தொடர்கள்
தொடர்கள்
திருப்புகழ் இசையும் இலக்கணமும் - 3 குருநாதன்

20221029174044126.jpg

சந்தப்பாக்களின் வகைகள்:

சந்தப் பாடல்கள் பலவகைப்படும். சந்தங்கள் மாத்திரைகளால் அல்லது எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவினால் அமைகின்றன. சந்தப் பாடல்கள் அத்தகையச் சந்தங்களின் கோர்வை அல்லது சந்தக் குழிப்புகளால் புனையப்படுபவை. சந்தப் பாடல்களை, யாப்பிலக்கணத்தில் உள்ள‌ சீர்வாய்பாடுகளைக்கொண்டு அலகிடாமல், சீர்களுக்கானச் சந்த மாத்திரைகளின்படி அலகிடுதல் வேண்டும். ஏனென்றால், நாம் முன்பே பார்த்தபடி, சீர் வாய்பாட்டின் மாத்திரை விதிகளுக்கும், சந்த மாத்திரைக்கான மாத்திரை விதிகளுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. சந்த மாத்திரைக்குட்பட்டு இயற்றப்படும் பாடல்கள் அனைத்துமே சந்தப்பாடல்கள்தான். சந்தப்பாடல்களுக்குள் கலி, வஞ்சி போன்ற இலக்கண பிரிவுகளுக்குக் கீழ்வரும் விருத்தம் மற்றும் துறைப் பாடல்கள் உள்ளன. வரிப்பாடல்களில் தொடங்கியச் சந்தம், திருவிராகப் பதிகம் போன்ற திருமுறைப் பாடல்களில் தவழ்ந்து, திருச்சந்த விருத்தம் போன்ற ஆழ்வார் பாடல்களில் வளர்ந்துத் துள்ளி, கம்பன் பாடல்களில் மிளிர்ந்து, திருப்புகழ்ப் பாடல்களில் வண்ணமும், அழகும், வளர்ச்சியும், முதிர்ச்சியும் பெற்று, பின்னாளில் தோன்றிய வண்ணப் புலவர்கள் பலருக்கும் வழிகாட்டி, இன்றையப் புலவர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் ஒளிகாட்டி வழி நடத்தி, இனிவரப்போகும் புலவர்களுக்கும் பெருந்துணையாய் இருக்கப்போகின்றது.

20221102194212318.jpg

ஓவியம்: செ.சிவபாலன்

வண்ணப் பாடல்கள்

வண்ணப் பாடல்கள் இசைப்பாடல்களில் ஒருவகையாகும். வண்ணப் பாடல் சந்தக்குழிப்புகளுக்கேற்பப் பாடப்படுவது. எழுத்து, சந்தம், துள்ளல், குழிப்பு, கலை, அடி, பாடல் என முறையே ஒன்றினால் மற்றொன்று அமைய வண்ணப் பாக்கள் உருவாகின்றன. வண்ணம் என்பது ஓசையின் நிறம் (tonal colour) என்று பொருள்படும். இது இருபது வகைப்படும் என்றும், செய்யுள் உறுப்புகள் 34-இல் வண்ணமும் ஒன்று என்றும் தொல்காப்பியம் கூறுகின்றது. இவ்வண்ணங்களுள் நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம் என்ற மூன்றும் குறில், நெடில் எழுத்துகள் பாடல்களின் இடம்பெறும் நிலையைவைத்துப் பெயரிடப்படுகின்றன. குறில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருவதனைத் தொல்காப்பியம் குறுஞ்சீர் வண்ணம் என்கிறது. அதுபோன்றே, நெடில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வரும் நிலையில் அமைவதனை நெடுஞ்சீர் வண்ணம் என்கிறது தொல்காப்பியம். நெட்டெழுத்தும், குற்றெழுத்தும் சார்ந்து வருவதனைச் சித்திர வண்ணம் என்றும் அது குறிப்பிடுகின்றது. ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த எழுத்துகள் அதிகம் பயின்று வரும் தன்மையைவைத்து வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணங்கள் அமைந்துள்ளன. 20 அடிப்படை வண்ணங்களை மேலும் நீட்டி, வண்ண வகைகள் 100 என்றும் ஆக்கலாம். வண்ணப்பாடல்கள் துறை, விருத்தம் போன்ற பாவினங்களில் அமைந்திருக்கக்கூடும். வண்ணப் பாடலில் வல்லினம், இடையினம், மெல்லினம், குறில், நெடில், ஒற்று ஆகிய எழுத்துக்கள் ஒரே வகையில் சீர்களில் இருந்தால்தான் பாடலின் ஓசை/இசை, தாளம் வண்ணமாக இருக்கும்.

