தொடர்கள்
தொடர்கள்
தேவதைகளுக்குப் பெயர் உண்டு! (2)-என் குமார்


தொப்புள்

20240505185714737.jpeg

இடைவேளைக்கு முந்தைய வகுப்பில், பைக்கட்டில் கை நுழைத்து என் டிஃபன் பாக்ஸைப் பார்த்தேன். எடை குறைவாக இருந்தது. குலுக்கிப் பார்த்தேன். எடையே இல்லை. என் சாப்பாட்டை யாரோ மூன்றாவது பி.டி.பீரியடில் எடுத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். அதிர்ச்சி. அம்மா ஆசையாக வைத்த வெண்டைக்காய் வதக்கல், குழம்பு சாதம்… போச்சு.

அதுவரை வராத பசி, காலி டப்பா பார்த்ததும் வந்துவிட்டது.

அப்படியே உட்கார்ந்துவிட்டேன். நேரம் ஆனதே தெரியவில்லை. இப்போது வீட்டுக்குப் போகவும் முடியாது.

பள்ளிக்கூட வாசல் போய் வேடிக்கை பார்த்தால் பசி மறக்கும். மைதானத்தின் வழியாக நடக்கக்கூட முடியாத சோர்வு.

அப்போது பின்னாலிருந்து என் தோள் தொட்டவளைத் திரும்பிப் பார்த்தேன். என் வகுப்புத் தோழிதான். இதற்குமுன் இவ்வளவு நெருங்கியதில்லை. நான் அவளிடம் பேசியதேயில்லை. நான் மயங்கி நடப்பதைப் பார்த்து ஓடி வந்திருக்கிறாள். விஷயத்தைக் கேட்டு, எனக்கும் சேர்த்து வருத்தப்பட்டாள்.

”இதெல்லாம் யார் செய்வாங்கன்னு தெரியும். இரு!” என்று எனக்காக சண்டை போடப் போனாள். தடுத்தேன்.

அந்த மாணவர்கள் வேப்ப மரத்தடியில் எதுவும் தெரியாதது மாதிரி வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள்.

எனக்குக் கோபத்திற்குப் பதிலாக அழுகை வந்தது. அடக்கினாள்.

”ச்சீ…சீ யாரோ சோறு எடுத்ததுக்கா அழறே… சின்னப் பையனா நீ? அடுத்த வருஷம் ஆறாங் கிளாஸ்… பெரிய கிளாஸ் போறோம்.”

ஒரே வயதுதான். பெரிய மனுஷி மாதிரி என்னென்னவோ ஆறுதல் சொன்னாள். பசியில் எதுவும் காதில் விழவில்லை. திடீரென்று…

“நீ எங்கூடல்லாம் பேசினதேயில்ல. எப்பவும் தமிழ்ச்செல்விகிட்டயே போய் நிக்கறயே… அவ ஃபர்ஸ்ட் ரேங்க், கொஞ்சம் அழகா இருக்கான்னு ப்ரெளடு பண்ணுவா. ஃப்ரெண்டால்லாம் ஆக மாட்டா. உனக்கு செட் ஆகாது பார்த்துக்கோ. உன் இஷ்டம்” என்று மனப்பாடம்போல் ஏதேதோ ஒப்பித்தாள்.

வகுப்பில் தள்ளித் தள்ளிதான் பெஞ்ச். நான் என்ன செய்கிறேன்… யாரோடு பேசுகிறேன்… எல்லாம் கவனித்திருக்கிறாளே!

வெய்யில் சூடு காலில் இறங்க… நிழலில் என்னை நிற்கச் சொல்லிவிட்டு, வகுப்புக்கு ஓடிப் போனாள். வந்தாள். கையில் அவளது தகர ஜாமெட்ரி பாக்ஸ். இறுக்கமாக இருந்தது. நெஞ்சில் வைத்து அழுத்தித் திறந்தாள். உள்ளே… பென்சில், பேனா, ஸ்கேல், அழுக்கு ரப்பர், துருப்பிடித்த பாதி பிளேடு. ஓரத்தில், ஒரு முழு நெல்லிக்காய்.

