தொடர்கள்
கவிதை
காலத்தை சிறைப்பிடித்தல் -மகா

20230026065209941.jpg

படிய வாரிய தலையோடு

வெள்ளை வேட்டி சட்டையில்

மீசையை முறுக்கியபடி

விறைப்பாகப்

பார்த்துக் கொண்டிருந்தார்

அப்பா

வெட்கத்தை கட்டுப்படுத்தியதன்

வெளிப்பாடாய்

உதட்டில் வழியும்

மென் புன்னகையோடு

அப்பாவின் இடது தோளை

உரசியபடி நின்றிருந்தாள்

அம்மா

பாவாடை சட்டையில்

ரிப்பன் வைத்துப் பின்னிய

ரெட்டை ஜடையை

முன்புறம் போட்டபடி

அக்கா

குடும்பத்தில் ஒருவராய்

அப்போதுதான் வந்திணைந்த

அந்தப் புதிய

பெயர் வைக்கப்படாத

குட்டி நாயைக் கையிலேந்தியபடி

நான்...

என

எங்கள் எல்லோரின்

நினைவுகளிலிருந்தும்

நீர்த்துப்போன

அந்த நொடிப் பொழுதின்

நுண்ணிய மகத்துவத்தை

அத்தருணத் தன்மையோடு

அப்படியே

பத்திரமாய் பாதுகாத்து

வருகிறது

சுவரில் தொங்கும்

பழைய

கருப்பு வெள்ளை

புகைப்படம்