அவசர அவசரமாக வாசல் தெளித்து படபடவென கோலமிட்டு யாரோ விருந்தாளி வீட்டிற்கு வருவது போல விழுந்துவிழுந்து தன் வேலைகளை செய்துக்கொண்டு இருந்தாள் ருக்கு காலை எழுந்ததிலிருந்து.
கோபமாக இருக்கும் போதெல்லாம் ருக்கு வேலைகளை இதே போல்தான் செய்வாள். சிடுசிடுவென இருந்த ருக்குவைப் பார்த்த அய்யாசாமி, " என்ன என கேட்டதற்கு ஒன்றுமில்லை என முகத்தை திருப்பிக் கொண்டாள்.
என்னாச்சு? தெரியலையே, நேற்று ராத்திரி தூங்கும் முன் என் தங்கை கல்யாணிதான் கடைசியாக பேசினாள்,அவள் ஏதாவது சொல்லி இருக்கலாம், என நினைத்தவர்,
அவள் பேச்சை எல்லாம் சீரியஸாக எடுத்துண்டு என்கிட்டே ஏண்டி கோபமாக நடந்துக்கிறாய்? என கேட்டார் அய்யாசாமி.
அதெல்லாம் ஒன்றுமில்லை, கொஞ்ச நேரம் தனியாக என்னை விடுங்கோ எனும் போதே,
"அய்யாசாமி, இருக்காரா?" என வாசலில் நின்று கேட்டபடி உள்ளே வந்தவர்,
மெலிதான தேகம், நெற்றியில் சந்தனம் குங்குமம் , ஜரிகை வேட்டி,மற்றும் மேல் துண்டு, தோளில் தொங்கும் ஜோல்னா பையைப் பார்த்ததும், எங்கோ ருக்குவின் கிராமமான சேங்காலிபுரம் போயிருந்தப்போது பார்த்த ஞாபகம் அய்யாசாமிக்கு வந்த்தும்,
வாங்கோ, வாங்கோ, வரணும் என பலமாக வரவேற்றதைப் பார்த்த ருக்குவும் முகம் மலர்ந்த படி, பார்த்தால் அவாத்து மாமாக்கள் ஜாடை அப்படியே இருக்கே என நினைத்து வாங்கோ மாமா என வரவேற்றாள்.
இதைப் பார்த்த அய்யாசாமி, நம்ம கிட்டே கோவிச்சுண்டாலும்,
அவாத்து மனுஷா வந்ததால் இத்தனை பலமான வரவேற்பு, ம்...என உதட்டைப் பிதுக்கினார்.
காபி சாப்பிடுங்கோ! என்ற ருக்கு விடம்
மண்ணை வண்டி வழக்கம் போல லேட்அரைவல் என்றபடி உள்ளே வந்தமர்ந்தவர்,
"பயணக் கலைப்பாய் இருக்கு, ஸ்நானம் பண்ணிட்டு சாப்பாடே சாப்பிடுறேன் ருக்கு, என்ன நான் சொல்றது ?என்று தானே கேட்டு சிரித்துக்கொண்டார்.
சரிதான், என்ற அய்யாசாமி வக்கனையான இந்தப்பேச்சைப் பார்த்தாலே நன்னா தெரியுது அவள் சொந்தம்தான் என ஊர்ஜிதமானார். ஆனால் அந்த சிரிப்பை அத்தனை ரசிக்கவில்லை என ருக்குவின் முகம் காட்டியது.
சாப்பாட்டிற்கு இப்படி பல்லைக் காட்டறதுன்னா அவாத்து வகையாறாவாதான் என ருக்குவும் நம்பினாள்.
ஸ்நானம் செய்து,ஜபம் முடித்து வந்த மாமா சாப்பிட அமர்ந்து நீங்களும் உட்காருங்கோ என்று அய்யாசாமியையும் அழைத்தார்.
" அவர் இருக்கட்டும் நாங்கள் இருவரும் பிறகு சேர்ந்து சாப்பிடுவோம்" என்றாள் ருக்கு.
ஆ....ஆமாம் என்றார் தயங்கியபடி அய்யாசாமி.
நல்ல அன்னியோன்யம் அப்படித்தான் இருக்கனும்.
என் ஆத்திலேயும் என் ஆத்துகாரி சேர்ந்துதான் சாப்பிடுவா என பெருமை பேசினார்.
சங்கோஜப்படாமல் சாப்பிடுங்கோ என்ற அய்யாசாமியிடம்,
சாப்பாட்டில் எதுக்கு சங்கோஜம்? என்றவர்
நம்ம ஆம் என நினைச்சுக்கோங்கோ என்ற ருக்குவிடம்.
"நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது எங்க வீடுதான் போ" என்றவர்,
"மாவடு போடுங்கோ" சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள என கேட்டார்.
இதென்ன மாங்காய் பச்சடியா பேஷ்! பேஷ்! என ரசித்தி சாப்பிடலானார்.
மோர் சாதத்திற்கு நார்த்தங்காய் பச்சடி,
இருக்குமே போடுங்கோ,
நம்மாதிலே மாமரம், நார்த்தமரம் எல்லாம் இருந்ததே?! இப்பவும் இருக்கோன்னோ? வெட்டிடலையே என கேட்டார்.
இத்தனை விவரமாக எல்லாம் இருக்கு என தெரிந்து கேட்கிறாரே
யார் இவர் ? என இருவரும் தனித்தனியாக ஆச்சரியப்பட்டனர்.
“ சாப்பாடு அருமை அய்யாசாமி “ “ நம்மாத்திலே வந்து வாய் கை நினைக்கனும் என்பது என் இருபது வருட கனவு தெரியுமோ? “ என்றதும் இருவரும் விழித்தார்கள்.
