தொடர்கள்
பொது
விகடகவி  கடந்து  வந்த பாதை -2 - மரிய சிவானந்தம்

20221102171821417.jpg

"புதைந்த விதை நான்

முளைத்து விட்டேன்

பூக்கும் பூக்களால்

நன்றி சொல்வேன் -

விகடகவி இதழ் -24/01/2018

பிருந்தா சாரதியின் குறுகிய , அழகிய கவிதை நினைவில் எழுகிறது. சிறு விதையாய் மண்ணில் விழுந்து , புதைந்து ,சிறு செடியாக இலை தளிர்த்து பூக்கள் பூக்கும் இந்த கவிதை 'விகடகவிக்கும் ' பொருந்தும் .

மதன் சார் போன்ற பெருமகன்களின் மனதில் விழுந்த இந்த மின்னிதழ் தொடங்கும் எண்ணம், உரு பெற்று தழைத்து இந்த ஐந்தாண்டுகளில் பூத்துக் குலுங்குகிறது .

கவிதைகள், கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைகள், காணொளி நேர்க்காணல்கள், தொடர்கள், ஆன்மிக கட்டுரைகள் என்று ஒரு "முழு பேக்கேஜ்" போல விகடகவி துவக்கம் முதல் வடிவைக்கப்படுகிறது.

இப்போதும் ஆசிரியர் குழு "ஜூம் மீட்டிங்" போட்டே ஒவ்வொரு வாரமும் எதை எழுத வேண்டும் என்ற தீர்மானித்து ,அதன்படியே ஒவ்வொருவரும் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மூத்த பத்திரிக்கையாளர்கள் ஜாசன் ,மேப்ஸ், சுபா வெங்கட் ,ராம், ராஜேஷ் கன்னா, ஆகியோரின் திட்டமிடலும் ,வழி நடத்தலும் தொடர்கிறது. இதழ் ஆசிரியர் மதன் ,ராவ் அவர்களின் உற்சாக வழிகாட்டுதலில் அட்டைப்படம் முதற்கொண்டு கவனம் எடுத்து தயாரிக்கப்படுகிறது.

20221102171855630.jpg

கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கையில், வழியெங்கும் சிதறிக் கிடக்கும் வைரங்களும் , அவற்றை பட்டைத் தீட்டி அளித்த கரங்களும் நம் கண் முன் தெரிகின்றன. நவம்பர் 2017 முதல் 2018 ஆண்டு வரையான முதலாண்டு வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

விகடகவியின் செறிவு நிறைந்த உள்ளடக்கத்துக்கு மேலும் மெருகூட்டிய தொடர்கள் ஏராளம். இதழ் தொடங்கிய முதலாண்டுக்குள் பல நல்ல தொடர்கள், மினி தொடர்களை பிரபல எழுத்தாளர்கள் எழுதினார்கள். விகடகவி தொடங்கப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி மதன் அவர்கள் இலங்கை ஆதவன் வானொலிக்கு பேட்டி தந்தார் .

கலீல் ஜிப்ரானின் கவிதைகளை மொழிபெயர்த்து தந்த தங்கேஷ், திரைத்துறை பிரபலங்களின் நினைவுகளை பகிரும் "திரும்பி பார்க்கிறேன்' என்னும் தொடரை தந்த .பரத், "இனிக்கும் இஸ்லாம்" எழுதிய வி.எஸ்.முகமது அமீன், "நோயை எதிர்க்கும் யோகாசனம்" என்று யோகம் கற்பித்த ஹாங்காங் பூவேந்திரன், 'சங்கீத ஆலாபனை' எழுதிய மாயவரத்தான் சந்திரசேகர் என்று பலர் இந்த ஆண்டில் புகழ் மிக்க தொடர்களை எழுதினார்கள். ஹரிகி ,'வாருங்கள், இலக்கியப் பக்கம் 'என்ற தொடரையும் மரியா சிவானந்தம் சிலப்பதிகாரத் தொடரையும் எழுதினார்கள் .சுதாங்கன் "நாடும் நடப்பும்" என்ற சம கால தொடரை எழுதி வந்தார் .

தொலைக்காட்சி செய்திகளை பகிரும் 'சேனல் டாக் ' மெகா மாலினி கை வண்ணத்தில் வந்தது ."கோலிவுட் சிப்ஸ்" ,சினிமா செய்திகளை தாங்கி வந்தது . குறும்பும் , கருத்தும் மிக்க வாட்ஸ அப் துணுக்குகளை, "வாவ் வாட்ஸஅப்" வழங்கியது .பேஸ்புக்கின் 'முத்திரை முகங்கள் 'அறிமுகம் செய்து வைக்கப்பட்டது .

