30 வருடங்களாக தன் எழுத்துக்களை மட்டுமே சுவாசித்து எழுத்துக்களோடு வாழ்ந்து மறைந்துவிட்டார் பிரியா கல்யாணராமன் எனும் பிரகாஷ் எனும் ராமசந்திரன்.
குமுதம் இதழின் ஆசிரியர் என்ற பெருமையோடு வலம் வந்து கொண்டிருந்தவர் கொஞ்சம் உடல்நலக்குறைவால் ஓய்வெடுப்பதற்காக காலை 10.30 மணிக்கு தன் அலுவலகத்துக்கு விடுமுறை விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு சிறிது நேரம் தூங்க சென்றிருக்கிறார். மகன் ஹாங்காங்கில் வேலையில் இருக்க, மகள் கல்லூரிக்கு சென்று விட, மனைவி ஒரு உறவினர் இல்ல விசேஷத்திற்கு சென்றிருந்த நேரத்தில் உறக்கத்தில் உயிர் பிரிந்திருக்கிறது .
உறங்கச் செல்வதற்கு முன் மனைவியிடம் பேசியிருக்கிறார். தனக்கு எந்த உபாதையும் இல்லை சிறிது நேரம் உறங்கினால் போதும் என்று அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க செய்ய சொல்லிவிட்டு உறங்கசென்றவர் அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உறங்கச் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.
பிரியா கல்யாணராமன் மறைவு இந்த நிமிடம் வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை தெரியாதவரே இருக்க முடியாது. பத்திரிகையுலகில் பலரை உருவாக்கியவர்.
சில வாரங்களுக்கு முன் முன் அறிவிப்பின்றி அவரது அலுவலகத்துக்கு வேறு ஒருவரை சந்திக்க சென்ற போது இன்டர்காமில் கேட்டேன். நேரமிருந்தால் தலையை காமிச்சுட்டு போறேன் அப்படின்னு சொன்னேன். வாங்க பாஸ் நமக்கு எப்பவும் வேலை தான் என்று வழக்கம் போல் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு விகடகவியில் நான் எழுதிய ஒரு கட்டுரையை பார்த்து அழைத்தார். உங்கள் கட்டுரை வித்தியாசமாக இருக்கிறது அதே போல் குமுதத்திற்கு வாரம் தோறும் எழுத முடியும் என்று கேட்டார் . பண்ணலாம் பாஸ் என்று மூன்று வாரங்களுக்கு சேர்த்து எழுதி அனுப்பினேன். உலகத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் மற்றும் விஞ்ஞான ரீதியான படைப்புகள் பற்றிய தொடர். என்ன தலைப்பு வைப்பது என்று தெரியாமல் குழம்பி பல தலைப்புகள் அனுப்பினேன்.
அப்போது கல்கியிலும் தொடர்ந்து எழுதி வந்த நேரம். பாஸ் நீங்க இன்னும் கல்கியை மனசுல வெச்சே தலைப்பு யோசிக்கிறீங்க குமுதம் டிரெண்டுக்கு யோசிங்க என்றார். முயன்றேன் ஆனால் முடியவில்லை. நீங்களே ஒரு தலைப்பு வச்சுடுங்க பாஸ் என்றேன். அனைவரையும் போல் என்ன தலைப்பு வைக்க போகிறார் என்று நானும் ஆவலுடன் காத்திருந்தேன். தொடர் வெளியாவதற்கு முன்னமே விரைவில் -" டொக் டொக் டேக் " என்று முன்னோட்டமாக தலைப்பை வெளியிட்டார். அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பல மாதங்கள் அந்த தொடர் வெற்றிகரமாக வந்தது. அதற்கு அவருடன் பயணித்த உபைதூர் ரகுமானும் காரணம் . ராமனும் ரகுமானும் சிறந்த கூட்டணியாக வெற்றிகரமாக வலம் வந்தார்கள். உபைதுர் அவர்களுக்கு அவரின் குடும்பத்தார் போலவே பேரிழப்பாக இருக்கும். எங்களின் அனைத்து சந்திப்பின் போதும் உபைதுரையும் அழைத்து அருகில் அமர செய்வார்.