இதிலென்னா மாமா, எப்போ வேண்டுமானாலும் நீங்க வந்து இருக்கலாமே? என்ற அய்யாசாமியிடம்,
வந்திருக்கலாம், ஆனால் இருபது வருடமாக நான் அபுதாபியிலே அல்லவா இருந்தேன்,போன வாரம்தான் சென்னைக்கே வந்தேன் என்றவரை, வேத்து கிரகவாசி போல் பார்த்தனர் இருவரும்.
அப்படியா?!!
ஆமாம் என்றவர், தன் பையிலிருந்த பழங்களை அவர்களிடம் எடுத்துக் கொடுத்தார்.
சிறிது நேரம் கலகலப்பாக பேசியவர், நீங்க இருவரும் போய் சாப்பிடுங்கோ, நான் இரவு ரயிலிலே சென்னைக்குப் புறப்படனும், அதனாலே கொஞ்சம் நேரம் ஓய்வு எடுக்கனும் என்றவரிடம்,
அதற்கென்ன ? அந்த ரூமில் படுங்கோ என கூறினார் அய்யாசாமி.
நீங்கள் தப்பாக நினைக்கலைன்னா நான் ஒன்னு கேட்பேன், என தயங்கினார் மாமா.
இதிலென்ன தப்பு ? கேளுங்கோ! என்றார் அய்யாசாமி.
நான் நம்மாத்து கிச்சினில் படுத்துக்கிறேனே என கேட்டார்.
என்ன இது? யாராவது அடுப்படியிலே படுப்பாளா?
என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்தபோது,
"தவறாக நினைக்க வேண்டாம் என்னை யார் என்று முதலில் நான் சொல்லி இருக்கனும்,"
என் பெயர் ரவி, உங்கள் யாருக்கும் நான் சொந்தமோ பந்தமோ இல்லை, வந்த உடனே சொல்லியிருந்தால்,இருவரும் என்னிடம் இப்படி சகஜமாக பேசிப்பழகி இருப்பீர்களா என்பது சந்தேகம்தான், நமக்குள் ஒரு இடைவெளி கண்டிப்பாக இருந்திருக்கும், அது இருக்க வேண்டாமென்றுதான் உங்களிடம் நான் யாரென்று சொல்ல வில்லை.
என் பழைய நண்பர்கள் மூலமாக உங்களைப் பற்றித் தெரிந்துக்கொண்டுதான் நான் வந்தேன். தவறாக இருந்தால் மன்னிக்கனும், நீங்க பெரியவா்கள் என்றார்.
நீங்கள் இப்போது வாழும் இந்த இடம் எங்கள் பூர்வீக சொத்து, என் கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா என மூன்று தலைமுறை வாழ்ந்த வீடு.
இதோ இந்த அடுப்படி உள்ள இடத்தில் நான் பிறந்தேன்,
என என் அப்பா சொல்லி இருக்கிறார், மேல் படிப்பு, வேலை என நாங்கள் வீட்டை விற்றுவிட்டு வெளியே இந்த கிராமத்தை விட்டே அகன்று விட்டோம்,
ஆனால் என் உணர்விலிருந்து மட்டும் நான் அகல முடியாமல் அந்த பழைய வீட்டு ஞாபகம் எனக்குள் வந்து போய்க்கொண்டே இருக்கும்,
அந்த கிணற்றடி, நார்த்தங்காய், மாங்காய் மரங்கள்,
திரும்பவும் பார்க்கவே முடியாத
பாத்திரங்களாய், நம்மஊர் யானைப் பாகன்,ஸ்கூல் ஐஸ் வியாபாரி, பழைய வீட்டில் வீட்டுவேலைகளை செய்த பெயர் தெரியாத கால் சட்டை நபர், வழக்கமாக வெண்ணெய் எடுத்து வரும் அம்மா, பால் கொண்டு வந்துக் கொடுத்த பாட்டி, காவிரியாற்றுக் குளியல், என மறக்க முடியாத நினைவுகள் எனக்கு வந்து போய்க்கொண்டே இருக்கும், என் சொந்த உறவுகளை மொத்தமாக இழந்த பின், அதில் மிச்சமாய் இந்த இடம் மட்டும் தான் இப்போதைக்கு உள்ளது, என ரசனையோடு பேசியவரை ..
தாராளமாக அடுப்படியிலே படுங்கோ, இது உங்கள் இடம்.
என்றனர் இருவரும்.
உங்கள் விருந்தோம்பலில் நான் எங்கள் வீட்டாரைப் பார்த்த மாதிரியே இருக்கு, ரொம்ப சந்தோஷம்! என்றார் கண் கலங்கியபடி.
" இதே போல உண்மையான மனுஷாளைப் பார்த்து ரொம்ப நாளாச்சு இல்லை ருக்கு" என்ற அய்யாசாமியிடம்,
இது இப்படி இருக்க, உங்கள் தங்கை கல்யாணி, அவள் வந்தபோது நான் சரியாக அவளைக் கவனிக்கலை என்கிறாள் என்று கோபத்திற்கான உண்மையை சொன்னபோது,
நினைத்தேன், அவள்தான் ஏதாவது சொல்லி இருப்பாள், அதை வைத்து ஒரு நாள் முழுவதும் என்னிடம் நீ பேசவில்லை என்றார்.
அதனாலென்ன? இனி பேசத்தானே போகிறோம். என்றாள் ருக்கு.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் எத்தனை முக்கியம் என்பதை இந்த மாமா எவ்வளவு எதார்த்தமா புரிய வச்சுட்டா, பார்த்தியா? வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ரசிச்சு வாழனுங்கிறது புரிகிறது நேக்கு, நோக்கு? என கேட்டார் அய்யாசாமி.
Leave a comment
Upload