அதை எடுத்து நீட்டினாள். என்ன நினைத்தாளோ… ”சரி, நானும் சாப்பிடறேன். நீயும் சாப்பிடு” என்றவள், பிளேடால் அறுத்துப் பார்த்தாள். சரி பாதி வரவில்லை.

சட்டென்று யூனிஃபார்ம் வெள்ளை மேல் சட்டையின் கீழ் நுனியில் நெல்லிக்காயை வைத்து மூடி, அப்படியே முகம் வரை இழுத்தாள். வாயில் வைத்து ‘டொக்’கென்று கடித்தாள்.

சட்டை மேலே ஏறியதும், அவளது மாநிற வயிற்றில், அந்தத் தொப்புள்… என் கண்ணில் பட்டது. கூச்சப்பட்டு… கண்களை மூடி முகம் குனிந்தேன்.

யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் நெருங்காதவள், நடு மைதானத்தில் எனக்காக ஷிம்மி போடாத சட்டையைத் தூக்கி… தொப்புள் தெரிய, (தெரிவதுகூடத் தெரியாமல்) தரவேண்டிய அவசியமென்ன?

”இந்தா சாப்பிடு, என் குமார்”

என்ன சுவை என்றே தெரியாதபடி காய்ந்துபோயிருந்த அந்தப் பாதி நெல்லிக்காயைச் சாப்பிட்டு, பள்ளிக்கூடத் தண்ணீர் டேங்க் பைப்பில் கை குவித்துத் தண்ணீர் குடித்தோம்.

வாயெல்லாம் இனித்தது.

ஈர வாயுடன், “நல்லா இருக்குல்ல…” என்று கண்சிமிட்டினாள்.

மதிய வகுப்புகள் ஆரம்பித்தன. போர்டில் எழுதிய கேள்விகளுக்கு நோட்டில் பதில் எழுதவேண்டும். ஏனோ கண்ணுக்குள் திடீரென வந்துபோனது…. அந்தத் தொப்புள்!

ரெண்டு பெஞ்சுக்குப் பின்னால் மூன்றாவது ஆளாகக் குனிந்து எழுதிக்கொண்டிருந்த அவளை, முதன்முறையாக, ஒரு தேவதையைப் பார்ப்பதுபோல் திரும்பிப் பார்த்தேன்.

இந்த ஊரின் ஏதோ ஒரு தெருவில், ஒரு குடிசையிலிருந்து வருகிறாள். பெற்றோர் இல்லை. தூரத்து உறவு வீட்டில் வளரும் பெண். ஒருவேளைப் பசிகூடத் தாங்காமல் புலம்பி அழுகிறேனே… அவள் மாதம் பத்துப் பதினைஞ்சு நாள் பட்டினியாம்... படிப்பில் முதல் ரேங்க் வரவேண்டும் (தமிழ்ச்செல்வியை முந்தவேண்டும்). பள்ளிக்கூ(ட்)டம் பிடிக்குமென்பதால், சீக்கிரமே வந்து, எல்லோரும் போனபிறகு கடைசியாகப் போகிறாளாம்…

இன்னமும் நிமிராத தலையோடு எழுதிக்கொண்டிருந்தாள்.

நான் தலையைத் திருப்ப நினைத்தபோது, அவள் நிமிர்ந்துவிட்டாள்.

என்னைப் பார்த்ததும் முகம் விரிய, “என்ன… பசி போயிருச்சுல்ல…?” என்று கண்களாலேயே கேட்டாள்.

தொப்புள் தெரிய ’காக்காக் கடி’ கடித்துக்கொடுத்த பாதி நெல்லிக்காயில் பசி போகுமா?

“ம்… போயிருச்சு!” என்று தலையாட்டிவிட்டுத் திரும்பினேன்.

அவளுக்கு என்னைப் பிடிக்குமோ என்னவோ தெரியாது. என்னுடைய பசி அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.