சந்தப்பாவும், வண்ணப்பாவும்

சந்தப்பாவும், வண்ணப்பாவும் சந்தங்களின் அடிப்படையிலேயே பாடப்படுகின்றன. எனினும், இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. சந்தப்பாவின் மேம்பட்ட வடிவமே வண்ணப்பா. சந்தப்பாவைவிட அதிகமான, நுட்பமான இலக்கண வரைமுறைகளைக் கொண்டது வண்ணப்பா. சந்தப்பா சீர்/சொல்/பதம் ஆகியவை கொண்டிருக்கும் சந்த மாத்திரைகளுக்கு ஏற்பப் பாடப்படுகின்றன. வண்ணப்பாக்கள் சந்தக் குழிப்பிற்கேற்பப் புனையப்படுகின்றன. சந்தக்குழிப்பு என்பது சந்தங்களின் கோர்வை. சந்தக்குழிப்புகள் முதலில் தெரிவு செய்யப்பட்டபின், அவைகளை ஆதாரமாகக்கொண்டு வண்ணப்பாடல்கள் புனையப்படுகின்றன. இன்றையத் திரைப்படப் பாடல்கள் எப்படி இயற்றப்படுகின்றன, அவைகளுக்கு எப்படி இசையமைக்கப்படுகின்றது என்பதை வைத்து நாம் சந்தக்குழிப்புகளுக்கேற்ப எப்படி பாடல்கள் புனைய‌ப்படுகின்றன என்பதை சற்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். (ஆனால், திரைப்பாடல்களை வண்ணப்பாடல்கள் என்று வகைப்படுத்த முடியாது. ஏனென்றால், திரைப்படப் பாடல்கள்போலின்றி, வண்ணப்பாடல்கள் கடுமையான, கறாரான இலக்கண விதிகளுக்கு உட்பட்டவை).

சந்தங்களுக்கேற்ப பாடல் புனைவதை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள ‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்ற படத்தில் வரும் ‘சிப்பி இருக்குது, முத்துமிருக்குது, திறந்து பார்க்க நேரமில்லடிராஜாத்தி! சிந்தையிருக்குது, சந்தமிருக்குது , கவிதை பாட நேரமில்லடி ராஜாத்தி!’ என்ற பாடல் காட்சியை நினைவில் கொண்டுவந்தால் போதும். பாடலின்போது, அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகை சந்தங்களை (இந்தவகைச் சந்தங்களை ‘தத்தகாரம்’ எனக் குறிப்பிடுவது வழக்கம்.) அடுக்கிச் சொல்லச்சொல்ல‌, நாயகன் அதற்கேற்ப பாடல் புனைவதை நாம் காணலாம். (பாடல் காட்சியை இங்கே

உடன் பார்க்கலாம்). குறிப்பாக, ‘மழையும் வெயிலும் என்ன?’ என்று தொடங்கும் பாடலின் இரண்டாவதுச் சரணத்தைக் கவனித்துப்பார்க்க/கேட்க‌ வேண்டும். கிட்டதட்ட இதுதான் சந்தக்குழிப்பிற்கு ஏற்ப பாடல் புனைவது என்பதாகும். இன்னும்கூட எளிமையாகச் சந்தப்பாடல்களையும், வண்ணப்பாடல்களையும் நாம் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். எப்படி? பாடல்களுக்குமேல் எழுதப்பட்டிருக்கும் சந்தக் குழிப்புகளை வைத்துத்தான்! ஒவ்வொரு பாடலுக்கும் மேல் ‘தந்தனந் தனன தந்தனந் தனன, தந்தனந் தனன தந்தனா’ என்பது போன்ற சந்தக் குழிப்புகளைக் குறிப்பிடுவது மரபு ஆகும். அது சந்த, வண்ணப் பாடலுக்கே உரிய மரபு ஆகும்.

