தொடர்கள்
கவர் ஸ்டோரி
கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் சகோதரிகள் ரஞ்சனி காயத்ரியின் "ஹாங்காங் மலைக் கச்சேரி" - ராம்

2024032008301628.jpeg

கடந்த வாரம் ஹாங்காங்கில் கர்னாடக சங்கீத சூப்பர் ஸ்டார் சகோதரிகள் ரஞ்சனி-காயத்ரியின் இசைக் கச்சேரி நடந்தது.

ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய இந்த இசைக் கச்சேரியில் அரங்கம் ஏறக்குறைய நிரம்பி வழிந்திருந்தது.

7.45க்கு துவங்கிய நிகழ்ச்சி சுமார் 9.45 வரை உள்ளூர் சீனர்கள் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

20240320083037844.jpeg

கர்நாடக சங்கீத உலகின் சூப்பர் ஸ்டார் சகோதரிகள் ரஞ்சனி காயத்ரி அரங்கத்தை தங்கள் குரலால், இசையால் கட்டுப்படுத்தி, ரசிகர்களை இசை போதையில் ஆழ்த்தியிருந்ததற்கு பக்க பலமாக, மிருதங்கத்தில் சாய் கிரிதர், கடத்தில் கிருஷ்ணா மற்றும் வயலினில் விட்டல் ரங்கன் பெளன்சர்கள் போல பக்க வாத்தியத்தில் மிரட்டி விட்டனர்.

20240320083058283.jpeg

முத்துசுவாமி தீக்ஷதரின் ராமசந்திரம் பவயாமி வசந்தா ராகத்தில் துவங்கி அடுத்ததாக ரீதி கெளளையில் கடந்து ராகம் தானம் பல்லவியில் சாருகேசி, அமிர்தவர்ஷினி தொட்டு, சுத்தானந்த பாரதியின் எப்படி பாடினரோ ஆபேரியில் சஞ்சரித்து, இறுதியாக மராத்தி அபங்கில் முடித்தனர் சகோதரிகள். அபங் பாடியது சந்திரகெளன்ஸ் ராகம்.

(மழலை பருவத்திலேயே சங்கீத ஞானம் கைவரப்பெற்ற நண்பன் ரவியின் மகன் நிக்கில், மற்றும் சங்கர், வெங்கி போன்றோரின் உபயம்)

இந்தக் கட்டுரை கச்சேரியை சுப்புடு ரேஞ்சுக்கு விமர்சித்து எழுதுவதல்ல. எழுதவும் முடியாது. ஏனெனில்,

சுஜாதா எழுதுவார். கர்நாடக சங்கீதம் தெரியாதவர்கள் தங்கள் வாழ்வின் சில பகுதிகளை இழந்தவர்கள் என்று. அப்படி இழந்தவர்களில் நானும் ஒருவன்.

கர்நாடக சங்கீதத்தை குடலாராய்ச்சி செய்து எழுதும் தகுதியோ அல்லது ஞானமோ இல்லாதவன்.

இசையை இறைவன் அருளால் ரசிக்கத் தெரியும். உதாரணத்திற்கு நல்ல உணவகத்திற்கு சென்று சாப்பிடும் போது செய்முறை தெரிய வேண்டிய அவசியமில்லை என்பது போல.

ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் நாம் குறிப்பிட்டது போல சூப்பர் ஸ்டார்கள். (அவர்களை மேடையை தாண்டி ரசிக்க, ரசிகர்களுக்கு அவர்களின் சமீபத்திய முன்னெடுப்புக்களும் காரணம் என்பது அரங்கத்தின் வெளியே பேச்சிலிருந்து தெரிந்தது) அவர்கள் குரலால் ஹிப்னாட்சம் செய்து ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது, ஹாங்காங்கில் சமீப காலமாக கர்நாடக சங்கீத கச்சேரிகள் இல்லாது காய்ந்து போன ரசிகர்களுக்கு தேவாமிர்தமாக இருந்தது. இன்னொரு பக்கம் சொக்கி மயக்கத்தில் இருந்தவர்களை தட்டி அடித்து தாளத்தால் எழுப்பியது சாய் கிரிதரின் மிருதங்கமும் மற்றும் கிருஷ்ணாவின் கடமும். மிருதங்கத்தில் அவர் மிரட்டினார் என்றால் கிருஷ்ணா கடத்தால் அனைவரின் கவனத்தையும் கடத்தினார்.

