தொடர்கள்
தொடர்கள்
சுப்புசாமியின் சபதம்...! 2   - புதுவை ரா ரஜினி    ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன்

20240320093015612.jpeg


பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தின் வருடாந்திரக் கொண்டாட்டம் தொடர்பான மீட்டிங் தொடங்கவிருந்தது.


தலைவி கோமுப்பாட்டி மிடுக்காக நடந்து வந்து போடியத்தைப் பிடித்தாள். அவள் கைபட்டவுடன் தடதடவென்று அது ஆடியது. மைக்கை சரி செய்யலாம் என்று அதனைத் தொட்டபோது, அதன் தலை தொங்கியது!


கொல்லென்ற சிரிப்பொலிகள் அவையில் எழும்பின. எழும்பக் காரணம், புதிதாய்க் கழகத்தில் டைமெண்ட் உறுப்பினராக நழைந்திருந்த ஸ்ரீமதி கண்ணாம்பாள்! பல கோடிகளுக்குச் சொந்தக்காரியான அவளை அழைத்து வந்து, உபத்திரவம் செய்து கொண்டிருப்பவள், உபச்செயலாளர் அகல்யா தேவசகாயம்.


பா.மு.க.வுக்கு நிதி சேர்த்தாளோ இல்லையோ, ஸ்ரீமதி கிழவியை உசுப்பேத்தி (எதிர்கால பிரசிடெண்ட் பதவி!) தனது கணவர் பணிபுரியும் பிரைவேட் லைஃப் இல்லா இன்சூரன்ஸில் பல லட்சங்களை பாலிசியாகப் போட வைத்தாள்.


"உங்கள் நடப்பு பிரசிடெண்ட் தலைகுனிகிற மாதிரி ஏதாவது ஐடியா குடேன் அகல்யா?"


"இன்றைக்கு மீட்டிங்லே அது நடக்கும் பிரசிடெண்ட்... சே, வாய் குழறி உங்களையே என் பிரசிடென்ட்டாக அழைத்துவிட்டேன்...!" என்று கரையாமல் சோப் போட்டுவிட்டு, அவள் வைரக்கம்மல் காதில் தன் திட்டத்தைச் சொல்ல, ஶ்ரீமதி குலுங்கிச் சிரித்தாள்.


"அகல்யா யாருக்கோ சின்னதா ஒரு வீடு டொனேட் பண்ணனும்னு சொல்லியிருந்தியே... எஸ்டிமேட் எவ்வளவுன்னு சொல்லு முடிச்சிடலாம்...!"


"தாங்க்யூ ஹர் ஹைனஸ்...!" என்றாள் அகல்யா.


போடியம் டாஸ்மாக் போய்விட்டு வந்த தமிழக - புதுச்சேரி குடிமகன்களைப் போல ஆடியதும் பதற்றமில்லை; பான்பராக் வகையறா போட்டதுபோல மைக் தலை தொங்கியதிலும் பதற்றமில்லை. அவையில் சிரிப்பு வாயு (Laughing Gas) செலுத்தாமல் எகத்தாளமாய் சிரித்த பொக்கை வாய்களைத்தான் கோமுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் பல தடைகளைத் தாண்டி சமூகத்தில் இந்த நிலைமைக்கு வந்த அவளுக்கு மன தைரியம் அதிகம்தான். 'கரேஜ் ஆல்வேஸ் கிரேஸ் அண்டர் பிரஷர்!' என்பதைப் பாட்டி மரத்தடி பள்ளிக்கூடத்திலேயே கற்றுக் கொண்டு விட்டாள். அதனால் நிலைமையை தளறாமல் சமாளிக்கும் புத்திசாலித்தனத்தைப் பெற்றிருந்தாள்.


மைக்கை கையில் ஏந்தியவள், "ஹ ...ஹா...!" என்று தானும் சிரித்தவள் சற்று நிறுத்தி... "நாம் இதற்குத்தான் லாயக்கு. எதிர்பாராமல் ஏதாவது அசம்பாவிதம் நடக்கையில் யோசிக்காமல் சிரித்துவிட்டு கடந்து விடுகிறோம். தடதடவென்று போடியம் ஆடுவது எதைக் குறிக்கிறது? நம்மைப் போன்ற ஏஜுடு ஜெனரேஷனைக் குறிக்கிறது! மைக் தொங்கிப்போனது... முதுமைக்குப்பின் இறப்பு என்பதை இந்த உலகுக்குத் தெரிவிக்கிறது...!" என்றாள் பாட்டி.


மறந்துபோய் பழைய விசுவாசத்தில் அகல்யா படபடவென கைகளைத் தட்டிவிட, கூட்டம் அவளைத் தொடர்ந்து அலைகடலென கரகோஷங்களை எழுப்பியது, ஸ்ரீமதி கிழவியைத் தவிர.


