தொடர்கள்
பொது
குஜராத் தேர்தல் சுவாரஸ்யங்கள் ! ஒரே ஒரு ஓட்டுக்கு வாக்குச் சாவடி !- மாலா ஶ்ரீ

20221102181929268.jpg

குஜராத் மாநிலத்தின் 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இதில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் சில நிகழ்வுகளை பார்ப்போமா?

குஜராத்தின் சோம்நாத் மாவட்டம் 'கிர்' அதிகளவிலான சிங்கங்கள் நடமாடும் வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்குள்ள பனேஜில் அமைந்துள்ள பனேஷ்வர் மகாதேவ் கோயிலில் மஹந்த் ஹரிதாஸ் உதாசீன் என்பவர் நீண்ட காலமாக தனியே வசித்து வருகிறார். இவருடன் வசித்தபாரத் தாஸ் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.

20221102182001510.jpg

தற்போது குஜராத் உள்பட ஒருசில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. குஜராத்தில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில், பனேஜில் தனியே வசிக்கும் மஹந்த் ஹரிதாஸ் உதாசீனுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இங்கு காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால், வனத்துறை அலுவலகத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அங்கு அவர் தனியே வாக்களித்து, விவிஐபி போல் 'போஸ்' கொடுத்தார்.

இவர் ஒருவருக்காக, தேர்தல் அதிகாரிகள் உட்பட 10 பேர் கொண்ட குழு நகரத்திலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் காட்டுக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றிருந்தனர். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இங்கு ஒரு தனிநபருக்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மையம் அமைத்து வருகிறது எனக் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சூரத் மாவட்டம், காம்ரேஜில் 'சோலங்கி' குடும்பம் வசித்து வருகிறது. இக்குடும்பத்தின் தலைவராக 82 வயதான ஷாம்ஜிபாய் எனும் முதியவர் இருக்கிறார். இவரது குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 81. இவர்களில் பலர் வேலைக்காகவும் கல்விக்காகவும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்கியுள்ளனர். எனினும், ஒவ்வொரு தேர்தலின்போது மட்டும் அனைவரும் ஒன்றுகூடிவிடுவர். இந்த 81 பேரில் 60 பேர் வாக்குரிமையை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஷாம்ஜிபாயின் மகன் நந்தலால் கூறுகையில், "எனது தந்தை 82 வயதிலும் வாக்களிக்கிறார். இதை பார்த்துதான் நாங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டோம். எனவே, எந்த வேலை இருந்தாலும், நாங்கள் தவறாமல் வாக்களிக்க ஒன்றுசேருகிறோம்! கடந்த 1985-ம் ஆண்டு 6 சகோதரர்களில் ஒருவரான லால்ஜி சோலங்கி, இங்கு வந்து குடியேறினார். அவரது காலம் தொட்டு எங்களின் குடும்பம் வேளாண் துறை சார்ந்த உபகரணங்களை தயாரித்து வருகிறது.

தற்போது எங்கள் குடும்பத்தில் மொத்த உறுப்பினராக 96 பேர் உள்ளனர். இதில் 81 பேர், தற்போது ஒன்றுசேர்ந்திருக்கிறோம். இந்த கூட்டுக்குடும்பம், எங்களுக்கு பல்வேறு விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது. அதில், இந்த வாக்குப்பதிவு மிக முக்கியம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாக்களிப்பதை ஒரு பிரசாரமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்!" என்று நந்தலால் மகிழ்ச்சி தெரிவித்தார்.

குஜராத்தின் 'மினி ஆப்பிரிக்க கிராமம்' என அன்பாக அழைக்கப்படும் ஜம்பூரில் 'சித்தி' பழங்குடி மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். 'அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதே தங்களின் நோக்கம். இதன் அடிப்படையில், ஜம்பூரில் வசிக்கும் சித்தி பழங்குடி மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது' என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தங்களுக்கு முதன்முறையாக வாக்களிக்க வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் பழங்குடி மக்கள் பாரம்பரிய நடனமாடி, விதவிதமான உணவுகளை சமைத்து வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

20221102182026681.jpg

முதல் கட்ட தேர்தலுக்கு முன்னர், அனைத்து சித்தி பழங்குடி மக்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன்மூலம் கடந்த 1-ம் தேதி ஜம்பூர் கிராமத்தில் வசிக்கும் 3,481 வாக்காளர்களில், முதன்முறையாக சுமார் 90 சதவிகித 'சித்தி' பழங்குடியின மக்கள் வாக்களித்தனர். இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து போர்த்துக்கீசியர்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அதாவது, இவர்களை ஆப்ரிக்காவிலிருந்து போர்த்துக்கீசியர்கள் அடிமைகளாக கொண்டு வந்துள்ளனர். எனினும், இங்கு இவர்கள் 'சித்தி' பழங்குடியின மக்களாக மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், இவர்களில் சிலர் தப்பி சென்று காடுகளில் மறைந்து வாழ்ந்ததாகவும் பின்னாட்களில் தங்களுக்கென ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் கிர் மாவட்டத்தில்தான் அதிகளவில் வசிக்கும் 'மதுபூர்' சமூகத்தை சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களும் முதன்முறையாக தங்களின் வாக்குகளை போட்டுள்ளனர்.

குஜராத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில், 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 கோடி பேர் வாக்களித்தனர். இதில் 4.77 லட்சம் பேர் முதன்முறை வாக்களிக்கின்றனர். இவர்களில் 3.3 லட்சம் இளம் வாக்காளர்கள், சமீபத்திம தேர்தல் சீர்திருத்தங்களால் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டனர் எனக் குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் தலித் சமூகத்தின் வாக்கு வங்கி, காங்கிரசுக்கு ஆதரவாகதான் இருக்கும் என கணிப்புகள் கூறுகின்றன. இதேபோல், ஒரு இஸ்லாமியரைக்கூட பாஜக வேட்பாளராக நிறுத்தாததால், சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும். பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்புள்ள சில இடங்களை இம்முறை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றவும் வாய்ப்பு இருக்கிறது என ஆரூடங்களாக கூறப்படுகிறது.