இவர்களுடன் இழையோடும் வயலின் இசையில் விட்டல் ரங்கனும் சேர்ந்து கொள்ள ஹாங்காங்கில் நீண்ட நாட்களாக வராத சூறாவளி மேடையில் வந்திருந்தது.. அதை இசை சகோதரிகள் ரசித்து, உற்சாகப்படுத்தி ஆச்சரியப்பட்டு, குழந்தையின் குதூகலத்தோடு ரசித்தது அவர்களை மேலும் உசுப்பேற்றியது.

20240320083219274.jpeg

(கடம் கிருஷ்ணா, மிருதங்கம் சாய் கிரிதர், ரஞ்சனி, காயத்ரி, விட்டல் ரங்கன் கச்சேரி முடிந்ததும் கரவொலி அடங்க நிசமாகவே சில நிமிடங்கள் பிடித்தது. அத்தனை வரவேற்பு உற்சாகம்)

ஒரு வேளை பாரதியின் பாடல்களை பாடியிருந்தார்களானால் எனக்கு ராகத்தையும் தாளத்தையும் கடந்து மொத்த கச்சேரியும் சொக்க வைத்திருக்கும். ஆனால் கச்சேரி கர்நாடக சங்கீதமல்லவா.....

மேலே எழுதியிருந்த மேடைக் கச்சேரி ஒரு புறம்... இனி தான் நம்ம மலைக் கச்சேரி...

கச்சேரி நடைபெறுவதற்கு முன்பே ரஞ்சனி காயத்ரி சகோதரிகளையும் பக்க வாத்திய அசாத்திய வித்வான்களையும் வெளியே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த காப்பில் கடம் வித்வான் (வித்வான் என்று எழுதினால் ஏதோ ரொம்ப வயதானது போல் இருக்கிறது.) கடம் கிருஷ்ணாவிடம் ஹாங்காங்கின் இயற்கையை வியந்து பாராட்டிக் கொண்டிருக்கையில் நாளை காலை அதிகாலை எழுந்தால் அருகே சின்னதாக இருக்கும் ஒரு மலையேறலாம் என்று சொல்லி வைத்தேன்.

அது அவருள் ஒரு சுவாரஸ்யத்தை கூட்ட, அவருடன் விட்டல் ரங்கனும் வருவதாக ஒப்புக் கொண்டார். (இளைஞர்களில்லையா... இன்னொரு இளைஞன் சொன்னதும் ஒப்புக் கொண்டதில் என்ன ஆச்சரியம் ). சாய் கிரிதர் தூங்கி எழுந்தால் வருகிறேன் என்றார்.

எனக்கென்னவோ கச்சேரி முடிந்ததும் சோர்வாக இருக்கிறது வரவில்லை என்று சொல்லி விடுவார்களோ என்று ஒரு பயம்.

ஆனால் இரவு பத்து மணி சுமாருக்கு இன்ப அதிர்ச்சியாக அக்காக்களும் வரேன் என்று சொல்கிறார்கள் என்று கிருஷ்ணா சொல்ல, அதற்கென்ன தாராளமாக வரட்டும். அதே ராத்திரியில் வெங்கியை அழைத்து அதிகாலை மலையேற்றம் பற்றி சொல்ல அவரும் உற்சாகத்துடன் அதற்கென்ன வந்துட்டா போச்சு என்றார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கு சரியாக பல்கலைக் கழக விடுதியில் ஆஜர்.

