உலக சுற்று சூழல் நாள் கடந்த புதன் அன்று கொண்டாடப்பட்டது. அதில் வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஐ அன்வர்தீன் அவர்கள் சங்க இலக்கியத்தில் வாழ்வியல் என்பது எவ்வாறு இயற்கையுடன் இணைந்த வாழ்வாக இருந்தது என்பது குறித்து ஒரு சிறிய கட்டுரையும் அதன் தொடர்பாக ஒரு காணொளியும் பகிர்ந்துள்ளார். அதை விகடகவி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழ்நாடு அரசு வனத்துறையின் சுற்றுச்சூழல் நாள் (ஜூன் 5, 2024) வாழ்த்துகள்.
சங்க இலக்கியத்தின் வாழ்வியல் என்பது இயற்கையுடன் இணைந்த வாழ்வாகும்.
தமிழர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த மரம், செடி, கொடி, ஆறு, மலை, கடல், விலங்குகள், பறவைகள் போன்றவற்றைப் பாடிப் பரவினர்.
இந்தத் தொன்மையின் தொடர்ச்சியை நழுவ விடாமல் இயற்கைச் சூழலின் பேரியக்கத்தைப்
புரிந்து கொண்டு இயற்கையைக் கொண்டாடி, நாம் இழந்த சூழலை மீட்டெடுக்கும் முகமாக இந்தச் சிறிய காணொளியை தமிழ்நாடு அரசு வனத்துறை படைத்து வழங்குகிறது.
ஆறூட்டும் வயலும், வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்.
ஆற்றங்கரைக் காடுகளைப் பாதுகாத்தல், உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள்
மருதத்திணை மீட்டுருவாக்கத்திற்கு மிகுந்த பங்களிக்கின்றன.
பல்வேறு வகையான ஆற்றுப்படுகை மரங்கள் இருப்பினும் சங்க இலக்கியங்கள் விதந்தோதிய மருத மரம் ஆற்றங்கரைகளின் இருமருங்கிலும் வளர்ந்தோங்கி நிற்பதைக் காட்சிப்படுத்தும் இந்தக் காணொளி பொதுமக்களைச் சென்றடைந்து, இதுபோன்ற மரம் நடும் செயல்பாடுகளில் ஈடுபட உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.
திருநெல்வேலி சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில், 1986 ஆம் ஆண்டில் வனத்துறை 1260 மரங்களைநடவு செய்தது. இன்று அந்த மரங்கள் மனிதர்களுக்கு நிழல் தரும் வீடாகவும் பறவைகளின் கூடாகவும், விலங்குகளின் காடாகவும் மட்டுமன்றி 1992, 2023 ஆண்டுகளின் வரலாறு காணாத வெள்ளக்காலங்களிலும் கரைகாத்து அரணாக நிற்கின்றன. இது போன்ற இடத்திற்கேற்ற மரங்களை நடவு செய்து காலநிலைப் பிறழ்வுகளைத் தடுப்போம்.
தொல்காப்பியத்தில் ஐந்திணைகளுக்கும் தனித்தனியாகப் பண்கள் இருந்தன.
மருத நிலத்தின் பண், மருதப்பண் (கரகரப்ரியா). அதன் இசையோடு மருதமரக் காடுகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. காண்போரை இயக்கும் கவின்பெரு வனப்பாம் காடுகள் போற்றுவோம்.
ஆக்கம்:
காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம்,
தமிழ்நாடு அரசு வனத்துறை, 2024.
Leave a comment
Upload