தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் 61 - ஆர்.ரங்கராஜ்

மிகவும் பழமையான திருவாலங்காடு செப்புப் பட்டயம்.

20221102193712654.jpg

1903-ஆம் ஆண்டு திருவாலங்காட்டுச் சிவன் கோயிலைப் பிரித்துச் சரியாகக் கட்ட ஆரம்பிக்க போது திருவாலங்காடு செப்புப் பட்டயம் கிடைத்தது.

"மிகவும் பழமையான செப்பேடு உத்திர பிரதேசத்தில் சோகெளரா என்ற இடத்தில் கிடைத்த பித்தளையில் ஏடு எழுதப்பட்டதாகும். இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர். இதனினும் பழமை வாய்ந்தது பல்யானை முதுகுடுமிப் பெருவழுதி என்ற அரசன் வழங்கிய செப்புப் பட்டயமாகும். ஆனால் கிடைக்கவில்லை. அதனைப் பற்றி வேள்விக்குடிச் செப்புப் பட்டியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். திருவாலங்காடு சிவன் கோயில் இடிபாடுகளுடன் இருந்துள்ளது. 1903-ஆம் ஆண்டு திருவாலங்காட்டு செப்புப் பட்டயம் கிடைத்தது", என்று தெரிவிக்கிறார் திரு ம. காந்தி, காப்பாட்சியர் (பணிநிறைவு), சத்துவாச்சாரி, வேலூர்.

இந்தச் செப்புப் பட்டயம் கிடைத்ததும் பெரும் வியப்பை அளித்ததால் அறிஞர் பிளிட் என்பவர் இது ஒரு சிறப்பான பட்டயம் என்று தெரிவித்தார்.

31 ஏடுகளைஒரு செப்பு வளையம் பிணைக்கிறது. இந்த வளையத்தில் சோழ அரசு முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செப்புப் பட்டயம் வளையத்துடன் 8 மணங்கு 2 வீசை 20 பலம் எடை உடையது. "முதல் 10 ஏடுகள் வடமொழியிலும் 21ஏடுகள் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. 10ஆவது ஏடு தனித்திருந்திருக்கிறது. சங்கரன் என்பவருடைய மகன் நாராயணன் இந்த தானத்தை பாடினான். காஞ்சிபுரத்தில் புகழ்வாய்ந்த ஓவியக் குடும்பத்தில் பிறந்த அரவாமூர்த்தியும் இவனுடைய இரண்டு தம்பிகள் ரங்காவும் தாமோதிராவும் செப்பேட்டில் எழுதினார்கள். இவர்கள் இயந்திர கலையில் வல்லவர்கள்", என்று கூறுகிறார் திரு காந்தி.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி வட்டத்தின் கண் புகழ் பூத்த திருவாலங்காடு அமைந்திருக்கிறது. பழையனூர் திருவாலங்காட்டின் பக்கத்து ஊராகும்.

திருவாலங்காட்டு சிறப்பு

திருவாலங்காட்டு சிவன் ரத்தன சபையில் நடமிடுகிறார். சோழர் காலத்தில் சிவனை மகாதேவர் என்றழைத்தனர். இவருக்கு அம்மையப்பன் என்ற பெயரும் உண்டு. பார்வதியை அம்மைநாச்சியார் என்றழைத்தனர். வண்டார் குழலி என்று தேவாரத்தில் பாடப்பட்டுள்ளார். திருவாலங்காட்டுடையாரை திருஞான சம்பந்தர் தொண்டை மண்டலத்து பாடல்களில் 11ஆவது இடமாகப் பாடியிருக்கிறார், சுந்தரர் பாடலும் உண்டு. காரைக்கால் அம்மையார் பாடிய மூத்தத்திருப் பதிகத்தில் திருவாலங்காட்டுச் சிவனைப் பாடியுள்ளார்.

அற ஓலை அளித்த அரசன்

திருக்காளத்தி பிச்சன் என்பவனும் இவனுடைய சகோதரன் அரணேறி என்பவனும் முதலாம் இராசேந்திர சோழனிடம் பழனூரை தேவதானமாக வேண்டும் என்று கேட்டனர். வழங்குமாறு கோரினர். தானம் கோரியவர்கள் மங்கல வாயில் என்ற ஊரைச் சேர்ந்த மாயாணனின் மக்களாவர். முடிகொண்ட சோழபுரத்தில் முதலாம் இராசேந்திர சோழன் தங்கியிருந்து தன்னுடைய 6ஆம் ஆட்சியாண்டில் தன்னுடைய முதல் அமைச்சர் இராமனுடைய மகன் ஜந்நாதனை அழைத்து அறஓலை ஆணையை எழுதிக் கொள்ளுமாறு சொன்னார். இந்த ஜநநாதன் சாளுக்கிய மரபில் மணிமுடியாக திகழ்ந்தவன். இருப்பினும் சோழனுக்கு அமைச்சனாகப் பணியாற்றுகிறான் எனில் இவன் சோழ சாளுக்கிய போரில் சோழர்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இங்கு ஆட்சியாண்டு குறிப்பிட்டிருந்தாலும் நாள் குறிப்பிடவில்லை. பழையனூர் ஐயங்கொண்ட சோழ மண்டலத்தில் சிறந்த அணிகலனாக விளங்கியது.