2024032008330066.jpeg

முதல் ஆளாக கிருஷ்ணா, விட்டல் ரங்கன் தயாராக இருக்க ரஞ்சனியும் காயத்ரியும் ரிலாக்ஸ்டாக காஷுவல் உடையில். நேற்று இசையால் இரண்டு மணி நேரங்கள் கிறங்கடித்தவர்களா இவர்கள் ???

சின்ன மலையேற்றம் தான். கடல் மட்டத்திலிருந்து 285 மீட்டர்கள் தான். இருந்தாலும் சகோதரிகள் இதற்கு தயாராக வரவில்லை. ஷு இல்லாமல் செருப்புக் காலோடு எப்படி ஏறுவது என்று யோசிக்கையில், அதெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் சின்ன மலை தானே மேலும் படிகள் இருக்கிறது. ரொம்ப கரடு முரடாக இருக்காது என்று உற்சாகப்படுத்தியதில் கொஞ்சம் மனது வைத்து ஏறத் துவங்கினோம்.

கிருஷ்ணாவும், விட்டலும் சின்னஞ்சிறுசுகள். விறு விறு என்று ஏறி விட்டனர். வெங்கி, அவர் மனைவி ரஞ்சனி (அவர் பெயரும் ரஞ்சனி.) சங்கர், மற்றும் சுரேஷ் புடை சூழ இசைக் குயில்கள், இயற்கை சூழலில் இசைத்த பறவைகளின் ஒலிகளோடு ஏறத் துவங்கினர்.

மலை ஏறும் போது எத்தனை சுவாரஸ்யமான சம்பாஷணைகள். ஆஃப் த ரிக்கார்டு என்பதாலும், பேட்டியெல்லாம் வேண்டாமே என்று அவர்கள் அன்போடு கேட்டுக் கொண்டதாலும், (இங்கியுமாடா... என்பது மைண்ட் வாய்ஸ்) மலையேற்ற சம்பாஷணைகள் தவிர்க்கப்படுகிறது.

20240320083444215.jpeg

பொத்தம் பொதுவாக பேசிக் கொண்ட விஷயங்கள்.

ராசா பை ராகா கச்சேரி பற்றி, இசைஞானி இரண்டரை மணி நேரங்கள் அமர்ந்து அந்த கச்சேரி கேட்டு ரசித்தது பற்றி, இசைஞானியின் அபார ஞானம் பற்றி...இப்படி ஓடியது கொஞ்ச நேரம்.

20240320083503268.jpeg

பின்னர் கிருஷ்ணா இளம் வயதிலிருந்து கடம் கற்றுக் கொண்டது, மற்ற வாத்தியங்கள் போல் இல்லாமல் கடத்தில் சுருதியை கூட்டுவது குறைப்பது நடக்காத செயல் அதனால் ஒவ்வொரு பாடகர்களின் குரலுக்கு ஏற்றவாறு பல கடங்களை வைத்திருப்பது, எங்கு கடம் செய்கிறார்கள், வயலின் விட்டல் ரங்கன் எந்த வய்திலிருந்து கற்றுக் கொள்கிறார், அவரும் அவர் மனைவியும் (கிருதி பட்) செய்யும் இசைக் கச்சேரிகள் பற்றி வெங்கி, சங்கர் பல விதமான கேள்விகளை கேட்டுக் கொண்டே ஏறியதில் சடுதியில் மலையேறி விட்டோம்.

20240320083543312.jpeg

மலை உச்சிக்கு சில அடிகள் வந்ததும், காயத்ரி போதும் இதற்கு மேல் வேண்டாம் உச்சி இதோ வந்துருச்சு இதோ வந்துருச்சு என்கிறீர்கள் வந்த பாடில்லை என்றார் ஆயாசத்துடன். (எங்க ஹைக்கிங் பேராசிரியர் சீனாவில் இருந்ததால் சகோதரிகள் தப்பினார்கள். சின்ன மலையா போச்சு. )

அவரை பேசி சம்மதிக்க வைத்து ஒரு வழியாக மலை உச்சியை அடைந்ததும்..... ஏகாந்தம்.

