தொடர்கள்
அனுபவம்
கடலெல்லாம் கதையாக  -  சத்யபாமா ஒப்பிலி 

20240320085230694.jpeg

கடற்கரை ஓரமாக நடக்கும் போது தினம் தினம் ஏதாவது கண்ணில் படும். நடைபாதையில், அதை ஒட்டி இருக்கும் கடைகளில், மணலில், கடல் ஓரத்தில் எத்தனையோ சின்ன சின்ன கதைகள் உருவாகிக்கொண்டே இருக்கும். கடந்து போகும் போது நம் காதில் விழும் ஒன்றிரெண்டு வரிகள் அவர்கள் உலகத்தை ஒரு சிறிதேனும் நம் கண் முன் நிறுத்தும். சில வரிகளை சுலபமாக கடந்து விடலாம். சில வரிகள் நம்மோடு தங்கிவிடும்.


அன்று நான் பார்த்தது ஒரு மெல்லிய கவிதையாய் தோன்றியது. ஒரு வயதான தம்பதியர். கணவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். தலை கொஞ்சம் பக்க வாட்டில் சாய்ந்து லேசாக கீழே குனிந்திருந்தது. அவர் மனைவி அவருடன் மெதுவாக கூட நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த சக்கரநாற்காலியை யாரோ ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார். பீச்சின் நடைபாதையில் ஒரு இடம் வந்ததும் சக்கர நாற்காலியை நிறுத்த சொல்லிவிட்டு, அந்த பெண்மணி அவர் அருகில் குனிந்து, கடல் பக்கம் திரும்பி ஒரு இடத்தை கை காண்பித்து "இது என்ன இடம்ன்னு ஞாபகம் இருக்கா ?" என்று கேட்டார். வேகமாக அவர்களை கடந்து போகாமல் கொஞ்சம் நிதானித்தேன். அவர் தலையை அசைக்கக்கூட இல்லை. அவரை பார்க்கும்போதே தெரிந்தது அவரால் எதையும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்பது. மறுபடியும் அந்த பெண்மணி அவர் கையைத் தொட்டு, " நல்லா, பாருங்க..." என்றார். சற்று தள்ளி அமர்ந்து அவர்களை கவனிக்கலாமென்று ஆர்வம் வந்தது. கூடாதென்று நடக்க ஆரம்பித்தேன். அத்தனை பேர் சுற்றி இருந்தாலும் மிக மிக அந்தரங்கமாக தோன்றியது அந்த வினாடி. அங்கு ஏதோ ஒரு பயணம் நடக்கிறது. பின் நோக்கிய பயணம். ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு நடந்திருக்க வேண்டும். இருவரும் சம்மந்தப்பட்ட நிகழ்வு. ஒருவருக்கு அந்த இடம் முழுவதும் அர்த்தங்களாக, நினைவுகளாக. மற்றவர் தன நிலையிலேயே இல்லை. இருவரும் கொண்டாடிய இடம். இப்பொழுது ஒருவர் முழுக்க முழுக்க நினைவுகளின் உள்ளேயும், மற்றொருவர் தொலைதூரத்திலும். அந்த பெண்மணிக்குள் இப்பொழுது ஒரு பெரிய தனிமையும், வெறுமையும் இருக்குமோ என்று தோன்றியது. என்ன உத்தேசித்து இங்கு வந்திருப்பார். அவர் அருகில் அமர்ந்து கடந்ததை சில கனங்களேனும் மறுபடியும் வாழும் ஆசையுடன் வந்திருப்பாரா? சந்தோஷ காலத்துக்கு செல்லும் போது கண்கள் நிறையுமே! உடன் கடந்த மற்றவரிடமும் அதைத் தேடுமே! அதற்கு பதில் வராதே! அவர் பக்கத்திலிருந்த திண்ணையில் அமர்ந்து தன் கணவருடன் மறுபடியும் ஏதோ பேசத் தொடங்கினார். நினைவு நூல்கண்டு மெல்ல மெல்ல அவிழும். அந்த பெண்மணியும் வயதானவர் தான். அந்த நூற்கண்டு அவருக்கும் அறுந்துவிட்டதென்றால், சொல்லப் பட்ட அந்த நினைவுகள் கடற்கரையிலே அலைந்து கொண்டிருக்குமோ என்னவோ, கேட்பாரில்லாமல்.


அந்த இடம் அவர்கள் முதன் முதலில் சந்தித்ததா, காதல் சொன்னதா, திருமணம் நிச்சயித்ததா...
வீட்டிக்கு திரும்பி வந்த பிறகும் என் சிந்தனை முழுவதும் அந்த பெண்ணின் கேள்வி தான்.. "இது என்ன இடம்ன்னு ஞாபகம் இருக்கா ?"

என் மகளிடம் சொல்லும்போது, " எல்லாம் சரி அவங்க கணவன் மனைவி ன்னு உனக்கு எப்படித்தெரியும்?

தெரியாது தான். அது தெரிந்தால் என் கற்பனை வேறு மாதிரி பின்னப்பட்டிருக்கும். வேறு சில கேள்விகள் தோன்றியிருக்கும். எதுவாகிலும் என்ன, அந்த கேள்வியில் ஒரு பெருங்கதை உள்ளதென்பது மறுக்க முடியாது தானே!