வங்காள விரிகுடாவிலிருந்து
90% ஹுயூமிடிட்டியுடன் மாலைக்காற்று வீசிக். கொண்டிருந்தது.
திருவல்லிக்கேணி பக்கத்தில் ஒரு குடிசையில் இருந்த தமிழுக்கு கொஞ்சம் குளிரியது. நவம்பர் மாசம்.
அப்பா எங்கோ வெளியே போயிருக்கிறார். எங்கே என்றால்.. 'பரங்கிமலை பக்கம்' என்று அவர் கூறிதாக ஞாபகம்.
'அபாய எல்லையை தாண்டி நீ பாட்டுக்கு நீளப் போய் விடாதே. நான் அப்புறம் அனாதை ஆகி விடுவேன்'. என்று அப்பாவிடம் கூறி இருந்தாள்.
மெதுவாக எழுந்து கடற்கரை பக்கம் போனாள். மாலை நேரம்.
ஈ காக்காய் இல்லை. . கடலில் தூரத்தில் இரண்டு மூன்று பேர் கட்டு மரத்தை கரை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தனர். பின் இரண்டு பெரிய சாக்கு போன்ற பைகளை இறக்கினார்கள்.(தென்னை ஓலை கொண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும். )
நிறைய மீன் கிடைத்திருக்க வேண்டும்.
இரவு சாப்பிட ஒன்றும் இல்லை என்பது தமிழுக்கு நினைவு வந்தது.
ஓடிச் சென்று கட்டுமரம் பக்கம் சென்றாள். "அண்ணா ரெண்டு மீன் கொடுங்களேன் . " என்றாள்.
சிரிப்புடன் அந்த வாலிபன் இரண்டு நீண்ட மீன்களை எடுத்து அவள் கையில் வைத்தான்.
புன்னகையுடன் வீட்டுக்கு கிளம்பி மெதுவாக நடந்தாள் தமிழ்.
அன்று மதியத்தில் வீட்டுக்கு எதிரே இருந்த கொய்யா மரத்தில் ஏறி சில பழக் காய்களை பறித்து வைத்திருந்தாள். ஆனால் உண்ண ஆரம்பித்தால் உள்ளே இறங்க மாட்டேன் என்கிறது.
துவர்ப்பு.
அப்படியே வீட்டுக்குள் வைத்து விட்டாள்.
தமிழுக்கு பதினோரு வயசு தான்.
அம்மா இறந்து பத்து வருஷம் ஆகிறது.அப்போது அம்மாவுடன் நிறைய பேர் காலராவால்
பாதிக்கப்பட்டு இறந்தார்கள்.பிறகு அவளும் அப்பாவும் பொன்னேரியை விட்டு திருவல்லிக்கேணி வந்துவிட்டார்கள்.. வங்கக் கடல் பக்கம் ஒரு இருப்பிடம்.
வீடு என்றெல்லாம் சொல்ல முடியாது. குடிசை என்று சொல்லலாம். சில பிளாஸ்டிக்,இரும்பு தகடுகள்,
போன்றவற்றால் அமைக்கப்பட்டு. மேலே கூரை பனை ஓலையால் போடப்பட்டது. உள்ளே ஓரிரண்டு பழைய மேஜை நாற்காலி,இரும்பு. ஷெல்ப் இருந்தன. ஒரு உடைந்த பழைய மரக்கட்டிலும்இருந்தது.
குடிசைக்கு இருபுறங்களிலும் இடிந்த. பழைய கட்டடங்களின் இடிபாடுகளின் குவியல்.
வெளியில் நாலைந்து ஆடுகள்,குட்டிகள், சில கோழிகள்,குஞ்சுகள். இவற்றை சுற்றி பழைய இரும்பு முள் கம்பியால் ஆன வேலி.
ஆம்....இவற்றுக்கு பாதுகாப்பு அவசியம். இரவு நேரத்தில் கூவம் பக்கத்து வேலிக்காத்தான் மரக் காட்டில் இருந்து உணவு கிடைக்காத சில நரிகள் அங்கு வரும் வாய்ப்பு உண்டு. ஒரு முறை ஒனாய் கூட வந்திருக்கிறது.