சில சமயம், சந்தப்பாவில், ‘தத்த’ என்ற மூன்று சந்த மாத்திரைச் சீருக்குப் பதிலாக, ‘தய்ய’ ‘தந்த’ ‘தானத்’ போன்ற மூன்றெழுத்துச் சந்தங்கள் வரலாம். ஆனால், வண்ணப் பாடலில் அம்மாதிரி வரக்கூடாது என்பது இலக்கணம். அதனால், வண்ணப் பாடல்கள் யாவும் சந்தப் பாடல்கள் தாம்.

ஆனால், எல்லா சந்தப் பாடல்களும் வண்ணப் பாடல்களாகா. அதாவது, வண்ணப் பாடலில் சந்தக் குழிப்பில் உள்ள வல்லின, இடையின, மெல்லின பேதங்கள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும். சந்தப் பாடலில் இல்லாத இன எழுத்து வேறுபாடுகள் வண்ணப் பாவில் வரும்.

வண்ணப்பாடல்களின் சந்த வகைகள்

நாம் முன்பே சந்தங்களின் வகைகளையும், சந்த மாத்திரைகளையும் பார்த்துவிட்டோம். இன எழுத்து வேறுபாடுகளின் அடிப்படையில் உருவாகி, வண்ணப்பாடல்களில் பயன்படுத்தப்படும் சந்த வகைகளை நாம் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். அடிப்படைச் சந்தங்கள் எட்டு. அவைகளை இன்னும் நீட்டி, மேலும் எட்டு (மொத்தம் பதினாறு) சந்த வகைகளைப் பெறலாம்.

அவை:

1. ‘தத்த’ = குறில் + வல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்க் குறில்

(இதுவே சந்தத்தின் முதன்மை விதி. இத்துடன், இடையின, மெல்லின ஒற்றுகள் சேரலாம். அப்படிச் சேர்ந்தாலும், சந்தம் கெடாது; மாறாது.)

எ.கா: தட்டு, செற்றல், வட்டம், நெய்த்த

2. ‘தத்த’ என்பதின் நீட்சியாகத் ‘தத்தா’ வரும். ‘தத்த’ = குறில் + வல்லின ஒற்று + வல்லின உயிர்மெய் நெடில்.

எ.கா: அக்கா, முட்டாள், விட்டான், பொய்க்கோ, நெய்க்கோல்

3. ‘தாத்த’ = நெடில் + வல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்க் குறில்

எ.கா : பாட்டு, பாட்டன், கூத்தன், வார்ப்பு, தூர்த்தன், வாழ்த்தல்.

4. ‘தாத்தா’ = நெடில் + வல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்நெடில்

எ.கா: தாத்தா, மூச்சால், சாத்தான், வேய்ப்பூ, மாய்த்தோர், வார்த்தோன்.

5. தந்த = குறில் + மெல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்க்குறில்

எ.கா: பந்து, உம்பர், சுண்டல், மொய்ம்பு, மொய்ம்பர், மொய்ம்பன்

6. ‘தந்தா’ = குறில் + மெல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்நெடில்

எ.கா: அந்தோ, வந்தார், தந்தேன், மொய்ம்பா, மொய்ம்போர், மொய்ம்போன்

7. ‘தாந்த’ = நெடில் + மெல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்க்குறில்

எ.கா: வேந்து, வேந்தர், பாங்கன், பாய்ந்து, சார்ங்கர், சார்ங்கம்

8. தாந்தா = நெடில் + மெல்லின ஒற்று + வல்லின உயிர்மெய்நெடில்

எ.கா: சேந்தா, வாங்கார், நான்றான், நேர்ந்தோ, சார்ந்தார், மாய்ந்தான்

9. தன = குறில் + குறில்

எ.கா: குரு, தவர், சுதன்

10. ‘தனா’ = குறில் + மெல்லின உயிர்மெய்நெடில்

எ.கா: குகா, சிறார், கவான்

11. ‘தான’ = நெடில் + மெல்லின உயிர்மெய்க்குறில்

எ.கா: காது, சூதர், பாதம், கேள்வி, சார்கண், கூர்முள், மான்மி, தேன்வி, மாண்மன், கூன்வில், ஆன்மர், மாண்விண்

12. ‘தானா’ = நெடில் + மெல்லின உயிர்மெய்நெடில்

எ.கா; மாறா, போகார், மேவான், ஓர்பூ, கூர்வேல், சேர்மான், கேண்மோ, மான்வா, மாண்மான், கூன்வாள், வான்மேல், தேன்வீண்