அம்மைநாச்சியார்க்கு தேவதானம்

இந்த தானம் ஐயங்கொண்ட சோழமண்டலத்தில் மணவிற் கோட்டத்துப் பழையனூர் உடையார் திருவாலங்காடு உடையார் கோயிலில் அம்மைநாச்சியாருக்கு தேவதானம் வழங்குமாறு மகாதேவ பிடாரன் கேட்டார். முதலாம் இராசேந்திர சோழன் முடிகொண்ட சோழபுரத்து சனி மண்டபத்தில் அமர்ந்து கொண்டு 6ஆம் ஆட்சியாண்டில் 120ஆம் நாளில் இந்த தானத்தை அளித்தான். அந்த தானம் ஈக்காட்டுக் கோட்டத்துக் கீழ்க்கற்றியூர் நாட்டு அம்மைச் சேரியில் நன்செய் புன்செய் நத்தம் உட்பட நிலம் பதிலாரை வேலி அளிக்கப்பட்டது. செட்டமங்கலத்தில் நத்தமும் ஆற்றுப்படுகை புன்செய் உட்பட நிலம் பதினொன்றும் அளிக்கப்பட்டது. மொத்தம் இருபத்தைஞ்சரைவேலி அளிக்கப்பட்டது. திருநாமத்துக் காணி இறையிலி தேவுதானமாக அரசர் கொடுத்தார்.

திருவாலங்காடு மகாதேவருக்கு இறையிலி தானம்

"பழையனூர் திருவாங்காடுடைய மகாதேவருக்கு பழைய பிரமதேயமாக இருந்ததை வெள்ளான் வகையாக மாற்றி 6வது ஆட்சியாண்டு 88ஆம் நாளில் அளித்தார். இந்த தானத்தை அளிக்கும் போது அரசன் முடிகொண்ட சோழபுரத்தில் அரண்மனையின் கருமாளிகை மதுராந்தக தேவனில் தெற்கில் மறைவிடத்தில் இருந்து கொண்டு ஓலைஎழுதும் உய்யகொண்டார் வளநாட்டு திருவழுந்தார் நாட்டுத் துளாருடையான் நாராயணன் கற்றளியான உத்தமசோழத் தமிழதரையன் என்பவரிடம் சொல்ல எழுதினான். இந்த ஆணை பழையனூராருக்கும், சிங்களாந்தக சதுர்வேதிமங்கலத்தாருக்கும் அளிக்கப்பட்டது. பிரமதேயம் வெள்ளான்வகையாக அரசனுக்கு அதிகமாக வருவாய் ஏற்படுகிறது. அந்த வருவாயை திருவாலங்காடுடைய மகாதேவருக்கு இறையிலியாக அளித்தார்."

"தானத்தை முதல் அமைச்சரும் கருமம் ஆராய்பவர்களும் புரவுவரிதிணைக்களத்தினர், வரிபொத்தகம், முகவெட்டி, கீழ் முகவெட்டி, ஊரார்கள், பிரமதேய சபையார்கள் நிறைவேற்றுவதில் பங்கு கொண்டு எல்லை தெரித்துக் காட்டி அறவோலையில் அனைவரும் கையெழுத்திட்டனர். கரணத்தார்களும் மத்தியஸ்தர்களும் கையெழுத்திட்டுள்ளனர்."

செப்பேட்டில் கூறப்படும் வரிகள்

நாடாட்சி, ஊராட்சி, வட்டிநாழி, புதர்நாழி, வண்ணாரப்பாறை, கண்ணாலகாணம், குசக்காணம், இடைப்பாட்டம், தறியிறை, தரகு, தட்டார்ப்பட்டம், மன்றுபாடு, மாவிறை, தீயெரி, விற்பிடி, வாலமஞ்சாடி, நல்லாவு, நல்லெருது, நாடுகாவல், ஊடுபோக்கு, இலைக்கூலம், நீர்க்கூலி, உல்கு, ஓடக்கூலி ஆகியன. இவை திருவாலங்காடுடைய மகாதேவருக்கு தானம்.

(தொடரும்)