓடிப்போகணும்?” என்ற ஹேமாவிடம், “ஏம்மா… நான் எது கேட்டாலும் பதில் பேசக்கூடாதுன்னு, உன் காதலனை, நீ மிரட்டி கூட்டிகிட்டு வந்திருக்கியா?” என்றார் ராகவன் சிரித்தபடியே.
“சார்… அதெல்லாம் ஒன்றுமில்லை… என் வீட்டிலே இருக்கிறவங்க எங்க திருமணத்தை வேண்டாம்னு சொல்லி எதிர்த்தாங்கன்னா… அப்போ நான் பேசறது நியாயமா இருக்கும். ‘இப்போ பிரச்சனை’ ஹேமாவோடதுதானே? அதில் நான் எப்படித் தலையிடுவேன்?” என்றான்.
அங்கிருந்து, உள்ளே எழுந்துபோன மைதிலி, கையில் இரண்டு மாத்திரைகளையும், ஒரு சொம்பில் தண்ணீரையும் கொண்டுவந்து ராகவனிடம் குடுத்து, “மணி பதினொண்ணாகப்போறது, உங்களுக்கு, ‘பிளட் பிரஷர்’ மாத்திரை போட்டுக்கிற டைம் ஆயிடுச்சு” என்றாள்.
“பார்த்தியா ஹேமா… உன்னோட காதலன் என்னடான்னா… இது ஹேமாவோட பிரச்சனை, அவளோட பிராபளத்திலே நான் எப்படி தலையிடுவேன்னு கேட்கிறார். உன் அம்மா என்னடான்னா… எனக்குத்தானே பிரஷர்னு விட்டுடாம, மாத்திரை சாப்பிடுங்கன்னு தருகிறாள்… கவனிச்சியா? இதுக்குப் பேர்தான் ‘காதல்’, அப்பழுக்கில்லாத தாம்பத்தியம்” என்றார் ராகவன்.
“எங்களுக்கும் கல்யாணமாகி, யாருக்காவது வியாதி வந்தால்… நாங்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்திரை குடுத்துப்போம். இதைக் காரணமாக்கி, எங்க காதலை கொச்சைப் படுத்தாதீங்க” என்று எரிந்து விழுந்தாள் ஹேமா.
“இல்லே ஹேமா… காதல்ங்கிற வார்த்தையோட அர்த்தத்தை, நீங்க சரியா புரிஞ்சுக்கலைன்னு சொல்லவரேன். ‘நான் எப்படி ஹேமாவோட பிரச்சனையிலே தலையிடமுடியும்னு’, சொல்லும் உன் காதலனை, நம்பி எப்படி உன் வாழ்க்கையை ஒப்படைப்பே?” என்றார் ராகவன்.
“உங்களுக்குள்ளே இருக்கும் இயல்பான ‘நட்பை’, தவறாக காதல்னு புரிஞ்சுகிட்டிருக்கீங்க” என்றாள் மைதிலி.
“சரி ஹேமா… எதுக்கு வெட்டிப்பேச்சு? எப்போ உன் காதலன்தான் முக்கியம், நாங்க வேண்டாம்னு நீ முடிவு பண்ணிட்டியோ… அப்பவே, எங்களால நீ வாங்கியிருக்கியே ‘எம்.சி.ஏ. டிகிரி’ அதை எங்ககிட்டேயே திருப்பிக்குடு. அந்த டிகிரியைக் காட்டி வாங்கின வேலையை ராஜினாமா பண்ணிடு. இந்த நாலு வருஷமா… நீ சம்பாதிச்சு சேர்த்திருக்கிற ‘பாங்க் பாலன்ஸை’ எங்ககிட்டேயே திருப்பிக் குடுத்துடு” என ராகவன் சொல்லவும் ஆடிப்போனான் ஹேமாவின் காதலன்.
“அது மட்டுமில்லேடி… நீ என் வயத்திலே குடியிருந்த ‘ஒன்பது’ மாத வாடகைக்கும், நான் உனக்கு குடுத்த தாய்ப்பாலுக்கும், நீயே ஒரு விலைபோட்டு குடுத்துட்டு, தாராளமா யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்க” என்ற மைதிலியை பார்க்கமுடியாமல் ‘கூசினாள்’ ஹேமா.
“இங்கே பாருங்க தம்பி… காதல்ங்கிறது ஒரு ‘உணர்வு’ அது வெறும் உணர்ச்சியில்லே. ஹேமாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னா… ‘உங்க மதத்தை விட்டு விலகி… எங்க குலத்துப்பையனா வாங்க… நிச்சயம் நாங்களே உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறோம். உங்களுக்குத்தான் ‘மதவெறி’ இல்லேன்னு ஹேமா சொன்னாளே…” என்றார் ராகவன்.
“நீங்க ஹேமாமேல கொண்டிருக்கிற காதல் உண்மைன்னா… என் கணவர் சொன்னபடி, அவளோட ‘படிப்பு, வேலை, பணம், அவபேருக்கு முன்னாடி போட்டிருக்கிற இனிஷியல்’, எல்லாத்தையும், எங்களிடமே திருப்பிக்குடுக்கச் சொல்லிட்டு, தாராளமா… இப்பவே அவளை கூட்டிகிட்டுப்போங்க” என்று தீர்க்கமாகச் சொன்னாள் மைதிலி.
அந்த ஹாலில் சில நொடிகள் அமைதி நிலவியது. “என்னை மன்னிச்சிடு ஹேமா… உன் பெற்றோர்கள் சொல்லறமாதிரி, என் ‘மதத்திலிருந்து விலகி’, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று சொன்ன தன்காதலனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஹேமா.
“இன்றைய வாழ்க்கைச் சூழலிலே, என் வருமானத்தை மட்டும் வைச்சுகிட்டு, நம் ‘கனவுகளுக்கேற்ப’ வாழமுடியாது. காதலுக்காக வாழ்நாள் முழுவதும், ‘கஷ்டத்தை’ சுமக்க நான் தயாராக இல்லை. என்னை மறந்திடு ஹேமா…” என சொல்லிவிட்டு, ஹேமாவின் காதலன் எழுந்து போய்விட்டான்.
“பார்த்தியா ஹேமா… உனக்கான, எல்லா உரிமையையும் தரேன்னு சொன்னவனால, அவனோட மதத்தைவிட்டு விலகறேன்னு, வார்த்தையாலகூட சொல்லமுடியல்லே. உன் படிப்பு, வேலை, சம்பளம் இதையெல்லாம் விட்டுட்டு, உன்னைமட்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத, அவனோட ‘காதல்’ உண்மையானதில்லேன்னு புரிஞ்சுகிட்டியா” என்றாள் மைதிலி.
தனது ‘காதலனும், காதலும்’ போலியானவை என்பதைப் புரிந்துகொண்டாள் ஹேமா. போலியான காதலாக, தனது ‘நெஞ்சில் தைத்த முள்’ வாழ்வில் ‘புரையோடி ரணமாக்கும்’ முன்னரே, அதைச் சரியான நேரத்தில் பிடிங்கி எறிந்த தன் பெற்றோருக்கு நன்றி சொல்லி, மன்னிப்பு கேட்கும் விதமாக, அவர்களின் காலில் ‘கண்ணீரோடு விழுந்தாள்’ ஹேமா.
Leave a comment
Upload