13. ‘தன்ன’ = குறில் + மெல்லின ஒற்று + மெல்லின( அல்லது இடையின) உயிர்மெய்க்குறில்

எ.கா: கண்ணி, மென்வி, அண்ணன், பொன்வில், முன்னர், என்வெள்

14. ‘தன்னா’ = குறில் + மெல்லின ஒற்று + மெல்லின( அல்லது இடையின) உயிர்மெய்நெடில்

எ.கா: அண்ணா, மன்னா, முன்னோன், அன்னோர், பொன்வேல், தண்வான்

15. ‘தய்ய’ = குறில் + இடையின ஒற்று + இடையினம் ( அல்லது வல்லின ) உயிர்மெய்க்குறில்

எ.கா: வள்ளி, செய்தி, வள்ளல், செய்தல், மெய்யன், செய்தும்

16. ‘தய்யா’ = குறில் + இடையின ஒற்று + இடையினம் ( அல்லது வல்லின) உயிர்மெய்நெடில்

எ.கா: மெய்யே, நெய்தோ, தள்ளார், செய்தோர், வல்லோன், ஒல்கேன்

நாம் முன்பே பார்த்தபடி பதினாறு அடிப்படைச் சந்தங்களுக்குப் பின் ‘ன,’ ‘னா,’ ‘னத்,’ போன்றவற்றைச் சேர்த்து மற்ற தொடர்களை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘தத்த’ என்ற ஒரு சந்தத்தை மட்டும் நாம் பயன்படுத்தி, ‘தத்தன’ (கற்றது), ‘தத்தனா’ (விட்டதா), ‘தத்தனத்’ (கத்தியைக்), ‘தத்தனாத்’ (சுற்றுலாப்), ‘தத்தனந்’ (கட்டிளம்), ‘தத்தனாந்’ (வெட்டலாம்), ‘தத்தத்’ (முத்தைத்), ‘தத்தந்’ (கப்பம்), ‘தத்தத்த’ (கட்டற்ற), ‘தத்தத்த’ (தப்பப்பா), ‘தத்தந்த’ (கட்டின்றி), ‘தத்தந்தா’ (முத்தந்தா) போன்ற சந்தங்களையும் உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

அதுமட்டுமின்றி, ஒரு சந்தத்துடன் ஒன்றுக்கு மேற்பட்டச் சந்தங்களையும் சேர்ப்பதுவும் உண்டு. எ.கா: தன+த்+தந் = ‘தனத்தந்’ (மயக்கம்) , தான+ந்+தந் = ‘தானந்தந்’ (ஆனந்தம்).

வஞ்சி, கலி போன்ற பா பிரிவுகளிலும் வண்ணப்பாக்கள் உண்டு. அதுமட்டுமின்றி, விருத்தம், துறை போன்ற பாவினங்களில் அமைந்த வண்ணப்பாக்களும் உண்டு. ஓரடியில் அமைந்திருக்கின்ற சீர் மற்றும் எழுத்துக்களை அடிப்படையாக வைத்து அறுசீர்/எழுசீர்/எண்சீர் வண்ண விருத்தம் போன்றவைகளும், பனிரெண்டு எழுத்தடி, இருபத்தெட்டு எழுத்தடி போன்ற வண்ண விருத்தப் பாடல்களும் ஏரளமாக இருக்கின்றன. அவைகளை நாம் திருப்புகழ் பாடல்களுக்குப் பொருள் காணும்போது மேலும் ஓரளவிற்காவது அறிந்துகொள்ளலாம்.

திருப்புகழ் வண்ண விருத்தப் பாடல்கள்:

சந்தப்பாக்களுக்கும், வண்ணப்பாக்களுக்கும் உரிய இலக்கண விதிகளையும், வரைமுறைகளையும், மரபையும் ஓரளவிற்கு நாம் பார்த்துவிட்டோம். ஒருவழியாக, நாம் இதுவரையிலும் அறிந்தவற்றை அடிப்படையாகாக்கொண்டு இப்பொழுது திருப்புகழ்ப் பாடல்கள் எப்படி வண்ணவிருத்தப் பாடல்கள் என்ற முறையில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பார்க்கலாம்.