சகோதரிகள் இருவரும் மலையில் அமர்ந்து சூரியன் தெரிந்ததும் தானாக பாடிய பாடல்.....சூரியமூர்தே. செளராஷ்டிரம் ராகத்தில். (தகவல் உபயம் வெங்கி)

மனதிற்குள் இருந்த ஒரு கேள்வியை ஒரே ஒரு கேள்விதான் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்ட கேள்வி. அது மட்டும் இங்கே...

எத்தனையோ மேடையிறியிருக்கிறீர்கள். இந்த மலை ஏறிய அனுபவம் எப்படி இருக்கிறது ????

அதற்கான பதில் இந்த வீடியோவில்.

முதல் பாடல் பாடி முடித்து, கேள்விக்கு பதில் சொல்லி முடித்ததும், மலையுச்சியில் ஒரு அழகான பாறையில் படம் எடுத்துக் கொள்ளலாம் என்று தைரியம் சொல்லி அழைத்துச் சென்றோம்.

அங்கு கேட்கலாமா கூடாதா என்ற தயக்கத்தில் ஓரே ஒரு பாரதி பாட்டு பாடலாமே என்று கேட்டது தான் தாமதம். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பாடிய பாரதி பாடல்........

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!

லூங்ஹாவான் டிரையில் என்று சொல்லப்படும் அந்த குட்டி மலையில் எத்தனையோ முறை ஏறியிருக்கிறோம். எத்தனை அதிகாலைகள் அங்கே செலவழித்திருக்கிறோம்.

எந்தக் காலையும் இன்றைய காலை போல ஏகாந்தமாக இருந்ததில்லை.

சங்கீத உலகின் சூப்பர் ஸ்டார்கள் அந்த மலையுச்சியில் பாடிய அந்த பிரத்யேக பாரதியார் பாட்டு. ஆயிரம் இசைக் கச்சேரிகளுக்கு சமம். பாரதிக்கு சமர்ப்பணம்.

அருகே பக்கத்தில் இருந்தாலும் பக்க வாத்தியம் இல்லாமல் கிருஷ்ணாவும், விட்டலும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது.

சாய் கிரிதர் பாவம் இந்த மலையேற்றத்தை மிஸ் செய்து விட்டார்.

அந்த சூழலை விவரிக்க, ஏகாந்தம் என்ற ஒற்றை வார்த்தையை தவிர எதுவும் நினைவுக்கு வரவில்லை.

மலையுச்சி நகைச்சுவைகள், சூடான டீ, காபி லேசான குளிர், மேக மூட்டம், எத்தனை கேட்டாலும் திகட்டாத சங்கீதம், அற்புதமான ஒரு அதிகாலைப் பொழுதை ரஞ்சனி காயத்ரி சகோதரிகளின் மலையேற்றம் கொடுத்து விட்டது உண்மை.

20240320083909254.jpeg

பின்னர் விட்டல் ரங்கனையும் விடவில்லை. ஒரு குட்டி பாடலாவது பாட வேண்டும் என்றதும் லேசாக யோசித்தவர் அற்புதமாக பாடினார்.

அவரும் அவர் மனைவி கிருதி பட்டும் இணைந்து பாடி இணையத்தை கலக்குகிறார்களே.. பின்னே என்னவாம்.

இரண்டு மணி நேரங்கள் தான் மொத்த மலையேற்றமும்.

20240320083721941.jpeg

(சூப்பர் ஸ்டார் சகோதரிகள் ரஞ்சனி காயத்ரி)

அதற்குள் தான் எத்தனை சுகானுபவஙக்ள். கடம் கிருஷ்ணாவிற்குத் தான் இந்த அதிகாலை அனுபவத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

20240320083803786.jpeg

(கடம் கிருஷ்ணா)

அவர் மலையேற விருப்பம் தெரிவித்திருக்காவிட்டால் விகடகவி வாசகர்களுக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்காது.

20240320083827189.jpeg

(வயலின் விட்டல் ரங்கன்)

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!