முக்கியமாக அவர் விகடகவி பற்றி அப்படி சிலாகிப்பார். மதன் சார் எப்படி இந்த வயசிலேயும் வரைகிறார் என்பது தொடங்கி ஒவ்வொருவரை பற்றியும் விசாரிப்பார். இன்னும் சொல்ல போனால் ஒரு சில கட்டுரைகளை குறிப்பிட்டு சிலாகிப்பார். மற்ற பத்திரிகையின் கட்டுரைகளை பாராட்டுவதற்கு தனி குணம் வேண்டும்
மிகச்சிறந்த ஆன்மிகவாதி, பக்திமான். எங்களின் சந்திப்புகளில் கண்டிப்பாக காஞ்சி மகா பெரியவா பற்றியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் கண்டிப்பாக இருக்கும். ஒரு சிறந்த படைப்பாளியை தமிழ் எழுத்துக்கள் இழந்துவிட்டன. இத்தனை வருடங்களாக வாரம் தோறும் அணைத்து குமுதம் குழுமத்தின் பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவரது படைப்புகள் அனைத்தையும் தனியாக ஒரு தொகுப்பாக வெளியிட்டால் என்றென்றும் மீண்டும் மீண்டும் அவரை நினைக்க அவர் எழுத்தை படிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஶ்ரீ நிவாஸ்பார்த்தசாரதி.
***************
ஹாங்காங்கில் பணிபுரிய மகனை அனுப்பும் முன் உண்டான பரிச்சயம் அவருடன். அதற்கு மூல காரணம் நமது கெளதம். எல்லாம் விகடன் தொடர்பு தான். முதல் முறையாக அவர் மகன் ஹாங்காங் வந்து குவாரண்டைன் முடிந்து அவனைப் பார்க்க கூட இல்லை.
திடீரென புதன்கிழமை மாலை துக்கம் பீறிட கார்த்திக் பிரியா கல்யாணராமன் மகனிடமிருந்து அழைப்பு. பதறி போய் விட்டது நெஞ்சம். போன வாரம் உற்சாகமாக பேசிய மனிதர். என்னுடைய சிறு வயது ஆதர்ச எழுத்தாளர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னேன். உங்கள் சிறுகதைகள் எனக்கு இன்றும் லேசாக நினைவிருக்கிறது. ஒரு கதையில் காக்காவெல்லாம் கூட்டமாக வரும்... சிரித்தார். இப்பல்லாம் நிறைய ஆன்மீகம் தான் எழுதறேன். அந்த சிறுகதை இன்னமும் நினைவிருக்கிறதா என்றவர்... குமுதம் குழுமத்தின் ஆசிரியர் என்ற எந்த வித பந்தாவும் இல்லாமல் பேசினார்.
சிறுகதைகள் பற்றி பேசும் போது விகடகவியில் வெளிவந்த சத்தியபாமா ஒப்பிலியின் கைக்கடிகாரம் கதையை அவருக்கு அனுப்பி படிக்க சொன்னேன். அருமையாக இருக்கிறது அவர்களை குமுதத்திற்கு எழுதி அனுப்ப சொல்லுங்கள் என்றார்.
அதென்ன வெறும் ராம் என்று போட்டுக் கொள்கிறீர்கள் நிறைய ராம் இருப்பதால் ஹாங்காங் ராம் என்று போட்டுக் கொள்ளுங்கள் வித்தியாசத்திற்கு என்றார். வேணாம் சார் தேங்கா சீனிவாசன் மாதிரி நிலைச்சுரும் என்றேன். சிரித்தார்.
முகம் பார்த்திடாமலே ஒரு நெருங்கிய நண்பர் போல இரண்டு வாரங்கள் பேசினோம். வாட்சப் செய்தி பகிர்ந்து கொண்டோம். அவர் மகனின் திருமணம் பற்றி கூட பேசி உங்களுக்கு அனேகமாக சீன மருமகள் தான் என்று கூட கலாய்த்தேன். அவர் இருந்தால் என்ன என் மகன் எது செய்தாலும் எனக்கு ஓகே என்றார்.
அவர் மகனும் இந்தியா திரும்புவதற்கு முதல் நாள் இரவு என்னிடம் அப்பாவை விட ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டேன் என்றே கதறினான்.
புதன் கிழமை நிசப்தமாக உறைந்து போயிருந்தது அன்றைய நள்ளிரவு மட்டுமல்ல தமிழ்ப் பத்திரிகையுலகமும் தான்.
பிரியா கல்யாணராமன்.. வாசகர்கள் நெஞ்சில் என்றுமே பி ரி யா... கல்யாணராமன் தான்.
ராம் Hkg.
Leave a comment
Upload