வண்ணப்பாடல்களிலேயே திருப்புகழ்தான் மிகவும் கடுமையான இலக்கண விதிகளின்படிப் பாடப்பட்டப் பாடல்கள் ஆகும். அதுமட்டுமின்றி, ‘தொங்கல்’ என்ற ஒரு புதிய உத்தியைப் பாடல் புனைவதில் சேர்த்ததின் மூலம், அருணகிரிநாதர் ஒரு புதியப் பாவினத்தையும் உண்டாக்கினார். (‘தொங்கல்’ இல்லாத வண்ணப் பாடல்களும் திருப்புகழில் உண்டு.) பாடல்களில் பயின்றுவரும் எதுகை, மோனை போன்ற தொடைகளும், அடுக்கிவரும் வண்ணச் சந்தங்களும், சந்தங்களோடு இணைந்தும், இயைந்தும் வரும் தாள ஜாதிகளும், பாவங்களை வெளிக்கொணரும் பண்களும் ஒன்றுசேர்ந்து, மொழி தெரியாதோரையும் திருப்புகழ்மீது ஈர்ப்பும், காதலும் கொள்ளச் செய்வன. திருப்புகழில் பலவகையான விருத்தப் பாடல்களும், பலவகையான‌ எழுத்தடி, சீரடிகள் கொண்ட பாடல்களும் இருக்கின்றன. இப்பொழுது, அருணகிரிநாதர் அறிமுகப்படுத்தியத் ‘தொங்கல்’ என்ற தனிச்சிறப்பு முறை பயின்றுவரும் ஒரு திருப்புகழை எடுத்துக்கொண்டு அதன் இலக்கண அமைப்பையும், அதன் இசைக் குறிப்புகளையும் பார்க்கலாம். அதிலும், அவர் பாடியருளிய‌ விநாயகர் துதிப்பாடலையே நாம் இலக்கண, இசைக் குறிப்புகளை அறிந்துகொள்வதற்கு எடுத்துக்கொள்ளுவது மேலும் சிறப்பாக இருக்கும்.

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுக னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ

கற்பக மெனவினை கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்

மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடு பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புன மதனிடை இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை

அக்கண மணமருள் பெருமாளே

(புரிதலுக்காக, பாடலைப் பதம்பிரிக்காமல், அருணகிரிசுவாமிகள் பாடியருளிய‌ வண்ணச் சீர் அமைப்பிலேயே இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றது)

அ. பாடலின் இலக்கண அமைப்பு:

இது ஒரு எழு சீர் வண்ண விருத்தம். ஓர் அடிக்கு ஐம்பது எழுத்துக்களைக் (ஒற்றெழுத்துக்கள் இல்லாமல்) கொண்டது. எனவே, ஐம்பது எழுத்தடி வண்ண விருத்தம் என்றும் இதை அழைக்காலாம்.

ஆ. இந்தப் பாடலின் சந்தக்குழிப்பு:

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன தனதான அதாவது, இந்தப் பாடலின் ஒவ்வொரு அடியிலும் உள்ள சீர்கள் இந்தச் சந்தங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

இ. இந்தப் பாடலின் அடி அமைப்பு:

1. ‘கைத்தல’ என்று தொடங்கி, ‘கடிதேகும்’ என்பது வரை ஓர் அடி; ‘மத்தம’ தொடங்கி, ‘பணிவேனே’ வரை இரண்டாவது அடி; ‘முத்தமி’ முதல் ‘அதிதீரா’ வரை மூன்றாவது அடி; நான்காம் அடி ‘அத்துய’ என்று தொடங்கி. ‘பெருமாளே’ என்று முடிகின்றது.

2. ‘கைத்தல’ முதல் ‘ளடிபேணிக்’ வரை ஒரு கலை எனப்படும். ‘கற்றிடு’ முதல் ‘கடிதேகும்’ வரை இன்னொரு கலை. ஆகவே, இரண்டு கலைகள் சேர்ந்து ஓர் அடியாகும்.

3. ‘கைத்தல’ முதல் ‘கரிமுக’ வரை உள்ள பகுதி ‘குழிப்பு’ எனப்படும். குழிப்பை அடுத்து தனிச்சொல் போல் வரும் ‘னடிபேணிக்’ என்பது ‘தொங்கல்’ எனப்படும். எனவே, ‘குழிப்பும்’ ‘தொங்கலும்’ சேர்ந்தால் ஒரு கலை ஆகும்.

4. இரண்டு ‘கலைகள்’ மோனையால் இணைந்து அடியாகும். ‘கைத்தல’ என்று தொடங்கும் கலை, ‘கற்றிடும்’ என்ற மோனையோடுத் தொடங்கும் க‌லையோடு இணைந்து ஓர் அடியாகின்றது. அதுபோன்றே, பாடலின் மற்ற மூன்று அடிகளும் அமைந்திருக்கின்றன.