"ரேணு ,ரம்யா, ராகினி" என்ற உரையாடல் ஒரு மினி டாக் ஷோ நாட்டு நடப்புகளை பேசியது. .Anything and everything under the Sun என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தது .ஷெர்லக் என்ற இன்னுமொரு உரையாடல் அரசியல் நிகழ்வுகளை அள்ளி தந்தது .ஆதியோகி சிவா எழுதிய 'சுளீர் சொர்ணாக்கா 'பிரபலங்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்தும்,கமெண்டும் கொடுத்தது . இவரின் மற்றுமொரு சிறந்த தொடர் மகாராஜா -மந்திரி ஆகும்.

லாவண்யா ராம்கோபாலனின் 'பகவத் கீதை ' ஆடியோ தொடரும் இந்த காலத்தில் தான் வெளி வந்தது . .பொன்ஸி , முத்ரா, கண்மணி மைந்தன் ஸ்ரீகாந்த் ,பொன்வண்ணன், நந்தன் ஸ்ரீதரன். கீதா கைலாசம் என்று பலரும் தம் படைப்புகளை விகடகவியில் விருந்தாக்கினார்கள். அனவைரும் ஒருங்கிணைந்து இதழை அங்குலம் அங்குலமாக அலங்கரித்து தந்தனர்.

தேர்தல், திருவிழா, சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் ,உலகச் செய்திகள், கலை, இலக்கியம், ஆன்மிகம் என்று எல்லா துறை செய்திகளையும் உடனுக்குடன் அதே வாரத்தில் ஆராய்ந்து கட்டுரைகள் ,சிறப்பிதழ்கள் என்று விகடகவி வழங்கி வருகிறது. ஒரு முழுமையான வார இதழுக்கான இலக்கணங்களை சற்றும் மீறாமல் தன் பயணத்தை தொடர்ந்து நடத்துகிறது . நாளிதழில் ஒரு சின்ன பத்தியில் வரும் செய்தியை , அதன் முக்கியத்துவத்தை அறிந்து அந்தச் செய்தியின் பின் புலத்தை ஆராய்ந்து நேர்க்காணலாக, காணொளியாக படைத்தனர் விகடகவியின் நிருபர்கள் .

எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட் ஒப்பந்தம், கமலின் மய்யம், ரஜனியின் அரசியல் பிரவேசம் , மீ டூ ,குட்கா என அந்த ஆண்டின் "ஹாட் டாபிக்"குகளை விகடகவி பிரித்து அலசியது.ஒரு சமூக பொறுப்பும் அக்கறையும் கொண்ட மின்னிதழாகவே விகடகவி அன்று முதல் இன்று வரை மிளிர்கிறது .

எழுத்துலகில் தடம் படித்த பிரபலங்களுடன், புதிய எழுத்தாளர்களும் இந்த பயணத்தில், இந்த கால கட்டத்தில் இணைந்து, இணையாக பயணித்ததும் வரலாறு. அவர்கள் தம் எழுத்துத் திறமையை செம்மைப் படுத்திக் கொண்டே , விகடகவியையும் மெருகேற்றி வளர்த்தனர். இளம் கவிஞர்கள், கதாசிரியர்கள் பலருக்கு முதல் மேடை அமைத்து தந்தது விகடகவி.

வாசகர்களின் ரசனைக்கேற்ப, புதிய பகுதிகளைச் சேர்த்து வடிவமைப்பதில் விகடகவி முன்னணியில் இருக்கிறது. இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க தினமும் புதிய வாசகர்கள் சேர்ந்து விகடகவியைப் படிப்பதை அறிய முடிக்கிறது. இளைஞர்கள், பெண்கள்மற்றும் சமுதாயத்தின் பல அடுக்குகளில் இருப்பவர்களுக்கும் ஏற்ற விதத்தில் நிறைய செய்திகளை வழங்குவதில் முனைப்புடன் செயல்படுகிறது விகடகவி டீம் .

புதிய வாசகர்கள் , மேலே குறிப்பிட்ட பழைய தொடர்கள், கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் , விகடகவி 'ஆப்'பை தரவிறக்கம் செய்துக் கொண்டு படித்து இன்புறலாம் .

இன்னும் ஒரு கவிதை- ,6-12.2017 விகடகவி இதழில் வெளி வந்தது இக்கவிதை.

"வந்தவன் கேட்டான்

என்னைத் தெரியுமா

தெரியவில்லையே என்றேன்

உன்னைத் தெரியுமா

என்று கேட்டான்

தெரியவில்லையே என்றேன்

பின் என்னதான் தெரியும்

என்றான்

உன்னையும் ,என்னையும் தவிர

வேறு எல்லாமும் தெரியும் என்றேன் "

(ரவி சுப்பிரமணியம் பகிர்ந்த நகுலனின் கவிதை )

-பயணம் தொடரும்