"நம்மிடையே ஈகோ என்ற திமிர் இருக்கும் வரையில் அல்லது உபரியாய் செல்வம் இருக்கும் வரையில், உடம்பில் நல்ல ரத்தம் சுண்டும் வரையில் ஆடிக்கொண்டிருப்போம். பின்னால் இந்தப் போடியம் மாதிரி ஆடி, மைக்கைப் போல தலையைத் தொங்கப்போட்டு இந்த உலகைவிட்டுப் புறப்படுவோம்...ஆம் ஐ கரெக்ட் நியூ கமர் ஸ்ரீமதி கண்ணாம்பாள்...?"
ஈட்டியை நெஞ்சிலேயே பாய்ச்சிய கோமுவை அதிர்ச்சியாய்ப் பார்த்தாள் ஸ்ரீமதி.


"கம் டு த பாயிண்ட். ஈவன்தோ நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? வாழும்வரை நமது வாழ்க்கையை சுவாரசியமாகிக்கொள்ள, நமக்குத் தெரியாத நல்ல திறமையை நோக்கி நகர வேண்டும். ஓவியம் தெரியவில்லையா... தெரிந்தவரை கூப்பிட்டு வரையச்சொல்லி நாம் கண்களால் பார்த்தாலே போதும், நாமும் ஓவியராகி விடுவோம். ஆகவே..."

கோமு சற்று நிறுத்தி மூடி வைத்திருந்த கண்ணாடி தம்ளர் குடிநீரை சிறிது அருந்தினாள். பிறகு, தொடர்ந்தாள். "நிறைய பேருக்கு பாத்ரூமில் பாட முடிகிறது. ஆனால், நிஜத்தில் உளறல்... வெட்கம். இதையெல்லாம் போக்கவே நாம் இந்த ஆண்டு கழக ஆனிவர்சரியில் நல்ல பாடகர்களை அழைத்து, அவர்களது சிறந்த பாடல்களைக் கேட்போம். அதற்காகத்தான் நான் அந்த கிரேட் பிளேபேக் சிங்கரை அழைக்க உள்ளேன். ஜஸ்ட் கஸ் ஹு இஸ் ஹி?"


யாரும் சரியாகச் சொல்லவில்லை. அகல்யாவோ ஆர்வத்துடன்(ஆனால் காட்டாமல்) காத்திருந்தாள்.


"லெட் மி அனௌன்ஸ்...த ஒன்லி ஒன் கிரேட் சிங்கர் மிஸ்டர் சித் ஸ்ரீராம் ஆஃப் கலிஃபோர்னியா!"


"மீட்டிங் ஹால் மட்டும்தான் கைதட்டவில்லை. ஶ்ரீமதிக்கு காது ஜிவ்வென்றது. மறுபடியும் ஐடியாமன்னி அகல்யா அவள் காதில் ஓதினாள்.


"இதைச் சொன்னீர்கள் என்றால்... செய்து காட்டிவிட்டால்... நீங்கள்தான் ஹீரோயின் ஆஃப் பா.மு.க. அடுத்த பிரசிடெண்ட் ஆக நீங்க மாற பலமான வாய்ப்பிருக்கு...!"


ஸ்ரீமதி கையை உயர்த்தினாள்.


"எஸ்.சொல்லுங்க. புதிய முதியோர்களின் கருத்துகள் புதுமையாகவே இருக்கும்...!" என்றாள் கோமு.


ஶ்ரீமதி எழுந்து சென்று, மைக்கை பிடுங்காத குறையாகப் பிடுங்கினாள்.
"ஐ அக்ரி, நம்ம பிரசெண்ட் பிரசிடெண்ட் ஹாஸ் டன் வெரி குட் ஜாப்! இதோடு இன்னொன்றை நான் பெருமையாக அறிவிக்கிறேன். பாடகர் சித் ஶ்ரீராம் அவர்களுக்கு லைவ் ஆக இசையமைக்கப்போவது யார் தெரியுமா? சொல்லுங்க பார்ப்போம்?"


டி.ஆர். பாப்பா முதல் டி. ராஜேந்தர்வரை கூட்டம் ஆரூடம் சொன்னது.


ஸ்ரீமதி திமிராகச் சொன்னாள். "நானே சொல்கிறேன். என் இன்புளூயன்சில் அவரை அழைத்து வருகிரேன். தி கிரேட்டஸ்ட் மியூசிக் டைரக்டர்...ஆஸ்கர் அவார்டி மிஸ்டர் ஏ. ஆர். ரஹ்மான்...!"


இப்பொழுது அரங்கமும் சேர்ந்து கைதட்ட, ஸ்ரீமதியை ஒரு கிழவிகள் கும்பல் தூக்கிக் கொண்டாட, கோமுவுக்கு என்னவோ போலாயிற்று...!


பல நிமிட ஆரவாரம் ஓய்ந்தபின்...கூட்டம் கலைந்தது!

(அட்டகாசம் தொடரும்...)