ஆனால் தமிழ் பயந்ததே கிடையாது.
அப்பா எப்பவுமே இரவில் தன் பக்கத்தில் ஒரு அருவாள், கோடாலி மற்றும் ஒரு நீண்ட குழல் துப்பாக்கி வைத்திருப்பார். துப்பாக்கியில் குண்டு இருக்கிறது. வெடிக்கும் என்று நம்பிக்கை ஊட்டுவார். அத னால் இன்று வரை ஓநாய், நரி எதுவும் தமிழ் அருகில் வந்ததில்லை என நம்பினாள்.
வீட்டுக்கு வெளியே கொஞ்ச நிலத்தில் காய்கறி,வேர்க்கடலை, சோளம் எல்லாம் துளித் துளி பயிராய் இருக்கும். பயிரிடுவது எல்லாம் அப்பாவும் தமிழும் தான். மழை பெய்தால் பயிறு நிலைக்கும். இல்லை என்றால் காலி.
அப்பாவுக்கு எல்லா இரும்பு வேலையும் தெரியும். இரும்புத் தகடுகளை நெருப்பில் சூடாக்கி பெரிய சுத்தி கொண்டு அடித்து அருவாள்,கத்தி, கோடாலி எல்லாம் செய்வார். அவற்றை விற்று
உணவு, தோல் ஆடைகள், எல்லாம் கொஞ்சம் வாங்கி வருவார். நெருப்பு மூட்டுவது ரொம்ப கஷ்டம்.
அப்பாவால் தான் அது முடியும். இலைச் சருகுகளை குவித்து வைத்து ரெண்டு தடிமனான இரும்பு கம்பிகளை ஒன்றோடு ஒன்று உரசும் போது தீப்பொறியால் சருகுகள் பற்றி கொள்ளும். பின் அதில் மரக்கட்டைகளை இடவேண்டும்.
சாதாரணமாக இந்த மாதிரி ஏற்படுத்தின நெருப்பு ஒரு வார த்துக்கு எரியும்படி விறகிட்டு பார்த்துக்கொள்வார் அப்பா.
பின் நெருப்புக்கு மேல் அன்று கிடைத்த மீன்,பறவை அல்லது ஏதாவது விலங்கின் பகுதியை இட்டு சுட்டு உண்பார்கள். உணவுக்கு என்று தனி நேரம் கிடையாது. எப்போது கிடைக்குமோ, அப்போது தான்.
சில நாட்கள் ஒன்றும் கிடைக்காது. பழைய அலுமினிய வாளியிலிருந்து. தண்ணீர் குடிப்பதுதான் தீர்வு.
இந்த தண்ணீரும் அப்பா. குதிரையில் இரண்டு கி மீ சென்று மயிலாப்பூர் அருகில் ஐம்பது அடி
ஆழ கிணற்றில் இருந்து அலுமினிய பக்கெட்டில் பிடித்து வர வேண்டும்.
தினமும் காலையில். விரல் கொண்டு. மரக் கரியால் பல் துலக்க சொல்வார் அப்பா.
ஆனால் தினம் குளியல் கிடையாது. தண்ணீர் இல்லை. கிடைக்கும்போது வாரம் ஒரு முறையோ... இல்லை... கடலுக்கு செல்லும் போதோ மட்டும் தான்.
அவள் உடம்புக்கு என்ன வந்தாலும்.. ஜுரமோ ஜலதோஷமோ,...அப்பா வீட்டு இரும்பு பீரோ மேல் தட்டிலிருந்து ஒரு புராதன குப்பியை( அதன் பேர் அமிர்தஞ்சானமாம்!)எடுத்து திறந்து ஒரு துளி எடுத்து நெற்றியில் தேய்ப்பார்.