5. ‘கைத்தல,’ ‘மத்தமும்,’ ‘முத்தமி,’ ‘அத்துய’ என்ற எதுகை பயின்றுவரும் சீர்களோடுத் தொடங்கும் நான்கு அடிகள் கொண்டத் திருப்புகழ் பாடல் இது.

6. ‘கைத்தல நிறைகனி’ என்ற இரண்டு சீர்கள் கொண்டப் பகுதி, ‘துள்ளல்’ எனப்படும். ‘துள்ளல்’ என்பதற்கு மாற்றாக‌ ‘கண்டிகை’ என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. இது ‘தத்தன தனதன’ என்ற சந்தத்திற்கேற்ப அமைந்துள்ள சீர்கள். சந்தங்கள் இரண்டு சேர்ந்து ‘துள்ளல்’ ஆகும்.

7. இந்தப்பாடலில், ஒவ்வொரு குழிப்பிலும் மூன்று துள்ளல்கள் உள்ளன. அனைத்துத் துள்ளல்களும் ‘தத்தன தனதன’ என்ற சந்ததிற்கேற்ப அமைந்துள்ளதைப் பார்க்காலாம்.

8. பல திருப்புகழ்களில் ‘துள்ளல்’ ஒன்றாகவோ, மூன்றாகவோ அடுக்கப்பட்டுக் ‘குழிப்பாக’ வரும்.

(சந்தக் கலவையாக வரும் திருப்புகழ் பாடல்களும் உண்டு.)

9. ‘தொங்கல்’ என்ற முறையில் அமையாதத் திருப்புகழ் பாடல்களும் உண்டு. ஆனாலும், அவைகள் யாவும் சந்தக்குழிப்பிற்கேற்பவே பாடப்பட்டவை.

ஈ. இசைக்குறிப்புகள்:

1. இந்தப் பாடல் ‘நாட்டை’ என்ற பண்ணில் அமைந்துள்ளது.

2. திருப்புகழ்ப் பாடல்களில் தாளக் கணக்கீட்டை மும்மைநடை (திஸ்ரம்), நான்மை நடை (சதுர்ஸ்ரம்), ஐம்மை நடை (கண்டம்), எழுமை நடை (மிஸ்ரம்), ஒன்பான்மை நடை (சங்கீர்ணம்) என்ற ஐந்து தாள வகையிலும், சீர்கள் அமைந்துள்ள நிலையில் சீர் வகைத் தாளங்களாகவும் கணக்கிடுவர். மேற்குறிப்பிட்ட ஐந்து தாள வகைகளை முறையே ‘தகிட,’ ‘தகதிமி,’ ‘தகதகிட,’ ‘தகிடதகதிமி’ ’தகதிமிதகதகிட’ என்ற சொற்கட்டுகளாலும் குறிப்பிடுவர். கலப்புத் தாள அமைப்பில், தாளமாலிகையில் அமைந்துள்ளப் பாடல்களும் திருப்புகழில் உண்டு.

பெரும்பாலானத் திருப்புகழ்ப் பாடல்களில், ஒரு லய அமைப்பு மூன்று முறை மடங்கி வந்து தொங்கலில் முடிவடையும். பொதுவாக, தொங்கலின் அடிப்படைச் சந்தத்தை நீட்டி ஆவர்த்தனமாகப் பாடுவது வழக்கத்தில் உள்ளது.

3. இந்தப் பாடலின்தாள அமைப்பு ஆதி தாளத்தில் த(க்)கிட தகதிமி, தகதாத்தோம் என்ற லய அமைப்பில் உள்ளது.

நாம் முன்பே குறிப்பிட்டபடி, இந்தப் பதிவினில் காணப்படும் திருப்புகழ்ப் பாடல்களின் இலக்கண அமைப்பு மற்றும் இசைக் குறிப்புகள் மிகவும் அடிப்படையானவை. எளிய அறிதலுக்கும், புரிதலுக்குமானவை அவை. ஆர்வமுள்ளவர்கள் உரிய நூல்களைப் படித்தும், விவரம் அறிந்தவர்களிடம் பாடம் கேட்டும் இவற்றைப் பற்றிய‌ மேலதிக விவரங்களையும், நுண் தகவல்களையும், நுட்பங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.