தொடர்கள்
பொது
சின்னஞ்சிறு விபத்துகளில் சிக்கி பலியாகும் குழந்தைகள்!-மாலா

20220524152609664.jpg

சமீபத்திய இந்திய செய்திகளில், குடத்தின் வாய்ப் பகுதியில் தலை சிக்கி குழந்தை பலி, மூடப்படாமல் ஆழ்துளை குழாயில் தவறி விழுந்த குழந்தை, வாளி தண்ணீரில் கவிழ்ந்த குழந்தை மூச்சு திணறலால் பரிதாப பலி என விதவிதமான விபத்துகளில் சிக்கி, 2 முதல் 5 வயது வரையிலான சின்னக் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இதற்கு கஷ்டப்பட்டு பெற்றெடுத்த பெற்றோர்களின் அலட்சியம் தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது !!

உதாரணமாக, சென்னை கொளத்தூர், வரலட்சுமி நகரில் வசிப்பவர் அருணாசலம். இவரது 2 வயது ஆண்குழந்தை கடந்த 22-ம் தேதி வீட்டில் விளையாடியபோது டிவி ஸ்டாண்டை இழுத்தது. இதில், ரித்தீஷ்மீது ஸ்டாண்டுடன் டிவி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிவியை இழுத்தால் விழும் அளவிற்கு அலட்சியமாகவா இருப்பது ???

இதேபோல், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட குப்புசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது 5 வயது மகள் கோபிகாஸ்ரீ. வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளி குழந்தை.

கடந்த 21-ம் தேதி நள்ளிரவு பெரிய பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரை கோபிகாஸ்ரீ கைகளில் அள்ளி குடித்திருக்கிறாள். பின்னர் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என வாளியை எட்டி பார்த்தபோது, அதற்குள் தலை கவிழ்ந்து விழுந்ததில் கோபிகாஸ்ரீ மூச்சு திணறி பரிதாபமாக பலியானார்.

ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டாமா ??

இந்த சமயத்தில் பாடகி சித்ராவின் மாற்றுத் திறனாளி மகள் துபாய் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரழந்தது நினைவுக்கு வருகிறது.

இன்னமும் தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் மூடப்படாமல் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் 3 முதல் 5 வயது வரையிலான சின்னஞ்சிறு குழந்தைகள் தவறி விழுந்து, பலமணி நேர மீட்பு பணிகளின் போது மூச்சு திணறி இறந்து வருகின்றன என்பதை உதாரணங்களாக கூறலாம்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர், "இத்தகைய அவலநிலைக்கு பெற்றோரின் அலட்சியமே காரணமாக கூறலாம். ஏனெனில், பெரும்பாலான வீடுகளில் தாய்-தந்தை, மாமனார்-மாமியார் போன்ற வயதான பெரியவர்கள் உடன் வசிப்பதில்லை. வீட்டில் தனியே இருக்கும் பெண்களும் டிவி சீரியல், சமையல், துணி துவைத்தல், தூக்கம் என்று பணிகளில் மூழ்கிவிடுகிறார்கள். இச்சமயத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் சின்னஞ்சிறு குழந்தைகள் தண்ணீர் வாளியில் கவிழ்ந்தோ, வீட்டுக்கு வெளியே செல்லும்போது வாகனங்களில் அடிபட்டோ இறக்க நேரிடுகிறது…" என்று வேதனை தெரிவித்தனர்.

இதுபற்றி குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகையில், "இளங்கன்று பயமறியாது என்பார்களே… அதுபோல் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பயம் தெரியாது. அதனால் கைக்கு கிடைத்த பொருட்களை கீழே இழுத்து தள்ளும். இதேபோல் குளிப்பதற்கு வாளியில் வைத்திருக்கும் வெந்நீரில் கை,கால்களை விட்டு பார்க்கும். இதுபோன்ற சமயங்களில் குழந்தையின் தாயோ, வயதான பாட்டியோட உடனிருந்து கண்காணித்து, 'ஊ… சுடும், உள்ளே விழுந்திடுவே' என சைகை மூலம் எச்சரிக்க வேண்டும்.

வயதானவர்களை அனாதை இல்லத்துக்கு விரட்டிவிட்டு, குழந்தைகளைப் பார்த்து கொள்ள ஆயாக்கள் வைக்கும் இளம் தம்பதிகள் வசிக்கும் வீடுகளில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளில் சிக்கி படுகாயமடைவோ, உயிரிழக்கும் நிலையோ ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, வேலைக்கு செல்லும் இளம் தம்பதிகள், தங்களின் குழந்தைகளை சின்னஞ்சிறு வயதிலேயே கிண்டர் கார்டன், கிரெச்சுகளில் சேர்த்துவிடுகின்றனர்.

வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் விடும்போது, குழந்தைகளை தாலாட்டி, கதை சொல்லி தூங்க வைப்பர். குழந்தைகளின் பசியறிந்து உணவு ஊட்டவோ, பீல்டிங் பாட்டி இக் ல்களில் பால் அல்லது தண்ணீரை குடிக்க வைத்து, தங்களின் பேரக் குழந்தைகளை பேணி பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வளர்ப்பதற்கு பேருதவியாக விளங்குவர்.

மேலும் சின்னஞ்சிறு குழந்தைகளிடம் வெந்நீரை தொட்டால் சுடும், ஸ்டாண்டை பிடித்து இழுத்தால் டிவி உள்ளிட்ட பல்வேறு கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடையும் என்பதை வயதான பெரியவர்கள் ஆக்டிங் செய்து பாதுகாப்பார்கள்.

குழந்தைகள் குறும்பு செய்யத்தான் செய்வார்கள்.

பெரியவர்கள் தான் கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். வேறு வழியேயில்லை.