எல்லா வியாதியும் போயே போச்சு,
போயிந்தி.என்று ஓடிவிடும். இதுதான் ஒரே மருந்து, சகல வியாதிக்கும்.வேறு மருத்துவரோ மருத்துவ மனையோ அங்கு கிடையாது.
தமிழ்க்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை.
ஒரு கிலோ மீட்டர் தாண்டி கடல் பக்கம் சில மீனவர்கள் குடும்பத்தோடு இருந்தார்கள். முதல் சமயம் மீன் வாங்கப் போன போது ஓலைக்கூடயில் புத்தம் புது மீன்களை அள்ளி வைத்து கொடுத் தார்கள் . பதிலுக்கு அவள் அப்பா செய்த அருவாள் ஒன்றைகொடுத்த போது சிரித்துக்கொண்டே வாங்க மறுத் தார்கள்.'சும்மா எடுத்துக்க கண்ணு..' என்று அன்புடன் தலையை தடவிக் கொடுத்தார்கள்.பின்னர் இது வழக்கம் ஆகி விட்டது.
எப்போதாவது இருட்டு வேளையில் சென்றால் தமிழ் வீடு திரும்பும் வரை யாராவது கூட துணைக்கு வருவார்கள்.துணை, கொடிய விலங்குகளிடம் இருந்து காப்பாற்று வதற்க்குத் தான்.
சக மனிதர்களால் தொல்லை இருந்ததே கிடையாது!
இவள் வாழ்க்கையில் சந்தித்த மிக சில மனிதர்களும் அற்புதமானவர்கள். பெருந்தன்மை மிக்கவர்கள்.
ஆனால் ஒன்று.....அங்கு நிறைய மனிதர்களே கிடையாது.அவளுடைய மூன்று கிலோ மீட்டர் சுற்று
வட்டாரத்தில் ஒரு முப்பது குடும்பங்கள்,நூறு பேர் இருந்தால் அதிகம். அவர்கள் எல்லாரையும் இவள் பார்த்ததும் கிடையாது.
ஆனால் எல்லார்க்கும் எல்லார் பற்றியும் தெரியும்.
கேள்விப்பட்டது தான்.
யாருக்கும் பொறாமை, போட்டி என்று கிடையாது. திருட்டு என்றால் என்ன என்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் தன்மை எல்லாருக்கும் உண்டு.
ஆனால் இவர்கள் பிழைப்பே இவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. தினசரி உணவுக்கு அலைவதற்கே நேரமில்லை.
எங்கு சென்றாலும் கால்நடையாக தான் செல்ல வேண்டும். ரொம்ப கஷ்டப்பட்டு கொஞ்சம் ஏதாவது
உபயோகமான பொருள் சேர்க்க முடிந்தாலோ செய்ய முடிந்தாலோ பண்டம் மாற்று முறையில் ஒரு குதிரை வாங்க முடியும்.
தமிழுடைய அப்பா. நிறைய கோடாரிகள் அருவாக்கள் செய்துவிற்று ஒரு நோஞ்சான் குதிரை வாங்கியிருந்தார். அதற்கு புல்லுத் தீனி போட்டு கட்டுப்படி ஆகவில்லை.ராட்சசப் பசி.
அரை கிலோமீட்டர் ஆளை சுமந்து சென்றால் அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து விடும். மனிதர் நடக்கும் வேகத்தில் தான் நடக்கும்.
இருந்தாலும் குதிரை இல்லையா? ஒரு கெத்து இருந்தது. ஊரில் மொத்தமே பத்து பதினைந்து குதிரை தான் இருந்தது.
அப்பா தன் குதிரைக்கு நீலவேணி என்று ஆசையுடன் பெயர் வைத்திருந்தார்.
தமிழ் மகா புத்திசாலி.எதையும் ஒரு முறை பார்த்தால் மறக்க மாட்டாள். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் சரளமாக எழுதப் படிக்கத் தெரியும்.அப்பா கற்றுக் கொடுத்தார். ஆனால் எதைப் படிப்பது.அவளிடம் புத்தகங்களே கிடையாதே.
