தொடர்கள்
பொது
மனித குலத்தின் புதிய சவால் ஜோம்பி வைரஸ் !! உஷார் !! - மாலா ஶ்ரீ

20221101222954596.jpg

ரஷ்யாவில் பனிப்பாறைகள் உருகிய நிலையில், சுமார் 48,500 ஆண்டுகளுக்கு முன்பே மண்ணுக்குள் புதைந்த பண்டைய 13 ஜோம்பி வைரஸ்கள் வெளிவரத் துவங்கியுள்ளது. இதற்குமுன் இதைப் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ கிடையாது. இதன் வீரியத்தன்மை எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை யாரும் அறியவில்லை. இதனால் மனிதகுலத்துக்கு பேரழிவு ஏற்படலாம் என வைராலஜி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

20221101223013520.jpg

உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் குறித்து ஐநாவும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 'மீண்டும் சரிசெய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான 'கோட் ரெட்' எச்சரிக்கை மணி. அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் உயரப் போகிறது. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்!'

ஐநா அமைப்பு வெளியிட்ட Intergovernmental Panel on Climate Change எனும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்தளவுக்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

இந்நிலையில்தான், ரஷ்யாவின் எல்லை அருகே சைபீரியாவில் அண்டார்டிகாவின் தொடர்ச்சியாக உள்ள ராட்சத பனிப் பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. "இங்கு உருகிய பனிப் பாறைகளில் இருந்து, சுமார் 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மண்ணுக்குள் புதைந்து, உயிருடன் இருக்கும் 13 புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவை இத்தனை ஆண்டுகளாக பனிப் பாறைகளுக்குள் உறைந்த நிலையில் இருந்துள்ளது.

20221101223036342.jpg

பனிப் பாறைகளுக்குள் இருந்ததால் அவை சாகாமல் உயிருடன் இருந்துள்ளன. இப்போதும்கூட அவை பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இவை ஜோம்பி வைரஸ்கள்!" என்று ஐரோப்பிய வைராலஜி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கூறுகின்றனர். மேலும், "காலநிலை மாற்றம் காரணமாக பனிக்கட்டிகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் வேகமாக உயரும். கடலோர மாவட்டங்களில் வெள்ளம், புயல் தொடர்ந்து ஏற்படலாம்.

20221102192841966.jpg

இது எல்லோரும் எதிர்பார்த்த, எதிர்பார்க்கும் அபாயங்கள் என்றாலும், வேறு சில அபாயங்களும் உள்ளன. எதிர்பாராதது, வைரஸ்கள் வெளியேறுவது! இதன்மூலம் நமக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத, இதற்குமுன் மருத்துவர்கள்கூட கேள்விப்படாத வைரஸ்கள் தோன்றும் அபாயம் உள்ளது!" என்று ஐரோப்பிய வைரலாஜி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ரஷ்யாவில் உருகி வரும் பனிக்கட்டிகளில் இருந்து வெளியேறி வரும் பண்டைய Pandoravirus Yedoma வைரஸ் ஆகும். இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரெக்கார்டை தற்போது இந்த வைரஸ் முறியடித்து உள்ளது. இவை ஜோம்பி வைரஸ்கள் என்றாலும், இதன் குணம் என்ன? படங்களில் காட்டுவது போல, இவை மனிதர்களை ஸோம்பிகளாக மாற்றுமா என விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கவில்லை.

20221102192956166.jpg

இத்தனை காலம் பனிக்கட்டிகளுக்குள் இருந்தும் அவை உயிரோடு இருப்பதால், அதை 'ஜோம்பி வைரஸ்' என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை மனிதர்களை தாக்குமா என்பது தெரியாது. ஆராய்ச்சிகள் தொடரும்போது இதன் குணங்கள் தெரிய வரும். இவை மனிதர்களை தாக்கும் பட்சத்தில், அது மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இருந்தாலும் தற்போதைய தகவல்களின் படி இந்த வைரஸ்கள் அமீபா நுண்ணியிர்களை மட்டுமே தாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இதேபோல் சீனாவின் மேற்கு பகுதியில் திபெத் அருகே கடந்த 2015-ம் ஆண்டில் 'குலலியா ஐஸ் கேப்' என்ற பகுதியில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு உருகும் நிலையில் இருந்த பல்வேறு பனிப்பாறைகளை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து ஆராய்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆராய்ச்சி முடிவில், மொத்தம் 33 விதமான வைரஸ்கள் பாறைகளில் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ்கள் குறித்த அறிக்கை கடந்த மாதம் வெளியானது.

20221102193228221.jpg

இந்த வைரஸ்கள் எல்லாம் சாகாமல் அப்படியே உயிரோடு இருந்திருக்கிறது. இந்த வைரஸ்களின் காலம் 15 ஆயிரம் ஆண்டுக்கு முந்தையது. இதில் வெளிவந்த 28 வைரஸ்களை வைராலஜி விஞ்ஞானிகள் இதற்குமுன் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ கிடையாது. இவை மனிதர்களை தாக்கினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். இப்போது காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகி, அதன் உள்ளே புதைந்து உயிரோடு காத்திருக்கும் ஜோம்பி வைரஸ்கள் உலகம் முழுவதிலும் மனிதர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும் அபாயங்கள் உள்ளன எனக் குறிப்பிடத்தக்கது