தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம்  --  42 ஆர்.ரங்கராஜ்

20220524174829642.jpg

களப்பிரர்கள் கலைகளை ஆதரித்தனரா?

சென்னை பெருநகர் உள்ளிட்ட தொண்டைமண்டலத்தில் ஆட்சிபுரிந்த களப்பிரர்களைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை தருகிறார் ஆராய்ச்சியாளர், முனைவர் ஆ. பத்மாவதி. 'புதிய நோக்கில் களப்பிரர் வரவாறு' என்கிற ஆய்வில் களப்பிரர்கள் தமிழ் மொழிக்கும் எழுத்துக்கும் இடையூறு செய்யவில்லை என்றும் , களப்பிரர்கள் கலைகளை வளர விடாமல் தடுத்தனர் என்றும் கூறப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறுகிறார்.

களப்பிரர்களது எழுத்து

"களப்பிரர்கள் தங்கள் ஆட்சியில் தமிழகத்தின் தொன்மை மிகு தமிழி எழுத்திலிருந்து வளர்ந்துகொண்டிருந்த வட்டெழுத்தையும் தமிழ் மொழியையுமே தங்கள் எழுத்தாகவும் ஆட்சிமொழியாகவும் கொண்டிருந்தனர் என்பதற்கு ஒரே சமகாலச் சான்று பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளே ஆகும். மேலும் களப்பிரர்கள் மிக வலுவாகக் காலூன்றி ஆட்சி செய்த பாண்டிய நாட்டிலும் கொங்கு நாட்டிலும் பல வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. செங்கம், தருமபுரிப் பகுதிகளிலுள்ள பழைய வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் கி.பி. 5. 6ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை பலவாகும். எனவே தமிழின் தொன்மையான இயற்கையான வளர்ச்சியில் அமைந்த வட்டெழுத்துகளைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் களப்பிர அரசு பெரிதும் துணை புரிந்திருக்கிறது எனக் கூறலாம்."

ஆனால் பாண்டிய நாட்டைப் பிடித்த சோழர்களில் முதலாம் இராஜராஜசோழன் தமிழ்நாட்டின் பாரம்பரிய எழுத்தாகிய வட்டெழுத்தைத் தமிழ் எழுத்தாக மாற்றியிருக்கிறான் என்பதற்குக் குற்றாலம் கல்வெட்டொன்று சான்றளிக்கிறது. எனவே களப்பிரருக்குப் பின்னர்த் தமிழகத்தை ஆட்சிபுரிந்த மன்னர்களை விடவும், தமிழ் மொழிக்கும் எழுத்துக்கும் களப்பிரர்கள் எவ்விதக்கிலும் இடையூறு செய்ததாகச் சான்றுகள் காணப்படவில்லை. மாறாகப் பெரிதும் ஆதரவளித்ததற்கான சான்றுகளே கிடைக்கின்றன. அதனடிப்படையில்தான் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களப்பிரர்கள் கலைகளை ஆதரித்தனரா?

"களப்பிரர் ஆட்சிக்குப்பின் பாண்டியர், பல்லவர், சோழர் காலங்களில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நடனக்கலை, இசைக்கலை போன்ற கலைகள் செழித்தோங்கி வளர்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அக்கலைகளும், அவை தொடர்பான கலைஞர்களும் காலல் காலமாகப் பரம்பரை பரம்பரையாகத் தமிழகத்தில் நீடித்து வந்ததற்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. களப்பிரர்கள் காலக் கட்டடக் கலைத் தொடர்பான சான்றுகள் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாகப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் மூன்று வழிபாட்டுத் தலங்கள் அமைத்ததற்கான சான்றுகள் உள்ளன. அவை அவ்வவ்விடங்களில் காணப்படவில்லை. பூலாங்குறிச்சி மலைமேல் ஒரு தேவகுலம் கட்டப்பட்டிருந்தது என்பதால் அது ஒரு கட்டடக் கோயிலாக, செங்கல் கோயிலாகவே இருந்திருக்க வேண்டும். அது முற்றிலும் அழிந்துவிட்டிருக்கிறது. அது இருந்ததற்கான தடயம் கூட இல்லை. "இந்நிலையில் அவர்கள் கலையை வளர்க்கவில்லை என்றும், கலைகளை வளர விடாமல் தடுத்தனர் என்றும் கூறப்பட்டதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும். ஆதலால் அக்கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகிறது."

சித்தன்னவாசலில் கூட அங்குள்ள ஓவியங்கள் ஏற்கனவே நீடித்துவந்த இடத்தில் அம்மரபின் தொடர்ச்சியாக மீண்டும் வரையப்பட்டனவேயாகும். "அங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் மதிரை ஆசிரியன் இளங்கௌதமன் என்பவன் குடைவரையைப் புதுக்கி, புதிதாக முகமண்டபம் எடுத்தான் என்று தெரிகிறது. ஆதலால் குடைவரையைப் புதுக்கியபோது அங்கிருந்து பழைய ஓவியங்கள் இருந்த இடத்திலேயே இப்போதுள்ள ஒலியம் அவனால் வரையப்பட்டிருக்கிறது. இதுபோன்று ஏராளமான சான்றுகள் அழிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு ஒரு பௌத்தக் கோயில் கூட முழுமையாக, பழைமை மாறாமல் கிடைக்கவில்லை. அவ்வாறிருக்க பழைய களப்பிரர் காலக்கலை சான்றுகள் எவ்வாறு கிடைக்கும்?, என்று கேட்கிறார் பத்மாவதி.

மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறபோது, "களப்பிரர் ஆட்சிக காலத்துக்குப் பிறகு கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரய் பதிகங்களில் கூறுகிற கோயிற் கட்டட வகைகளான கரக்கோயில் ஞாழற்கோயில், தூங்கானை மாடம், மணிக்கோயில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தக் கட்டட வகையெல்லாம் திடீரென்ற 7ஆம் நூற்றாண்டிலே தோன்றியிருக்க முடியாது. அக்காலத்தில் அவை செங்கற் கட்டடங்களாக இருந்திருக்கின்றன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மாமல்லன் நரசிம்மவர்மன் என்னும் பல்லவ அரசன் காலத்தில் மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்ட பஞ்ச பாண்டவ ரதங்கள் முதலான கோயில் அமைப்புகள், அவன் காலத்துக்கு முன்பு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அல்லது அதை முன்பு இருந்த செங்கற்கட்டடங்களின் மாதிரியைக் காட்டுகிற பாறைக்கல் அமைப்புகள். இந்தப் பாறைக் கற்கோயில்களில் பல அகநாழிகை (கர்ப்பக்கிருகம்) இல்லாமலே கட்டடத்தின் மேற்புற தோற்றம் மட்டும் பாறைக்கல்லில் அமைத்துக் காட்டப்பட்டுள்ளன. ஆகையால், மாமல்லபுரத்து இரதக் கோயில்கள் செங்கற்கட்டடங்களாக இருந்த பழைய கோயில்கலின் தத்ரூப உருவ அமைப்புகள் என்பதில் ஐயமில்லை" என்று கூறுகிறார்.

-- (தொடரும்)