சில நாள் முன்பு அப்பாவிடம் கொய்யா மரத்தின் அடியிலிருந்து ஒரு சந்தேகம் கேட்டாள்.
ஏம்பா இந்த கொய்யாப்பழம் மரத்திலிருந்து எப்பவும் கீழேயே விழுது? ஏன் மேல போக மாட்டேங்குது ?
"அது அதன் தலை எழுத்து.உன் வேலைய பாரு.என்று பழுக்க கச்சிய இரும்புப்பட்டையை சுத்தியால் அடித்த படி கூறினார்.
அவளது புத்திசாலித்தனமான கேள்விகள் ஏன் அப்பாவை கோபப்படுத்த வேண்டும் என்பது அவளுக்கு எப்போதும் புரியாது.
வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டாள் தமிழ்.
இன்னும் இருட்டவில்லை.
கொஞ்சம் சூரிய வெளிச்சம் பாக்கி இருந்தது. மீன்களை வீட்டுப் பழைய மேஜையில் வைத்தாள். ஆட்டுக்குட்டி ஒன்று...ம்ம்மேய்ய்.. என்று கத்துவது கேட்டது.
பின் பக்கம் முள் வேலிக்குள் இருந்தஆடுக்குட்டி ஒன்று வேலியின்
சின்ன ஓட்டை வழியாகத் தப்பித்து. அடுத்த உடைந்த கட்டிடத்தின் இடிபாட்டு குவியலுக்குள் பாய்ந்து.கொண்டிருந்தது.
தமிழ் பின் தொடர்ந்தாள். இதுவரை அந்த பக்கம் அவள் சென்றதே
இல்லை.இடிபாட்டுக் குவியலைத் தாண்டி சிறிய இடைவெளி வழியே கீழே சென்ற போது மெல்லிய வெளிச்சத்தில் உள்ளே ஒரு பெரிய அறை போலத் தெரிந்தது. பிரமித்து விட்டாள்.
ஏராளமான புத்தகங்கள் தூசியுடன் அழுக்குத் தரையில்குவிந்து கிடந்தன.கவிழ்ந்து கிடந்த ஒரு இரும்பு அல மாரியில " தமிழ் நாடு தொழில் நுட்ப நூலகம்...இயற்பியல்....அச்சு நகல் புத்தகங்கள்."
என்று எழுதி இருந்தது.
ஓடும் ஆட்டுகுட்டியை ஒரு கையிலும். கீழேயிருந்து ஒரு புத்தகத்தை மறு கையிலும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினாள் தமிழ்.
இருட்ட ஆரம்பித்து விட்டது.
ஆட்டுக்குட்டியை வேலிக்குள் விட்டுவிட்டு ஒரு பெரிய விறகை எடுத்து ஒருமுனையில் அலமாரியில் இருந்து எடுத்த பன்றிக் கொழுப்பை தடவினாள். பின் அதை நெருப்பில் பற்றவைத்து தீவட்டி போல் வீட்டின் ஒரு மூலையில் செருகினாள்.
பின் கீழே அமர்ந்து தான் எடுத்துக் கொண்டு வந்த புத்தகத்தைப் படிக்கஆரம்பித்தாள். அதில் மூழ்கிப் போய் விட்டாள்.
இரவு வெகு நேரத்துக்குப் பின் அப்பா வந்தார்.குதிரையைக் கட்டி விட்டு வீட்டில் நுழைந்து
" தமிழ், உனக்கு என்ன கொண்டுவந்திருக்கிறேன் பார்". என்றார். ஆவலுடன் வந்த தமிழின் கையில், மரத்தில் செதுக்கப்பட்ட
ஒரு அழகிய பெண் பொம்மையை கொடுத்தார்...பார்பி டால்..
"ரொம்ப அழகா இருக்குப்பா. யார் கொடுத்தது."
"பரங்கிமலையில் என் நண்பன் இளங்கோவின் மகள் மணிமேகலை கொடுத்தாள்."
"அவள் என்னை பார்த்தது கூட இல்லையேப்பா."
"அதனால் என்ன?. உன்னை அவளுக்கு ரொம்ப பிடிக்குமாம்."
"எல்லாரும் நல்லவங்க இந்த உலகத்திலே. இல்லையா அப்பா."
"ஆமாம் கண்ணு."
காலையில் எழுந்து புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.
அப்பா அருகில் வந்து
"என்ன? புத்தகமா?" என்றார்.
"ஆமாம்பா.இயற்பியலாம்.. பக்கத்து இடிந்த கட்டிடத்தில் எடுத்தேன்.
இன்னும் நிறைய புத்தகம் இருக்கு."
உன் கிட்ட நான் கேட்கும் எல்லா கேள்விக்கும் இதுல பதில் இருக்கு.
நியூட்டனின் விதிகள் படித்தேன். எளிதாகப் புரியுது அப்பா.
மேத்ஸ் ம் கத்துக்கப்போறேன்.
நியூட்டன் ரொம்பப் பெரிய விஞ்ஞானியாப்பா? "என்றாள்.
"தமிழ். இனிமே அங்க போய் புத்தகம் எல்லாம் எடுக்காதே."
"ஏம்ப்பா. எனக்கு ரொம்ப நல்லா புரியுது."
அப்பா சிரித்தார். "அது தான் காரணம்.
நீ ரொம்ப புத்திசாலி."
என்றவர் வீட்டு வாசலில் இருந்த வெள்ளை போர்டில் கரியால் எழுதி
இருந்த தேதியை 23-11-2122 என்று
சரியாக மாற்றி எழுதினார்.
"தமிழ், இன்று 2122ம் ஆண்டில் ...இந்த உலகம் யுத்தத்தால் அழிந்து பத்து வருஷம் ஆகிறது.
விஞ்ஞான உச்சத்தில் நேசம், அன்பு மறந்து ஆணவத்தில் நம்மை நாமே அழித்துக்கொண்டோம்.
ஒரே மாத அணு ஆயுதப் போர். உலகம் இரண்டாகப் பிரிந்து போரிட்டு கிட்டத்தட்ட அழிந்தது.
உலகு முழுவதும்நிறைய அணுக்கதிர் வீசும் பிரதேசங்கள் தீவுகளாகத் தோன்றி மக்களை நிர ந்தரமாகப் பிரித்தன. கணினிகளும், எந்திரன்களும் கூண்டோடு அழிந்தன.
நம்மை மாதிரி ஒரு சிலர், பெரிய அதிருஷ்டத்தால் இன்னும் உயிர் வாழ்கிறோம். பஸ்மாசுரன் போல் அறிவியல் தன்னைத்தானே அழித் துக்கொண்டது.
இன்று உலகின் வெவ்வேறு இடங்களில்அகப்பட்டுக் கொண்டு இருக்கும் சில மனிதர்களால் அறிவியலை மறுபடியும் உயிர்த் தெழச் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.
ஆனால் ஓன்று. அறிவியலின் அழிவு அன்பை, உலகம் எங்கும் நிரப்பி இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
இப்போ உலகில் மக்களிடம் காருண்யம் நிரம்பி இருக்கிறது.
தற்போதைய வாழ்க்கை எளிதாக இல்லாவிட்டாலும் அன்பு மயமாய் உள்ளது.அதனால் கண்ணே...
அறிவியல் புத்தகங்களைத் தவிர்.
உன் கூர்மையான அறிவால், அறிவியல் மறுஜென்மம் எடுக்க வாய்ப்பு எதுவும் கொடுக்க வேண்டாம். மீண்ட சொர்க்கத்தை நாம் மறுபடியும் தொலைக்க வேண்டாம்".
என்று கை கூப்பிச் சிரித்தார்.
பதில் இல்லாமல் அப்பாவைப் பார்த்தாள் தமிழ்.
Leave a comment
Upload